செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22

Rate this item
(1 Vote)

بسم الله الرحمن الرحيم

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

 வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி : 22

 

இறுதியாக:

எம் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! மேற்படி வாகனக் கூட்டம் சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களையும் விருப்பு வெறுப்பின்றி ஆய்வுசெய்து சீர்தூக்கிப் பார்க்கும்போது கீழ்க்காணும் விஷயங்களை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

1. இந்த அறிவிப்புகள் தொடர்முறிந்த முர்ஸலான செய்திகளாகும். முர்ஸலான தரத்தில் வந்துள்ள இந்த வாகனக்கூட்டம் அறிவிப்புகள் இஸ்மு முப்ஹமாகவும் உள்ளது. எனவே இந்த முர்ஸலான அறிவிப்புகள் பலஹீனமான தரத்தையே சார்ந்தவை.

2. வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் அனைத்து ரிவாயத்துகளிலும் அறிவிக்கும் ஸஹாபியின் பெயர் மற்றும் அவரது நிலைபற்றிய விபரங்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

3. இந்த அறிவிப்பாளர் வரிசையில் விடுபட்டவர் யார்? அவரின் பெயர் என்ன? விடுபட்டவர் ஸஹாபியா? தாபிஈயா? அல்லது மற்றவரா? என்றும் அறியப்படவில்லை.

4. அனைத்து ரிவாயத்துகளையும் அபூஉமைர் என்பவர் மட்டுமே அறிவித்ததாக உள்ளது. இந்த அபூ உமைரிடமிருந்து அபூபிஷ்ர் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதும் இவர்கள் இருவருமே விமர்சனங்களுக்கு உள்ளானவர்கள் என்பதும் தெளிவாகிறது.

5. இந்த அறிவிப்பை அபூ பிஷ்ர் என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைம், ஷுஃபா, அபூ அவானா ஆகிய மூவரும் தங்களுக்குள்ளேயே முரண்படுகிறார்கள்.

6. எந்த அறிவிப்பாளர் வரிசை சரியானது என்பதிலும், யாருடைய உமூமத் வழியாக இந்த அறிவிப்பு ரிவாயத் செய்யப்படுகிறது என்பதிலும்கூட கருத்துவேறுபாடுகள் உள்ளன.

7. ஹதீஸ்கலை இமாம்களில் பலர் இத்தகைய முர்ஸலான இஸ்மு முப்ஹமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெளிவாகவே விளக்கம் அளித்துள்ளார்கள். மஜ்ஹுலான நபர்களின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள்.

8. ஹதீஸ்கலையில் தனக்கென்று தனி இடம் பிடித்த சட்டமாமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றில்கூட மேற்படி அறிவிப்பு தேறவில்லை.

9. நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அவர்கள் ஹராமான தினத்தில் நோன்பை நோற்றிருந்தார்கள் என இட்டுக்கட்டிய செய்தியை இந்த அறிவிப்பு சொல்கிறது.

10. வாகனக்கூட்டம் ஒன்று வந்து அதுவும் பெருநாள் பகலின் இறுதிப் பொழுதில் வந்து நபி(ஸல்) அவர்களுக்கே கற்பித்ததைப் போல இட்டுக்கட்டி, நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கம் கற்பிக்கிறது.

11. வாகனக்கூட்டத்தில் இருந்த எவருக்கும் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற சட்டம்கூட தெரியாதவர்களாகவும், பெருநாள் அன்று ஹராமான நோன்பை நோற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும் அந்த வாகனக்கூட்டத்தையும் வம்புக்கு இழுக்கிறது.

12. பிறைபார்த்த சாட்சியம் அளித்த அடிப்படையில் அன்று மதீனாவில் வாழ்ந்த முலிம்கள் அனைவருமே நோன்பை விட்டார்கள் என்றால், இவ்வளவு பரபரப்பு வாய்ந்த இச்செய்தியை மற்ற ஸஹாபாக்கள் அறியாமலும் அதை அறிவிக்காமலும் இருக்க முடியாது. ஸஹாபாக்கள் எவரும் அறியாத பரபரப்பான ஒரு செய்தி அபூ உமைர் என்பவர் மட்டும்தான் அறிந்திருந்தார் என்பது விந்தையிலும் விந்தை.

