வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 11:38

குரைப் சம்பவம்

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 16

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?

மக்கள் மத்தியில் குரைப் ஹதீஸ் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குரைப் சம்பவம், நபிமொழி என்ற தரத்தில் அமைந்த ஹதீஸே அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமே அது. ஒரு ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அதில் இருக்க வேண்டும். அதில் ஒன்றுகூட மேற்காணும் சம்பவத்தில் இடம்பெறவில்லை என்பதை முதலாவதாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

இருப்பினும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ள ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)அதாவது இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற வாசகத்தை வைத்து இதை ஸஹீஹான ஹதீஸ்தான் என்றும், தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இது பிரதான ஆதாரம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்த குரைப் சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்கள்? என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம்பெறவில்லை என்பதை இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரமாகும் என்றும் இவை இரண்டையும் தவிர்த்து வேறு எதுவும் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்றும் கூறி வந்த தத்தமது பகுதி பிறை நிலைப்பாடு கொண்ட தவ்ஹீது இயக்க அறிஞர்கள் எனப்படுவோர், பிறைசம்பந்தமாக நாம் தொடர்ந்து எழுப்பிவரும் அடிப்படையான கேள்விகளுக்குக் கூட குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடியான பதிலைக் கூற முடியாமல் தொடர்ந்து பின்வாங்குகின்றனர், அல்லது நம்மை இழித்தும் பழித்தும் தூற்றுகின்றனர். மேற்படி தவ்ஹீது இயக்க அறிஞர்கள் எனப்படுவோரில் சிலர், எந்த அளவிற்கு சென்றுவிட்டார்கள் என்றால், இந்த குரைப் சம்பவத்தை ஹதீஸ் என ஒப்புக்கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என்றுகூட விமர்சிக்கத் துவங்கி விட்டனர்.

தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டிற்கு பலமான ஆதாரமாக பிரச்சாரம் செய்யப்படும் இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையை மக்கள் புரியவேண்டும் என்பதற்காகவே அல்லாஹ்வை முன்னிருத்தி இக்லாஸான எண்ணத்தில் நாம் இந்த ஆய்வுகளை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கிறோம். இந்த குரைப் சம்பவத்தை ஹதீஸ் என ஒப்புக்கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என்று தத்தமதுபகுதி பிறை அறிஞர்கள் விமர்சித்தால், ஸஹீஹான ஹதீஸ்களாக இருந்தாலும் எங்களின் சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்றும் அவை குர்ஆனுக்கு முரண்படுகின்றன என்றும் கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட நபிமொழிகளை மறுக்கும் அதே தத்தமதுபகுதி பிறை அறிஞர்களின் நிலை என்ன என்பதை மக்களே சற்று சிந்தியுங்கள்.

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரமாகும் என்றும் இவை இரண்டையும் தவிர்த்து வேறு எதுவும் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்றும் கூறிக்கொள்ளும் இவர்கள், பிறைவிஷயங்களுக்கு மட்டும் ஸஹாபாக்களின் கூற்றையும், தாபியீன்களின் கூற்றையும் ஆதாரமாகக் காட்டுவது ஏன்?. இது இரட்டை நிலையில்லையா? இவ்வாறு ஸஹாபாக்கள் மற்றும் தாபீயீன்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை ஏற்றால்தான் தங்களுடைய தவறான பிறை கொள்கையை பல பலஹீனமான சம்பவங்களை வைத்து கொஞ்சமாவது நிலைநாட்ட முடியும் என்பதை அறிந்து குர்ஆன் ஹதீஸை விட ஸஹாபாக்களின் கூற்றுக்கும் தாபியீன்களின் கூற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான் இக்குரைப் சம்பவத்தை ஸஹீஹான ஹதீஸ்தான் என்று அவர்கள் தூக்கிப்பிடித்து பிரச்சாரம் செய்வதின் நிதர்சனமான உண்மையான பின்னணியாகும் என்பதை மூன்றாவதாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)அதாவது இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற வாசகத்தை எப்படி எல்லாம் விளங்க முடியும் என்பதை பிற்பகுதியில் காணலாம். எனினும் தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இந்த குரைப் சம்பவம்தான் பிரதான ஆதாரமா? அல்லது இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்பதை மாற்றுக் கருத்துடையோர் முதலில் தெளிவாக விளக்கிட வேண்டும். காரணம் நபி (ஸல்) அவர்கள் மரணித்தபிறகு, அவர்களுக்குப் பின்னர் ஹிஜ்ரி 40-வது ஆண்டு வரை ஆட்சிபுரிந்த நேர்வழிநின்ற நான்கு கலீபாக்களின் மரணத்திற்கும் பிறகே இந்த குரைப் சம்பவம் நடைபெற்றுள்ளது. தத்தமது பகுதி பிறைக்கு இந்த குரைப் சம்பவம்தான் தக்க ஆதாரம் என்றால் நபி (ஸல்) அவர்கள் முதல் நபித்தோழர்கள் உட்பட ஹிஜ்ரி 40-வது ஆண்டுவரை வாழ்ந்து மரணித்த அனைத்து முஸ்லிம்களும் தத்தமது பிறை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே பொருள்படுகிறது. ஹிஜ்ரி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம்தான் தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு பிரதான ஆதாரம் என்றால் அதற்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கும், ஏனைய ஸஹாபாக்களுக்கும் ஆதாரமாக அமைந்தது எது? அவர்கள் எந்த பிறை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்? என்பதையும் மேற்படி தத்தமது பகுதி பிறை நிலைப்பாடு கொண்டவர்கள்தான் விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இக்குரைப் சம்பவம் போல ஸஹாபாக்களின் கூற்றையும், தாபியீன்களின் கூற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற புதிய நிலைப்பாட்டிற்கு வந்து, மக்களின் மனோ நிலையை அதன் பக்கம் மாற்றுவதற்கு இப்போதே அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகின்றார்கள் போலும். எனவே இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெளிவாக புரிந்து கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு முறைபடுத்தி விளக்குகிறோம்.

1. குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.

2. குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகளும் குழப்பங்களும்.

3. குரைப் சம்பவம் நமக்கு உணர்த்தும் படிப்பினைகள்.

4. மேற்படி சம்பவத்தில் எழும் கேள்விகள்.

 

1.குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.

 حدثنا موسى بن إسماعيل ، حدثنا إسماعيل يعني ابن جعفر ، أخبرني محمد بن أبي حرملة ، أخبرني كريب ، أن أم الفضل ابنة الحارث ، بعثته إلى معاوية ، بالشام ، قال : فقدمت الشام فقضيت حاجتها فاستهل رمضان وأنا بالشام ، فرأينا الهلال ليلة الجمعة ، ثم قدمت المدينة في آخر الشهر ، فسألني ابن عباس ، ثم ذكر الهلال فقال : متى رأيتم الهلال ؟ قلت : رأيته ليلة الجمعة ، قال : أنت رأيته ؟ قلت : نعم ، ورآه الناس ، وصاموا ، وصام معاوية ، قال : لكنا رأيناه ليلة السبت ، فلا نزال نصومه حتى نكمل الثلاثين ، أو نراه ، فقلت : أفلا تكتفي برؤية معاوية وصيامه ، قال : لا ، " هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم " *. (سنن أبي داود  - كتاب الصوم باب إذا رئي الهلال في بلد قبل الآخرين بليلة - حديث : ‏1998‏).

