செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:15

எது அரஃபா தினம்? ? ?

Rate this item
(1 Vote)
எது அரஃபா தினம்? ? ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே எது அரஃபா தினம் என்ற சர்ச்சை பல காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தில் சர்ச்சை இல்லாத விசயங்களே இருக்காதோ என்ற அளவிற்கு சர்ச்சைகள் எல்லா விசயத்திலும் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். நமக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை கொடுத்ததால் தான் இது போன்ற சர்ச்சைகள் இருந்த வண்ணமே உலகம் கியாம நாளை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நாம் நமது அறிவை கொண்டு சிந்தனை செய்து திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான  ஹதீஸ்களில் இருந்து ஞானத்தை பெற்று அதன் மூலம் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது தான் இஸ்லாம் நமக்கு தந்த விதி. ஒரு விசயத்தில் ஞானம் இல்லாமல், ஒரு நபரிடம் சென்று அதை பற்றி கேட்டு தெரிந்து அதை அப்படியே பின்பற்றினால் அது சரியா? தவறா? என்பதை ஒவ்வொருவரும் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

நமக்கு எதில் ஞானம் இல்லையோ அதை ஒருவரிடம் சென்று கேட்கும் போது அவர் கூறும் கருத்துகளை சிந்திக்காமல் அவருடைய வார்த்தையை மட்டும் வைத்தே அந்த விஷயம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்றும், இஸ்லாத்தில் ஆகுமானது என்றும் நம்பி அந்த விசயத்தை பின்பற்றினால், அந்த நபரை நாம் கடவுள் ஆக்கி இணைவைத்து விட்டோம் என்பதை நாம் அனைவரும் தெரிந்தே வைத்துள்ளோம்.

அது போல் பலர் ஹாஜிகள் அரபாவில் இருக்கும் போதுதான் நாம் நோன்புடன் இருக்க வேண்டும் என எந்த மூல ஆதாரங்களும் இல்லாமல் கூறிவருவதை பார்க்கிறோம். அதை சிந்திக்காமல் எத்தனையோ நபர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரஃபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.

ஹதீஸ்களில் நாம் ஆய்வு செய்யும் போது துல்ஹஜ் மாதத்தின் 8வது நாளுக்கு தர்வியா நாள் (யுவுமத் தர்வியா) என்றும், அதற்கு அடுத்தநாளான 9வது நாளுக்கு அரஃபா நாள் (யவும அரஃபா) என்றும், அதற்கு அடுத்த நாளான பெருநாள் தினத்திற்கு நஹ்ருடைய நாள் என்றும், (யவுமன் நஹர்) என்றும், அதற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்றும், குறிப்பிடப்படுகிறது.

இவை அனைத்திற்கும் ஒரு தேதியும் கிழமையும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். அதாவது ஒரு நாள் என்று கூறினாலே அதற்கு ஒரு தேதியும், கிழமையும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் என்பது இயற்கை விதியாகும். அதை நம்மில் அறிவில் குறைந்தவர்கள் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான்.

உலகில் முக்கியமான நிகழ்வாக ஹஜ் நடைபெற்று வருகிறது. அல்லாஹ் தன் குர்அனில் கூறுகின்றான்

وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள். Al Haj – 22:27

மேற்கண்ட வசனம் இப்ராஹிம் நபி காலத்திலேயே ஹஜ்ஜின் அறிவிப்பு கொடுக்கப்பட்டு ஹஜ் நடைமுறையில் இருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரஃபா நாளில் நோன்பு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பாகவே கடமையான நோன்பு என்பது தெளிவாகிறது. எனவே அரஃபா தினத்தில் ஹாஜிகள் தவறான நாளில் அரஃபாவில் இருந்தாலும் நாம் துல்ஹஜ் ஒன்பது எது என்பதை சரியாக அறிந்தே அன்று நோன்பு நோற்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

மேலும் இப்றாஹிம் நபி காலத்திலிருந்தே ஹஜ் கடமையாகிவிட்டது என்பதை உறுதிபடுத்தும் விதமாக கீழ்கண்ட செய்தி வருகிறது.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம்  வந்தார்கள். நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்என்று நபி(ஸல்) கூறினார்கள். திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

மேலும் குறிப்பிட்ட மாதங்களுக்குள் ஹஜ் உடைய காலம் உள்ளதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ளதை கீழ்கண்ட வசனம் உறுதிப்படுத்துகிறது.