13. வாகனக்கூட்டம் பிறையை எங்கே எந்த வேளையில் பார்த்தார்கள்? எந்த வருடத்தில் இந்த சம்பவம் நடந்தேறியது? முதலிய கேள்விகளுக்கும் விடையில்லை.

எனவே இதுவரை பட்டியலிட்ட மேற்கண்ட முரண்பாடுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு இவை முரண்பாடுகள் (Contradiction) அல்ல மாறாக வேறுபடுத்திக் காட்டும் பண்புகள் (Contradistinction) என சம்பந்தப்பட்டவர்கள் சொல்லப் போகிறார்களா? அல்லது பார்த்தீர்களா ஸஹீஹான ஹதீஸை ஹிஜ்ரி கமிட்டியினர் நிராகரிக்கிறார்கள், அபூஉமைரை விமர்ச்சித்து விட்டார்கள் என மேடைக்கு மேடை முழங்கி வழக்கம்போல மக்களை திசை திருப்ப போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிறை அல்லாத மற்ற விஷயங்களை ஆய்வு செய்யும்போது ஹதீஸூகளில் இதே தாராளத் தன்மையை இவர்கள் கடைபிடிப்பது இல்லையே அது ஏன்? பிறை விஷயம் மட்டும் இவர்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா? அல்லது ஒரு தாபியின் கூற்றையோ, விமர்சிக்கப்பட்டவரின் அறிவிப்பையோ மார்க்க ஆதாரமாகக் கொள்ளலாம் எனக் கூறவருகின்றனரா? அல்லாஹூவுக்கே வெளிச்சம்.

இப்படி பலஹீனமான, முரண்டுபட்டு அறிவிக்கும் ராவிகளின் அறிவிப்புகள் குறித்து இவர்களின்; நிலைபாடுதான் என்ன? என்பதை விளக்குமாறு இட்டுக்கட்டப்பட்ட இந்த அறிவிப்பை ஸஹீஹ் என கூறுபவர்களிடம் மிக அன்போடு கேட்கிறோம்.

பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் ஏற்கனவே அனைத்து தரப்பாலும் பலஹீனமானது என ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும், பிறையை புறக்கண்ணால் பார்க்கும் போது ஓதவேண்டிய துஆ சம்மந்தப்பட்ட அனைத்து செய்திகளும் பலஹீனமாகிவிட்ட மோசமான சூழல் நிலவிவரும் நேரத்தில், வாகனக்கூட்டம் சம்மந்தப்பட்ட அறிவிப்பும் இனங்காணப்படாதவரால் தொடர்பு அறுந்த செய்தியாகவும், இட்டுக்கட்டி அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளது என்ற ரகசியம் தற்போது வெளிப்பட்டு அது நிரூபிக்கப்பட்ட உண்மையாகியும் ஆகிவிட்டது.

இந்த அறிவிப்பை ஆய்வு செய்த நம்மையும் இந்த ஆய்வு அதிர்ச்சியடையச் செய்தது. இன்றைய அறிவியல் யுகத்தில் கணிணியின் மூலம் அனைத்து அறிவிப்புகளையும், செய்திகளையும் தேடி எடுத்து, அனல் பறக்க விவாதங்கள் புரியும் அரபிப்புலமை(!) வாய்ந்தவவர்களால் கூட இந்த உண்மையை உலகிற்கு உணர்த்த முடியாமல் போனது ஏன்? அவர்கள் அறிந்து கொண்டேதான் இருட்டடிப்பு செய்தார்களா? அல்லது அவர்களின் அரபி மொழியறிவில் உள்ள குறைபாட்டினால் இது இவர்களுக்கு புரியாமல் ஆகிவிட்டதா? அல்லது இவர்கள் எதையும் ஆய்வு செய்யாமல் அறியாமையிலே உழன்று வருபவர்களா? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் தற்போது நமக்கு எழுகின்றன.

