சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00

ஒருநாளின் பிறையைக் காணவில்லை!

Rate this item
(16 votes)

ஒருநாளின் பிறையைக் காணவில்லை!

ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில்

 

விமர்சனம் :நீங்கள் வெளியிட்டிருக்கும் ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் 29 பிறை படித்தரங்களும், 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்திற்கு 28 பிறை படித்தரங்களும் உள்ளதாக அச்சிட்டுள்ளீர்கள். மாதத்தின் இறுதிநாள் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் நாள் என்கின்றீர்கள். ஒரு நாளுக்கு ஒரு பிறை படித்தரம் என்று வைத்துக் கொண்டு, பிறைகளை புறக்கண்களால் தினமும் நாங்கள் பார்த்து வந்ததில் ஒரு நாளுடைய படித்தரம் (மிஸ்ஸிங்) காணாமல் விடுபடுகிறதே? ஹிஜ்ரி 1436 துல்கஃதா மாதம் 30 நாட்களைக் கொண்டிருந்தும் 28 பிறைகளைதான் பார்க்க முடியும். அப்படியானால் உங்கள் நாட்காட்டி தவறுதானே?

 

விளக்கம் :

ஹிஜ்ரி 1436 துல்கஃதா மாதம் 30 நாட்களைக் கொண்டிருந்தும், 28 பிறைகளைதான் கண்களால் பார்க்க முடியும் என்று துல்கஃதா மாதம் முடிவடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இவ்வாறு விமர்சித்தனர். மேற்படி விமர்சனத்தைக் கூறிய சகோதரர்கள் துல்கஃதா மாதத்திற்குரிய பிறைகளை இறுதிவரை பார்த்ததின் அடிப்படையில் முடிவெடுக்கவில்லை என்பது இதிலிருந்து அறியமுடிகிறது. சந்திர மாதத்தின் இறுதிநாளான அமாவாசை நாளில் பிறை மறைக்கப்படும் என்பதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அமாவாசை நாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படுவதைப் பற்றிய கேள்வியல்ல இது. ஆனால் பிறை தெரியவேண்டிய இறுதிகால் பகுதி தினங்களில் 21 முதல் 28/29 தினங்கள் வரையுள்ள நாட்களில் ஒரு பிறையை பார்க்க வியலாது காணாமல் போகிறது என்பதுதான் விமர்சனம். சந்திரனின் விதிமுறைகளை அறிந்து, சரியாகக் கணக்கிட்டால் ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறை படித்தரங்கள் துல்லியமாக உள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.  

சந்திரனையும், அதன் மன்ஜிலால் அமைந்த நாட்காட்டியையும் வல்ல அல்லாஹ் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்காக ஏற்படுத்தியுள்ளான். எனவே ஹிஜ்ரி நாட்காட்டியானது ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கோ, ஒரு நகரத்திற்கோ சொந்தமானது அல்ல. இது சர்வதேச மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஒரு நாட்காட்டி முறை. சர்வதேச நாள் (Universal Day)  மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (UTC –  Coordinated Universal Time)  ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஹிஜ்ரி நாட்காட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என ஒவ்வொரு சர்வதேச நாளுக்கும் ஒரு பிறை படித்தரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளதை நாம் அச்சிட்டுள்ளோம். புவிமைய சங்கமம் (New Moon – Geocentric Conjunction)  முதல் கால் பகுதி நிலை (First Quarter ),  முழு நிலவு நிலை (Full Moon),   இறுதி கால் பகுதி நிலை (Last Quarter)  என்று பிறைப் படித்தரங்கள் உலக நேரத்தில் (UT-Universal Time),  உலக நாளுக்குரிய (Universal Day)   தேதியில் (கிழமையில்) குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் நேரத்தை (Local Time)கணக்கிட்டு ஹிஜ்ரி நாட்காட்டி அமைக்கப்பட வில்லை. அதுபோல ஒரு நகரத்தில் பிறை எப்போது உதிக்கும்? எந்த நேரத்தில் மறையும் என்ற விபரங்களின் அடிப்படையில் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அமைய வில்லை. இவ்வாறு அவரவர்கள் பகுதி நேரத்தை அடிப்படையாகக் கொண்டு காலண்டர் போட்டுள்ளதாக நாம் பிரச்சாரம் செய்யவுமில்லை, இக்கொள்கையை நாம் பின்பற்றவுமில்லை. ஹிஜ்ரி காலண்டர் சம்பந்தமான இந்த அடிப்படையான விஷயத்தை விமர்சனம் செய்வோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரி நாட்காட்டியில் 30 நாட்களைக் கொண்டிருக்கும் ஒரு மாதத்தில், பிறை தெரியாத அமாவாசை தினத்தைக் கழித்து விட்டு 29 பிறைகளைப் பார்க்க வேண்டும். ஆனால் 28 பிறைகளைதான் கண்களால் பார்க்க முடிகிறது எனவே ஒரு நாளுக்குரிய பிறையே இல்லாமல் ஆகிவிடுகிறது என்பதுதான் விமர்சனத்தின் மையக்கருத்து. அப்படியானால் இப்படி விமர்சனம் செய்பவர்களை நோக்கி பல எதிர் கேள்விகள் எழுகின்றன. கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது எதிர்கேள்விகள் கேட்கிறீர்களே என்று நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரையை இறுதிவரை நிதானமாகப் படித்தால் இவ்வளவு சுலபமாகப் புரியவேண்டிய விஷயத்தையா அறிவார்ந்த விமர்சனமாக வைத்தனர் என்பது புரியும். அதற்காகத்தான் நமது விளக்கங்களோடு சேர்த்து எதிர்வாதங்களையும் வைக்கிறோம்.

குறிப்பாக, நாம் பார்க்கக்கூடிய இந்த சந்திரனும், சூரியனும்தான் 1400 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன. நபி (ஸல்) அவர்களும், உத்தம நபித்தோழர்களும் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் இதே சந்திரனைத்தான் அவர்களும் பார்த்தார்கள். ஹிஜ்ரி நாட்காட்டிபடி பிறைகளை கணக்கிட்டு வந்ததில், தேய்பிறை நாட்களில் ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போகிறது ''மிஸ்ஸிங்'' என்றால், நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இவ்வாறு விடுபட்டிருக்க (மிஸ்ஸிங்) வேண்டும். அப்படி நடக்கவில்லையே. இவ்வாறு 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்பதுதான் உண்மையாக இருக்குமென்றால் ''பிறைகள் மக்களுக்கு நாட்காட்டியாக உள்ளதாகவும் (2:189)'', ''பிறைகளின் தங்குமிடங்களை (மனாஜிலை) வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறியலாம் (10:5)'' என்றும் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பானா?. நபி (ஸல்) அவர்களும் இப்படி காணாமல் போகிற பிறைகளை வைத்துக் கொண்டு, பிறைகள் பற்றிய மேற்படி வசனங்களை ஸஹாபாக்களுக்கு போதித்திருப்பார்களா? சற்று சிந்தியுங்கள்.

சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின் படி இயங்குகின்றன (55:5) என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனின் கூற்றுப்படி, அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்களின் அடிப்படையில்தான் நமது ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அமைந்துள்ளன. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் மாதத்தின் இறுதி நாளைத்தான் நாமும் புவிமைய சங்கமதினமாக, மாதத்தின் இறுதிநாளாகக் கொண்டுள்ளோம். இந்நிலையில் ஹிஜ்ரி நாட்காட்டியில் துல்கஃதா பிறை 22-லோ அல்லது துல்கஃதா பிறை 28-லோ வானில் பிறையைக் காணவில்லை என்று விமர்சிப்பவர்கள், அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்களில் ஒன்றைக் காணவில்லை என்கிறார்கள். அல்லாஹ் விதியாக்கிவிட்தாக (10:5) சந்திரனின் மன்ஜிலில் சந்தேகம் கொள்வதாக இது அமைகிறது. சந்திரனின் ஓட்டம் துல்லியமாக இல்லை என்று மறுப்பது தெரிகிறது. தேய்பிறை நாட்களில் ஒருநாள் அது தேதியைக் காட்டவில்லை அதனால் அது மக்களுக்கு காலம்காட்டியாக இல்லை என்று வாதிப்பதாகவும் இவ்விமர்சனம் அமைகிறது. அல்லாஹ்வின் வேதத்திலும், தூதரின் வழிகாட்டலிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி ஈமானுக்கு உலைவைக்கும் ஷைத்தானிய ஊசலாட்டத்தை விட்டும் தவிர்ந்து, அல்லாஹ்விடம் பாதுகாப்பைத் தேடுமாறு இவ்விமர்சனம் செய்பவர்களை உபதேசிக்கிறோம்.

