செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும் முன்னுரை

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 1


முன்னுரை:-

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

முஸ்லிம்கள் ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களை தீர்மானிப்பதற்கும், பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை என்ற தவறான சிந்தனை மக்கள் மனதில் மிகமிக ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்பிறை பிரச்சனையை மையமாக வைத்து நம் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழுக்களாக இன்று பிரிக்கப்பட்டும் விட்டது.

இவ்வாறு பிறந்த பிறையை முஸ்லிம்கள் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து, அதன் பின்னர்தான் நோன்பு, பெருநாள் போன்ற மார்க்கக் கடமைகளை செய்ய வேண்டும், இதுதான் நபிவழி என்பதும் நம்மில் பலரது நம்பிக்கை. இந்நம்பிக்கைக்குக் காரணம் பிறைகள் குறித்த நபிமொழிகளுக்குத் தவறான விளக்கங்களும், மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் பல ஆண்டுகளாக போதிக்கப்பட்டதுமாகும். அத்தகைய நபிமொழிகளை குர்ஆன் சுன்னா வழியில் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலைத் தெரிவிப்பதே பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தின் நோக்கம்.

இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட, முழுமையான, முறைபடுத்தப்பட்ட வாழ்க்கை நெறியே தீனுல் இஸ்லாம். நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் 'பித்அத்துகள்' எனும் நூதனச் செயல்கள் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தப்பட்டது உண்மையே. அத்தகைய நூதனச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் தவறான விளக்கங்களும் மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு, அவற்றையே மார்க்கம் என்றும் போதிக்கப்பட்டன. அதனால்தான் பிற்காலத்தில் தோன்றிய ஒவ்வொரு வழிதவறிய பிரிவினர்களும் தங்களின் கொள்கைகளுக்கு ஆதாரமாக சில குர்ஆன் ஆயத்துகளையும், ஹதீஸ்களின் பெயரால் புனையப்பபட்ட செய்திகளையுமே சுட்டிக் காட்டினர் என்பது வரலாறு.

தவறான மொழியாக்கத்துடன் விளக்கப்பட்ட அல்லது இட்டுக்கட்டப்பட்ட அத்தகைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டே மார்க்கத்தின் பெயரால் இடைச்செறுகள் செய்யப்பட்டன. அத்தகைய நூதனங்களையும், கருத்து வேறுபாடுகளையும் களைவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இதை சிந்தனைவாதிகள் எவரும் மறுக்க மாட்டார்கள். மேற்படி 'பித்அத்து'களைக் களைவதற்கு அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனும், ஸஹீஹான சுன்னாவும் மட்டும்தான் அடிப்படையும், உரைகல்லும் ஆகும்.

அதனால்தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (4:59) உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் என்று மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளான். இதை முதலில் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

இறைவனின் சாபத்தை பெற்று சிறுமையடைந்த ஷைத்தான், இறைவிசுவாசிகளான முஸ்லிம்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுக்க அனைத்து வழிகளிலும் முயல்வான். முஸ்லிம்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்றான ரமழான் நோன்பை, உரிய நாளில் ஆரம்பிக்க விடாது முஸ்லிம்களைத் தடுப்பான். புனித மாதங்களை உரிய நாளில் ஆரம்பிக்க விடாமலும், சரியான நாளில் ரமழான் நோன்பை முஸ்லிம்கள் முடிக்காமல் செய்வான். இன்னும் நோன்பு வைக்க ஹராமான நாட்களில் முஸ்லிம்களை நோன்பை பிடிக்க ஏவியும், பெருநாள் தினத்தில் ஈத் தொழுகையைத் தொழுது பெருநாளைக் கொண்டாடுவதைத் தவறச் செய்வான். மேலும் ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாட வைத்தும் ஆனந்தம் அடைவான். இதில் யாருக்கும் சந்தேகம் உண்டோ?. முஃமின்களை குழப்பிக் கூறு போடுவது கெட்ட ஷைத்தானின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். எனவேதான் இந்த பிறை விஷயம் என்று சொன்னவுடனேயே முகம் சுளிக்கும் அளவிற்கு பெரும் குழப்பம் என்ற ரீதியில் மக்கள் மத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது போலும்.