 ஜஅபூதாவுத் அவர்கள் கூறுகின்றார்கள், நம்மிடம் மூஸா பின் இஸ்மாயில் அவர்கள் அறிவித்தார்கள், அவர்களிடம் இஸ்மாயில் அதாவது இப்னு ஜாபர் அவர்கள் அறிவித்ததாகவும், அவர்களிடம் முஹம்மத் பின் அபீ ஹுர்மலா அறிவித்ததாக அவரிடம் குரைப் அறிவித்ததாகஸ ஹாரிஸாவின் மகள் உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அவரை அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த காரியத்தை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமழானை அடைந்தேன். நாங்கள் வெள்ளிக்கிழமையன்று பிறையை கவனித்தோம். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். அப்போது என்னிடம் இப்னு அப்பாஸ் (ரழி) விசாரித்தார்கள். பிறகு பிறையைப்பற்றி நினைவுபடுத்தப்பட்டது. நீங்கள் எப்போது பிறையை கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை அதை கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையை கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதை கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரழி) அவர்களுக்கு காட்சியளித்ததும், அவரின் நோன்பும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், இல்லை இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: குரைப் (நூல்: அபூதாவுத்)

இதுதான் குரைப் சம்பந்தமாக அபூதாவுது கிரந்தத்தில் வரும் அறிவிப்பின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இச்சம்பவத்தை விளங்குவதற்கு முன்னர், சிரியாவில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த கலீபாவும், நபித்தோழருமான முஆவியா (ரழி) அவர்கள், மற்றும் அவர்களின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பிலிருந்த நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகிய சங்கைமிக்க அவ்விரு நபித்தோழர்களும் இரண்டு வௌ;வேறு நாட்களில் ரமழான் நோன்பை துவங்கினார்கள் என்ற செய்தி மேற்படி குரைப் என்பவரின் பிறை தகவலின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஸஹாபிகளான நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இது என்றாலும் இச்சம்பவம் நடைபெற்ற காலத்தை பற்றி அறிந்து கொள்வது ஆய்வுக்கு அவசியமானதாகும்.

ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றார்கள். பின்னர் ஹிஜ்ரி 13-ஆம் ஆண்டில் முதலாவது கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உமர்பின் கத்தாப் (ரழி) அவர்களும், அதன்பின் ஹிஜ்ரி 23-ஆம் ஆண்டில் இரண்டாவது கலிஃபா உமர்பின் கத்தாப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களும், பிறகு ஹிஜ்ரி 35-ஆம் ஆண்டில் மூன்றாவது கலிஃபா உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் மரணித்தபின் அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்களும், பின்னர் ஹிஜ்ரி 40-ஆம் ஆண்டில் நான்காவது கலிஃபா அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களும் தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தனர். முஸ்லிம் உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கிய பல சதிவேலைகளும், குழப்பங்களும் தலைதூக்கியிருந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்கள் ஆட்சித்தலைமைக்கு வருகிறார்கள்.

நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் 20வருட ஆட்சிகாலத்தில் ரமழான் மாதம் ஹிஜ்ரி 42-வது வருடமும், ஹிஜ்ரி 50-வது ஆண்டும் சனிக்கிழமையில் துவங்கியதை துல்லியமாகக் கணக்கிட முடிகிறது. இன்னும் ஹிஜ்ரி 42-ஆம் ஆண்டின் காலப்பகுதியில் முஆவியா (ரழி) அவர்கள் தன்னுடைய பொறுப்பில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை ஸ்திரப்படுத்தவதற்கான முழுமையான பணிகளை செய்துள்ளதை வரலாற்று சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது. அச்சமயம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு கவர்னராக இருந்தார்கள் என்பதற்கு எந்த சான்றுகளும் காணக்கிடைக்க வில்லை.

எனவே ஹிஜ்ரி 50-இல் ஸ்திரமடைந்த முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சியின் கீழ் மதீனாவின் கவர்னராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேற்படி ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டின் ரமழான் மாதம் சனிக்கிழைமைதான் துவங்கியுள்ளது என்ற நிலையில், மூஆவியா (ரழி) அவர்களும் மக்களும் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார்கள் என்று குரைப் கூறுவதை பிறைபற்றிய அறிவுள்ளவர்கள் ஏற்க முடியாது. காரணம் ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டு ஷஃபானின் இறுதிநாளான (புநழஉநவெசiஉ ஊழதெரnஉவழைn) புவிமைய சங்கமதினம் வெள்ளிக்கிழமையாகும். சங்கமதினம் என்ற அந்த கும்மாவுடைய நாள் வெள்ளிக்கிழமையாக இருந்துள்ள நிலையில், அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையை புறக்கண்ணால் பார்க்க எந்த முகாந்திரமும் இல்;லை என்பதே அறிவியலின் துல்லியமான, நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

மேலும் 20வருட மூஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரி 58-வது வருடத்தில் மட்டும்தான் ரமழான் மாதம் வெள்ளிக்கிழமையில் துவங்கியதை அறியமுடிகிறது. அப்படியானால் அந்தவருடம் அவர்களுக்கு கும்மா உடைய நாள் வியாழக்கிழமையாக இருந்துள்ளது. வியாழக்கிழமை அன்று சிரியாவில் பிறை தெரிய வாய்ப்பில்லாத கும்ம உடைய தினமாகும். மேற்படி குரைபுடைய செய்தியில் வியாழக்கிழமை பிறை கண்டதாக சர்ச்சை எழவில்லை என்றாலும் குரைபுடைய சம்பவம் ஹிஜ்ரி 50-இல் நடைபெற்றதற்கான அதிகப்படியான சாத்தியக் கூறுகளை அறிவதற்காக இதை கூறுகிறோம்.

இன்னும் முஆவியா (ரழி) அவர்களின் கவர்னராக கூஃபா பஸரா பகுதியில் இருந்த ஜியாத் என்பவர் ஹஜ்ரி 58வாக்கில் மரணித்த பிறகு, மூஆவியா (ரழி) அவர்கள் தனது மகன் யஜீதை தனக்குப் பின்னர் ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தும் முயற்சியில் இறங்கியபோது அதிகமான ஸஹாபாக்கள் மதீனாவை விட்டு மக்காவிற்கு சென்றுவிட்டனர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஹிஜ்ரி 58-இல் மதீனாவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் ஹிஜ்ரி 60-இல் முஆவியா (ரழி) அவர்கள் மரணித்தும் விட்டார்கள். எனவே ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டுதான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதை அறியமுடிகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், குரைபிடம் மட்டும் கேட்டறிந்த அப்பிறைச் செய்தியை ஏற்க மறுத்துள்ளதை கவனத்தில் கொண்டு, குரைப் அவர்கள் சிரியாவில் பிறை பார்த்ததாக சொல்லிய நாளில் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்ததற்கு வாய்ப்புகள் இருந்தனவா என்பதை அறிந்துகொள்ள இச்சம்பவம் எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிவிட்டது.