(நபியே!) நீர் கேளும், மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் (6 : 144)

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள், அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. அல்குர்ஆன் (31 : 6)

 

22-ஆம் பிறை காணாமல் போவதாகச் சொல்வதின் பின்ணனி என்ன?

உலகில் தற்போது சூரியனை அடிப்படையாகக் கொண்ட கிரிகோரியன் நாட்காட்டி எனும் கிருஸ்துவக் காலண்டர்  புழக்கத்தில் உள்ளது. அந்த நாட்காட்டியின்படி தினமும், பழைய நாளிலிருந்து புதிய நாளானது நள்ளிரவு 12 மணிக்கு மாறுகிறது. அதாவது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு சனிக்கிழமை துவங்கி விடும். இந்த அடிப்படையில் நமது கடிகார நேரங்கள் அனைத்தும் மாற்றப்படுகின்றன. இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சந்திரனின் உதயம், அஸ்தமன விபரங்களும் இந்த கிரிகோரியன் காலண்டரின் தேதிகளின் அடிப்படையிலே அமைந்துள்ளன. அத்தகவல்களை அடிப்படையில், சென்னை, மும்பை என ஏதாவது ஒரு நகரத்தை மையப்படுத்தி பிறையானது சென்னையில் எப்போது உதிக்கும்? எந்த நேரத்தில் அது மறையும் என்ற நேர வித்தியாசங்களை ஹிஜ்ரிநாட்காட்டியின் தேதிகளில் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஏற்பட்ட சந்தேகமே இது. காரணம் சந்திர மாதத்தின் 22-வது பிறை அவரவர் நாட்டுக் கடிகார நேரப்படி நள்ளிரவில்தான் உதிக்கும். அப்படி நள்ளிரவில் உதிப்பதால், உதயம் 12 மணியைத் தாண்டும் போது, உதிக்கும் அப்பிறையின் உதயத்தை, நடப்பு இரவில் குறிக்காது விட்டுவிட்டு அடுத்தநாளில் உதிப்பதாக குறிப்பிட்டிருப்பர். எனவே  22-வது பிறைக்குரிய நாளில் அது உதயமாகவில்லை, பிறை காணவில்லை என்று கிருஸ்துவக் காலண்டரின் விதிமுறைப்படி புரியக் கூடாது. காரணம் அந்நாளில் வானில் பிறை இருக்கத்தான் செய்யும். இதுதான் 22-ஆம் பிறை காணாமல் போவதாகச் சொல்வதின் பிண்ணனியாகும்.

28-ஆம் பிறை காணாமல் போவதாகச் சொல்வதின் பின்ணனி என்ன?

முஸ்லிம்களுக்கு ஃபஜ்ரு நேரத்திலிருந்து புதியநாள் ஆரம்பமாகிறது. அதனால் சந்திர உதிப்பதை அளவிட நள்ளிரவு 12 மணி என்று கொள்ளாமல் ஃபஜ்ர் நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். அதாவது ஃபஜ்ருக்கு முன்னர் உதிக்கும் பிறை முந்திய நாளுக்குரியது என்றும், ஃபஜ்ர் நேரத்திற்குப் பின்னர் உதிக்கும் பிறை அடுத்த நாளுக்குரியது என்றும் வாதிக்கின்றனர். சூரிய சூழற்சியின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள தொழுகை நேரங்களைப் போலவே, (''வக்து'') சந்திரனும் அவரவர்கள் பகுதி நேரத்திற்குரியது என்று புரிந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. ஒருநாளின் துவக்கம் ஃபஜ்ரு என்பது மார்க்க அடிப்படையில் சரிதான். அதனால் அதற்கும் பிறை பார்த்தலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ஹிஜ்ரி காலண்டரில் சந்திரனின் உதயத்தையோ, அதன் அஸ்தமனத்தையோ நாம் குறிப்பிடுள்ளோமா? அல்லது நாம் இப்படி பிரச்சாரம்தான் செய்கிறோமா? இல்லையே! அப்படியிருக்க உலக நேரத்தில் (UT-Universal Time)  கொள்ள வேண்டிய ஒரு பிறையை ஃபஜ்ர் நேரத்தை வைத்து வரையறுப்பதால் ஹிஜ்ரி காலண்டர் பிழையாகாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். சந்திர மாதத்தின் 28-வது பிறை அவரவர் நாட்டு கடிகார நேரப்படி ஃபஜ்ர் வேளையில்தான் உதிக்கும். அப்படி உதிப்பதால், உதயம் ஃபஜ்ரைத் தாண்டும் போது பிறை அடுத்தநாளில் உதிப்பதாகப் புரிகின்றனர். எனவே 28-வது பிறைக்குரிய நாளில் அது உதயமாகவில்லை, பிறையை நாங்கள் காணவில்லை என்கின்றனர். இது சரியான வாதம்தானா சிந்திப்பீர். பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள், மாதத்தின் ஒருசில நாட்கள் பார்க்காமல் போனாலும் மார்க்க அடிப்படையில் குற்றமுமில்லை, பிறை கணக்கீடும் மாறப்போவதில்லை.  

 

இந்த விமர்சனம் மாநிலப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் பொருந்தும்.

சந்திர மாதத்தின் இறுதிநாட்களின் தேய்பிறைகளை மஃரிபில் மேற்கில் பார்க்க இயலாது. மாதத்தின் இறுதிநாள் புவிமைய சங்கமநாள் (அமாவாசை). அந்த அமாவாசை நாளுக்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல் நாளாகும். அந்த முதல் நாளின் வளர்பிறைதான் மஃரிபு வேளையில் காட்சி அளிக்கும். அந்தப் பிறையைக் கண்ட தகவலை உலகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் பெறுவதே சர்வதேசப்பிறை நிலைப்பாடு ஆகும். பிறை காணப்படாவிட்டால், அல்லது தகவல் கிடைக்கப் பெறாவிட்டால் நடப்பு மாதத்தில் ஒருநாளை கூட்டிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

முதல் நாளின் வளர்பிறையை தமிழக எல்கைக்குள் பார்க்க வேண்டும் என்பதே மாநிலப் பிறையினரின் நிலைப்பாடு. முதல் இரண்டு நாட்களின் பிறை தமிழக எல்லைக்குள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது, நாம் பார்ப்பது மூன்றாவது பிறையாக இருக்கலாம் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர்.

ஆக மேற்படி இரண்டு நிலைப்பாட்டிலுள்ளவர்களுக்கும் பிறை கண்களுக்குத் தெரியாமல் போகும் வாய்ப்புள்ளது என்கின்றனர். இதற்கு மேகமூட்டம், தூசிதுகள்கள், புகை மூட்டம், பனிப்பொழிவுகள், அதிகமான வெளிச்சம், பார்வைக் கோளாறு போன்ற காரணங்களால் பிறை தெரியவில்லை என்று நம்புகிறார்கள். இதுவல்லாமல் மேற்படி இரு நிலைப்பாட்டிலுள்ளோரும் 'தங்களுக்கு பிறை காணாமல் போய் விடுகிறது' என்று இதுநாள் வரை பிரச்சாரம் செய்ததில்லை.

