புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014 00:00

ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை!

Rate this item
(1 Vote)

ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை!
போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை அறிவோம் வாருங்கள்!!

'அமாவாசை தினம் எனக் கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்படக்கூடிய இடங்கள்!' - 'அமாவாசை தினம் எனக்கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்பட்ட காட்சிஇவை போன்ற தலைப்புகளில் அமாவாசை அன்று பிறை புறக்கண்களுக்குத் தெரிகிறது என்ற போலி பிறை போட்டோ செய்திகள் ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டின் ரமழான் மாதத்திலும் வலம் வந்தன.

பிறை சம்பந்தமான இஸ்லாமிய ஆய்வுகளோ, விண்ணியல் அடிப்படை அறிவுகளோ இல்லாத சிலரின் சிறுபிள்ளைத்தனமான செய்தியை மறுத்து அவர்களின் இணையதளத்திலேயே ஹிஜ்ரி கமிட்டியினாரால் கருத்துகள் பதியப்பட்டன.

 (பார்க்க: http://www.kayalpatnam.com/shownews.asp?id=14222)

நாம் என்னதான் விளக்கங்களை அளித்தாலும் அவர்கள் தங்களின் நிலையையும், நிலைபாட்டையும் பரிசீலனை செய்து தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தும் முகமாக கடந்த 29-ரமழான்-1435 அன்று சனிக்கிழமை அமாவாசை நாளில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து (Auckland) நகரில் பிறை பார்க்கப்பட்டதாக மீண்டும் ஒரு போட்டோவோடு செய்தியை பதிந்தனர். இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் மூடக்கருத்துகள் இணையதள வரலாற்றில் பதியப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இம்முறையும் அதன் உண்மை நிலையை நாம் விளக்குகிறோம்.

பிறைகள் பற்றி குர்ஆன் சுன்னா போதிப்பது என்ன? என்பதையோ, சந்திர நாட்காட்டியின் அடிப்படைகளையோ (Basic of Calendar), வானியற் பௌதீகத்தையோ (Astrophysics) கற்றறியாமல் நம்மை துணிந்து விமர்சிக்கும் இவர்களின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டட்டும் என்று நாம் பிரார்த்திப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய இயலும்?

துல்லியமான சந்திர கணக்கீட்டின்படி ஹிஜ்ரி 1435-ஆம் ஆண்டின் ரமழான் மாதத்தின் தேதிகள் பின்வருமாறு

28-06-2014    சனிக்கிழமை -  ரமழான் முதல் நாள்

05-07-2014    சனிக்கிழமை - , முதல் கால்பகுதி – ரமழான் 8-வது நாள்

12-07-2014    சனிக்கிழமை,-  பவுர்ணமி தினம் – ரமழான் 15-வது நாள்

19-07-2014    சனிக்கிழமை,-  இறுதி கால்பகுதி – ரமழான் 22-வது நாள்

25-07-2014    வெள்ளிக்கிழமை,-  உர்ஜூஃனில் கதீம் – ரமழான் 28-வது நாள்

26-07-2014    சனிக்கிழமை  - புவிமைய சங்கமதினம் (அமாவாசை) – ரமழான் இறுதி நாள்

27-07-2014    ஞாயிற்றுக் கிழமை -  ஷவ்வால் முதல் நாள் - நோன்புப் பெருநாள்

மேற்கண்ட பட்டியல்படி, கடந்த 28-06-2014 அன்று சனிக்கிழமை ஃபஜ்ரிலிருந்து ரமழானின் முதல் நாள் ஆரம்பமாகி விட்டது. இதை நிரூபிக்கும் வண்ணமாக 28-06-2014 அன்று காலையில் கிழக்கில் உதித்த முதல் வளர் பிறையானது சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக, அதாவது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, ஒரு நாளின் பாதியளவு நேரத்தைக் கடந்து, அன்று மாலையில் அது மறைகின்ற வேளையில் காட்சியளித்தது. அக்காட்சியை உலக மக்களும் பார்த்தனர். இதன் மூலம் ரமழானின் முதல் நாள் 28-06-2014 அன்றதான் என்பது நிலை நாட்டப்பட்டது.

அதுபோல சந்திரனின் முதல் கால்பகுதி, பவுர்ணமி மற்றும் இறுதி கால்பகுதி நிலைகள் ஹிஜ்ரி காலண்டர்படி மேல் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த நாட்களில்தான் துல்லியமாக நிகழ்ந்தன.

மேலும் 26-07-2014 சனிக்கிழமை புவிமைய சங்கமம் (அமாவாசை) உலக நேரம் 22:41 மணிக்கு ஏற்பட்டது.