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். Al Baqara 2:197

அல்லாஹ் உலகை படைக்கும் போதே புனித மாதமாக முடிவு செய்த நான்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் ஒரு மாதத்தில் ஹஜ் வரும் என்பதை இங்கு தெளிவுபடுத்துவதை நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும் அதன் பலன்களை அடைய வேண்டும் என்றால் குறிப்பிட்ட 6 நாட்களில் அதை சரியாக செய்யவேண்டும் என்பதை கீழ்கண்ட வசனம் குறிப்பிடுவதை நாம் அறியலாம்.

لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

குறிப்பிட்ட நாட்களில் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். Al-Hajj, 22:28

யவ்மத் தர்வியா(8), யவும அரஃபா(9), யவுமுன் நஹ்ர்(10), அய்யாமுத்தஷ்ரீக்(11,12,13) ஆகிய ஆறு நாட்கள்தான் ஹஜ்வுடைய நாட்களாகும் என்பதை மேற்சொன்ன வசனங்கள் தெளிவுபடுத்துகிறது. அந்த ஆறு நாட்களையும் ஹாஜிகள் அவர்கள் இஷ்டப்படி முடிவு செய்து சென்று தங்கி வந்துவிட்டால் அது ஹஜ்ஜாகாது. ஹஜ்ஜை அல்லாஹ் சந்திரனின் அஹில்லாக்கள் தான் முடிவு செய்யும் என கூறுவதை கீழ்கண்ட வசனம் நிருபிக்கிறது.

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; அவை மனித சமுதாயத்திற்கும், ஹஜ்ஜிற்கும் காலம் காட்டுபவையாக உள்ளன. வசிக்கும் இடங்களுக்குள் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியவான். எனவே வசிக்கும் இடங்களுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். Al baqara 2:189

மேற்கண்ட வசனம் பிறை தான் ஹஜ்ஜை அறிவிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது. பிறை என்பது ஒரு நாளுக்கு தேதியை அறிவிப்பதற்காக அல்லாஹ் அதற்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளதாக 10:5 அத்தியாயத்தில் அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான். எனவே அரஃபா நாள் என்றால் அது துல்ஹஜ் மாத்தின் 9வது நாள் என்பதை பிறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். பிறையின் மூலம் உறுதிப்படுத்தாத 9 வது நாள் அரஃபா நாளாக ஆகவே முடியாது என்பது மேற்கண்ட வசனங்களின் மூலம் தெளிவாகிறது. மேலும் கீழ்கண்ட வசனம் அந்த நாளில் இருந்து திரும்பும் போது எங்கு செல்லவேண்டும் என்பதை குறிக்கிறது.

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது மஷ்அருள் ஹராம் என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள் Al-Baqara, 2:198

மேற்கண்ட வசனம் துல்ஹஜ் 9 வது நாள் அரஃபாவிற்கு ஹாஜிகள் வராமல் மக்கள் இருந்து வந்ததை தெரிவிப்பதோடு அதை தவறு என சுட்டிகாட்டி வழிதவறி வாழ்ந்து வந்தீர்கள் என்பதை தெளிவு படுத்துகிறது. இதை கீழ்காணும் சம்பவங்களும் உறுதிப்படுத்துகிறது.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக்கொண்டு வந்த போது நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், இவர் (நபிகாளார்) குறைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம்-புனித எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் வணக்கங்களையும் செய்வதில்லை) என ஜுபைர் பின முத்இம் (ரழி) அவர்கள் கூறினார்கள். புகாரி 1664

இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள். அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.(பத்ஹுல் பாரீ 3:603,604)

இதை வலியுறுத்தி தான் நபி(ஸல்) அவர்கள் ஹஜ் என்பதே அரஃபாவிற்கு வந்து செல்வதுதான் என கூறினார்கள்.