ஒருநாளின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை குர்ஆன் சுன்னாவின் ஒளியில் ஆதாரப்பூர்வமாக நாம் எடுத்துச் சொல்கிறோம். அதனால் ஃபஜ்ருக்கு முன்னர் தோன்றும் தேய்பிறைகளின் இறுதி பிறைகளை அந்நாளுக்கு முந்திய நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் வாதம் வைக்கின்றனர். இந்த வாதம் தமிழகப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் எதிரானதே. அதாவது ஒரு நாளின் துவக்கம் மஃரிபு என்பவர்களுக்கு இந்த விதியைப் பொருத்திப் பாருங்கள். இவர்களின் தவறான சிந்தனையின்படி மஃரிபு நேரத்திற்கு முன்னர் உதிக்கும் பிறைகளை அந்நாளுக்கு முந்திய நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும், அதுபோல மஃரிபுக்கு நேரத்திற்கு பின்னர் உதிக்கும் பிறைகளை நடப்பு நாளுக்குரியதாகக் கொள்ள வேண்டும்;.

அப்படியானால், மஃரிபிலிருந்து நாளைத் துவங்கும் அனைவருக்கும் ரமழான் மாதத்தில் பவுர்ணமி தினம் வரை நோன்பு நோற்க முடியாமல் போகும். காரணம் சந்திர மாதத்தின் முதல்நாள் முதல், பவுர்ணமிநாள் வரை, பிறை காலை நேரத்தில்தான் உதயமாகிறது, மஃரிபில் சூரியன் மறைந்த பின்னர் அது காட்சி அளிக்கிறது. முழுநிலவு வரையுள்ள சுமார் 13-நாட்களுக்குரிய பிறைகள் அனைத்தும் மஃரிபு நேரத்திற்கு முன்னர்தான் உதிக்கிறது. இதனால் தமிழகப்பிறை, மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிலுள்ளவர்கள் ரமழான் மாதத்தின் பாதி அளவு நோன்புகளை நோற்க முடியாமல் போகும். ஹிஜ்ரி காலண்டரில் ஒருநாளின் பிறையை காணவில்லை என்போர் இதற்கு என்ன தீர்வைச் சொல்ல போகிறார்கள்?

ஃபஜ்ரு வக்தை அளவு கோளாக வைத்ததால் ஒருநாளின் பிறையை காணவில்லையாம்! அப்படியானால் ஒரு நாளின் துவக்கமாக மஃரிபு நேரத்தைக் கருதினால் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் ''மிஸ்ஸிங்'' ஆகும்? மேற்படி  விமர்சனத்தைக் கிளப்புவோர் சிந்திக்க வேண்டாமா? 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்று ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள ஹிஜ்ரி காலண்டரை குறைகூறுவோர், தங்களின் பிறை நிலைப்பாட்டை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும், 22-வது நாளிலோ அல்லது 28-வது நாளிலோ பிறை காணாமல் (மிஸ்ஸிங்) போகிறது என்று வாதிப்போருக்குதான் இங்கு பதிலளிக்கப்படுகிறது. 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்ற விமர்சனம் மாநிலப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை நிலைப்பாட்டிற்கும் பொருந்தும் என்பதால், மேற்படி விமர்சனத்தை கிளப்புபவர்கள் பிறை விஷயத்தில் எந்த நிலைப்பாட்டிற்கும் செல்லவியலாத சூழல் உள்ளது.

தேய்பிறைகளில் ஒன்று வானில் காணமல் போகிறது எனில் இவர்களின் வாதம் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும்தான் பொருந்தும். இதில் ஹிஜ்ரி நாட்காட்டியை குறை சொல்ல என்ன இருக்கிறது? தெரியவேண்டிய பிறை வடிவத்தைக் காணவில்லை என்றால் ஹிஜ்ரி நாட்காட்டியின் பிறைப்படித்தரங்கள் அனைத்தும் மாறுபட்டுவிட வேண்டும். அப்படி மாறுபடுகிறதா, இல்லையே? ஹிஜ்ரி 1436-இன் துல்கஃதா மாதம் (13-09-2015) ஞாயிற்றுக்கிழமை புவிமைய சங்கமநாளோடு முடிவடைந்தது. அன்றுதான் அமாவாசை தினம் என்பதற்கு மற்றொரு அத்தாட்சியாக சூரியக் கிரகணத்தையும் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தினான். சந்திர மாதத்தின் இறுதிநாளில்தான் சூரியன் சந்திரன், பூமி, இம்மூன்றும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் சூரியக்கிரகணம் ஏற்படும். எனவே துல்கஃதா மாதம் (13-09-2015) ஞாயிற்றுக்கிழமை 30-நாட்களில் முடிந்தது என்பதை யாராலும் மறுக்க வியலாது. இந்நிலையில் சந்திர ஓட்டத்தை அவரவர் பகுதி நேரத்திற்கு மாற்றி அமைத்து சந்திரன் உதிக்கிறது, மறைகிறது என்று மக்களைக் குழப்பிவிடுவது ஏன்? இவர்களை பின்னின்று இயக்குபவர்கள் யார்? என்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்குர்ஆனில் சூரியனையும் சந்திரனையும் குறித்து பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனின் பல இடங்களில் சூரிய சந்திர ஓட்டங்களையும், அவற்றின் துல்லியமான இயக்கங்களையும் (55:5, 6:96) வல்ல அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள, ஒருநாளுக்குள் உதித்து மறையும் சூரியனின் உதயம், அதன் உச்சநிலை, அதன் மறைவு, அந்திப் பொழுதுகள் போன்றவற்றை நபி (ஸல்) அவர்கள் எப்படி அறிந்துகொள்வது? என்பதை நடைமுறைப்படுத்தி காண்பித்துள்ளார்கள். இருப்பினும் ஒருநாளை அளப்பதற்கு, ஒவ்வொருநாளும் தென்படும் சந்திரனின் உதயம், அதன் உச்சநிலை, அதன் மறைவு போன்றவற்றின் நேரங்களை மார்க்கம் கூறவில்லை. சூரியனின் கணக்கீடு ஒருநாளுக்குள் இருக்கும் தொழுகை நேரங்களை அறிவதற்காகத்தான். சந்திரன் ஒவ்வொரு நாளுக்குரிய தேதியை காண்பிப்பதற்காகவே. இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனின் அம்சங்களைப் போல சந்திரனின் அம்சங்கள் இல்லை. பிறந்த தலைப் பிறையானது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் 12 மணி நேரங்கள் சூரியனைப் போல காட்சியளித்துக் கொண்டு கடந்து செல்வதில்லை. சூரியனைப் போல பிறையும் ஒவ்வொரு நாளும் நம்மிடையே உருண்டோடி வரும் என்று நினைத்துக் கொண்டதால்தான் சந்திரனைப் பற்றி பேசும்போதெல்லாம் சூரியனின் விதிகளை பொருத்திப் பார்க்கின்றனர்.

சந்திரனின் அமைப்பு விதிகளைப் பொறுத்தவரையில்,

மக்களுக்குத் தேதியை அறிவிக்கும் அதன் படித்தரம் (அல்குர்ஆன் 2:189),

ஆண்டுகளின் கணக்கீட்டிற்கு அதன் மனாஜில் (அல்குர்ஆன் 10:5),

சந்திரன் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிச்செல்லும் நிலை (அல்குர்ஆன் 84:19),

அதன் மனாஜிலில் இறுதியாக உர்ஜூஃனில் கதீம் என்ற படித்தரம் (அல்குர்ஆன் 36:39),

பிறகு பிறை மறைக்கப்படும் நிலை (நபிமொழி),

பிறகு சூரியனை பின்தொடரும் நிலை (அல்குர்ஆன் 91:2)  

அதன் பாதையில் அதன் துல்லியமான இயக்கம் (அல்குர்ஆன் 55:10, 14:33)

என்று வல்ல அல்லாஹ் அமைத்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் ஒரு நாளுக்கு தேதியிடும்போது சந்திர உதயத்தையும், அதன் அஸ்தமனத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன? சந்திரன் புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் புவிமைய சங்கமநாளிலோ, அல்லது பிறை பார்க்கப்படாத நாட்களிலோ, பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அந்த நாளுக்கு என்ன தேதியைப் போடவேண்டும்? எப்படி தேதி போடவேண்டும்? வரையறை நேரம் (Cuttoff Time)என்பதில், நேரஅளவீடு சூரியனின் சுழற்சி அடிப்படையில் அமைந்தது. அந்த சூரிய நேரத்தை வைத்துக் கொண்டு, அந்த நேரத்தின் அடிப்படையில்தான் சந்திரனை பார்க்க வேண்டும் என்று கூறுவது அறிவுடையாகுமா? சிந்திப்பீர்.