மேலும் இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம் வரலாற்று பதிவுகளை நினைவு படுத்துவதல்ல என்றாலும், நபி (ஸல்) அவர்கள் மரணித்தபிறகு, அவர்களுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த நேர்வழிநின்ற நான்கு கலீபாக்களின் மரணத்திற்குப் பிறகு, இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலர் மரணித்திருந்த காலகட்டத்தில்தான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், அப்போது முஸ்லிம் உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கிய யூதர்களின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலைதூக்கியிருந்த காலத்தில் இக்குரைப் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை விளங்கிக் கொள்வதற்காகவும் இச்சம்பவத்தின் வரலாற்றுப் பின்னனியை சுறுக்கமாக விளக்கியுள்ளோம்.

 

2.குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், முஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததை ஏற்க மறுத்த இந்நிகழ்வில் வரும் செய்தியின் அரபு மூலத்தில் மூஆவியா (ரழி) அவர்கள் கவனித்ததும் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா என்று குரைப் அவர்கள் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்களிடம் கேட்டதாக வரும் இடத்தில் ''குல்து' 'நான் கேட்டேன்' என்ற பதத்தை பயன்படுத்தியே கேட்கப்பட்டதாக இடம் பெறுகின்றது. அந்தப் பதத்தை குரைப் கூறியதாகவே அனைவரும் மொழியாக்கம் செய்கின்றனர்.

ஆனால் அதற்கு முந்தைய வார்த்தைகளில், بعثته– பஹஸத்ஹு ''அவரை அவள் அனுப்பினாள்'என்று பொருள்படும் பதம் இடம் பெறுவதைக் காணலாம். குறிப்பாக இதில் ''அவரை'என்று குறிக்கும் அப்பதம் குரைபை குறிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிவித்தவர் குரைப் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதை அறிவிப்பவர் உண்மையிலேயே குரைபாக இருந்திருந்தால் அவர் தன்னிலையாகவே அறிவித்திருக்க வேண்டும். மாறாக இங்கு படர்க்கையான சொல் கையாளப்பட்டுள்ளது. புரியும்படி சொல்வதென்றால் 'என்னை' உம்முல் பழ்ல் அவர்கள் அனுப்பினார்கள் - بعثتنيபஹஸத்னீ என்றே இடம்பெற்றிருக்க வேண்டும். மாறாக இங்கே 'அவரை' உம்முல் பழ்ல் அனுப்பினார்கள் என்று மூன்றாம் நபரைக் குறித்து சொல்வதைப் போன்ற வாசகங்கள் உள்ளன.

முஸ்லிம் கிரந்தத்தில் வரும் இதே செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா இப்னு யஹ்யா என்பவர் நமக்குப் போதாதா அல்லது உங்களுக்குப் போதாதா என்று குரைப் கூறியதாக சந்தேகப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மாதிரியான குறைபாடுகள் இல்லாத ரிவாயத்து என்று மாற்றுக்கருத்துடையோர் கூறும் அபூதாவுதின் அறிவிப்பையே நாமும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.

எனவே மேற்படி நிகழ்வை பிறைத் தகவலுக்கு ஆதாரமாக நினைப்பவர்களும், இந்த நிகழ்வை குரைப்தான் அறிவிக்கின்றார் என்று கூறுபவர்களும் முதலில் இதுபோன்ற குளறுபடிகளை தெளிவுபடுத்த வேண்டும். அல்லது தாபியீக்கு பிறகு வரும் நபர்களின் கூற்றுகளும் மார்க்க ஆதாரம்தான், அதில் எத்தகைய செய்திகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், அறிவிப்பார்களா?

இன்னும் அக்காலத்தில் சிரியாவுக்கும் மதீனாவுக்கும் இடையே வணிகத்தொடர்புகள் அதிகம் இருந்த காரணத்தால் இரு நகரங்களுக்குமிடையே மக்கள் பிரயாணம் செய்துவந்ததையும், வாகனத்தொடர்புகள் இருந்துள்ளதையும் நாம் அறியமுடிகிறது. சிரியாவிலிருந்து பயணமாகி பலர் மதீனாவுக்கு வந்திருக்க அதிகவாய்ப்புள்ள நிலையில் குரைப் என்ற ஒருவரிடம் தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேற்கண்ட விஷயத்தைக் கேட்டதாகவும் தெரிகின்றது.

குறிப்பாக மேற்கண்ட நிகழ்வில் சிரியாவின் மக்கள், பிறையை இரவில் பார்த்தார்கள் என்பதற்கான எந்த வாசகங்களும் அங்கு இடம்பெறவில்லை. லைலஹ் (லைலத்) என்ற அரபிப்பதத்தை இங்கே தவறாக இரவு என்று மொழிபெயர்த்துள்ளனர். லைலஹ் என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட முழுமையான நாளையே குறிக்கும்.இன்னும் லைலஹ் என்ற பதம் யவ்ம் என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் லைலஹ் என்பதற்கு இரவு என்றும், யவ்ம் என்ற பதத்திற்கு பகல் என்றும் மொழிபெயர்க்கப்படும். பொதுவாக அரபி மொழிவழக்கில் இரவிற்கு லைல் என்ற பதமே பயன்படுத்தப்படும். லைலஹ் பற்றிய மேலதிக விளக்கங்களை அறிய ஹிஜ்ரி கமிட்டியின் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற ஆய்வுக்கட்டுரையில் விரிவாக காணலாம். எனவே மாற்றுக் கருத்துடையோர் மேற்படி குரைபுடைய செய்தியை ஆதாரமாக வைத்து சிரியாவின் மக்கள் பிறையை இரவில்தான் பார்த்தார்கள் என்று பிரச்சாரம் செய்வதைப் போன்ற வாசகங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை.

மேலும் மேற்படி சம்பவத்தில் உள்ளவற்றை இங்கே மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். அதாவது ''நாங்கள் வெள்ளிக்கிழமை அதை கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையை கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதை கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள்.''

இதில் சிரியாவில் இருந்த மூஆவியா (ரழி) அவர்களும் குரைபும் சிரியா மக்களும், மதீனாவில் இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், மதீனத்து மக்களும் எந்த கிழமையில் தங்களுடைய ரமழான் மாதத்தின் முதல் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பதற்கும் மேற்கண்ட செய்தியில் எந்த வாசகமும் இல்லை.