அந்த அமாவாசைக்கு அடுத்தநாளான 27-07-2014 ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் ஷவ்வால் முதல் நாள் ஆகும். இதற்கு என்பதற்கு சாட்சியாக, ஷவ்வால் மாதத்தின் முதல்நாளுக்குரிய முதல் வளர்பிறை அன்று காலையில் கிழக்கில் உதித்து, பின்னர் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, ஒரு நாளின் பாதியளவு நேரத்தைக் கடந்து, அன்று மாலையில் அது மறைகின்ற வேளையில் காட்சியளித்தது. அக்காட்சியை 27-07-2014 ஞாயிற்றுக்கிழமை அரபு நாடுகள் உட்பட, தென் அமெரிக்க நாடுகளில் தென்பட்ட தகவல்களை அறிந்தோம்.

கடந்த 26-ஜூலை-2014 சனிக்கிழமை அன்று புவிமைய சங்கம(அமாவாசை) நாளில் பிறை ஆக்லாந்தில் பார்க்கப்பட்டது, எனவே ஹிஜ்ரி காலண்டர் துல்லியமானது இல்லை என்பதுதான் விமர்சனம். அப்படியென்றால், 27-ஜூலை-2014 ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் என்பதை உறுதிப்படுத்தும் முதல் வளர்பிறை (First Waxing Crescent) உலகில் தெரிந்ததே அந்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் இல்லையா? இக்கேள்விக்கு விமர்சிப்போர் நேரடியான பதிலை அளிக்கட்டும். சந்திர மாதத்தின் முதல் நாளுக்குரிய முதல் வளர்பிறை (First Waxing Crescent) எதைக் குறிக்கிறது? அது புதிய மாதத்தின் முதல் நாளைக் குறிப்பதாகாதா?

கடந்த 26-ஜூலை-2014 சனிக்கிழமை புவிமைய சங்கம (அமாவாசை) நாளில் பிறை ஆக்லாந்தில் பார்க்கப்பட்டதாம். அதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், பிறை பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் 26-ஜூலை-2014 சனிக்கிழமை என்பது அமாவாசை தினமா இல்லையா?. அந்த 26-ஜூலை-2014 சனிக்கிழமை அமாவாசை நாள்தான் என்றால், அந்த அமாவாசை நாளான 26-ஜூலை-2014 சனிக்கிழமை ரமழான் மாதத்தின் இறுதிநாளா இல்லையா? மாற்றுக் கருத்துடையோர் பிதற்றாமல் பதில் கூறட்டும்.

மேலும் அமாவாசை அன்று ஆக்லாந்தில் பிறை தெரிந்து விட்டது அதனால் ஹிஜ்ரி காலண்டர் தவறானது என்றால், அந்த ரமழான் மாதத்தின் சந்திரனின் பிற படித்தரங்களான முதல் கால்பகுதி, பவுர்ணமி மற்றும் இறுதி கால்பகுதி நிலைகள் அனைத்தும் ஹிஜ்ரி காலண்டர் குறிப்பிட்ட அந்தந்த கிழமையில்தானே துல்லியமாக இருந்தன. அமாவாசை நாள் மட்டும் தவறாகி விட்டதா? இதற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? 

சங்கம நிகழ்வை உலக நேரத்தில்தான் (UT) குறிப்பிட வேண்டும் என்பதை உலக விண்ணியல் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்து ஒப்புக் கொள்கின்றனர். இந்நிலையில் இவர்கள் அதை ஆக்லாந்து நாட்டின் லோக்கல் நேரத்திற்கு மாற்றி தாங்களும் குழம்பி பிறரையும் குழப்பியுள்ளனர் என்பதே உண்மை.

அல்லாஹ் மனித குலத்திற்கு வழங்கியுள்ள சந்திர நாட்காட்டியின் துல்லியமான கணக்கீட்டை பொய்ப்படுத்தி ஹிஜ்ரி கமிட்டியின் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் என்ற நோக்கத்தில்தான் மேற்படி போலி பிறை போட்டோக்கள் வெளியிடப்படுவதை நாம் நன்றாகவே அறிவோம். இவர்கள் குற்றமுறு மோசடி செய்து, ஒத்தகருத்துடன், ஆதாயம் தேடி இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல.

கடந்த 2013 ஜூலை 8 திங்கள்கிழமையன்று சங்கமநாளில் (அமாவாசை) சூரியன் மறைந்த பின்னர் தெஹீட்டியில் பிறை பார்க்கப்பட்டது என்ற செய்தியை முன்பு பரப்பினர். அதன் உண்மை நிலையை விளக்கி தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்! - ஹிஜ்ரி காலண்டரை பொய்ப்படுத்தும் முயற்சி பயனளிக்குமா? என்ற தலைப்பில் நாம் தெளிவான விளக்கங்களை மக்களுக்கு வழங்கினோம். (பார்க்க)

பின்னர் அமாவாசை (Conjunction என்னும் சங்கம நிகழ்வு) உலக நேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் சங்கமம் நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனர். எனவே அவர்கள் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வாதத்தைக் கிளப்பினர். மேற்படி சொத்தை வாதத்திற்கும் குர்ஆன் சுன்னாவிலிருந்தும், அறிவியில் ஆய்வுகளிலிருந்தும் தெளிவான சான்றுகளை சமர்ப்பித்து மிக விரிவான விளக்கத்தை அவர்களுக்கு அளித்திருந்தோம். (பார்க்க)