பிறையின் ரிமோட் கண்ட்ரோல் இவர்களின் கண்களில் உள்ளதைப் போல விமர்சிக்கின்றனர். பிறை புறக்கண்களுக்குத் தெரிவதை வைத்து சந்திரக் கணக்கீடு இல்லை என்பதை முதலில் இவர்கள் விளங்க வேண்டும். கனடா நாட்டின் அலர்ட் நகரத்தில் (Alert), கடந்த 1436 துல்கஃதா மாதத்தின் வளர்பிறை நாட்களில், சுமார் 10 நாட்கள் பிறை உதயமே ஆகவில்லை. அதுபோல, அதே துல்கஃதா மாதத்தின் தேய்பிறை நாட்களில் சுமார் 10 நாட்கள் பிறை மறையவே இல்லை. இதுபோன்று பல நகரங்களை நம்மால் குறிப்பிட இயலும். இவை போன்ற பகுதிகளில் ஒரு காலண்டர் இல்லாமல் எப்படி நாட்களை கணக்கிடுவது? பூமியின் ஒரு நகரத்தில் பிறை தெரிவதை வைத்துக் கொண்டு ஒட்டமொத்த உம்மத்திற்கும் காலண்டர் கணக்கீட்டை நிறுவடியுமா? ஆண்டுகளின் கணக்கீட்டிற்கு அதன் மனாஜிலைத்தான் (10:5) அல்லாஹ் விதியாக்கி உள்ளான் என்பதை ஏன் புரிய மறுக்கின்றனர்.

ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் 28 பிறைகள் தான் உள்ளது, கண்களுக்குத் தெரிய வேண்டிய ஒரு படித்தரத்தை காணவில்லை என்றால், ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் பிறை மறைக்கப்படுகிறதா? அவ்வாறு மாதத்திற்கு இரண்டு நாட்களுக்கும் பிறை மறைக்கப்படும் என்றால், ''மறைக்கப்படும் போது எண்ணிக்கையை பூர்த்தியாக்குங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? முதலில் மறைக்கப்படும்போது மாதத்தை பூர்த்தியாக்கி விடுவோம். மீண்டும் இரண்டாவதாக மறைக்கப்படும் நாளை என்ன செய்வது? முதல்முறை பிறை மறைக்கப்படும்போது ஏற்கனவே மாதத்தைப் பூர்த்தியாக்கி விட்ட நிலையில், மீண்டும் சந்திரன் இரண்டாவது முறை மறைக்கப்படுகிறது என்று இரண்டாவது முறையும் மாதத்தைப் பூர்த்தியாக்க வேண்டுமா? முப்பது நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் பிறை மறைக்கப்படும் என்றால் 29-நாட்கள் கொண்ட மாதத்தில் எத்தனை நாட்கள் பிறை மறைக்கப்படும்? தேய்பிறை நாட்களில் 'தெரிய வேண்டிய ஒருநாளின் பிறை காணாமல் போய் விடுகிறது' என்ற விமர்சனத்தில் இவை போன்ற ஏராளமாக எதிர் வாதங்கள் எழுகின்றன.

சூரிய, சந்திரக் கணக்கீடு பற்றிய சிறு குறிப்பு:

பூமியானது தன்னைத்தானே தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு 24 மணிநேரங்கள் ஆகின்றன. ஒரு இரவும், ஒரு பகலும் கொண்ட அந்த 24 மணிநேரத்தை ஒரு நாள் என்கிறோம். அந்த ஒருநாளுக்குள் சூரியன் காலையில் உதித்து மாலையில் (மஃரிபில்) அஸ்தமாகிவிடும். ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரை ஒரு நாளுக்கு 24 மணிநேரங்கள் என்பதை மற்றொரு கோணத்திலும் தெரிந்து கொள்ளலாம். அதாவது இன்று நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் 90 டிகிரியில் வரும்போது நேரத்தை குறித்துக் கொண்டு, நாளை அவ்வாறு நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் 90 டிகிரியில் வரும் போது 24 மணிநேரங்கள் ஆகியிருக்கும்.

ஆனால் சந்திரனின் ஒருநாளுடைய பயண வேகம் சூரியனைப் போல இல்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு பவுர்ணமி நாளை எடுத்துக் கொள்ளலாம். முழுநிலவு அன்று நள்ளிரவில் சந்திரன் நமது தலைக்கு மேல் 90 டிகிரியில் வரும் போது குறித்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்த நாள் அவ்வாறு நள்ளிரவில் சந்திரன் நமது தலைக்கு மேல் அதே இடத்திற்கு 90 டிகிரியில் வருவதற்கு சுமார் 24 மணிநேரங்களும் 48 நிமிடங்களும் சந்திரன் எடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆக சூரியனின் சுழற்சியைவிட சுமார் 48 நிமிடங்கள் கூடுதலாக சந்திரனுக்கு ஆகிறது. சந்திரனின் சுழற்சியானது, சூரிய ஓட்டத்தை விட ஒரு மணிநேரத்திற்கு 2 நிமிடங்கள் பின்தங்கும் என்பதையும் அறியலாம்.

நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது. இதன் அடிப்படையில் ஒரு சந்திர மாதத்திற்கு 29 நாட்களும் 12 மணிநேரங்களும் ஆகுவதை அறியலாம். அதாவது ஒரு சந்திர மாதம் என்பது 29.53 நாட்கள் நாட்களாகும். ஒவ்வொரு சந்திரமாதத்தின் முடிவிலும் அமாவாசை எனும் புவிமைய சங்கமம் ஏற்பட்டு அந்தந்த சந்திர மாதத்தின் முடிவை அறிவிக்கும். இதைத்தான் பூமியை மையப்புள்ளியாக வைத்து, சந்திரன் தனது வட்டப்பாதையில் ஒரு முறை பூமியை சுற்றி முடிக்கும் நாட்களின் எண்ணிக்கையை ஒரு சந்திரமாதம் என்கிறோம்.

ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி கோணங்கள் உண்டு. இந்த 360 கோணத்தை சந்திரனின் ஒரு மாத சுழற்சியால் வகுத்தால் சந்திரன் ஒரு நாளுக்கு எத்தனை டிகிரி பயணத்துள்ளது என்பதை அறியலாம். அதாவது 360 ÷ 29.53 = 12.1என்ற விடை கிடைக்கும். அதாவது சந்திரன் ஒவ்வொரு நாளும் சுமார் 12 டிகிரி அளவுக்கு பூமியை சுற்றுகிறது என்பதை அறியலாம். இவை புரிவதற்கு மிக எளிதான, மிகவும் சாதாரண கணக்கு முறையே. தேய்பிறை நாட்களில் 'தெரிய வேண்டிய ஒருநாளின் பிறை கண்களுக்கு காணாமல் போய் விடுகிறது' என்று கூறுவதும், சந்திரன் தனது பாதையில் ஒருநாள் 12 டிகிரி அளவு பயணிக்க வில்லை என்று கூறுவதும் ஒன்றுதான். இது நகைப்புக்குரிய விமர்சனமாகத் தெரியவில்லையா?

ஹிஜ்ரி நாட்காட்டியில் ஒரு சந்திர நாளுக்கு, ஒரு சூரியநாளை நாம் கொடுத்துள்ளதாக விமர்சித்து, ஒரு தவறான கணக்கீட்டு முறையை மக்களிடம் கூறியுள்ளார்கள். அந்த விமர்சனத்திற்கு நமது விளக்கத்தை புரிய வேண்டுமெனில் இந்த அடிப்படை கணக்கு தெரிந்திருக்க வேண்டும்.