மேற்படி குரைபு சம்பவம் ரமழான் முதல் பிறைபற்றிய தகவல்தான் என்று பொதுவாக மக்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றாலும் சிரியாவின் மக்கள் பார்த்ததாக குரைபு தெரிவித்த தகவல் உர்ஜூஃனில் கதீம் என்ற பிறைப் படித்தரத்தின் கடைசி நிலையை அவதானித்ததை கூறுகின்றதா? அல்லது வளர்பிறையின் முதல் படித்தரத்தைப்பற்றி கூறுகின்றதா? என்பதற்கும் இதில் உறுதியான எந்தத் தெளிவும் இல்லை. ஏனெனில், ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃபான் மாதத்தின் உர்ஜூனில் கதீம் அம்மாதத்தின் இறுதி வியாழக்கிழமையன்று ஏற்பட்டது. குரைப் உர்ஜூனில் கதீமை பார்த்ததாக வைத்துக்கொண்டாலும் அதை நிச்சயமாக வெள்ளிக்கிழமை பார்த்திருக்கவே முடியாது.

மேலும் அவர்கள் வெள்ளிக்கிழமை பார்த்து சனிக்கிழமை நோன்பை துவங்கியதாகவும் அந்த செய்தியில் கூறப்படவில்லை. அதே போல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் சனிக்கிழமை பார்த்து ஞாயிற்றுக்கிழமை நோன்பை துவங்கியதாகவும் அந்த செய்தியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்வுகாண இயலாத பல குழப்பான நிலைகள் மேற்காணும் செய்தியில் புதைந்துள்ளன. அவைகளைப் பற்றி அலசத் துவங்கினால் பல பக்கங்களில் விவரிக்க வேண்டிவரும் என்பதாலும்;, மேற்காணும் நிகழ்வு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸாக இல்லாமல் ஒரு ஸஹாபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குரைப் என்பவர் அறிவித்திருக்கலாம் என்ற உறுதியற்ற நிலையே அதில் உள்ளதாலும், இது ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது என்பதற்கு இந்த விளக்கங்களே போதுமானதாகும் என கருதுகின்றோம்.

 

3.குரைப் சம்பவம் உணர்த்தும் படிப்பினைகள்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அவர்களின் கலீபா முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்தும், முஆவியா(ரழி) அவர்களின் பிறை நிலைப்பாட்டை ஏற்க மறுத்து சுய சிந்தனையோடு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளதைத்தான் மேற்கண்ட செய்தி தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பிறைத் தகவலை யாரும் பெற்று செயல்படக் கூடாது மாறாக பிறைகளின் படித்தரங்களை (அஹில்லாக்களை) கவனித்தே செயல்பட வேண்டும் என்ற மார்க்க சட்ட விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து அறியமுடிகிறது.

மேற்கண்ட சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)'என்று கூறிவிட்டதால் இதை ஹதீஸ்தான் என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்ட பிறை சம்பந்தப்பட்ட எந்த ஹதீஸ்களிலும் ''எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை'என்ற இந்த வாசகங்கள் இடம்பெறவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படவுமில்லை. பிறை சம்பந்தமான வேறு எந்த அறிவிப்புகளிலும் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்ததாக இது போன்ற வாசகங்களும் காணப்படவும் இல்லை.

எனவே இப்னு அப்பாஸ் அவர்கள் மேற்கண்ட சொற்றொடர்களைக் கூறி, 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)'என்று அச்சொற்றொடர்களோடு இணைத்துக் கூறியதாக குரைப் என்பவர் அறிவிக்கும் இந்த விஷயத்தை, நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களாக அறிவிக்கப்பட்ட செய்திகளில் இருந்தும், நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பயின்றதை வைத்தும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஆய்வுசெய்து புரிந்த விஷயத்தைத்தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக கூறியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

எனவே இது ஹதீஸ் என்ற தரத்தில் வரமுடியாத நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத ஒரு சம்பவமேயாகும். இன்னும் கூறப்போனால் ஸஹாபி கூறியதாக குரைப் என்பவர் அறிவிக்கும் சம்பவமே இது. ஹதீஸ்கள் என்றால் அதை அறிவிக்கும் நபர் ஸஹாபியாகவே இருப்பார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. எனவேதான் இந்த அபூதாவுதில் வரும் இச்செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எனக் கூறாமல் அறிவிப்பவர் குரைப் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட குரைப் சம்பவம் ஹதீஸ்தான் என்று யாராவது வாதிட்டால் அவர்களுடைய வாதத்தையும், நமது மேற்கண்ட விளக்கத்தையும் முழுமையாக புரியவேண்டும் என்றால்,நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக ரிவாயத்து செய்யப்பட்ட பிறை சம்பந்தமான மற்ற ஸஹீஹான ஹதீஸ்களையும் முன்னிருத்தி அவர்களின் அவ்வாசகத்துடன் பொருந்தி போகின்றதா என்று ஆய்வு செய்தே ஒரு தீர்வு காண இயலும். அப்படி பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததால்தான் இந்த குரைப் சம்பவம் ஹதீஸ் என்ற தரத்திற்குள் வராது என்பதை நிதர்சனமாக அறிந்து கொள்ளலாம். எனவேதான் அந்நிகழ்வை நாம் குரைப் ஹதீஸ் என்று கூறாமல் குரைப் சம்பவம் என்று நாம் கூறுகிறோம்.

மேலும் குரைப் அவர்கள், தான் தெரிவிக்கும் பிறை தகவல் சரியானது என்று கருதித்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இத்தகவலை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களோ குரைபுடைய பிறைதகவலை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு எதிர்மறையான இருவேறு கருத்துகள் ஒரு நிகழ்வில் இடம்பெற்றிருக்கும் போது, அதை ஒரு கருத்துடையோர் மட்டும் தங்களுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைதகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)'என்று கூறிவிட்டதால் இது தத்தமதுபகுதி பிறைக்கு தனித்த ஆதாரம்தான் என்று கூறுவது அடிப்படையிலேயே தவறாகும்.

பொதுவாக குர்ஆனும் சுன்னாவும் சாட்சி பகரும் விஷயத்தில் குறைந்த பட்சம் இரண்டு நேர்மையான நபர்கள் இருக்க வேண்டும் என்கிறது. இந்நிலையில் இந்த குரைப் சம்பவத்தை முன்னிருத்தி ஒரு நபர் சாட்சியை ஏற்பதற்கு இது ஆதாரம் எனவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் சில முற்கால ஆய்வாளர்களோ இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் குரைப் மட்டுமே தனித்து சாட்சி சொன்னதால்தான் குரைபுடைய பிறைத்தகவலை அவர்கள் நிராகரித்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஏனென்றால், சாட்சிய சட்டம் என்பது இரு சாட்சிகளைக் கொண்டதே ஆகும். அதற்கு மாற்றமாக ஒரு சாட்சியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பெற்றதாலேயே குரைபுடைய பிறை சாட்சியத்தை நிராகரித்து விட்டார்கள் என்ற தகவல்களும் ஆய்வு நூல்களில் காணக்கிடைக்கின்றன. இன்னும் குரைபின் தகவல் உறுதியான தகவலாக இருந்தும், அது மாதத்தின் இறுதியில் தாமதமாக கிடைத்ததால், அதை ஏற்று எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபிவழி எதுவும் இல்லாததால் மாதத்தை தன் ஆய்வின் அடிப்படையில் நிறைவு செய்வதற்குத் தீர்மானித்து, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு முடிவெடுக்கத்தான் கட்டளையிட்டுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது.