ஹஜ் என்பதே அரஃபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் நாளில் பஜ்ருக்கு முன்பாக அரஃபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரழி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

அங்கு ஒருவர் தங்காமல் ஹஜ் செய்தால் கூடாது என்பதற்காகத்தான் அதை வலியுறுத்தினார்களே தவிர துல்ஹஜ் 9 அல்லாத மற்ற நாட்களில் சென்று அரஃபாவில் ஹாஜிகள் கூடலாம் என்பதற்காக இந்த வாசகத்தை கூறவில்லை என்பதை மேற்கண்ட சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். எனவே அரஃபாவில் ஹாஜிகள் கூடும் நாள் 9 ஆக இருந்தால் தான் நாம் அன்று நோற்க வேண்டும். இல்லையெனில் பிறை கணக்கில் எது துல்ஹஜ் 9 ஆம் தேதியே அதில் தான் ஹஜ்ஜிற்கு செல்லாதோர் நோன்பு இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிற்கு செல்லாமலேயே அரஃபா நோன்பு வைத்திருந்தார்கள் என்பதை கீழ்கண்ட சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

மேற்கண்ட ஆய்வின் மூலம் அரஃபா நாள் என்பது துல்ஹஜ் மாதத்தில் உள்ள ஒன்பதாவது நாள் தான் எனபது தெளிவாக நமக்கு புரியவரும்.

 

நபியவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாளில் நோன்பு வைத்தது அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் அரஃபாவில் இருப்பதை அறிந்து கொண்டு நோன்பு வைத்தார்கள் என்று யாராவது கூற முற்பட்டால் நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது இதுவரை சரியான நாளில் எதுவும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்தி அன்றைய தினம் நம்முடைய மாதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி அதற்கு முன் நடந்த அனைத்தும் சரியான நாளில் நடைபெறவில்லை என்பதையும் கூறினார்கள்.

அதற்கு ஆதாரம் பின்வருமாறு:

صحيح البخاري – (ج 17 / ص 243)5124 –    حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَامٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ عَنْ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ أَيُّ شَهْرٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَ ذَا الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَ الْبَلْدَةَ قُلْنَا بَلَى قَالَ فَأَيُّ يَوْمٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ فَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ أَلَا فَلَا تَرْجِعُوا بَعْدِي ضُلَّالًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ أَلَا لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَلَعَلَّ بَعْضَ مَنْ يَبْلُغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ وَكَانَ مُحَمَّدٌ إِذَا ذَكَرَهُ قَالَ صَدَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَلَا هَلْ بَلَّغْتُ أَلَا هَلْ بَلَّغْتُ مَرَّتَيْنِ

புஹாரி 4406. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆம்ராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள முளர்குலத்தாரின் ரஜப் மாதமாகும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘இது துல்ஹஜ் இல்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்என்றோம். (பிறகு,) ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்என்றோம். மேலும், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்என்றோம். (பிறகு,) ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்.

நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) இதை அறிவிக்கும்போது, ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்என்று கூறுவார்கள்.பிறகு, நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?’ என்று இரண்டு முறை கேட்டார்கள்.அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) கூறினார்.உங்கள் மானமும்என்பதையும் சேர்த்தே அபூ பக்ரா(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்.

ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் ஜாஹிலிய்யா காலத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் ஹஜ் துல்காயிதாவிலேயே நடைபெற்றதாக இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. எனவே எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்களோ அந்த நாளில் தான் நோன்பு வைக்கவேண்டும் என்பது உண்மையானால் கீழ்கண்ட சம்பத்தின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் துல்ஃகாயிதாவில் நோன்பு நோற்றதை ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது நோன்பு வைக்கவேண்டும் என்ற வாதத்தை வைப்பவர்கள் நிரூபிக்க வேண்டும்.

ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம் செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய (இதாப் மற்றும் அபூபக்ர் ரழி) ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது. (மஜ்முஃ பதாவா 25:14)

எனவே அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்.

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். Baqara 2:199

அல்லாஹ் அரஃபாவில் இருந்து முஸ்தலிபாவிற்கு வந்து அங்கிருந்து திரும்பி செல்லும்படி மேற்கண்ட வசனத்தில் கூறுவதிலிருந்து அவர்கள் ஹஜ்ஜில் செல்ல வேண்டிய முறைக்கு மாற்றமாக வேறு ஒரு முறையில் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை புரியமுடிகிறது. அதன்பின் அல்லாஹ் ஒரு முக்கிய விதியை கூறுகின்றான். தற்போது ஹஜ்ஜிற்கு செல்லும் அதிகமான மக்கள் அவர்கள் அரஃபா தான் ஹஜ் என நபி(ஸல்) அவர்கள் கூறியதால் நேரடியாக அரஃபாவிற்கு வந்து அங்கிருந்து திரும்பி சென்று விடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் பதிலளிக்கின்றான்.

மேலும் கீழ்கண்ட வசனம் நமக்கு இன்னும் தெளிவுபட விளக்கும் விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்பதாகும். அதிலும் நாட்களை அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறுகின்றான் என்பதை மறக்க வேண்டாம்.

அதாவது அரஃபாவில் தங்குவது மட்டும் கடமையல்ல. மினாவில் தங்குவதும் கடமை எனபதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஒருவர் துல்ஹஜ் 12 வரை தங்கிவிட்டு சென்றுவிட்டால் அவர்மீது குற்றமில்லை. அதற்கு குறைவாக தங்கினால் அவருக்கு குற்றம் ஏற்படும் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மேலும் குறைந்தது துல்ஹஜ் பத்தாவது நாளிற்கு பிறகு 2 நாட்கள் தங்க வேண்டும். ஒருவர் மூன்று நாள் தங்கினால் அவர் மீதும் குற்றமில்லை. அதிகமானோர் தற்போது துல்ஹஜ் 12இல் சென்றுவிடுவார்கள். குறைவான நபர்களே துல்ஹஜ் 13வரை மினாவில் தங்குகிறார்கள். அன்றையதினம் தங்குபவர்கள் தனியாக இருப்பது போலும், நாம் இருப்பது சரியா தவறா என்ற சிந்தனை ஏற்படும். அவர்களுக்கு தான் அல்லாஹ் 13 வது நாள் தங்குவது குற்றமில்லை என்ற பதிலை கூறுகின்றான்.

وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். சூரத்துல் பகரா 2:203

மேற்கண்ட வசனங்களில் இருந்து நாம் தெளிவாக புரிய முடிவது என்ன வென்றால், குறிப்பிடப்பட்ட மாதம், குறிப்பிடப்பட்ட நாள், குறிப்பிடப்பட்ட நேரம், குறிப்பிடப்பட்ட இடம் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் தான் நமக்கு ஹஜ் கடமை மற்றும் நமது அனைத்து வணக்க வழிபாடுகளும் நிறைவேறும் என்பதை புரிய முடியும்.

மேலும் அரஃபா தினம் சம்மந்தப்பட்ட பல ஹதீஸ்களை திரட்டி தந்துள்ளோம். அதையும் அறிந்து பயன்பெறவும்.

அரஃபா தின நோன்பின் சிறப்புகள்.