கணக்கீட்டின் அடிப்படை தெரியாத விமர்சகர்கள்

ஹிஜ்ரி நாட்காட்டியில் ஒரு சந்திர நாளுக்கு, ஒரு சூரியநாளை நாம் கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். பிறகு தங்கள் வாதத்தை நிலைநாட்ட ஒரு கணக்கீட்டையும் தந்துள்ளார்கள். 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்ற விமர்சனத்திற்கு அவர்கள் வருவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என்பதால் இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விமர்சகர்கள் தெரிவிக்கும் கணக்கு பின்வருமாறு,

''கணக்குபடி 29 சந்திர நாள் × 23.10 Hrs = 670 hrs. 670 hrs ÷ 24 hrs( சூரிய நாள் அளவு) 27.92 Days. ஆச்சரியம், 29 சந்திர நாளும் 29 சூரிய நாளும் சமமாக வருமா?''  என்று வாதம் வைத்துள்ளனர்.

முதலில் நாம் என்ன கேட்கிறோம் என்றால், நாள் என்றால் என்ன? சந்திரனின் உதயம் அஸ்தமன நேரத்தைக்  கணக்கிட்டுதான் ஒருநாள் என்பது அமைந்துள்ளதா? 29 சந்திர நாட்களும், 29 சூரிய நாட்களும் சமம்தான் என்று ஹிஜ்ரி கமிட்டி என்றாவது பிரச்சாரம் செய்துள்ளதா? இவை போன்ற தகவல்களை நமது ஹிஜ்ரி காலண்டரில் குறிப்பிட்டுள்ளோமா?  ஏன் இப்படி தேவையில்லாமல் நம்மீது அவதூறை சுமத்தி, பெரும் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. 'பிறை காணாமல் போய் விடுகிறது' என்று தானும் குழம்பியது மட்டுமல்லாமல் பொது மக்களையும் அல்லவா குழப்புகிறார்கள்!

இரண்டாவதாக அவர்கள் போட்டுள்ள கணக்கீட்டிலுள்ள பிழைகளைப் பாருங்கள். அதாவது சந்திரன் ஒரு நாளில் உதித்து மறையும் கால அளவை 23.10 மணிநேரங்கள் என்று தவறாகப் புரிந்துள்ளார்கள். இப்படி 23.10 மணிநேரங்கள் என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம், சந்திரன் ஒவ்வொரு நாளும் சூரியனைவிட சுமார் 50 நிமிடங்கள் பின்தங்குவதால் அதை 24 மணிநேரங்கள் கொண்ட நாளிலிருந்து 50 நிமிடங்களை கழித்து 23.10 என்று கணக்கிட்டுள்ளார்கள்.

24 Hours - 50 minutes  = 23 hours 10 minutes என்று தவறாக புரிந்து கணக்கிட்டு விட்டனர். சூரியனின் ஓட்டமே 24 மணிநேரங்கள் என்றால் சூரியனைவிட வேகத்தில் குறைவாகப் பயணிக்கும் சந்திரன் ஒருநாளை 23.10 மணிநேரத்தில் முடித்துவிடுமா? என்ற அடிப்படை சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை.

சந்திரன் சுமார் 50 நிமிடங்கள் பின்தங்குகிறது என்றால் 50 நிமிடங்கள் தாமதமாக வருகிறது என்று பொருள். நாம் சூரிய, சந்திரக் கணக்கீடு பற்றிய சிறு குறிப்பில் தெரிவித்துள்ள படி 24 மணிநேரத்திலிருந்து சந்திரன் தாமதிக்கும் 50 நிமிடங்களை கூட்ட வேண்டும்.

அதாவது 24 Hours + 50 minutes  = 24 hours 50 minutes.

இந்த அடிப்படை கணக்கறிவு இல்லாமல், ஒரு சந்திர மாதம் என்பது 28 நாட்கள் தான் (27.92 Days)என்ற முடிவக்கு வந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது என்ற வழிகாட்டலை இவர்களுக்கு மறக்கடித்தது யார்?

இதன் அடிப்படையில் 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 28 சந்திர நாட்கள் + ஒரு அமாவாசை நாள் என்று கூட்டினால் 29 என்ற எண்ணிக்கைதான் வருகிறது அதனால் ஒருநாள் ''மிஸ்ஸிங்'' என்ற உறுதியான (!) முடிவுக்கு வந்துள்ளனர். இவர்கள் பெரும் கூட்டமாகவோ, ஒரு இயக்கமாகவோ, அல்லது ஜமாஅத்தாகவோ இயங்குவதாக எண்ணி விடாதீர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் இருந்து கொண்டுதான் இந்த வேலையைச் செய்கிறார்கள். குர்ஆன் சுன்னாவின் ஆய்வுகளோ, பிறை கணக்கீட்டின் அடிப்படையோ தெரியாத இவர்களுக்கு பதில் சொல்வதில் எங்கள் சக்தியும், பொன்னான நேரங்களும்; வீணடிக்கப்படுவதை நிதர்சனமாக உணர்கிறோம். இருப்பினும் விமர்சனம் வைக்கப்பட்டு விட்டதால் அதை விளக்க வேண்டிய கடமை நமக்கு வந்து விட்டது. இதனாலேயே அறிவீனமான இத்தகைய விமர்சனத்திற்கும்கூட பதிலளித்துக் கொண்டுள்ளோம்.

29 சந்திர நாட்கள் என்பது சுமார் (29 × 24.50 Hrs ) =  710.5  மணிநேரங்களாகும்,

இந்த 710.5 மணிநேரங்களை எத்தனை சூரிய நாட்களாகக் கொள்ளலாம் என்பதை அறிவதற்கு 24 மணிநேரங்களாக இதைப் பிரிக்க வேண்டும். எனவே 710.5  ÷ 24 hrs= 29.60  நாட்கள், என்பதாக வருகிறது. ஆக சந்திர ஓட்டத்தை சூரிய நாள் கணக்கீட்டின் படி வகுத்துப் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது என்பதின் ஆழம் புரியும்.  ''ஆச்சர்யம், 29 சந்திர நாளும் 29 சூரிய நாளும் சமமாக வருமா?'' என்று சம்பந்தமில்லாமல் யோசித்து, மாதத்திற்கு 28 நாட்கள் தான் (27.92 Days)என்று முடிவெடுத்தவர்கள் முடிந்தால் சிந்திக்கட்டும்.

அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்!

''உங்களுக்கு அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதில் எல்லா முடிச்சுகளும் அவிழும்'' என்று வாதம் வைக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். இந்நிலையில் எதோ மர்ம முடிச்சுக்குள்தான் பிறை சிக்குண்டுள்ளது போல சித்திரிக்கின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டியில் துல்கஃதா பிறை 22-லோ அல்லது துல்கஃதா பிறை 28-லோ வானில் பிறையைக் காணவில்லை என்று வாதம் வைத்து விட்டு அதை நிலைநாட்டிட முடியாதவர்கள் தேவையில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டு தங்களது வழிகேட்டை நியாயப்படுத்திட முயல்கின்றனர். ''உங்களுக்கு அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ் எங்கே உள்ளது?

