சனிக்கிழமை, 23 ஜூலை 2016 00:00

நபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரியாக செய்தார்கள்.

Rate this item
(7 votes)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 34

 

நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

விளக்கம்:

சர்வதேச (சவுதிதேசப்) பிறை இயக்கத்தின் ஒரிஜினல் 'அமீர்' அவர்களும் அவரது சகாக்களும்தான் மேற்படி தவறான குற்றச்சாட்டை சிறிதேனும் இறையச்சமின்றி மேடைகளில் முழங்கினர். அவர்கள் இயக்கத்தின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும் சவுதி (பிறை) இயக்கமும் அவர்களது பிறை நிலைப்பாடும் புதைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இவற்றை உணர்ந்து விட்டதால் மக்களை திசை திருப்புவதற்காக மேற்படி தவறான குற்றச்சாட்டை ஹிஜ்ரி கமிட்டி மீது அவர்கள் அள்ளி வீசுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளைச் செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டி ஒருபோதும் சொல்ல வில்லை. நாம் அவ்வாறு சொல்லியதாக அவர்கள் கூறும் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்களின் ஆதாரம் இருந்தால் மக்கள் மத்தியில் தெரிவிக்கட்டும். இந்நிலையில் மேற்படி சவுதி (பிறை) இயக்கத்தின் கூட்டாளிகளான போலி ஸலஃபு வகையறாக்கள்தாம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது வெள்ளிக் கிழமை அரஃபாவில் நின்றதாகக் கூறியுள்ளனர். அதற்கும் ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் ஒரு யூதன் ஒருவன் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் உமர் (ரழி) அவர்களோடு உரையாடியதாகக் கூறப்படும் அடிப்படையற்ற சம்பவத்தை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். அதன் அபத்தங்களை நபி (ஸல்) அவர்களின் அரஃபா நாள் எப்போது? என்ற தலைப்பில் அமைந்த ஹிஜ்ரி கமிட்டியின் வெளியீடுகளில் காணலாம்.

துல்லியமான விஞ்ஞான சந்திரக் கணக்கீட்டின் படி ஹிஜ்ரி 09-12-10 அன்று வியாழக் கிழமையாகத்தான் இருந்துள்ளது. அதாவது ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா 9-வது நாள் வியாழக்கிழமை ஆகும். பிறைகளைக் கணக்கிடுவது தவறு என்ற புதிய நிலைப்பாட்டை ஏற்றுள்ள மேற்படி சவுதி (பிறை) இயக்க அமீர் துல்லியமான விஞ்ஞானக் கணக்கீட்டை தவறு என்று விமர்சிப்பது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பிறைகளைக் கணக்கீடு செய்வது மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி ஹராம் ஆகும். அவ்வாறு ஹராம் என்றால் கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவது ஏன்?சர்வதேச (சவுதிதேசப்) பிறையினரைப் போலவே தமிழக அளவு பிறை நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் பிறையை புறக்கண்களால் பார்த்துவிட்டு அடுத்தநாள் மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்கின்றனர். சவுதிதேசப் பிறை நிலைப்பாட்டிலிருந்து, 'தமிழக அளவு' என்ற எல்கை அளவில் மட்டும்தாம் அவர்கள் வேறுபட்டுள்ளனர்.

மேற்படி தமிழகப் பிறை நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கு கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாதம் அவர்கள் மாதத்தைத் துவங்கியதுபடி அவர்களின் பிறை 12-இல் பவுர்ணமி வந்து அன்று சந்திரக் கிரகணமும் ஏற்பட்டது. எங்காவது? என்றாவது? பிறை 12-இல் சந்திரக் கிரகணம் ஏற்படுமா? இதுபற்றி கணம் 'அமீர்' அவர்களோ, அவரது சகாக்களோ, மற்றும் அவரது கூட்டாளிகளோ கவலைப் படாதது ஏன்?.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரன் மறைக்கப்படுவதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும். சந்திர மாதத்தின் பிறை 12-இல் நிச்சயமாக பவுர்ணமி ஏற்படாது. கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், தங்களது முன்னாள் சகாக்களான இன்றைய தமிழகப் பிறை இயக்கத்தின் பிறை நிலைப்பாடு தவறானதாகி விட்டது, தமிழகப்பிறை மண்ணைக் கவ்வி விட்டது என்று போர்க்குரல் எழுப்பாதது ஏன்? மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி பிறை 12-இல் பவுர்ணமி ஏற்பட்டது சரியா? தவறா? - பதில் சொல்லட்டும்.

மேலும் சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.

கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாத இறுதியில் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்தது. சந்திர மாதத்தின் 27-வது நாளன்று, அதாவது பிறை 27-இல் எங்காவது சூரியக் கிரகணம் ஏற்படுமா? - ஏற்படாது.

ஆனால் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்ததை வைத்து அவர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தை துவங்கியதும், அரஃபா நோன்பை நோற்றதும், ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடியதும் தவறு என்று பிரச்சாரம் செய்யவில்லையே ஏன்? இவை மட்டும் மேற்படி அமீருக்கும், அவரது சகாக்களுக்கும் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தவறாகத் தெரியவில்லையா? அல்லது ஹிஜ்ரி கமிட்டியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மேற்படி தமிழகப் பிறை இயக்கத்துடன் இவர்கள் மறைமுக ஒப்பந்தத்தில் உள்ளனரா? - யாமறியோம்.

எனவே நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வடிகட்டிய பொய்யாகும், மாபெரும் அவதூறாகும். இவ்வாறன பொய்க் குற்றச் சாட்டுகளை எழுப்பி ஆதாயம் தேட நினைப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மேற்படி நபர்கள் ஹிஜ்ரி கமிட்டி மீது சுமத்தியுள்ள அவதூறுகளுக்கும், தார்ப்பாயில் வடிகட்டிய பொய்களுக்கும் பிரதிபலனாக நியாயத் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மையிலேயே இவர்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால், மறுமையின் மோசமான சூழ்நிலைக்கும் அஞ்சி மேற்படி அவதூறான குற்றச்சாட்டு உட்பட ஹஜ்ரி கமிட்டி மீது அவர்கள் கூறி வரும் அனைத்து குற்றச் சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் நாளை மறுமையில் அவர்கள் செய்திருக்கும் நல்ல அமல்கள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அவை எங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

Read 1477 times