செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 3

3. பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன?

அஹில்லாஹ் (பிறைகள்), மவாகீத்துலின்னாஸ் (மனிதர்களின் நாட்காட்டி) போன்ற சொற்களின் விளக்கம் என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம்.'ஹிலால்' என்பதின் பன்மைச் சொல்லே 'அஹில்லாஹ்' என்பதாகும். சந்திரனில் ஏற்படும் வடிவ நிலைகளான வளர்ந்து, தேயும் படித்தரங்களே 'அஹில்லாஹ்' எனப்படும். பொதுவாக மாதத்தின் முதல் வாரத்தில் தோன்றும் வளர்பிறை நாட்களிலும், மாதத்தின் இறுதிவாரத்தில் தோன்றும் தேய்பிறை நாட்களிலுமாக குறைந்தபட்சம் மொத்தம் 12 ஹிலால்களை (பிறைகள் - Crescents) ஒவ்வொரு மாதமும் நாம் புறக்கண்களால் பார்க்க முடியும். 'ஹிலால்' (பிறை - Crescent) என்ற அளவு அல்லாத நிலவின் மற்ற வடிவிலான படித்தரங்கள் 'சந்திரன்' என்று பொருள்படும் 'கமர்' என்ற பொதுவான பதத்திற்குள் உள்ளடங்கிவிடும் என்று மொழி ஆய்வாளர்கள் விளக்கியுள்ளதைமுன்னர் கண்டோம். 

சில மாதங்களில் மேற்படி வளர்பிறை தேய்பிறை நாட்களின் 7-வது தினத்தில் பிறையானது அரை வட்டமாகவோ அல்லது அரை வட்டத்திற்குச் சற்று நெருக்கமாகவோ காட்சியளிக்கும். எனவே அதை (Crescent) பிறை என்ற பதத்திற்குள் சேர்க்க வியலாது. மாறாக அது (Half Moon) அரை நிலவாகும். எனவே அதை நிலவு என்றே அழைக்க வேண்டும் என்று வாதிக்கலாம். இவ்வாறு வாதிப்பவர்கள் ஹிலால்கள் என்றால் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் குறித்து கூறமுடியும்? என்ற அரபு மொழி அகராதிகள் விளக்கியுள்ள பிறையின் மற்ற படித்தரங்களையும் ஒவ்வொரு மாதமும் தவறாது பார்த்தறிந்து வர வேண்டும். பிறந்த பிறையை புறக்கண்களால்தான் பார்க்க வேண்டும் எனக் கூறும் அன்பர்களும், 'ஹிலால்' கமிட்டியினரும், டவுண் காஜிகளும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'தலைப்பிறை' என்ற பிறையின் ஒரு வடிவநிலையை மட்டும் புறக்கண்களால் பார்த்தால் போதுமானது என்ற கருத்து பிறைகள் விஷயத்தில் அலட்சியப் போக்கோடு இருப்பதையே காட்டும். சந்திரனின் படித்தரங்கள் மனிதகுலத்தின் நாட்காட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தும் அல்குர்ஆனின் வசனங்களை சிந்திக்க மறுப்பது பிறை ஆய்வில் பலவீனமான நிலையையும், இயலாமையை வெளிப்படுத்துவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் இந்நிலையிலிருந்து மாறி பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் கவனமாக பார்த்தறிந்து குறிப்பொடுத்து வர வேண்டுகிறோம். அவ்வாறு தொடர்ந்து கவனித்து வந்தால் பிறைகள் குறித்து குர்ஆன், சுன்னா வலியுறுத்தும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தை தாங்கள் நிதர்சனமாக உணர்ந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

அறிவியல் ரீதியாக சந்திரனின் ஒரு மாத சுழற்சியை 8 முக்கிய நிலைகளாக கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளார்கள்.

1. சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலை (New Moon – Geocentric Conjunction)

2. வளர்பிறைகளின் நிலை (Waxing crescents)

3. முதல் கால் பகுதி நிலை (First Quarter)

4. முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous)

5. முழு நிலவு நிலை (Full Moon)

6. தேய்பிறையை எதிர் நோக்கித் தேயும் நிலை (Waning Gibbous)

7. கடைசி கால் பகுதி நிலை (Last Quarter)

8. தேய் பிறைகளின் நிலை (Waning Cresents) 

இருப்பினும் 'அஹில்லாஹ்' என்ற பதத்திற்குள் ஒவ்வொரு நாளும் மாறுபட்டுத் தென்படும் சந்திரனின் அனைத்து படித்தரங்களையும் அருள்மறை குர்ஆன் உள்ளடக்கி பின் வருமாறு கூறுகிறது.

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ……. [البقرة : 189]

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு தேதிக்காகவும்(காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

திருமறை குர்ஆனின் மேற்படி வசனம் இந்த 'அஹில்லாஹ்' என்ற பிறைகளின் பல படித்தரங்களின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்குகிறது. 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற வாசகம் உள்ள, நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) மற்றும் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்கள் மேற்காணும் குர்ஆன் (2:189) வசனத்திலுள்ள வாசகங்களை தாங்கி, அவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்களின் தெளிவுரை போல அமைந்துள்ளதை அறியலாம். 

இதில் 'ஹி' என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்ற நமது கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோர் தெளிவான பதில் அளிப்பதில்லை. இந்நிலையில் 'ஹி' என்ற பதத்தை இவர்கள் ஒருமையாக மொழிபெயர்ப்பதற்குக் காரணம் கூறும்போது 'லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால்' என்ற அறிவிப்பில் 'ஹிலால்' என்ற ஒருமை சொல் வந்துள்ளது எனக் கூறுகின்றனர். எனவே 'ஹிலால்' என்ற பதம் வராத அனைத்து ஹதீஸ்களில் நாம் 'ஹிலால்' என்றே விளங்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த வாதம் தவறானதும் அடிப்படையற்றதுமாகும். மேற்படி வாதத்தை பலர் உண்மை என்று நம்பியுள்ளனர். 

ஆனால் மேற்கண்ட ஸூ மூ லி ருஃயத்திஹி என்ற அறிவிப்பில் வரும் ஹி என்ற எழுத்து 'அஹில்லாஹ்' என்ற பிறையின் பல படித்தரங்களைக் குறித்து சொல்லப்பட்ட பன்மைப் பெயரை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்துதான் தப்ஸீர் இப்னு கதீர், தப்ஸீர் தபரீ போன்ற ஆரம்பக்கால குர்ஆன் விரிவுரை கிதாபுகளிலும் உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் கூட மேற்படி அறிஞர்கள் 'பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்' என்று ''பிறை' என்ற ஒருமை அர்த்தத்திலேயே பிரச்சாரம் செய்கின்றனர். 

மஸ்ஜிதுகளில் பயன்படுத்தப்படும் தொழுகையின் கால அட்டவணையின் வாயிலாக 'வக்து' அல்லது 'அவ்காத்துஸ்ஸலாஹ்' போன்ற சொற்கள் தொழுகையின் நேரத்தைக் குறிக்கின்றன என்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். அதுபோன்று 'வக்து' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்த 'மீக்காத்' என்ற பதத்தின் பன்மைச் சொல்தான் தேதிகள் எனப் பொருள்படும் 'மவாகீத்து' என்;ற சொல்லாகும். 'மவாகீத்துலின்னாஸ்' என்பதற்கு 'மக்களுக்குத் தேதிகளைக் காட்டுவது' என்ற பொருளை மேற்கண்ட 2:189 வசனம் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் 'மவாக்கீத்' என்ற சொல்லை விளங்குவதற்காகவே அல்லாஹ் கீழ்க்காணும் வசனங்கள் மூலம் நமக்கு தெளிவு படுத்துகின்றான்.


وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً.........…الأعراف142  (
 

மூஸாவிற்கு நாம் முப்பது நாட்களை வாக்களித்தோம். மேலும் அவற்றுடன் பத்து நாட்களை இணைத்தோம். அப்பொழுது அவர் அவருடைய இரட்சகனின் தேதியை நாற்பது நாட்களாக முழுமையாக்கினார். அல்குர்ஆன் (7:142)

وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ………)الأعراف : 143(

இன்னும், நாம் நிர்ணயித்த தேதியில் மூஸா வந்தபோது, மேலும் அவருடைய இரட்சகனிடம் அவர் பேசினார். அல்குர்ஆன் (7:143)

لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ [الواقعة : 50]

அறிவிக்கப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூட்டப்படுவீர்கள். அல்குர்ஆன் (56:50)

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا  [النبأ : 17]

நிச்சயமாக தீர்ப்பு நாள், தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. அல்குர்ஆன் (78:17)

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُوم [الشعراء : 38]

அப்போது சூனியக்காரர்கள் குறிப்பிட்ட தேதியில், அறிவிக்கப்பட்ட நாளில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.அல்குர்ஆன் (26:38)

இன்னும் தேய்ந்து வளரும் பிறைகள் மனிதர்களுக்கு எவ்வாறு தேதிகளாக (காலண்டராக) அமையும் என்ற வினாவிற்கு விடை காண்பதும் அவசியமாகும். இதைத்தான் வல்ல அல்லாஹ்,

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ [يس : 39]

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையைப் போல் திரும்பி வரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39) என்று கூறுகிறான்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களை / வடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அவ்வாறு வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் இறைவசனம் (36:39) கூறும் 'உர்ஜூஃனில் கதீம்' - உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில், அந்த மாதத்தின் 28-ஆம் நாள் அன்று 'உர்ஜூஃனில் கதீம்' ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும்.

'உர்ஜூஃனில் கதீம்' என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்த நாள் புவிமையசங்கம (Geocentric Conjunction Day) தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு தளத்தில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) தவறாமல் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) தேய்பிறை அல்லது வளர்பிறையை பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய', 'குபிய' அல்லது 'கும்ம' வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

மேற்சொன்ன கும்மவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். இதுவே முதல் நாளுடைய சந்திரனின் படித்தரமாகும். முதல் நாளுக்குரிய அந்தப் பிறை, அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ் - மக்களுக்குத் தேதிகளை காட்டும் (Calendar For Mankind) என்ற ஒரு சொல்லை வைத்து இந்த உம்மத்திற்கு வலியுறுத்தியதாகும். மேற்கூறிய விபரங்களை நாம் குர்ஆனிலும், பழங்கால குர்ஆன் விரிவுரைகளில் காணலாம்.

وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) (الشمس : 1 – 4)

சூரியன் மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக! அதனை வெளியாக்கி விடும் பகலின் மீதும் சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின்மீதும் சத்தியமாக! அல்குர்ஆன் (91:1-4).

تفسير الطبري - (24 / 452)

حدثني يعقوب، قال: ثنا هشيم، قال: أخبرنا عبد الملك، عن قيس بن سعد، عن مجاهد، قوله:( وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) يعني: الشمس إذا تبعها القمر.

மேலும், சந்திரன் மீது சத்தியமாக! அதை அது பின்தொடரும் போது. இதற்குப் பொருள் என்னவென்றால், 'சூரியனை சந்திரன் பின்தொடரும் போது' என்ற விளக்கத்தை முஜாஹித் அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.

حدثنا بشر، قال: ثنا يزيد، قال: ثنا سعيد، عن قتادة( وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) يتلوها صبيحة الهلال فإذا سقطت الشمس رُؤي الهلال.

விடியக்காலைப் பொழுதில் சூரியனை சந்திரன் பின்தொடரும். சூரியன் அஸ்தமித்த பின் 'ஹிலால்' காட்சியளிக்கும். (மேலும், சந்திரன் மீது சத்தியமாக! அதை அது பின் தொடரும் போது) என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கத்தை கதாதா அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.