ஆக இவர்களது சிந்தனை எந்த அளவுக்கு மோசமாக போயுள்ளது பாருங்கள். ஒரு மாதத்திற்கு 29-நாட்கள் இருந்தால் அந்த 29-வது நாள் இறுதிநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும். இதுதான் அடிப்படை. 29 நாட்கள் கொண்ட மாதங்கள் ஒரு முழுமையான மாதம்தான், குறையுள்ள மாதம் அல்ல. இந்நிலையில் 30 நாட்கள் கொண்ட மாதத்தில் மட்டும்தான் பிறை மறைக்கப்படும் என்று வாதம் எழுப்பியுள்ளனர். ஹதீஸ்களை ஆய்வுசெய்வதில் இவர்களுக்குள்ள பெரும் பின்னடைவைத்தான் இது காட்டுகிறது. ஒருமாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள் என்று மட்டும்தான் ஹதீஸ் வந்துள்ளதா? ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள் (புகாரி 1823) என்றும் ஹதீஸ் உள்ளதால் ஒவ்வொரு ஷஃபான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிவிடலாமா? முப்பது நாட்கள் என்று எண்ணிக்கை குறிப்பிடாமல் பொதுவாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள், பூர்த்தியாக்குங்கள், எண்ணிக்கையை பூர்த்தியாக்குங்கள் போன்ற பொதுவான சொற்களை நபி (ஸல்) பயன்படுத்தி நமக்குக் கட்டளையிட வில்லையா? மேற்படி பொதுவான சொற்கள் கையாளப்பட்டுள்ள ஏராளமான ஹதீஸ்கள் 29 நாட்களோ அல்லது 30 நாட்களோ உடைய மாதத்திற்குப் பொதுவாக பொருந்தாதா?

ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, இவர்களின் பிறை பார்க்கும் வரைமுறைப்படி 28 பிறைகள்தான் காண முடிகிறது என்றால், ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்பதை எப்படி முடிவு செய்வது?

அதுவிருக்கட்டும், ''அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்!'' என்ற இவர்களின் தத்துவத்தின்படி எத்தனை பிறைகள் மிஸ்ஸிங் ஆகும்? அப்போது மிஸ்ஸிங் ஆகாது என்றால், ''அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்!'' என்ற இவர்கள் ஒப்புக்கொள்ளும் அளவீட்டை வைத்து ஒரு நாட்காட்டியைத் தயாரித்து தரட்டுமே. ஒரு மாதத்திற்கு 28 பிறைகள்தானே தெரிகிறது என்பதுதானே இவர்களது வாதம். பிறகு ''அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்!'' என்று இவர்கள் வாதிப்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?

(நபியே!) மனிதர்களில் ஒருவகையினன் இருக்கிறான். உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தன் இருதயத்தில் உள்ளது பற்றி சத்தியஞ் செய்து அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். உண்மையில் அத்தகையவன்தான் உம்முடைய கொடிய பகைவனாவான். அவன் உம்மை விட்டுத் திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான். விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான். கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. ''அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்'' என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அந்நரகமானது தங்குமிடங்களில் மிகக் கேடானதாகும். இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான். அல்லாஹ் இத்தகைய தன் நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சறுகி விடுவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் (2 : 204- 209)

காலையிலேயே தேதி தெரிய வேண்டுமாம் :

ஹிஜ்ரி நாட்காட்டியில் ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போகிறது ''மிஸ்ஸிங்'' என்று வாதம் வைத்தவர்கள், மற்றொரு கேள்வியையும் துணைக் கேள்வியாக வைத்துள்ளனர். அதாவது :

''ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் அவனுக்கு அது எந்த நாள் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். ஒருநாளின் காலைப் பொழுதை முடித்து விட்டு அவன் உறங்கச் செல்லும் போது அவனுக்கு தேதி தெரிந்து என்ன பயன்? காலையில் எழுந்ததும் ஒரு கடிதம் எழுதும் போது கூட அந்தநாளின் தேதியைக் குறிப்பிட வேண்டும். இது ஹிஜ்ரி நாட்காட்டிபடி எப்படி சாத்தியம்?''

ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய தேதி என்ன? என்பது சரியாகத் தெரியாமல் இல்லை. தெரியத்தான் செய்கிறது. பிறையானது காலையில் உதித்து அடுத்தநாள் காலை விடிவதற்கு முன்னரே அது மறையவும் வேண்டும் என்ற ஆசை இவர்களை அறியாமலேயே குடிகொண்டுள்ளதை இக்கேள்வியிலிருந்து அறியலாம். இவர்களைப் பொறுத்தவரை, தங்களின் மனோ இச்சைபடிதான் சந்திரன் காலத்தை காட்ட வேண்;டும் என்று விரும்புகிறார்கள் போலும். சந்திர உதயம் தங்கள் பகுதியில் நடைபெற்ற பின்னர்தான் ஒருநாள் என்பது துவங்குகிறது என்று தவறாகப் புரிந்துள்ளனர். இவ்வாறு பிறையின் உதிப்பு மற்றும் அஸ்தமனத்தை ஆய்வு செய்கிறேன் என்று கிளம்பி இறுதியில் குழம்பிபோய் பிறையைப் பற்றி பேசுவதே ஃபித்னா என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் பயணித்த அந்த தவறான வழியில்தான் இவர்களும் பயணிக்கிறார்கள். சந்திர மாதத்தின் 21-ஆம் நாளுக்குப் பின்னர் வரும் தேய்பிறைகள் அனைத்தும் நள்ளிரவுக்குப் பின்னர்தான் உதிக்கின்றன. இது ஹிஜ்ரிகமிட்டிக் காரர்களின் திட்டமிட்ட சதியா என்ன? அல்லாஹ்வின் விதியாக்கியுள்ள சந்திர சுழற்சியில் மாற்றம் தேவை என்று தர்க்கம் செய்கின்றனர். இவ்வாறு வாதம் எழுப்பிக் கொண்டே ''ஒவ்வொரு நாளின் பிறைகளும் இருட்டில்தான் பார்க்க வேண்டும்'' என்றும் கூறுகிறார்கள். இவை முரண்பாடாகத் தெரியவில்லையா? ''ஒவ்வொரு நாளின் பிறைகளும் இருட்டில்தான் பார்க்க வேண்டும்'' என்பதை கற்றுக் கொடுத்தது யார்? இதற்கு மார்க்க ஆதாரம் என்ன?

இன்னும் கல்வி ஞானமோ, நேர்வழி காட்டியோ, பிரகாசமான வேத ஆதாரமோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். அல்குர்ஆன் (22 : 8)

ஹிஜ்ரி காலண்டர் சரியில்லை என்றால் சரியான காலண்டரைத் தரவேண்டும்

முப்பது நாட்கள் கொண்ட மாதத்தில், 28 சந்திர நாட்கள் + ஒரு அமாவாசை நாள் என்று கூட்டினால் 29 என்ற எண்ணிக்கைதான் வருகிறது என்கின்றனர். அப்படியானால் இவர்களைப் பொறுத்தவரையில் ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு தவறான நாட்காட்டியாகும். எனவே சரியான நாட்காட்டி எது? அதை மக்களிடம் வழங்குங்கள் என்கிறோம். சந்திரனை அடிப்படையாக வைத்து நாட்காட்டி தயாரிக்க இயலுமா இயலாதா? முடியும் என்றால் எப்படி? நீங்கள் அதை தயாரித்து கொடுங்கள் என்கிறோம். அந்த காலண்டர்படி 'மிஸ்ஸிங்' இல்லாமல் பிறை சரியாக வருமா? அதையாவது சொல்லுங்கள் என்கிறோம்.

இப்படி நாம் கேள்வி எழுப்பும் போது, ''ஒரு குழு செய்ய வேண்டிய வேலையை என்னைச் செய்யச் சொல்வது நியாயமா?'' என்று பதில் சொல்கின்றனர். அப்படியானால் ஹிஜ்ரிகமிட்டி என்ற ஆய்வுக்குழு அச்சிட்ட காலண்டரை குறைகாணும் இவர்கள், சம்பந்தப்பட்ட எங்களை அணுகி விளக்கம் பெறாமல், டெலிகிராம், வாட்ச்அப், முகநூல் என்று பொதுத்தளங்களில் தனிமனிதனாக விமர்சிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? இதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? இதிலிருந்தே இவர்களிடம் உளத்தூய்மையும் இல்லை, சத்தியமும் இல்லை என்பது விளங்க வில்லையா?

