செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

ருஃயத் (காட்சி) என்றால் என்ன?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 4

4.ருஃயத் (காட்சி) என்றால் என்ன?'ருஃயத்' என்ற அரபுச்சொல் அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை), அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை), அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை) என்ற பரந்து விரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும்.

'ருஃயத்' என்ற அரபுப்பதம் குர்ஆனில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. மேலும் பிறை சம்பந்தமான மேற்கண்ட ஹதீஸ்களில் 'ருஃயத்' என்ற இப்பதம் 'மஸ்தர்' என்னும் மூலச்சொல்லாகவே வந்துள்ளது. அரபு மொழி விற்பனர்களின் ஏகோபித்த கூற்றுப்படி 'மஸ்தர்' எனும் மூலச் சொற்கள் பெயர்ச் சொல்லாக கையாளப்பட வேண்டும் என்பதால் மேற்படி ஹதீஸில் வினைச் சொல்லாக அதை மொழி பெயர்க்க இயலாது. இந்நிலையில் மேற்படி 'ருஃயத்' என்ற அரபுப்பதத்தை புறக்கண்ணால் மட்டும் பார்ப்பது என்று மொழிபெயர்ப்பது மொழி ரீதியாக கூட பிழையானதாகும். புறக்கண்ணால் மட்டுமே பார்ப்பதற்கு அருள்மறை குர்ஆன் எத்தகைய சொல்லை பயன்படுத்தியுள்ளது? என்ற கேள்வி எழுவது இயற்கை. இதன் விடையை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள். 

'ருஃயத்' என்ற மேற்படி மூலச்சொல்லுக்கு நாம் 'காட்சி' என்று மொழி பெயர்த்துள்ளோம். இதன் அடிப்படையில் 'அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று நாம் இதுவரை விளக்கிவரும் ஹதீஸின் வாசகம் அமையும். 'ருஃயத்' என்ற மேற்படி மூலச்சொல்லுக்கு 'காட்சி' என்ற பொருள்தான் பொருத்தமானது என்பதற்கு கீழ்க்காணும் ஸஹீஹான நபிமொழியை ஆதாரமாக அமைகிறது.
 

حدثني محمد بن عبد العزيز حدثنا أبو عمر حفص بن ميسرة عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري رضي الله عنه : أن أناسا في زمن النبي صلى الله عليه و سلم قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة ؟ قال النبي صلى الله عليه و سلم  ( نعم هل تضارون في رؤية الشمس بالظهيرة ضوء ليس فيها سحاب ) . قالوا لا قال ( وهل تضارون في رؤية  القمر ليلة البدر ضوء ليس فيها سحاب ) . قالوا لا قال النبي صلى الله عليه و سلم ( ما تضارون في رؤية الله عز و جل يوم القيامة إلا كما تضارون فيرؤية أحدهما ……..( صحيح البخاري - (4 / 1671 4305 )

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், சில மனிதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் மறுமை நாளன்று நமது இரட்சகனை நாம் பார்க்க முடியுமா எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்' நண்பகல் நேரத்தில் மேகம் மறைக்காத போது சூரியனுடைய 'காட்சியில்' சிரமம் இருக்குமா? என்று கேட்டனர் அதற்கு மக்கள் இல்லை என்றனர். மேலும் பௌர்ணமி நாளில் முழு நிலவை மேகம் மறைக்காத போது சந்திரனுடைய காட்சியில் சிரமம் இருக்குமா? என்று கேட்டனர் அதற்கும் மக்கள் இல்லை என்றனர். (இவ்வுலகில்) உங்களுக்கு அவைகளில் ஏதேனும் ஒன்றின் 'காட்சியில்' சிரமம் ஏற்படுவது போல் மறுமையில் அல்லாஹ்வின் 'காட்சியில்' எந்த தடங்கலும் ஏற்படாது...
(அறிவித்தவர் : அபூஸைதுல்குத்ரி (ரழி). நூல் : புகாரி).

'ருஃயத்' என்ற மூலச்சொல்லுக்கு 'காட்சி' என்று பிரபலமான மேற்படி ஹதீஸை வைத்து நாம் மொழி பெயர்த்துள்ளோம். மேற்கண்ட நபிமொழியில் 'மேகம்' என்பதற்கு 'ஸஹாப்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கும்ம என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. காரணம் கும்ம என்ற சொல் மேகத்தை ஒருபோதும் குறிக்காது. நபி (ஸல்) அவர்கள் காலத்தின் அரபுமொழி வழக்கப்படி 'மேகம்' என்பதற்கு 'ஸஹாப்' மற்றும் 'கமாம்' என்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பல ஹதீஸ்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், இன்று சர்வசாதாரணமாக மொழி பெயர்க்கப்படுவதைப் போல 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். மேலும், 'ருஃயத்' என்ற மூலச்சொல்லில் இருந்து பிறந்த 'ரஆ', 'தரா' போன்ற சொற்கள் திருமறை குர்ஆனில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில வசனங்களுக்குத்தான் புறக்கண்களால் பார்த்தல் என்ற அர்த்தத்தை குறிப்பதாக அமைந்துள்ளன. அதில் பெரும்பாலான வசனங்கள் தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்து கொள்வதையே குறிக்கின்றன. (பார்க்க 105:1, 37:102, 2:243,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 14:9,24,28, 19:83, 22:18, 63,65, 24:41,43, 25:45, 26:225). எனவே 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல்லை 'புறக்கண்ணால் பார்ப்பது' என்ற குறுகிய வட்டத்திற்குள் கட்டுப்படுத்திடக் கூடாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