சர்வதேசப்பிறை நிலைபாடு கொண்ட சில அறிஞர்கள் குரைப் சம்பவத்தை விளக்கும்போது, குரைப் அவர்கள் ஷவ்வால் பிறையை பார்க்காமல் ரமழானின் பிறை பார்த்த தகவலின் அடிப்படையில் ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் அவர்கள் குரைப் சம்பவத்தை மறுத்து விட்டார்கள் என்று கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் குரைப் அவர்கள் சுயமாக முன்வந்து இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இந்த பிறைதகவலை அளிக்கவில்லை, மாறாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்தான் குரைபை அழைத்து பிறைபற்றி விசாரிக்கிறார்கள். இதை முதலாவது மனதில் கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் ரமழானின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை என்ற நிலையில் ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைப் சம்பவத்தை மறுத்து விட்டார்கள் என்பது உண்மையானால், ஷவ்வால் பிறை பற்றி ரமழானில் விசாரிக்கக்கூடாது என்பதை சர்வதேசப்பிறை நிலைப்பாடு கொண்ட நமதூர் அறிஞர்களே அறிந்திருக்கும் ஒருவிஷயத்தை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா என்ன?. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீன பிறை சட்டம் தெரியும் என்றால் குரைபை அழைத்து ரமழான் பிறைபற்றி ஏன் விசாரிக்கவேண்டும்? சிந்திக்க வேண்டாமா? இல்லை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீனபிறை சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுவார்களேயானால், மார்க்க அறிவிற்காக நபி (ஸல்) அவர்களின் சிறப்பு பிரார்த்தனையைப் பெற்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குத் தெரியாத மார்க்க சட்டம் சர்வதேசப்பிறை அறிஞர்களுக்கு எப்படி தெரிய வந்தது?. சர்வதேசப்பிறை அறிஞர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?

ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான உர்ஜூஃனில் கதீம் என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறியிருக்கையில், இன்னும் பிறைகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களே கட்டளையிட்ட பிறகும், ரமழானில் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தை அறிந்திடக்கூடாது என்பதற்கு இந்த குரைப் சம்பவத்தில் எந்தத் தடையுமில்லை. இன்னும் ரமழானின் இறுதியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்தான் குரைபை அழைத்து பிறைபற்றி விசாரித்துள்ளதை வைத்து இவ்வாறு அடுத்து வரும் மாதத்தின் துவக்கத்தை முற்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத்தானே இச்சம்பவம் உணர்த்துகிறது என்றே விளங்க வேண்டும்.

இந்நிலையில் மேற்படி குரைப் சம்பவம் தத்தமது பகுதி பிறைக்கு தான் ஆதாரம், சர்வதேச பிறைக்கு எதிரான நிகழ்வு என்று தத்தமதுபகுதி பிறை அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், மூஆவியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றதையும், அவர்கள் பிறையை பார்த்ததையும் குரைப் அவர்கள் சாட்சி கூறியும், மதீனா சிரியா இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட தூரத்தை கணக்கில் கொண்டே, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிராகரித்தார்கள் எனவும் வாதிடுகின்றனர்.

இந்த வாதம் உண்மையென்றால், இக்காலத்தில் வௌவேறு நாடுகளாக அமைந்திருக்கும் சிரியாவும், மதீனாவும் அன்று முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்களில் இருவேறு தினங்களில் பிறை பார்க்கப்பட்டாலும், அதை மற்ற ஊரில் உள்ளவர்கள் பொருட்படுத்தக் கூடாது என்பதே இச்செய்தியில் இருந்து புலனாகின்றது.அப்படியிருக்க இந்த நிகழ்வை வைத்து தங்கள் பிறை நிலைப்பாட்டை தத்தமது பகுதி என்று அமைத்து கொண்டவர்கள் தற்போது தமிழகபகுதி என பல ஊர்களையும் ஒன்றிணைத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள் என்பதை விளக்க வேண்டும்.

இல்லை இல்லை சிரியாவில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலீபா முஆவியாவின் (ரழி) தலைமையிலான இஸ்லாமிய ராஜ்ஜியத்தில், மதீனா என்பது ஒருஊர் அளவிற்குள்ள பகுதியல்ல அது தமிழ்நாட்டைப்போன்ற ஒரு மாநில பகுதியாகும். அங்கு கவர்னராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அவ்வாறு தகவலை மறுத்ததைப் போலத்தான், நாங்கள் இந்தியா என்ற நாட்டில் மத்திய அரசு இருப்பினும், தமிழகம் என்ற மாநில அரசு அளவுக்குட்பட்ட இடங்களை எல்கையாக நாங்கள் தீர்மானித்து தமிழகம் தவிர்த்து எங்கு பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று வாதம் புரிவார்களேயானால், சர்வலோகத்திற்கும் அரசனான அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருக்கும் இப்பூமியில் வல்ல அல்லாஹ் பிறை பார்ப்பதற்கென்று எந்தவித தூர எல்லையையும் நிர்ணயிக்கவில்லை என்பதை மேற்படி வாதம் புரிவர்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறோம்.

முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மதீனா இருந்தும் சிரியா மற்றும் மதீனாவாசிகள் தனித்தனியாக செயல்பட்டதாகவே குரைப் நிகழ்வு கூறுகிறது. மதீனாவை தமிழ்நாட்டின் எல்கை அளவோடு ஒப்பிட்டு கூறிடவே இயலாது என்ற நிலையில், ஓரே ஆட்சியின் கீழ் இருப்பதால் ஒரு பகுதியாக நாங்கள் தமிழ்நாட்டை பார்க்கின்றோம் என்று யாராவது கூறினால் அதற்கும் குரைப் நிகழ்வு ஆதாரமாக அமையாது மாறாக எதிராகவே அமையும் என்பதே உண்மை. தத்தமது பகுதி பிறை அல்லது தமிழக அளவு பிறை என்ற எல்லைக்கு ஆதாரமாக வரும் ஒரு ஹதீஸையாவது மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்துக்காட்டவேண்டும்.

தூரமான பகுதியில் இருந்து உறுதியான பிறைத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவதற்கு குரைப் சம்பவம் தடையாக இருக்கின்றது என்று கூறுபவர்கள், எவ்வளவு தூரத்தில் இருந்து பிறைத் தகவல் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்ற விஷயத்தில் இன்னும் உறுதியில்லாத நிலைமையில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயம் தூரமான பகுதியில் இருந்து தகவல் வந்தால் எடுக்க கூடாது என்று கூறும் அவர்களே மற்றொரு சந்தர்ப்பத்தில் தூரத்தையோ எல்கையையோ நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்து தரவில்லை என்றும் கூறுகின்றார்கள். ஏன் இந்த முரண்பாடு?