ஹிஜ்ரிகமிட்டி சுமார் 18 வருடங்களாக ''ஹிஜ்ரி காலண்டர்'' என்று வெறும் காலண்டரை வினியோகித்து விட்டுப் போகவில்லை. சுமார் 45 வருடங்களாக பிறைகளை புறக்கண்களால் பார்த்து குறிப்பெடுத்தவர்கள் இந்த ஹிஜ்ரிகமிட்டியில் உள்ளார்கள். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பிறைகளை கவனித்து, பிறை விஷயங்களை ஆய்வு செய்பவர்கள் இக்கமிட்டியில் உள்ளார்கள். இப்படி உருவாக்கப்பட்ட ஹிஜ்ரி காலண்டரை சர்வ சாதாரணமாக, ஒரு பேப்பரில் சந்திர உயத்தை எழுதி வைத்துக் கொண்டு, தேய்பிறைகளை தவறாக பார்த்துவிட்டு, ஹிஜ்ரி காலண்டரில் ஒருநாள் ''மிஸ்ஸிங்'' என்று இவர்கள்; சொல்கிறார்கள். இப்படி தவறான பிறைபார்த்தல் மூலம், ஹிஜ்ரி காலண்டர் மீது பொய்ப்பிரச்சாரம் செய்யும் உரிமை இவர்களுக்கு இருக்கிறது என்றால், சரியான நாட்காட்டியை தாருங்கள் என்று கேட்பதற்கு ஹிஜ்ரி கமிட்டியினருக்கு உரிமை இல்லையா? ஹிஜ்ரி நாட்காட்டியை விமர்சிக்கும் யாராக இருந்தாலும், அவர்களது கூற்றில் உண்மையாளராக இருந்தால் சரியான மாற்று நாட்காட்டியை மக்களுக்குத் தரவேண்டும்.

 

ஒருநாளுக்கு ஒரு படித்தரம் என்றால் என்ன?

ஒருநாளைக்கு ஒரு படித்தரம் என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சந்திரன் ஒவ்வொரு நாளும் சுமார் 12 டிகிரி அளவுக்கு தனது வட்டப் பாதையில் பூமியை சுற்றுகிறது என்பதை முன்னர் அறிந்தோம். ஒரு நாளுக்கு 12 டிகிரி எனில், சந்திரனின் ஒருமாத பயணத்தில் 360 டிகிரிகள் முடித்து ஒரு முழுமையான வட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்யும். ஒவ்வொரு நாளைக்கு 12 டிகிரி அளவுக்கு தனது மன்ஜிலில் பயணிக்கும் சந்திரன் பூமியிலுள்ளவர்களுக்கு தனது வடிவ நிலைகளாலும், அது காட்சியளிக்கும் நேர அளவிலும், ஒவ்வொரு நாளும் வித்தியாசப்பட்டு வருகிறது.

சந்திர மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையானது, காலையில் சூரியன் உதயமாகிய பின்னர் சில நிமிடங்கள் தாமதித்து உதயமாகும். மாலையில் சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையில் அது மறையும். அப்படி மஃரிபு வேளையில் புறக்கண்களுக்குத் தென்படும் முதல் நாளுக்குரிய இந்தப் பிறை, அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும். இவ்வாறே இரண்டாவது நாளுக்குரிய பிறை, மூன்றாவது நாளின் பிறை என்று ஒவ்வொருநாளும் சூரிய உதயத்திற்குப் பின்னர் சுமார் 48 நிமிடங்கள் வரை வித்தியாசப்பட்டு கிழக்கில் தோன்றும், பின்னர் மேற்கில் சூரியனுக்குப் பின்னர் மறைவதாக புறக்கண்களுக்கு காட்சிதரும்.

பிறையானது, மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் உதிப்பதில்லை. இதை புரிந்து கொள்வதென்றால் முதல்நாளுக்குரிய முதல் பிறை சூரியன் உதயமாகும் அதிகாலை நேரத்தில் உதிக்கும். பின்னர் சூரியன் மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் சூரியன் மறைந்த பின்னர் சுமார் 48 நிமிடங்கள் அளவிற்கு பின்தங்கி மறையும்.

அதுபோல மாதத்தின் முதல் கால்பகுதி (குசைளவ ஞரயசவநச) க்குரிய  பிறையானது நண்பகல் நேரத்தில் கிழக்குத் திசையில் உதிக்கும். பின்னர் சூரியன் மறையும் நேரத்தில், சந்திரனை நாம் பார்க்கையில் பிறையானது பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலை பெற்றிருக்கும். சூரியன் மறைந்து சுமார் 6 மணி நேரங்களுக்குப் பின் நள்ளிரவில் அந்த அரைவட்ட நிலவு மேற்கில் மறையும். அதுபோல பவுர்ணமி நாள் என்பது, சூரியன் மறையும்போது, கிழக்குத் திசையில் முழுநிலவு உதிப்பதை நாம் காணலாம். இவை புறக்கண்களால் சாதாரணமாகப் பார்ப்பதை வைத்து விளக்கியுள்ளோம். சந்திரனின் உதயம், மறைவு நேரங்களை வைத்து நாள் கணக்கீடு இல்லை என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.  

இப்படி ஒவ்வொரு நாளும் பிறை மாறுபட்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஃபஜ்ருக்கு முன்னர் உதிக்கும் பிறை முந்திய நாளுக்குரியது என்றும், ஃபஜ்ர் நேரத்திற்குப் பின்னர் உதிக்கும் பிறை அடுத்த நாளுக்குரியது என்று கூறி ஒருநாள் பிறையைக் காணவில்லை என்று வாதிப்பது எதைப் போன்றது தெரியுமா?

சந்திரனின் மன்ஜிலில் முதல்நாளின் பிறை ஏன் சில நிமிடங்கள் மட்டும் காட்சி அளிக்கிறது?, பவுர்ணமி நிலவு ஏன் சுமார் 12 மணிநேரங்கள் காட்சியளிக்கிறது?, ஏன் ஒவ்வொரு நாளுடைய பிறைப் படித்தரங்களும் அதன் ஒளிரும் அளவிலும், அது காட்சியளிக்கும் நேரத்திலும் ஏன் வித்தியாசப்படுகிறது? அல்லாஹ் ஏன் இவ்வாறு படைக்க வேண்டும்? ஏன் ஒரே சீராகப் படைக்க வில்லை? என்று கேள்வி எழுப்புவதற்குச் சமமாகும். எங்கள் மனோ இச்சைபடி, நாங்கள் விரும்பும் நேரத்தில்தான் பிறையின் காட்சி அமைய வேண்டு என்று வாதிப்பது போன்றதாகும். வல்ல அல்லாஹ்வின் வல்லமையினால் விதியாக்கப்பட்டு விட்;ட சந்திரனின் சூழற்சி, மனிதக் கண்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்று கருதுவது அறிவார்ந்த சிந்தனை அல்ல. ஒரு நாளைக்குரிய பிறையை அந்த நாளின் எந்த நேரத்திலும், எத்தனை மணி நேரங்களிலும், எத்தனை முறையும் காட்சி அளிக்குமாறும் செய்வது வல்ல அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரமாகும். இதில் மனிதர்களாகிய நாம் தலையிடுவதற்கு உரிமையில்லை. இப்படிதான் ஒரு இறை நம்பிக்கையுள்ள முஃமின் சிந்திக்க வேண்டும்.

எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதுனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையைக் கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்.  அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)

நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமழான் பிறையைப் பார்த்தோம். அதுபற்றிய விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். அறிவித்தவர்: அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 2582).

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் மேற்கண்ட முதலாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்றும், இரண்டாவது அறிவிப்பில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அது உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட இவ்விரு ஹதீஸ்களிலும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, 29-வது நாள் பின்னேரம் 30-வது இரவு என்ற ஒரு நாளில் மட்டும் பிறையை பார்க்க வேண்டும் என்றோ கூறப்படவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறோம். ஒவ்வொரு கிழமைக்குரிய பிறையும் அந்தந்த கிழமையின் தேதியைக் குறிக்கும் என்பதையும், இன்று மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் பார்க்கும் பிறை அடுத்த நாளுக்குறியது அல்ல என்பதையும் தெளிவாக விளக்கும் முகமாகத்தான் எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இரத்தினச் சுருக்கமான வார்த்தையிலிருந்து புலனாகிறது.