இன்னும் உலக முஸ்லிம்கள் பிறை விஷயத்தில் அவரவருக்கென்று புதிது புதிதான நிலைப்பாடுகளை உருவாக்கியும், உருவாக்கி கொண்டும் உள்ளனர். பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த பிறை ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னர், உலக முஸ்லிம்களில் பலர் இஸ்லாமிய மாதங்களை எவ்வாறு துவங்குகின்றனர் என்பதை அறிந்து கொள்வோம்.

1-வது கருத்து : ஒரு மாதத்தை ஆரம்பிப்பதற்குப் பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் காண வேண்டும். அல்லது சர்வதேச அளவில் எந்தப் பகுதியிலாவது முஸ்லிம்கள் பிறந்த பிறையைப் பார்த்த தகவல் கிடைக்கப் பெறவேண்டும். அவ்வாறு பிறையைக் கண்டாலோ, தகவலைப் பெற்றாலோ அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் ஆகும். இதை சர்வதேசப்பிறை நிலைப்பாடு (International Sighting) என்று கூறுகின்றனர்.

2-வது கருத்து : எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரைச் சேர்ந்தவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் மஃரிபில் பிறையைப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிறை பார்த்து விட்டால் அதை அடுத்தோ அல்லது அன்றைய மஃரிபிலிருந்தோ புதிய மாதத்தின் முதல் நாளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாடு தத்தமதுபகுதி (Local Sighting) பிறை நிலைப்பாடு என்று அறியத் தருகின்றனர். இந்த தத்தமதுபகுதி பிறை நிலைபாட்டின் படி ஒருசாரார் பிறை பார்க்கும் எல்கை ஒரு மாநிலம் அளவு (தமிழகம்) என்பதே சரியானது என்கின்றனர். பிரிதொரு சாரார் பிறை பார்க்கும் எல்கை ஒரு நாடு (இலங்கை) அளவிற்கு இருக்கலாம் என்கின்றனர்.

3-வது கருத்து : இன்னும் நாம் மக்காவை நோக்கியே தொழுகிறோம். ஹஜ்ஜை நிறைவேற்ற நாம் அங்குதான் செல்கிறோம். எனவே மக்காவைத்தான் நாம் பிறை பார்ப்பதற்கு அளவுகோளாகக் கொள்ள வேண்டும். எனவே சவூதி அரேபியா அரசாங்கம் என்றைய தினம் ரமழான் மாதத்தையும், ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம்தான் உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். இது சவூதி அரேபியாவின் (Following Saudi Arabia) பிறைத் தகவலை ஏற்று பின்பற்றி வருபவர்களின் நிலைப்பாடாகும்.

4-வது கருத்து : சூரியன் சந்திரன் பூமி நேர்க்கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (The Geocentric Conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாளாகும். இந்த நிலைப்பாட்டிற்கு 'இம்கானே ருஃயத்' என்று பெயர்.

இதை கடந்த ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் தங்கள் பிறை நிலைப்பாடுகளில் ஒன்றாகப் பின்பற்றினர். அதன் பின்னர் நண்பகல் 3.00 மணிக்குள் சங்கமம் நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாள் மாதத்தின் புதிய நாளாக கணக்கிட வேண்டும் என்ற புதிய நிலைப்பாட்டையும் பின்பற்றினர். இவை போன்ற நிலைப்பாடுகளை சவுதி அரசாங்கம் ஏற்றுப் பின்பற்றியதற்கான காரணம், மாதத்தைத் துவங்குவதற்கு பிறை புறக்கண்களால் பார்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையே ஆகும். பிறை பிறந்துவிட்டதா? அல்லது பிறையைப் பார்க்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்ற ரீதியில் தற்போது அவர்கள் சிந்திப்பதே புறக்கண் பார்வை நிலைப்பாட்டிலிருந்து சவுதி அரசாங்கம் சற்று விலகிக் கொண்டு வருவதைத்தான் காட்டுகிறது.