இவர்களின் அனைத்து ஆய்வுகளின் நிலையும் இது போன்றுதான் இருக்குமோ என்ற கோணத்தில் நாம் அனைத்து விஷயங்களிலும் மீளாய்வை துவக்கவேண்டி வருமோ? என்பன போன்ற கேள்விகளும் தற்போது நமக்கு எழுந்துள்ளன.

மேலும், இதுநாள்வரை அடிப்படையற்ற, தொடர்பு அறுந்த, இனங்காணப் படாத, இந்த இட்டுக்கட்டப்பட்ட பலஹீனமான செய்தியை அறியாமையினால் பின்பற்றி நடந்ததற்கும், இதை சரியானது என்ற கோணத்தில் பிறருக்கு பிரச்சாரம் செய்ததற்கும் தற்போது நாமும் வெட்கமும், வேதனையும் அடைகின்றோம். அல்லாஹ்விடம் இதற்காக நாம் பாதுகாப்பும் கோருகின்றோம்.

இன்னும் மேற்கண்ட வாகனக்கூட்ட அறிவிப்பைக் கொண்டு இதுநாள் வரை எடுத்த அனைத்து சட்ட திட்டங்களும் அடிப்படை ஆதாரமற்றது என்பதும் உறுதியாகிவிட்டதால், அதனடிப்படையில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட ஃபத்வாக்கள் செல்லாததாகிவிட்டது என்பதையும் நாம் விளங்க வேண்டும்.

பிறந்த பிறையைப் பார்த்த தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கற்பனை சட்டத்திற்கு இனி இந்த வாகனக்கூட்ட அறிவிப்பு ஆதாரமாகாது.

பிறை பார்த்த தகவல் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அந்த அடிப்படையில் செயல்படலாம் என்ற சட்டத்திற்கு இனி இந்த வாகனக்கூட்ட அறிவிப்பு ஆதாரமாகாது.

பெருநாள் தினத்தை விட்டுவிட்டு அடுத்த நாளிலும் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்ற இஸ்லாத்தை கலங்கப்படுத்தும் வியாக்கியானத்திற்கு இனிமேல் இந்த வாகனக்கூட்ட அறிவிப்பு ஆதாரமாகாது.

எங்கு பிறை பார்த்தீர்களோ அங்கு போய் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டி கூறிவந்த விளக்கத்திற்கும் இனிமேல் வாகனக்கூட்ட அறிவிப்பை யாரும் ஆதாரமாகக் காட்ட முடியாது.

மாதத்தை துவங்குவதற்கு சூரியன் உச்சியில் இருந்து சாயும் முன் பிறை பிறந்ததா அல்லது உச்சி சாய்ந்த பின் பிறந்ததா என்பன போன்ற அர்த்தமற்ற விளக்கங்களை வாகனக்கூட்ட அறிவிப்பிலிருந்து இனிமேல் யாரும் கூற முடியாது.

பிறை மேகமூட்டத்தினால் மறைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுதான் இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. எனவே இஸ்லாமிய மாதங்களைத் துல்லியமாக ஆரம்பிக்கவே முடியாது என்ற இழி சொல்லை இனிமேல் யாரும் இந்த வாகனக்கூட்ட அறிவிப்பைக் கொண்டு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முடியாது.

எனவே தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற எத்தகைய பிறை நிலைபாடுகளுக்கும் மேற்காணும் வாகனக் கூட்டம் அறிவிப்பு எக்காலமும் ஆதாரமாகாது என்பதை அல்லாஹ்வை முன்னிருத்தி இஹ்லாஸான முறையில் எங்களுடைய ஆய்வறிக்கையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.

தொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா??

பாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

பாகம் 21, பாகம் 22,

 

Read 3068 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 05:45