அல்லது பிறைகளை ஃபஜ்ருக்கு பின்னர் பார்த்தால் இன்றைய பிறை, ஃபஜ்ருக்கு முன்னர் பார்த்தால் அது நேற்றைய பிறை என்ற நிலைப்பாட்டில் நபித்தோழர்கள் இல்லை என்பதும் புலனாகிறது. அதுபோல 'பிறை காணாமலேயே போய் விடுகிறது' என்று விமர்சித்தவர்களும் ஒரு நாளின் துவக்கம் எது? என்பதை தீர்க்கமாக சொல்ல மறுக்கின்றனர். இதிலிருந்தே இவர்களின் சூழ்ச்சமம் புரிகிறது.

மேலும் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் கும்மவுடைய நாள் என்னும் புவிமைய சங்கமதினம் - (Geocentric Conjunction Day)இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அந்த 'கும்ம'வுடைய நாளையும் மாதத்தோடு சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்தும் முகமாக நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்ற சொற்றொடர் அமைகிறது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

இதிலிருந்து, மறைக்கப்படும் நாளில் ஆஸ்திரேலியாவில் சில சமயம் பிறை தெரிகிறது என்பன போன்ற இணையதள செய்திகளை வைத்துக் கொண்டு குழம்பிக் கொள்ளாமல், உங்களுக்கு மறைக்கப்படும் போது எண்ணிக்கையை முழுமையாக்க வேண்டும் என்ற பாடத்தைத்தான் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடம் என்பதும் தெளிவாகிறது.

முஸ்லிம் 1885-வது ஹதீஸில் இடம்பெறும் வாசகத்தை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். அதாவது ''சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றார்கள்'' என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்தே அன்றைய ஸஹாபாக்களிடம் தலைப்பிறை குறித்த சர்ச்சைகள் ஏதும் இருக்கவில்லை. மாறாக அந்த நாளில் தென்பட்ட பிறையின் வடிவநிலைiயும், அது காட்டும் தேதியையும் குறித்துதான் கேள்வி எழுந்துள்ளது தெரிகிறது. மேலும் தலைப்பிறையைப் புறக்கண்களால் பார்த்த பின்னர் அடுத்தநாள் மாதத்தைத் துவங்கும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னர்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தலைப்பிறை குறித்தே தர்க்கங்களில் ஈடுபடுவதைக் இன்று காண்கிறோம். மேலும் அவர்கள் பிறையின் வடிவநிலைகளையோ, அவை காட்டும் தேதியையோ சிறிதளவேனும் பொருட்படுத்துவதில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

அதுபோல ஒருநாள் பிறை காணாமல் போவதாக இருந்தால், நபித்தோழர்கள் அது குறித்தும் நிச்சயமாக வினாக்களை எழுப்பியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் கூட வரலாற்றில் நடைபெற்றதாக குறிப்புகள் இல்லை. இந்நிலையில் தேய்பிறைகளின் இறுதி நாட்களில் 'பிறை காணாமலேயே போய் விடுகிறது' என்று விமர்சனம் செய்வது பிறை அந்தநாளுக்குரிய காலத்தை காட்டவில்லை என்று வாதிப்பதேயாகும்.

இதுவரை படித்ததின் சுருக்கம் பின்வருமாறு...

 • குறிப்பிட்ட ஒரு நகரத்தில் பிறை எப்போது உதிக்கும்? எந்த நேரத்தில் மறையும் என்ற விபரங்களின் அடிப்படையில் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அமையவில்லை. ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு சர்வதேச நாட்காட்டியாகும்.

 • ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போகிறது ''மிஸ்ஸிங்'' என்றால், நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இவ்வாறு விடுபட்டிருக்க வேண்டும், அப்படி விடுபடவில்லை.

 • ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போனால் ''பிறைகள் மக்களுக்கு நாட்காட்டியாக உள்ளதாகவும் (2:189)'', ''பிறைகளின் தங்குமிடங்களை (மனாஜிலை) வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறியலாம் (10:5)'' என்றும் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூற முடியாது.

 • ஒருநாளுக்குரிய பிறை காணாமல் போகிறது என்ற வாதம், சந்திரனின் மன்ஜிலில் சந்தேகம் கொண்டும், அதன்; ஓட்டம் துல்லியமாக இல்லை என்று மறுப்பதாகவும் அமையும். சந்திரன் சரியாகத் தேதியைக் காட்டவில்லை அதனால் அது மக்களுக்கு நாட்காட்டியாக இல்லை என்று வாதிப்பது போன்றதாகும்.

 • 22-வது பிறைக்குரிய நாளில் அது உதயமாகவில்லை, பிறை காணவில்லை என்று கிருஸ்துவக் காலண்டரின் விதிமுறைப்படி புரிவது பிழையானதே. அதுபோல 28-வது பிறைக்குரிய பிறையை நாங்கள் காணவில்லை என்று வாதிப்பதும் தவறானதாகும். காரணம் அந்தந்த நாட்களில் வானில் பிறை இருக்கத்தான் செய்கிறது.

 • முழுநிலவு வரையுள்ள சுமார் 13-நாட்களுக்குரிய பிறைகள் அனைத்தும் மஃரிபு நேரத்திற்கு முன்னர்தான் உதிக்கிறது. நாளின் துவக்கம் மஃரிபு என்று கொண்டு மஃரிபுக்கு பின்னர் உதிக்கும் பிறைதான் இன்றைய தினத்து பிறை என்று வரையறுத்தால் ரமழான் மாதத்தின் பாதி அளவு நோன்புகளை நோற்க முடியாமல் போகும்.

 • ஒரு நாளுக்கு தேதியிடும் போது சந்திர உதயத்தையும், அதன் அஸ்தமனத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன?

 • சந்திரன் புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் புவிமைய சங்கமநாளிலோ, அல்லது பிறை பார்க்கப்படாத நாட்களிலோ, பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அந்த நாளுக்கு என்ன தேதியைப் போடவேண்டும்? எப்படி தேதி போடவேண்டும்?

 • 24 Hours - 50 minutes  = 23 hours 10 minutes   என்று தவறாக புரிந்து கணக்கிட்ட சீமான்கள், மக்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றனர். சூரியனின் ஓட்டமே 24 மணிநேரங்கள் என்றால் சூரியனைவிட வேகத்தில் குறைவாகப் பயணிக்கும் சந்திரன் ஒருநாளை 23.10 மணிநேரத்தில் முடித்துவிடுமா?

 • ''உங்களுக்கு அறியப்படும் போது 29, மறைக்கப்படும் போது 30 நாட்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ் எங்கே உள்ளது?

 • நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்ற நபிமொழியின் படி ஒவ்வொரு நாளும் நாம் காணும் பிறைகள் அந்தந்த நாளுக்குரியதே என்பதை விளங்கலாம்.

 • பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள், மாதத்தின் ஒருசில நாட்கள் பார்க்காமல் போனாலும் மார்க்க அடிப்படையில் குற்றமுமில்லை, பிறை கணக்கீடும் மாறப்போவதில்லை.  

 • ஒரு நாளைக்குரிய பிறையை அந்த நாளின் எந்த நேரத்திலும், எத்தனை மணி நேரங்களிலும், எத்தனை முறை காட்சி அளிக்குமாறும் செய்வது வல்ல அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரமாகும். இதில் மனிதர்களாகிய நாம் தலையிடுவதற்கு உரிமையில்லை.

 • ஹிஜ்ரி நாட்காட்டியை விமர்சிக்கும் யாராக இருந்தாலும், அவர்களது கூற்றில் உண்மையாளராக இருந்தால் சரியான மாற்று நாட்காட்டியை மக்களுக்குத் தரவேண்டும்.

Read 3901 times Last modified on வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 07:09