5-வது கருத்து : பிறையை 29-ஆம் நாள் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க முயல வேண்டும். அந்த நாளில் மேகமூட்டமாக இருந்து பிறையைப் பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யவேண்டும். அந்த முப்பதாவது நாளுக்குப் பின்னர் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் வாழும் நாட்டிற்கு கிழக்குத் திசையில் அமைந்திருக்கும் நாடுகளில் பிறை பார்த்த தகவல் கிடைத்தால் ஏற்கலாம். ஆனால் மேற்கு திசையிலிருக்கும் நாடுகளில் பிறை பார்த்த தகவல் வந்தால் ஏற்கக்கூடாது. இப்படி ஒருசாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

6-வது கருத்து : ஒரு ஊரில் பார்க்கப்பட்ட பிறை அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே பொருந்தும், மிகத் தொலைவிலுள்ள ஊர்களுக்கு அது பொருந்தாது. எனவே எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு இன்னொரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

7-வது கருத்து : ஒரு ஊரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அனைவரும் அடுத்த நாளைப் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என்று சிலர் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

8-வது கருத்து : இன்னும் சிலரோ சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாகச் சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு மக்கா (Makkah Date Line) தேதிக்கோடு என்று கூறிக்கொள்கின்றனர். இதே வழிமுறையைச் சிலர் அவரவர்கள் பகுதியிலும் தற்போது பின்பற்ற துவங்கிவிட்டனர்.

9-வது கருத்து : அவரவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர் கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (Geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்குப் பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையைப் பின்பற்றிவருகிறார்கள்.

10-வது கருத்து : ரமழான் மாத நோன்பை துவங்குவதற்கும், ஷவ்வால் மாதத்தைத் துவங்குவதற்கும் சர்வதேச பிறை நிலைப்பாட்டையும், ஹஜ் மாதத்தைத் துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவையும் ஏற்று சிலர் செயல்படுகின்றனர்.

இறுதியாக சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்து அறிந்து ஒவ்வொரு மாதங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் துல்லிய விஞ்ஞான கணக்கீட்டு முறையில் அமைந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பிரச்சாரம் செய்தும் பின்பற்றியும் வருகிறோம். ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆனின் வசனங்களையும், ஸஹூஹான ஹதீஸ்களையும் நேரடி ஆதாரங்களாக சமர்ப்பித்துள்ளோம்.

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10:5)

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (அல்குர்ஆன் 36:39)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் 55:5)

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம் உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு கொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். (அல்குர்ஆன் 17:12)

மேற்படி பல்வேறு நிலைப்பாடுகளில், எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம். ஹிஜ்ரி கமிட்டியினராகிய நமது நிலைப்பாட்டைத் தவிர்த்து மேற்கண்ட நிலைப்பாடுகள் அனைத்தும் பிறையை மேற்குத் திசையில் அது மறையும் வேளையில் புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டவையே.

இதில் பிறை பார்க்கப்படும் எல்கையை தத்தம்பகுதி என்ற நிலையிலிருந்து சற்று விரிவாக்கி தமிழக அளவு எல்கையை அமைத்து இதைத்தான் மார்க்கம் வலியுறுத்துகிறது என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு தமிழக அளவில் மட்டும் பார்க்கப்படும் பிறையைச் சரிகண்டுள்ள ஒரு இயக்கத்தின் பிறை நிலைப்பாடுகள் வித்தியாசமானதாகும். அவர்களின் பிறை நிலைப்பாடுகளை வார்த்தை மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அடைப்புக் குறியில் கீழே தந்துள்ளோம். படித்துப் பார்க்கவும்.

(நமக்குப் பிறை தெரியாமல் வேறு ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் நமக்குக் கிடைக்கிறது. எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும். அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடும் அளவுக்குக் குறைந்த நேரம் இரண்டு ஊர்களுக்கும் வித்தியாசம் இருந்தால் அத்தகவலை ஏற்றுக் கொண்டு, அதுவும் நமது பகுதியைச் சேர்ந்தது தான் என்று முடிவு செய்ய வேண்டும். அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமான நிமிடங்கள் அல்லது மணிகள் இரண்டு ஊர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்தத் தகவலை அலட்சியம் செய்து விட்டு, அதை முப்பதாம் நாளாக முடிவு செய்ய வேண்டும். மறுநாள் அடுத்த மாதம் பிறந்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும். எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்? என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை. அந்த அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது.

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும். ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.

சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை. குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது. நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமழானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர் வாசிகள் பிறை பார்க்காமலே அந்த இரவைக் கடந்ததால் அவர்கள் ரமழானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள்தான் அவர்கள் ரமழானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் இரு வேறு நாட்களில் ரமலானை அடைகிறார்கள்.

மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30-ஆம் இரவில் தான். அன்று பிறை தெரியவில்லை என்றால் முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என முடிவு செய்து அடுத்த நாளை தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் பிறை பிறந்திருக்கலாம்; ஏதோ காரணத்தால் அதைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். அவ்வாறு பார்க்காததால் மாதம் பிறந்தும் அதைத் தவற விட்டு விட்டோமே என்று யாரும் எண்ணக் கூடாது. பிறை பிறந்தது உண்மையாகவே இருந்தாலும் அது தெரியாவிட்டால் முதல் மாதத்திற்கு ஒரு நாளை அல்லாஹ் நீடித்து விடுகிறான். உண்மையில் அடுத்த மாதத்தின் தலைப்பிறை தோன்றியிருந்தால் கூட அல்லாஹ் நம் மீது கருணை கொண்டு, நம் சிரமத்தைக் குறைப்பதற்காகவும், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும் அம்மாதத்தின் ஒரு நாளை நீட்டித்து சலுகை அளித்து விடுகிறான்.)

மேற்படி கருத்தானது 'அறிஞர்' ஒருவர் எழுதி வெளியிட்டுள்ள 'பிறை ஓர் விளக்கம்' என்ற நூலிலிருந்து அவரது கருத்தை அப்படியே வெளியிட்டுளோம். மேற்படி 'அறிஞர்' அவர்களின் பிறை நிலைப்பாடும் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்கவேண்டும், அப்படி புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்டதே.

ஆகவே இத்தனை பிறை நிலைப்பாடுகளையும் நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்திட வேண்டும். குறிப்பாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களைத் தீர்மானிக்க பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? என்பதை முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும். அதைத் தெரிந்து கொண்டாலே மேற்கண்ட பிறை நிலைப்பாடுகளில் எது சத்தியம்? யாருடைய பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிவிடும் இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த உம்மத்திற்கு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று கட்டளை இடவில்லை. பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று நமது மார்க்கம் வலியுறுத்த வில்லை. இவற்றை தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இப்புத்தகம் முழுவதும் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,

                 நபியின் (ஸல்) வழியே நம்வழி,

                பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்,

                பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்,

                யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம். 

போன்ற தலைப்புகளில் மக்கள் மத்தியில் இன்னும் எடுத்துச் சொல்லப்படாத பிறைகள் குறித்த வரலாற்றுச் சுவடுகளும், குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளன. பிறைகள் குறித்து இஸ்லாம் கூறும் உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள இந்த ஆய்வுப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்தறிய வேண்டுகிறோம்.

தீனுல் இஸ்லாம் எனும் நமது மார்க்கம் மட்டும்தான் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்று நம்புகிறோம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த இறை மார்க்கம் என்றும் பிறரிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகிறோம். மார்க்கம் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்பதையும் நாம் அறிவோம். பிறைகள் குறித்து பல நூதனங்களையும், தவறுகளையும் மார்க்கத்தின் பெயரால் மக்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவேதான் 'பிறையும் புறக்கண்ணும்' என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தை விருப்பு வெறுப்பின்றி படியுங்கள் என்று மீண்டும் தங்களிடம் கோருகிறோம்.

இப்புத்தகத்தைத் தூய நோக்கோடு படிக்கும்போது, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது? என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்படலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது? என்ற தயக்கம்கூட ஏற்படலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம். உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சத்தியப்பாதையில் இருக்கும் ஒரு முஃமின் எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது என்று நமது மார்க்கம் நமக்குப் போதிக்கிறது. சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, சத்தியத்தை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும் என்ற சிந்தனையோடு வீழ்த்தப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியை நிலைபெறச் செய்ய எங்களோடு கைகோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.

உங்களின் வேலைப் பளுவிற்கு மத்தியில் சற்று நேரம் ஒதுக்கி தூய சிந்தனையுடனும், திறந்த மனதுடனும் இப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துச் சிந்திக்குமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு இறைவசனங்களை தங்கள் சிந்தனையில் நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டு 'பிறையும் புறக்கண்ணும்' என்ற ஆய்வுக்குள் உங்களையும் அழைக்கிறோம்.


 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read 3874 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:55