அதன் பிறகு சற்று அமைதியாக இருந்தவர்கள் கடந்த 30-01-2014 அன்று அமாவாசை தினத்தில் பிறையை புறக்கண்களால் பார்க்கலாம் என்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். மேற்படி அமாவாசை தேதியில் தேய்பிறை புறக்கண்களுக்குத் தெரியும் என அவர்கள் பட்டியலிட்டுச் சொன்ன எந்த நாட்டிலும் எந்தப் பிறையும் தெரியவில்லை. இவர்கள் பிறை தெரியும் என்று அறிவித்த பட்டியலில் இடம்பெறாத ஈரானில் அந்தப் பிறை பார்க்கப்பட்டதாக கூறி ஒரு போட்டோவோடு தகவல் வெளியிட்டு அனைவரையும் திசை திருப்பினர். வெளியிடப்பட்ட போட்டோ ஒரு செட்டப் போட்டோ என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கும் வண்ணம் அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததா? - இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் மறுப்பு என்ற தலைப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது (பார்க்க).

நாம் இவர்களுக்கு என்னதான் விளக்கங்களை அளித்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம்மைப் பொருத்த வரையில் குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்துப்போகும் விஞ்ஞான கருத்துகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம். நமது மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும், சுன்னாவும் மட்டுமே என்பதில் நாம் மிகத்தெளிவாக இருக்கிறோம். விண்ணியல் நிபுணர்கள்(?) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இணையதளங்களை நடத்திக் கொண்டிருக்கும் மாற்றுக் கருத்துடைய சில நபர்கள் நம்மையும், நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியையும் எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு மேற்கண்டவாறு பல பொய்ச் செய்திகளை மக்களிடையே பரப்புகின்றனர். இது தவிர எந்தவித உயரிய நோக்கமும் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அடிப்படையற்ற இவை போன்ற பொய்ச் செய்திகளை மக்களை அலட்சியப்படுத்தி நிராகரித்துவிட வேண்டுகிறோம்.

மேற்காணும் போட்டாவைத்தான் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் புறக்கண்களால் பார்க்கப்பட்ட அமாவாசைப் பிறை என்று வெளியிட்டனர். மேற்படி போட்டாவை ஆக்லாந்து நேரப்படி காலை 6:40 லிருந்து 7:00 மணிக்குள் பார்க்கப்பட்டதாக செய்தி வெளியிட்டனர்.

மேற்படி செய்தியின் படி மேற்படி போட்டோ ஆக்லாந்து நேரப்படி கடந்த ஜூலை-26 சனிக்கிழமை காலை 6:50 மணிக்கு எடுக்கப் பட்டது என்று கொள்வோம். நாம் கேட்பது என்னவெனில் அமாவாசை என்னும் புவிமைய சங்கம நிகழ்வை உலக விண்ணியல் நிபுணர்கள் அனைவரும் உலகநேரத்தில் (UT) மட்டுமே கணக்கிடும் போது இவர்கள் மட்டும் அதை அந்தந்த பகுதிகளின் (Local Time) நேரத்திற்கு மாற்றி மக்களை குழப்புவது ஏன்?. உலக நேரத்தை அந்தந்தப் பகுதி நேரமாக மாற்றுவது சரிதான் என்றால் மேற்படி போட்டா பிறை அவர்களுக்கு எதிராகவே அமைகிறது.

மேற்படி போட்டோ பிறையைக்கூட உண்மை என்று வைத்துக் கொண்டு ஆய்வு செய்தாலும் அது அமாவாசை நாளுக்குரிய பிறை இல்லை என்று நிரூபனமாவதை கீழுள்ள ஆக்லாந்து நேரத்திற்கு நிகரான உலக நேரக் (UT) கணக்கீட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

http://moonca,endar.in

ஆக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரத்தில் ஜூலை-26 சனிக்கிழமை அன்று காலை 6:50 மணியில் பிறை பார்க்கப்படும்போது உலக நேரம் ஜூலை-25 வெள்ளிக்கிழமை மாலை 18:50 மணியாக இருந்துள்ளதை காணலாம். இவர்கள் உலகநேரத்தை (UT) அந்தந்த பகுதி நேரமாக (Local Time) மாற்றுவது சரி என்றால், அதே பகுதி நேரத்தை உலக நேரமாக மாற்றி இப்படி புரிந்து கொள்வதை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இப்படி புரிந்து கொண்டாலே பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் அந்தப் பிறை ஹிஜ்ரிகாலண்டர் குறிப்பிட்ட ரமழானின் உர்ஜூஃனில் கதீம் பிறைதானே தவிர அது அமாவாசைப் பிறையல்ல என்று நிரூபனமாகிறது.