நோன்பு நோற்றவர்களுடைய கடந்த வருடத்துப் பாவங்களையும் இந்த வருடத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதாக பெருமானார்(ஸல்) அவரகள் அறிவிக்கின்றார்கள். அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அது கடந்தவருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்) இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

நோன்பு தடை செய்யப்பட்ட நாட்கள்

மேலும் துல்ஹஜ் 9 ஆம் நாள் நோன்பு பிடிக்கவேண்டும் என்பது ஹஜ்ஜிற்கு செல்லாதோர் கடமையாகும்.  ஏன் என்றால் ஹாஜிகளுக்கு நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா

அதே நேரத்தில் துல் ஹஜ் 10ஆம் நாள் பெருநாளுடைய நாளாகும். அன்றைய தினம்  ஹாஜிகள் அல்லாதோர் நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாடகளில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.

உலகில் இரு தேதிகள் இரு கிழமைகள் இருந்து கொண்டிருக்கும்.  துல்ஹஜ் 9 வது நாளை பிஜி பகுதி மக்கள் முதலில் அடைவார்கள்.  அவர்கள்  புதன்கிழமை  காலை 4:00 நோன்பை துவக்குவார்கள்.  அந்த சமயத்தில் மக்காவில் ஹாஜிகள் துல்ஹஜ் 8ஆம் நாள் மினாவில்  செவ்வாய் கிழமை இரவு 7:00 மணியில் இருப்பார்கள்.   அதே நேரத்தில் சமோவா பகுதி மக்கள் துல்ஹஜ் 8 ஆம் நாள் செவ்வாய்கிழமை  காலை 5:00 மணியில் பஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு  இருப்பார்கள்.

ஹாஜிகள் மினாவில் தூங்குவதற்கு முன்பாகவே  பிஜி பகுதி மக்கள் நோன்பை துவக்கிவிடுவார்கள்.  ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது நோன்புடன் இருக்க வேண்டும் என கூறும் சகோதரர்கள் சற்று சிந்தியுங்கள்.   துல்ஹஜ் 9 ஆம் தேதியாகிய அரஃபா தினத்தில் நோன்பாஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது நோன்பா?

அடுத்து  ஹாஜிகள் மினாவில் பஜ்ர் தொழுகையின் பாங்கு சத்தத்தை கேட்கும்  நேரமான காலை 05:15 மணியின் போத துல்ஹஜ் 9 வது நாளை துவங்குகிறார்கள்.  அதன் பின் அவர்கள் அங்கிருந்து அரஃபா நோக்கி கிளம்பும் போது  இன்னும் 2 மணி நேரமாவது ஆகிவிடும்.  அவர்கள் அரஃபா மைதானத்தை சென்றடையும் போது காலை  10 மணி  ஆகிவிடும்.   அந்த நேரத்தில்  ஏற்கனவே நோன்பை துவங்கிய  பிஜி மக்களோ புதன் மாலை   6:30 மணிக்கு நோன்பை திறந்து விட்டு  இரவு 7:00 மணியில் இருப்பார்கள்.  அதே நேரத்தில் சமோவா பகுதி மக்களோ துல்ஹஜ் மாதத்தின் 8 நாளான செவ்வாய்கிழமை இரவு 8:00 மணியை அடைந்திருப்பார்கள்.

உலகில் முதலில் அரஃபா நோன்பை துவக்கிய பிஜி மக்கள் நோன்பை திறந்த பின் தான் ஹாஜிகள் அரஃபாவில் சென்று  நுழைவார்கள்.    ஹாஜிகள்  அரபாவில் இருக்கும் போது நோன்பாக இருக்க வேண்டும் என கூறுபவர்கள் இதற்கு பதில் தருவார்களா?

மேலும் துல்ஹஜ் 9 வது நாள்  புதன்கிழமை ஹாஜிகள்  அரஃபா மைதானத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கிளம்பிவிடுவார்கள்.   மக்காவில் சூரிய மறைவு நேரம் மாலை  5:40 மணியாகும்.  இந்த நேரத்தில்  சவூதிக்கு பின்னால் சுமார்  14 மணி நேரத்திற்கு பின் நாளை ஆரம்பிக்கும்  சமோவா பகுதி மக்கள்  03:45 மணியில் இருப்பார்கள்.   அவர்கள் புதன்கிழமை துல்ஹஜ் 9 வது நாள் அரஃபா தின நோன்பை துவங்கும் நேரம்  04:30 மணியாகும்.    அவர்கள் நோன்பை  துவங்குவதற்கு இன்னும்  0:40 நிமிடங்கள் பாக்கியிருக்கம் போதே  மக்கள் அரஃபாவில் இருந்து கிளம்பிவிடுவார்கள்.

ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போது எப்படி இவர்களுக்கு நோன்பு கிடைக்கும் என்பதை ஹாஜிகள் அரபாவில் இருக்கம் போது நோன்புடன் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நிரூபிக்க வேண்டும்.

எனவே அரஃபா தினம் என்பது துல்ஹஜ் 9 வது நாள் என்றால் மட்டுமே உலகில் அனைவரும் அந்த நாளை அடைந்து  அந்த நாளில்  பிஜி முதலில் நோன்பை துவக்க அதன் பின்  9 மணிநேரம் கழித்து  மக்காவில் உள்ளவர்கள் பஜ்ரை அடைந்து  அதன்பின் அரஃபாவிற்கு சென்று  அதன் பின்  14 மணிநேரம் கழித்து சமோவா பகுதி மக்கள்  துல்ஹஜ் 9 ஆம் நாளின் நோன்பை அடைந்து உலகில் எல்லோரும் ஒரு நாளில் நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.

அடுத்து   சமோவா பகுதி மக்கள் துல்ஹஜ் 9 வது நாள் புதன்கிழமை நோன்பு நோற்கும்  போது, நோன்பு தடைசெய்யப்பட்ட பெருநாள் தினமான துல்ஹஜ் 10 நாளில் பிஜியில் வசிக்கும் மக்கள் பஜ்ர் தொழுகையை முடித்து பெருநாள் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள்.   இதே நிலையில் தான் நாளின் மாற்றம் உலகில் ஏற்பட்டு வருகிறது.     எனவே ஒரு நாள்மாறும் போது ஒரு தேதியும் மாறவேண்டும்.  உலகில் துல்ஹஜ் 10 பெருநாள் தினம் வியாழக்கிழமை என்றால், முழு உலகிற்கும் வியாழக்கிழமை தான் பெருநாள் தினமாக இருக்க வேண்டும் என்பது தான்  விதியாகும்.

இந்த அடிப்படையில் தான் நாம் தற்போது வெள்ளிக்கிழமை தொழுகையை உலகம் முழுவதும் தொழுது வருகிறோம்.  எனவே எந்த நாளை எடுத்துக்கொண்டாலும் அதில்  ஒரு கிழமை ஒரு தேதி தான் இருக்க முடியும் என்பது உண்மையான சத்தியமான விஷயமாகும்.  அதை மறுத்து  நாம் குற்றவாளியாகமல்  இருப்போம்.

துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்பு

அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாட்களும் இல்லை. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதை விடவா? என்று வினவ, ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி

நான் நபி(ஸல்) அவர்களை பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

மேலும் அல்லாஹ் அருள் மறையில் எச்சரிக்கின்றான் அதை நம் எப்போது நினைவில் வைத்து சத்தியத்தை ஆய்வு செய்வோம். இன்ஷாஅல்லாஹ் வெற்றிபெறலாம்.

 

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَن يَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ

மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். Al Baqara 2:213

فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.சூரத்துல் பகரா 2;:209

அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை சரியான மாதத்தில், நாளில், நேரத்தில், இடத்தில் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை பெறவேண்டும் என்றால் அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய மனித குல நாட்காட்டியை நடைமுறைபடுத்தினால் தான் நாம் வெற்றியடைய முடியும் என உங்களுக்கும் எனக்கு உபதேசம் செய்தவனாக எனனுடைய இந்த தொகுப்பை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்.

இப்படிக்கு

ஹிஜ்ரா கமி்ட்டி ஆப் இந்தியா

தமிழ்நாடு

Read 3731 times Last modified on செவ்வாய்க்கிழமை, 11 பிப்ரவரி 2014 15:25