حدثني يونس، قال: أخبرنا ابن وهب، قال: قال ابن زيد، في قول الله:( وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلاهَا ) قال: هذا قسم، والقمر يتلو الشمس نصف الشهر الأوّل، و تتلوه النصف الآخر، فأما النصف الأوّل فهو يتلوها، وتكون أمامه وهو وراءها، فإذا كان النصف الآخر كان هو أمامها يقدمها، وتليه هي.

'வாவ்' சத்தியத்திற்குரிய வார்த்தையாகும். மேலும் சந்திரன் மாதத்தின் முதல் பாதியில் சூரியனைப் பின்தொடரும். இன்னும் மாதத்தின் கடைசி பாதியில் சந்திரனை சூரியன் பின்தொடரும். ஆயினும் மாதத்தின் முதல் பாதியில் சந்திரன் சூரியனைப் பின் தொடரும். மேலும் சூரியன் சந்திரனிற்கு முன்னிருக்கும், மேலும் சந்திரன் சூரியனிற்கு பின்னிருக்கும். மாதத்தின் கடைசி பாதி ஆகிவிட்டால், சந்திரன் சூரியனுக்கு முன்னால் இருக்கும். சந்திரன் அதை முந்திவிடும். மேலும் சந்திரனை சூரியன் பின்தொடரும் என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கத்தை இப்னு ஸைத் அவர்கள் தப்ஸீர் தபரியில் கூறுகின்றார்.

Conjunction என்னும் கும்மவுடைய தினத்தில் பொதுவாக பிறை பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு (Naked Eye) அது மறைக்கப்பட்டிருக்கும் என்ற இஸ்லாம் கூறும் விஞ்ஞான உண்மையை நாம் கூறி வருகிறோம். இதற்கு மாற்று கருத்துடையவர்கள் மாதத்தின் இறுதிநாளான மேற்படி (Conjunction) தினத்தில் பிறை காட்சியளிக்கின்றதா? என்று ஒவ்வொரு மாதமும் கவனிக்கின்றனர்.

அவ்வாறு தொடர்ந்து பார்த்து வந்ததில், அந்நாளில் பிறை தெரியவில்லை என்ற உண்மையை உணர்ந்துள்ளர். இவ்வாறு ஹிஜ்ரிகமிட்டி கூறும் குர்ஆன் சுன்னாவின் கூற்றை ஒவ்வொரு மாதமும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் - இது ஒரு சாரார். மற்றொரு சாராரோ, சிலஆண்டுகளில் ஒருசில மாதங்களில் மட்டும், அஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் புவிமைய சங்கம நாளில் (Geocentric Conjunction Day) ஃபஜ்ர் வேளையில் பிறை தெரிகின்ற வாய்ப்பு இருக்கிறது என்ற இன்டர்நெட் கற்பனை செய்திகளை நம்புகின்றனர். 

மேற்படி இருசாராரும் ஹிஜ்ரிகமிட்டியை பொய்ப்படுத்திட வேண்டும் என்ற தங்களது போக்கை கைவிட்டுவிட்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக திறந்த மனதுடன் நம் கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டுகிறோம். பிறைகள் குறித்து நமது இஸ்லாமிய மார்க்கம் சொல்வது என்ன? என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொள்ள முயலுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

எனவே மேற்கண்ட நபிமொழியில் ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ் என்பதற்கு அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனிதர்களுக்கு தேதிகளுக்காக (காலண்டராக) அமைத்துள்ளான் என்ற பேருண்மையை அறிய வேண்டுகிறோம். மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள காலண்டர் வானத்தில் சந்திரனாக தினம் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ் என்ற சொற்றொடரில் இத்தனை விஷயங்கள் பொதிந்துள்ளன என்பதை சுருக்கமாக விளங்கிக் கொள்ளுங்கள்.
 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Read 4071 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:47