அடுத்ததாக இந்த புகைப்படம் எடுக்கப்படும் போது, சூரியன் - சந்திரன் இடையிலான இடைவெளி (ELONGATION) சுமார் 12.90 டிகிரி ஆகும் என்றும் செய்தியை வெளியிட்டார்கள். இதை வைத்து நாம் ஆய்வு செய்யும் போது அதுவும் மேற்படி குழப்பம் செய்பவர்களுக்கு எதிராகவே அமைகிறது.

இவர்களின் கூற்றுப்படி நீட்சியின் (Elongation) அளவையும் சற்று விபரமாகப் பார்ப்போம்.

Elongation

 

http://ottrumai.net/Research/Auckland/July-26.png


நாள் : 25-07-2014 வெள்ளிக் கிழமை

புவிமைய நிலை (Geocentric Position) : ஆக்லாந்து

வளர்பிறையா? தேய்பிறையா? : தேய்பிறை

பிறையின் ஒளியளவு (illumination %): 1.2%

சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள நீட்சி அளவு (Elongation) : -12.75

நாள் : 26-07-2014 சனிக் கிழமை

புவிமைய நிலை (Geocentric Position) : ஆக்லாந்து

வளர்பிறையா? தேய்பிறையா? : அமாவாசை (NewMoon)

பிறையின் ஒளியளவு (illumination %): 0.0 %

சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள நீட்சி அளவு (நுடழபெயவழைn) :  -1.77 

மேற்காணும் விபரங்கள்படியும் மேற்படி போட்டோ கடந்த 26-07-2014 (அமாவாசை) சனிக்கிழமை அன்று எடுக்கப்பட வில்லை என்பதுதான் தௌ;ளத் தெளிவாக நிரூபனமாகிறது. காரணம் போட்டோவை வெளியிட்டவர்களின் கூற்றுப்படியே, அந்த போட்டோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஜூலை-26 சனிக்கிழமை அன்று ஆக்லாந்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 12 டிகிரியாக இல்லை. மாறாக அது இரண்டு டிகிரிக்கும் குறைவாகவே உள்ளதைக் காண்கிறோம். மேலும் பிறையின் ஒளியளவு (illumination %) பூஜ்யமாக உள்ளதையும், பிறை அமாவாசை (New Moon) நிலையில் இருந்ததையும் மேற்காணும் படத்தில் தெளிவாகக் காண்கிறோம். ஒளியளவு பூஜியமாக (Zero) உள்ள நிலையில் அந்தப் பிறையை எப்படி இவர்கள் புறக்கண்களால் சர்வசாதாரணமாகப் பார்த்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

மேலும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 12 டிகிரியாக ஜூலை-25 வெள்ளிக்கிழமை அன்றுதான் இருந்துள்ளதையும் நாம் தெளிவாக அறியமுடிகிறது. எனவே மேற்படி போட்டோ உண்மையிலேயே எடுக்கப்பட்டது என்றால், அது ஹிஜ்ரி காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஜூலை-25 வெள்ளிக்கிழமை அன்று தென்பட்ட ரமழான் மாதத்தின் புறக்கண்களால் பார்க்க முடிந்த பிறைகளின் இறுதி வடிவ நிலையான உர்ஜூஃனில் கதீம் பிறைதான் என்பது நிரூபனமாகி விட்டது.

இவர்கள் அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ இவ்வாறான அமாவாசைப் பிறைச் செய்திகளை வெளியிடும் ஒவ்வொரு முறையும் ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலை நிரூபிக்கப்பட்டு வருவதையும், நம்முடைய ஈமான் அதிகரிப்பதையும் நிதர்சனமாக நாம் உணர்கிறோம்.'யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டது போல' என்ற உவமைச் சொல்லுக்கு ஒப்ப அமாவாசைப் பிறை என்று அவர்கள் வெளியிடும் போட்டோவுடைய செய்திகளும், அவை சார்ந்த விண்ணியல் குறிப்புகளும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு எதிராக அமைவதையே காண்கிறோம். இதைத்தான் வல்ல அல்லாஹ் ஸூரத்துல் அன்பியாவில் கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம். அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்து விடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (அல்-குர்ஆன் 21 : 18)

நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோண விகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் பதிவு செய்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியை பல வருடங்களாக வெளியிட்டு இதை ஒரு சவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை அவனது நாட்காட்டியை இதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்காட்டிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் அரைவேக்காடுகள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மக்களே நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமான பிறைக் கணக்கீட்டை பொய்யாக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு. அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப் போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு யார் நேர்வழி காட்டிட முடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.

குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை உண்மையை - நிலைநாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8:8)

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்(அல்-குர்ஆன் 9 : 32)

மேற்படி ஆக்லாந்து அமாவாசைப் பிறை செய்தியை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள அடிப்படையான 5 விஷயங்களை கூடுதல் தகவல்களாக இங்கு பதிவு செய்கிறோம்.

1.  பிறையைப் பார்ப்பது என்றால் என்ன?

2.  பிறை மறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதின் விளக்கம்.