மேலும், குரைப் நிகழ்விலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியப்படிப்பினை என்னவென்றால், ஒரு ஆட்சியாளாரின் (கலீபாவின்) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் நாம் வாழ்ந்து வரும் நிலையில், நம்மை அந்த ஆட்சியாளர் (கலீபா) இன்னொரு ஊருக்கு கவர்னராக (அமீராக) நியமித்து, அவருக்காக நாம் ஆட்சிப்பொறுப்பை அந்த ஊரில் நிர்வகித்தாலும், மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சிசெய்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், ஆட்சியாளர் மார்க்கம் என்று கூறி செயல்படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகியுள்ள மாபெரும் உண்மையாகும்.

ஏனென்றால், மார்க்க சட்டமான பிறை விஷயத்தில் ஆட்சியாளர் மூஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததாக குரைப் சொன்னதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்கமறுத்து தன்னுடைய பிறை நிலைப்பாடுதான் சரியென்று செயல்பட்டுள்ளார்கள். மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் கட்டளையிட்டதை மட்டும் சிந்தித்து கட்டுப்பட்டு நடந்தால் போதுமானதாகும் என்பதும், வேறு யாருடைய மார்க்க நிலைப்பாட்டையும் நாம் தக்லீத் செய்து அமுல்படுத்த வேண்டியதில்லை என்பதும் மேற்படி குரைபுடைய செய்தியிலிருந்து தெளிவாகியுள்ளது.

இந்நிலையில் தத்தமதுபகுதியில் பிறை பார்ப்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் மேற்படி குரைபுடைய செய்தியின் அடிப்படையில் ஒருவருடைய பிறை நிலைப்பாடு, அவருடைய கலீபா, அமீர், ஜமாஅத், இயக்க தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், தலைமைக்கு கட்டுப்படவேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது என்பதற்கு தக்க ஆதாரமாக இது அமைகிறது. மேற்படி கலீபா, அமீர், ஜமாஅத், காஜி, முதவல்லி மற்றும் இயக்க தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதைத்தான் மேற்படி குரைப் சம்பவம் தெரிவிக்கும் கருத்து என்பதே நிதர்சனமான உண்மையாகும். மாற்றுக் கருத்துடையோர் இதை நிதானமாக சிந்தித்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

 

4.மேற்படி குரைப் சம்பவத்தில் எழும் கேள்விகள்.

ஒரு ஊரில் காணப்பட்ட பிறையின் அடிப்படையில் அனைத்து ஊர் மக்களும் செயல்படக் கூடாது என்பது குரைப் நிகழ்வில் இருந்து பெறும் சட்டம் என்று கூறுபவர்களிடம் சிந்திப்பதற்காக இந்த கேள்விகளைக் கேட்கின்றோம்.

அதாவது மதீனாவிலிருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், வேறு ஊர் பிறையையோ, பிறபகுதியின் பிறைத்தகவலையோ பின்பற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தால் சிரியாவிலிருந்து வந்த குரைபிடம் அங்கு பிறை பார்க்கப்பட்டது பற்றி ஏன் விசாரிக்க வேண்டும்? அவசியமில்லாத செயலை நபித்தோழர்கள் செய்வார்களா? இன்னும் குரைப் அவர்கள், மூஆவியா (ரழி) அவர்களும், சிரியாவின் மக்களும் நோன்பு வைத்தது போதாதா? என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வலியுறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன? மாற்றுக்கருத்துடையோர் சிந்திக்க வேண்டாமா?

மாற்றுக் கருத்துடையவர்களின் வாதப்படி ஒரு ஊரில் பிறைப்பார்க்கப் படாவிட்டால்தனே வேறு பகுதியில் பார்த்தத் தகவலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க பிறையை உறுதியாக பார்த்துவிட்ட பிறகு ஒருவர் வேறு இடங்களில் பார்க்கப்பட்ட பிறைத்தகவலை ஏன் எடுக்க வேண்டும்? ஒருவர் பிறைகளை கவனித்து, அதை உறுதியும்படுத்தி மாதத்தைச் சரியாக துவங்கிய பின்னும் வேறு இடத்தில் இருந்து (அது எந்தப் பகுதியானாலும் சரி) தகவல் கிடைத்தால், தான் உறுதியாக கவனித்து மாதத்தை ஆரம்பித்ததை விட்டுவிட்டு கிடைத்தத் தகவலைத்தான் எடுத்து அமல்செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றார்களா? மாற்றுக்கருத்துடையோர் இதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் மாற்றுக் கருத்துடையோரின் புறக்கண்பார்வை நிலைப்பாடு என்பது அவர்கள் விளங்கியுள்ளபடி ஒரு மாதத்தின் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்த்து அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்வதுதான் நபிவழி என்றும், அன்றைய முப்பதாம் இரவு மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்பதுதான். எனவே அவர்கள் காட்டும் குரைப் நிகழ்வில் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு பிறையை புறக்கண்ணால் பார்த்தார்கள் என்பதற்கான வாசகங்கள் அதில் எங்குமே இடம் பெறவில்லை. இது பிறை பார்த்த தகவலை குறிக்கும் ஆதாரம் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் நம்பினாலும் அவர்களின் பிறை நிலைப்பாடு இச்சம்பவத்தின் மூலம் எங்கே நிரூபணமாகிறது?

ஒரு வாதத்திற்காக குரைப் சம்பவத்தை நபிமொழி என்று வைத்துக் கொண்டாலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைத் தகவலை நேரத்தையோ, தூரத்தையோ அளவுகோலாக வைத்து மறுக்கவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாங்கள் கவனிப்போம் என்ற கருத்தில்தான் கூறியுள்ளார்கள். இதை ஏற்றுக் கொண்டு இனி பிறைவிஷயத்தில் நேரம் மற்றும் தூர வித்தியாசங்களை முன்னிருத்தாமல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வழிநின்று பிறைகள் அனைத்தையும் நாள் தவறாமல் தாங்களே சுயமாக கவனித்து செயல்பட டவுண்காஜிகள் முதல் ஜமாஅத் தலைவர்கள் உட்பட மாற்றுக்கருத்துடைய அனைவரும் முன்வரவேண்டும். முன்வருவார்களா?

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தவிர ஸஹாபாக்களின் கூற்றுகள், தாபியீன்களின் கூற்றுகள் மார்க்கத்திற்கு ஆதாரமாகாது எனக் கூறும் மாற்றுக்கருத்துடைய அறிஞர்கள் இந்த குரைப் சம்பவத்திற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக தெரியும் நிலையிலும், தங்களின் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இதை ஆதாரமாக கருதிக்கொண்டு, இந்த குரைப் சம்பவத்தை தூக்கிப்பிடித்து பிறைவிஷயத்திற்கு மட்டும் ஸஹாபியையும், தாபியீயையும் ஆதாரமாகக் கொள்வது ஏன்? என்று மீண்டும் கேட்கிறோம்.