3.  மார்க்கத்தின் பொது விதிகளும், துருவப் பகுதிகளில் தொழுகை நேரக் கணக்கீடும்.

4.  சர்வதேசத் தேதிக்கோட்டுப் பகுதியில் நடைபெறும் கிழமை மாற்றம்.

1.பிறையைப் பார்ப்பது என்றால் என்ன?

அமாவாசை அன்று பிறை பார்க்கப்பட்டது என்றால் அது எவ்வாறு பார்க்கப்பட்டது? என்பதை விளக்க வேண்டும். புறக்கண்களால் பார்க்கப்பட்டதா? தூர தொலை நோக்கி (Telescope) மூலம் அது பார்க்கப்பட்டதா? என்பதை அல்லாஹ்வை அஞ்சி இவர்கள் உண்மையைத் தெரிவிக்க வேண்டும்.

இதனால்தான் இவர்கள் போட்டோவை தயாரித்து வெளியிடும் ஒவ்வொரு முறையும் 'பார்த்தல்' என்ற விஷயத்தில் ஏற்படும் கீழ்க்காணும் கேள்விகளை நாம் எழுப்பி வருகிறோம். அதாவது

1.அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா?

2.Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத் தயாரா?

3.தொலைநோக்கி (Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும் ஒன்றுதான் என்று உங்கள் நிலைபாடாக அறிவிக்கத் தயாரா?

4.சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார் 0.5% அல்லது 1% அளவு ஒளி மட்டும் உள்ள அந்தப் பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாக பார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா? 

5.சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில் வெறும் ஒரு சதவிகிதம்கூட இல்லாத அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில் அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளோம். நமது கேள்விகளுக்கு நேரடியான எந்தப் பதிலiயும் அவர்களால் அளிக்க முடிய வில்லை.

சந்திர மாதத்தின் முதல் வளர்பிறையையோ, அல்லது தேய்பிறைகளின் இறுதி நிலையான உர்ஜூஃனில் கதீம் என்ற அந்தப் பிறையையோ புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. அவையாவன

 

• சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கோணதூரம் (Angular Distance), 

 

• அவற்றின் நீட்சி (Elongation), 

 

• பிறையின் ஒளிர்வு (illumination), 

 

• அந்திக் கருக்கலின் போதுள்ள ஒளிச்சிதறல்கள் (Twilights), 

  

• வளிமண்டலத்தின் மாசற்ற நிலை (Atmospheric Condition)

    

என்று அனைத்து நிபந்தனைகளும் பொருந்திப் போக வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட எந்த நிபந்தனைகளும் பொருந்திப் போகாத, பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் அமாவாசை நாளன்று பிறையைப் புறக்கண்களால் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும் என்றால் கோளாறு எங்கே உள்ளது? என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே கோளாறுதான் மேற்படி ஆக்லாந்து அமாவாசைப் பிறையிலும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதை நீங்கள் நன்றாகவே விளங்கியிருப்பீர்கள்.

2.பிறை மறைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதின் விளக்கம்.

தினமும் வளர்ந்து தேயும் பிறைகள் மனிதர்களுக்கு தேதிகளாக (காலண்டராக) வல்ல அல்லாஹ்வால் அமைக்கப் பட்டுள்ளது. இதை அல்குர்ஆன் (2:189) தெளிவுபடுத்துகிறது. மேலும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையைப் போல் திரும்பி வரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தி யிருக்கின்றோம் (36:39) என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களை, வடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் வேளையில், 36:39 இறைவசனம் கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்என்ற பிறையின் இறுதி வடிவம் ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் உர்ஜூஃனில் கதீம் 28-ஆம் நாள் அன்று காட்சியளிக்கும்;. 

உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.

அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாகப் பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப் பட்டிருக்கும்.இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(F), க(G)ம்மிய, ஹஃபிய கும்ம உடைய அல்லது குபியஉடைய நாள் என்கிறோம். அதாவது மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்களை பயன்படுத்தி நபி (ஸல்) அவர்கள் சந்திர மாதத்தின் இறுதி நாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள்.

அந்த கும்மவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்குச் சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

தற்போது போட்டோ பிறைவாதிகளின் வாதம் என்ன வென்றால், அமாவாசை அன்று பிறை தெரியாது என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்களே? இதோ அமாவாசை அன்று பிறை தெரிகிறதே என்று வாதம் வைக்கிறார்கள். இவர்கள் வெளியிடும் போட்டோ பிறைகள் போலியாக உருவாக்கப்படுகிறது. சிலநேரம் வெளியிடுபவர்களின் விண்ணியல் அறிவு குறைபாட்டினால் அமாவாசை அல்லாத பிற நாட்களின் பிறையை அமாவாசைப் பிறை என்று இவர்களாவே கருதிக் கொண்டு வெளியிடப் படுகிறது. இதுதான் உண்மை.

அந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறை தெரிகிறது என்று சொல்கின்றீர்களே அது உண்மையானால் அந்த அமாவாசை நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலக நாடுகளிலும் ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா? என்று நாம் கேட்கிறோம். நமது கேள்விக்கு ''அப்படித் தெரிவதில்லைதான்'' என்று வெட்கமில்லாமல் பதில் கூறுகின்றனர்.

புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ உங்களின் அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா? என்று நாம் கேட்கிறோம். நமது இக்கேள்விக்கும் ''ஒவ்வொரு மாதமும் தெரியாது, எப்போதாவது தெரியும்'' என்கின்றனர்.

அப்படியானால் ஒவ்வொரு மாதத்தின் சங்கம நாளிலும் தெரியாத பிறையை, அதுவும் உலகத்தில் சில நாடுகளுக்குக்கூட தெரியாது என்று இவர்களே ஒப்புக் கொள்ளும் இந்த அமாவாசைப் பிறையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இவர்கள் அலைவதின் பின்னணி என்ன? மக்களே சற்று சிந்திப்பீர்.

இன்னும் ஹிஜ்ரி நாட்காட்டியில் அச்சடிக்கப்பட்டுள்ள பிறை படித்தரங்களின் வடிவங்கள் நமது கிப்லாவான புனித கஃபாவை மையப்படுத்தி அமைக்கப் பட்டதாகும். முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகற்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்று கேட்கிறோம். நமது கேள்விக்கு தொடர் மவுனமே இவர்களின் பதிலாக வந்துள்ளது.

அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகற்ப்பத்திலோ சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா? என்ற நமது கேள்வியும் பதில் தரப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

மேலும் ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியை பொய்ப்படுத்திட சங்கம தினத்தில் பிறை தெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களை வெளியிட்டு இவர்கள் நம்மை மட்டும் பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பொய்யாக்கிட முனைந்துள்ளனர். எனவே இவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள் இறுதியில் ஈமானை பாழாக்கும் நிலைக்கு இவர்களை கொண்டு வந்து சேர்க்கும் என்று எச்சரிக்கிறோம்.

3.மார்க்கத்தின் பொது விதிகளும், துருவப் பகுதிகளில் தொழுகை நேரக் கணக்கீடும்.

முஸ்லிம்களின் கடமையான ஐந்து வேளைத் தொழுகை நேரங்கள் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நண்பகல் சூரியன் உச்சி சாய்ந்ததும் லுஹருடைய (வக்த்) நேரமாகும். அதுபோல ஒரு பொருளின் நிழல் அதைவிட இருமடங்காக ஆகும்போது அஸர் தொழுகையுடைய நேரம், சூரியன் மறைந்தவுடன் மஃரிபு வேளை என்று ஐந்து நேரத் தொழுகைகளுக்கும் குறிப்பிட்ட நேர வரையறை உள்ளது. இதை வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (4:103)

மேலும் ''குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது'' மேற்படி கட்டளை உலக முஸ்லிம்கள் அனைவரையும் கட்டுப்படுத்திடும் பொது விதியாகும் (General Rule) என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும் 6 மாதகாலம் சூரியனைக் காண முடியாத பனி உறைந்த துருவப் பிரதேசத்திலுள்ளார் அவர்களின் தொழுகை நேரங் (வக்து) களையும், நோன்பு நோற்றிருக்க வேண்டிய வக்தையும் சூரியனை வைத்து முடிவு செய்ய முடியாது. எனவே அவர்கள் சூரியனே உதிக்காவிட்டாலும் ஐந்து வேளை தொழுகையையும் அவர்கள் கணக்கிட்டுத்தான் தொழுதாக வேண்டும்.

காரணம் சூரியன் உதயமாகும் முன்னர் ஃபஜ்ருடைய வக்த் வந்ததும் ஃபஜ்ரு தொழுகை, நண்பகல் சூரியன் உச்சி சாய்ந்ததும் லுஹர், ஒரு பொருளின் நிழல் அதைவிட இருமடங்காக ஆகும்போது அஸர், சூரியன் மறைந்தவுடன் மஃரிபு, அதன் பின்னர் இஷாத் தொழுகை போன்ற பொது விதிகள் (General Rule) துருவப் பிரதேசத்திற்குப் பொருந்தாது.

காரணம் சூரியன் மற்றும் சந்திரனின் உதயமும் அஸ்தமனமும் உலகின் பெரும்பான்மையான பிற பகுதிகளில் தெரிவதைப் போல அத்துருவப் பகுதிகளில் சீராகத் தெரிவதில்லை. 6 மாதங்கள் வரை சூரியனே அங்கு காணப்படாமல் இருக்கும். இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட பூலோக வரையறையாகும். இதனால் சூரியன் மற்றும் சந்திரனை அத்துருவப் பகுதியில் கணக்கிடுவது சற்று கடினமாக இருக்கும். ஆறு மாத காலம் இரவாகவும், ஆறு மாதங்கள் பகலாகவும் இருக்கும் நிலையிலும் அப்பகுதி மக்கள் ரமழான் மாதத்தை கணக்கிட்டு அறிந்து, குறிப்பிட்ட வேளையில் நோன்பு நோற்றாக வேண்டும். அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் வக்து விஷயங்களில் இயற்கையாகவே விலக்குப் பெற்றவர்கள் ஆவர். அத்தகைய விதிவிலக்குகள் உலகின் மற்ற மக்களுக்கு இல்லை.