குரைப் சம்பவம் நிகழ்ந்திருப்பதற்கு அதிக வாய்ப்புள்ள ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃபானின் இறுதிநாள் (Geocentric Conjunction) புவிமைய சங்கமதினம் வெள்ளிக்கிழமையாகும். கும்ம உடைய நாள் வெள்ளிக்கிழமையாக இருந்துள்ள நிலையில் அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையை புறக்கண்ணால் பார்க்க எந்த முகாந்திரமும் இல்;லை. இந்த பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்ததின் அடிப்படையில்கூட குரைபுடைய அப்பிறைதகவலை ஏற்க மறுத்திருக்கலாம்.

இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து வந்ததின் அடிப்படையில் ரமழானின் முதல் பிறையின் காட்சியை ரமழானின் முதல்தினமான சனிக்கிழமையன்று மதினாவில் கவனித்துள்ளார்கள். அந்த சனிக்கிழமைக்கு முந்திய நாள் வெள்ளிக்கிழமை கும்மாவுடைய நாளில் பிறையை யாரும் காணமுடியாது என்பதை தெளிவாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்த நிலையில், அந்த கும்மவுடைய நாளான வெள்ளிக்கிழமையில் குரைப் பிறை பார்த்ததாகச் சொன்ன தகவலை நபிவழியில் நின்று மறுத்துள்ளார்கள் என்றே கருதவேண்டும். இக்கருத்தை இல்லை என்று மறுத்து நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவுத்திறமைக்கும் சங்கமதின பிறைமறைத்தலுக்கும் சம்பந்தமில்லை என்று யாரும் கூறினால், கடந்த 1400ஆண்டுகளில் (புநழஉநவெசiஉ ஊழதெரnஉவழைn) புவிமைய சங்கமதினத்தில் சிரியா, சவுதி அரேபியா உட்பட அரபு தீபகற்பத்தில் என்றாவது பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்ததாகவோ, பார்க்க வாய்ப்பு இருந்ததாகவோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முன்வரவேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியுமா?

மாற்றுக் கருத்துடையவர்கள் குரைப் சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளை கவனித்தே செயல்பட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றார்கள். இந்நிலையில் குரைப் அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் செயல்பட்டதற்கு மாற்றமான தகவலை தரும்போது, உறுதியாக பிறையை கவனித்து செயல்பட்ட இப்னு அப்பாஸ் (ரழி) தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசிய அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

மேலும் இந்த நிகழ்வை முற்கால ஆய்வாளர்கள் அலசும் போது ஒருவர் 31நாட்கள் நோன்பு வைக்கலாமா? என்பதுபற்றிய சர்ச்சையும் நடைபெற்றுள்ளது. அத்துடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஒருவர் பயணித்து சென்றுவிட்டால், அவர் எந்த ஊரின் பிறையின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்ய வேண்டும்? அல்லது பெருநாளை கொண்டாட வேண்டும்? அவர் பயணித்து சென்ற ஊரின் அடிப்படையில் நோன்பை முழுமையாக நிறைவு செய்ய வேண்டுமா? அச்சமயம் சிலருக்கு நோன்பு குறைந்ததாகவும், மேலும், சிலருக்கு நோன்பு அதிகமாகவும் நோற்கவேண்டி வந்துவிட்டால் என்ன செய்வது எனவும் அலசியுள்ளனர்.

ஏனெனில், முஆவியா (ரழி) அவர்களால் மதீனாவில் கவர்னராக நியமிக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் சிரியாவில் பிறை பார்த்ததாக சாட்சி சொன்ன குரைப் அவர்கள், மதீனாவிலிருந்த மக்களைவிட ஒருநாள் அதிகமாக நோன்பை பிடித்திருந்தாரா? அல்லது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முடிவெடுத்தபடி செயல்பட்டாரா? என்ற முக்கியமான விளக்கம் இந்த குரைப் சம்பவத்தில் இடம்பெறவில்லை. அதாவது மாதத்தின் இறுதியில் சிரியாவிலிருந்து பயணம் செய்து மதீனா வந்த குரைப் அவர்கள் மதீனாவாசிகளின் நோன்பின் அடிப்படையில் தன்னுடைய நோன்பை நிறைவு செய்துவிட்டு பெருநாள் கொண்டாடினாரா? அல்லது சிரியாவில் தான் நோன்பை ஆரம்பித்ததின் அடிப்படையில் நோன்பு நோற்க ஹராமான தினமான அவருடைய பெருநாள் தினத்திலும் ஒரு நோன்பை அதிகப்படியாக நோற்றாறா? இவ்வாறு குரைப் அவர்கள் தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் செயல்பட்டாரா? அல்லது தனது தவறை உணர்ந்து கொண்டாரா? உணர்ந்து கொண்டார் என்றால் அவர்கள் நோன்பு நோற்றது ரமழானின் முதல் தினத்தில் அல்ல என்பதை உணர்ந்து முப்பத்தொன்று நோன்புகள் நோற்றார்களா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள்தான் விளக்கம் தரவேண்டும். தருவார்களா?

இக்குரைப் சம்பவத்தை பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் மாதம் என்பது 29அல்லது 30நாட்கள்தான் என்ற நபி (ஸல்) அவர்களின் தெளிவான ஸஹீஹான வழிகாட்டுதலை மறுத்து ரமழான் நோன்பு 31நாட்களாகவும் வரும் என்று சொல்வார்களா? யாமறியோம்.

மேற்படி குரைப் சம்பவம் மாற்றுக்கருத்துடையோரின் பிறை பார்த்தலுக்கும், அவர்களின் நிலைப்பாட்டிற்கும் எவ்வகையிலும் ஒருபோதும் ஆதாரமாக அமையாது என்பதை விளங்கிக் கொண்டோம். 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக குரைப் கூறியதில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்கள்? என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம்பெறவில்லை என்பதையும் முன்னர் கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு இதுவும் ஹதீஸ்தான், மேலும் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இதுவே பிரதான ஆதாரம் என கூறுபவர்களிடம் அவர்கள் பாணியிலேயே கீழ்க்காணும் கேள்விகளை முன்வைக்கின்றோம்.

1.இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அவர்களின் அமீரான முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்தும், முஆவியா (ரழி) அவர்களின் பிறை நிலைப்பாட்டை ஏற்க மறுத்து சுய சிந்தனையோடு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளதைத்தான் 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்என்று சொன்னதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?

2.கும்மாவுடைய நாள் வெள்ளிக்கிழமையாக இருந்துள்ள நிலையில் அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையை புறக்கண்ணால் பார்க்க எந்த முகாந்திரமும் இல்லை.இந்த பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்ததால் குரைபுடைய அப்பிறைதகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்  என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது?