அதுபோல உயிருக்குப் போராடுகின்ற நிலையில் ஒரு ஹராமான உணவைத்தவிர மற்றொன்றும் இல்லாத நிலை ஏற்பட்டால் நிர்பந்தத்தின் காரணமாக அந்த நேரத்தில் மட்டும் அந்த தடுக்கப்பட்ட உணவை நாம் உட்கொண்டு நம் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்று மார்க்கம் போதிக்கிறது.

இச்சமயத்தில் ஹராம் என்று தடுக்கப்பட்ட பொதுவிதி விதிவிலக்கு என்ற நிலைக்கு ஹலாலாஹ மாறிவிடும். புசிப்பதற்கு ஹராமான உணவு விதிவிலக்காக ஒருவருக்கு ஹலாலாக மாறியதை வைத்து அதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருந்தும் பொது விதிதான் (General Rule) என்று வாதிட முடியாது. இவை மார்க்கத்தின் சாதாரண அடிப்படை விஷயங்களாகும்.

4.சர்வதேசத் தேதிக்கோட்டுப் பகுதியில் நடைபெறும் கிழமை மாற்றம்.

வடதுருவ, தென்துருவப் பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இபாதத்துகளின் நேரங்களை (வக்து) அறிந்து கொள்வதில் சில சிரமங்களும், விதிவிலக்குகளும் இருப்பத அறந்தோம். அதுபோலத்தான் கிழக்குப் பகுதியும், மேற்குப் பகுதியும் சங்கமிக்கும் சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் ஆக்லாந்து உட்பட உள்ள பகுதிகளில் சூரியன் மற்றும் சந்திரனைக் கவனிப்பதில் சில சிரமங்கள் உள்ளதும் உண்மையே. அதை தெளிவாகப் புரிந்து கொள்ள தொடர்ந்து கவனமாகப் படியுங்கள்.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வரும் கால அளவை நாம் ஒரு நாள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு நாளுக்கும் பிரத்தியேகமாகப் பெயரிட்டு அடையாளப் படுத்தியுள்ளோம். அதாவது யவ்முல் அஹத் (முதல் நாள்) என அரபு மொழியிலும், ஞாயிற்றுக்கிழமை என தமிழிலும், சன்டே (Sunday) என ஆங்கிலத்திலும் கூறி வருகின்றோம். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கிழமைகள் வரைப் பெயரிட்டு ஒரு வாரம் எனக் கணக்கிட்டு வருகின்றோம். ஒரு கிழமை என்பது பூமியில் எங்கிருந்து ஆரம்பித்து எங்கு சென்று முடிகிறது என்ற கேள்வி எழுவது இயற்கையே. இக்கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும்.

ஒரு நாட்காட்டியை தயாரிப்பதற்கான அடிப்படை விஷயங்களைப் போதித்துள்ள நமது மார்க்கம் ஒரு கிழமையின் துவக்க இடம் பற்றியும் தெளிவாக தெரிவித்துள்ளது. அதாவது நம் முஸ்லிம் சமூகத்திற்கு வல்ல அல்லாஹ் வெள்ளிக் கிழமையை சிறப்பான நாளாக ஆக்கித் தந்துள்ளான். அன்று மட்டுமே நாம் லுஹர் நேரத்தில் இரண்டு ரக்அத்கள் மட்டும் கொண்ட ஜும்ஆத் தொழுகையை தொழுது வருகின்றோம். மற்ற நாட்களில் நான்கு ரக்அத்துகள் கொண்ட லுஹர் தொழுகையை தொழுது வருகின்றோம்.

ஒரு நாள் எங்கு மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை மார்க்க அடிப்படையில் விளங்கிக் கொள்ளலாம். ஜூம்ஆ தொழுகை அல்லாத மற்ற தொழுகைகளை வைத்தோ, முஸ்லிம்களின் பிற வணக்கங்களை வைத்தோ கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது.

இவ்வாறு கிழமைகள் மாறும் அந்த இடம் பசிபிக் பெருங்கடலில் (International Dateline-IDL) உலகத் தேதிக்கோடு என்று கூறப்படும் இடத்தில் இருப்பதை நிரூபிக்கப்பட்ட பூமியின் நிலவியல் விஞ்ஞானம் (Earth Geographical Science) சான்று பகர்கின்றது.

புரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரே சூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.

அவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும். அதேவேளை ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.

பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கன்சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையை தொழுது கொண்டிருப்பார்கள்.