3.ஒருவருடைய பிறை நிலைபாடு, அவருடைய அமீர், ஜமாஅத், இயக்க தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், தலைமைக்கு கட்டுப்படவேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது என்றும் மேற்படி அமீர், ஜமாஅத், இயக்க தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது?

4.ஒரு ஆட்சியாளாரின் (அமீரின்) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் நாம் வாழ்ந்து வரும் நிலையில், நம்மை அந்த ஆட்சியாளர் (அமீர்) இன்னொரு ஊருக்கு கவர்னராக நியமித்து, அவருக்காக நாம் ஆட்சிப்பொறுப்பை அந்த ஊரில் நிர்வகித்தாலும், மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சிசெய்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர் மார்க்கம் என்று கூறி செயல்படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியதில்லைஎன்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் புரிந்து கொள்ள கூடாது?

5. முஆவியா (ரழி), மற்றும் அவர்களின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பிலிருந்த இப்னு அப்பாஸ் (ரழி) ஆகிய சங்கைமிக்க அவ்விரு நபித்தோழர்களும், இரண்டு வெவ்வேறு நாட்களில் ரமழான் நோன்பை துவங்கினார்கள் என்ற செய்தி சரியானதல்ல, முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கிழமையில்தான் மாதத்தைத் துவங்கவேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?

6.ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான உர்ஜூஃனில் கதீம் என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறியிருக்கையில், இன்னும் பிறைகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மத்தியில், ஷவ்வாலின் துவக்கத்தை எதிர்நோக்கி இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ரமழானின் இறுதியில் குரைபை அழைத்து ரமழான் துவக்கத்தை பற்றி விசாரித்ததின் அடிப்படையில், ஷஃபானின் பிறைகளை வைத்து ரமழானின் துவக்கத்தையும், ரமழானில் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தையும் முற்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' / அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது? என்ற ரீதியில் நடுநிலையோடு சிந்திப்பார்களாக.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம், நமது பிறை நிலைப்பாட்டிற்கு பல்வேறு குர்ஆன் வசனங்களையும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஆதாரங்களாக மக்கள் மத்தியில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் பிறைகள் விஷயத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை கொஞ்சம்கூட அறியமுற்படாத மாற்றுக்கருத்துடைய அறிஞர்கள், நபி (ஸல்) அவர்கள் மரணித்தபிறகு, அவர்களுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த நேர்வழிநின்ற நான்கு கலீபாக்களின் மரணத்திற்குப் பிறகு, இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலர் மரணித்திருந்த காலகட்டத்தில், முஸ்லிம் உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கிய யூதர்களின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலைதூக்கியிருந்த காலத்தில் நடைபெற்ற இக்குரைப் சம்பவத்தை தங்களது பிறைநிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரமாக துணிந்து பிரச்சாரம் செய்கின்றார்கள் என்றால் அத்தகையோர்;களை மக்களே நீங்கள்தான்; அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி என்ற வாசகங்கள் வரும் பிரபலமான ஹதீஸ்கள் இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு எவ்விதத்திலும் ஆதாரமாகாது மாறாக பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் துல்லியமாக கவனித்தே செயல்பட வேண்டும் என்பதை தான் விளக்குகிறது என்பது மிகவும் தெளிவாக நிரூபணமாகிவிட்ட நிலையில்,

இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆதாரமாக கருதப்பட்ட ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு, பிறையை பார்த்ததும் ஓதும் துஆ சம்மந்தப்பட்ட அறிவிப்பு, ரிப்யீ பின் கிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தி அறிவிப்பு, இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு, நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்யலாம் என்று தவறாக மக்களிடம் புரிய வைக்கப்பட்ட அறிவிப்பு, பிறை பார்த்தலுக்கு இரண்டு சாட்சிகள் பற்றிய செய்தி, ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு, யவ்முஷ்ஷக் என்று பிறை பார்த்தல் சம்பந்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவும், அதில் பல தத்தமதுபகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறையை புறக்கண்களால் பார்த்தல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு எதிராக அமைந்துவிட்டதாலும்,

இன்னும் பிறை பார்த்து தகவல் அளிப்பதற்கு மிகப்பெரும் ஆதாரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பும் அடிப்படையற்றது, தொடர்பு அறுந்தது, இனங்காணப்படாத அபூஉமைர் என்பவரால் அறிவிக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்தி என்று தௌ;ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டதாலும், நபிமொழி என்ற தரத்தில் அமையாத இந்த குரைப் சம்பவத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழல் மாற்றுக்கருத்துடைய அறிஞர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்றைய அறிவியல் யுகத்தில் கணிணியின் மூலம் அனைத்து அறிவிப்புகளையும், செய்திகளையும் தேடி எடுத்து, அனல் பறக்க விவாதங்கள் புரியும் அரபிப்புலமை(!) வாய்ந்தவவர்களால் கூட இந்த குரைப் சம்பவம் பற்றிய உண்மை நிலையை உலகிற்கு உணர்த்த முடியாமல் போனது ஏன்? அவர்கள் அறிந்து கொண்டேதான் இருட்டடிப்பு செய்கிறார்களா? அல்லது அவர்களின் அரபி மொழியறிவில் உள்ள குறைபாட்டினால் இது இவர்களுக்கு புரியாமல் ஆகிவிட்டதா? அல்லது இவர்கள் எதையும் ஆய்வு செய்யாமல் அறியாமையிலே உழன்று வருபவர்களா? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் தற்போது நமக்கு எழுகின்றன.

இன்னும் தவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான சுன்னா, ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர் என்று மக்கள் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் ஸஹீஹானதை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று பிரசாரம் செய்யும் தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலிம்கள், இந்த குரைப் விஷயம் சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிட கடமைப்பட்டுள்ளார்கள். தங்களின் தத்தமதுபகுதிபிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாட்டிற்கு இச்செய்தியை பலமான ஆதாரம் என நம்பி பிரச்சாரமும் செய்துவிட்டதால், தற்போது இவ்விஷயங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இந்த ஆய்வுகள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஆக பல்வேறு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த மேற்படி குரைப் சம்பவத்தில், அச்சம்பவம் உணர்த்தும் படிப்பினைகளையும், அதில் எழும் பல கேள்விகளையும் மனதில் கொண்டு நிதானமாக நாம் சிந்தித்தால் மேற்படி குரைப் சம்பவம் தத்தமதுபகுதி பிறைக்கோ, சர்வதேசப் பிறையினரின் வாதத்திற்கோ அல்லது பிறந்த பிறையை இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாட்டிற்கோ எவ்வகையிலும் ஒருபோதும் ஆதாரமாகாது என்பதை தெளிவாக விளங்கலாம்.'ஹாகதா அமரனா ரஸுல் (ஸல்)' அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு இதுவும் ஹதீஸ்தான் என்றும் இனி வாதிடவும் முடியாது என்பதையும் மக்களே நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

Read 3434 times Last modified on வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 15:20