இந்நிலையில் வெள்ளிக் கிழமையிலிருக்கும் ஃபிஜி நாட்டு மக்கள், அமெரிக்க சமோவா நாட்டு மக்கள் பார்க்கும் அதே சூரியனைத்தான் நாங்களும் பார்க்கிறோம் எனவே நாங்கள் இன்னும் வியாழக்கிழமையில்தான் உள்ளோம் என்று வாதிட முடியாது. அதேபோல அமெரிக்கசமோவா நாட்டு மக்களும் தாங்களுக்கும் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆத் தொழுகை அன்றே வேண்டும் என்றும் வாதிட முடியாது.

சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியிலுள்ள நாடுகளுக்கு ஏற்படும் இத்தைகய அசாதாரண சூழ்நிலை சூரியனுக்கு மட்டும் பொருந்தாது, மாறாக சந்திரனையும் அவர்கள் இவ்வாறு பார்க்க நேரிடும். உதாரணமாக சந்திர மாதத்தில் ஒரு வெள்ளிக்கழமை பவுர்ணமி என்று வைத்துக் கொள்வோம். ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், அந்த பவுர்ணமி நிலவின் உதயத்தையும் மறைவையும் அவ்விரு நாட்டு மக்களால் பார்க்க இயலும்.

இதுபோன்றுதான் மாதத்தின் முதல்நாளின் மறையும் பிறையையும், இறுதி தேயும் பிறையையும் அவர்கள் பார்க்கும் வாய்ப்புகள் ஏற்படும். அத்தகைய வாய்ப்புகள் இருப்பினும் அவ்விரு நாட்டு மக்களும் வௌ;வேறு கிழமைகளில் இருப்பார்கள். இதைத்தான் இடமாறு பிழை (ParallaxError) என்று விண்ணியல் கூறுகிறது. பிஜியைப் போலவே சர்வதேசத் தேதிக் கோட்டிலிருந்து மிக அருகாமையில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மற்றொரு இடம்தான் நியூசிலாந்திலுள்ள மேற்படி ஆக்லாந்து நகரம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இறுதியாக ...

• ஆக, ஆக்லாந்து நகரத்தில் ஜூலை 26 அமாவாசை அன்று புறக்கண்களால் பிறை பார்க்கப்பட்டது என்பது தவறான செய்தியாகும். ஜூலை 26 அமாவாசை அன்று ஆக்லாந்து நகர புவிமையத்தில் பிறையின் ஒளியளவு பூஜ்ஜியமாக (Zero) உள்ள நிலையில் அந்தப் பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு மாற்றமான பொய்ச் செய்தியே ஆகும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

• போட்டோவை உண்மை என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டு ஆய்வு செய்தாலும், அது மேற்படி அமாவாசை நாளுக்குரிய பிறை இல்லை என்று நிரூபனமாவதை, மேற்படி ஆக்லாந்து நேரத்திற்கு நிகரான உலக நேரத்தின் (UT) மூலம் தெரிந்து கொள்ளலாம்.

• போட்டோ எடுக்கப்படும் போது சூரியனுக்கு, சந்திரனுக்கு இடைப்பட்ட தூரம் 12.90 டிகிரியாக இருந்தது என்று மாற்றுக் கருத்துடையோர் பதிந்துள்ளார்கள். கடந்த ஜூலை-26 சனிக்கிழமை அன்று ஆக்லாந்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 12 டிகிரியாக இல்லை. மாறாக அது இரண்டு டிகிரிக்கும் குறைவாக இருந்ததைப் பார்த்தோம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 12 டிகிரியாக ஜூலை-25 வெள்ளிக்கிழமை அன்றுதான் இருந்துள்ளதையும் நாம் தெளிவாக அறிந்தோம்.

• மேற்படி போட்டோ உண்மையிலேயே எடுக்கப்பட்டது என்றால், அது ஹிஜ்ரி காலண்டரில் குறிப்பிடப் பட்டுள்ளபடி ரமழான் மாதத்தின் புறக்கண்களால் பார்க்க முடிந்த பிறைகளின் இறுதி வடிவ நிலையான உர்ஜூஃனில் கதீம் என்னும் ஜூலை-25 வெள்ளிக் கிழமைக்குரிய பிறையே ஆகும்.

எனவே பிறை சம்பந்தமான இஸ்லாமிய ஆய்வுகளோ, விண்ணியல் அடிப்படை அறிவுகளோ இல்லாத சிறுபிள்ளைத்தனமான செய்திகளை வெளியிடுவதை சம்பந்தப்பட்டோர் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். இது போன்ற போட்டோக்களை வெளியிடும் அவசர கதியில் வெளியிடும் முன்னர் அதுபற்றிய அறிவுள்ளவர்களின் ஆலோசிப்பதுதான் அவர்களுக்கு நன்மை பயக்கும். சம்பந்தப்பட்டோர் இனியாவது திருந்துவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!!.

 
Read 1950 times Last modified on திங்கட்கிழமை, 22 ஜூன் 2015 11:17