'ருஃயத்' என்ற அரபுச்சொல் 

• அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை),

• அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை),

• அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை)என்ற பரந்துவிரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் என்று நாம் கூறிவருகிறோம். அதேபோல் 'நளர்' என்ற சொல்லும் கவனித்து, சிந்தித்து, ஆய்வுசெய்து, அறிந்து என்பது போன்ற பொருள்களை தரும் என்பதையும் 2:280, 6:46, 37:88, 43:66, 47:20, 59:18, 86:5 ஆகிய அல்குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அல்குர்ஆனின் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வசனங்கள் மூலம் நமது கருத்தே சரியானது என்பது இன்னும் வலுப்பெறுகின்றது. 

மேலும், பார்வை என்றாலே சிந்தனையுடன், அறிவுடன் பார்ப்பது என்பதே உண்மையான அர்த்தமாகும். நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தை பார்த்துக்கொள் என்று கூறினாலேயே அதில் அறிவார்ந்து பார்ப்பதைத்தான் அது குறிக்கும். பாதையில் முள் கிடக்கிறது பார்த்து வாருங்கள் என ஒருவரிடம் கூறினால், அவர் அதை பார்த்து கொண்டே அதன் மேல் தனது கால்களால் மிதித்து வந்தால், அவரை நாம் புத்தி பேதலித்தவர் என்றுதான் கூறுவோம். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களின் பார்வைதான் சிந்திக்காத வெறும் பார்வையாக மட்டும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்கள் என்கிறோம். மாப்பிள்ளை பாருங்கள் என்றால் வெறுமனே மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வருவதல்ல. மாறாக அந்த இளைஞனின் மார்க்க அறிவு என்ன? அவருடைய ஒழுக்க நிலைகள் என்ன? அவர் என்ன படித்திருக்கிறார்? என்ன வேலை செய்கிறார்? போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அறிவதாகும். அதுபோலத்தான் பிறையைப் பார்ப்பது என்பது அதன் கோணவிகிதம், அது காட்டும் தேதி, அது அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றை நாம் ஆய்ந்து அறிந்து சிந்தனையுடன் பார்ப்பதே ஆகும். 

ஒரு வாதத்திற்காக மாற்றுக் கருத்துடையோர் சொல்வதுபோல 'ருஃயத்' என்பதற்கு பார்த்தல் என்று பொருள் கொண்டல்கூட, சிந்தனையோடு கூடிய பார்வையைத்தான் இஸ்லாம் இந்த பிறை விஷயத்தில் கூறுகின்றது. 'ருஃயத்' என்றால் புறக்கண்ணால் மட்டும் பார்த்தல் என்ற பொருள் மிகவும் பிழையானது. இதை அறிந்து கொள்ள குர்ஆனில் உள்ள 'ருஃயத்' என்ற மூல சொல்லில் இருந்து பிறந்த ''ரஆ', 'தரா', 'யரா', 'யரவ்' உட்பட அனைத்து பதங்களும் கையாளப்பட்டுள்ளதை வைத்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

'ருஃயத்' என்றால் வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்காது. இதற்கு மேலும் சிறந்த உதாரணமாக,யானைப்படைக் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) என்று கஃபாவை அழிக்க வந்த அப்ரஹா என்பவனின் வரலாற்றை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகிறான். அதுபோல ஆது கூட்டத்தைப் பற்றி கூறும்போது, உம்முடைய இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்றும் கேட்கிறான். 

'அலம்தர' என்று துவங்கும் இவ்விரு வசனங்களிலும் வல்ல இறைவன் 'தரா' என்ற சொல்லை பயன்படுத்துகிறான். இச்சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி வல்ல அல்லாஹ் தனது தூதருக்கு தகவல் அளிக்கிறான் என்றே நாம் பொருள் கொள்கிறோம். இதைவிடுத்து நீர் பார்க்கவில்லையா? என்ற மொழிபெயர்ப்பை வைத்து நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பல ஆண்டு காலங்கள் முன்னரே ஏற்பட்ட அச்சம்பவங்களை தங்கள் புறக்கண்களால் நபி (ஸல்) பார்த்தார்கள் என்று பொருள் கொள்வது தவறாகும். அப்படி பொருள் கொள்வது அறிவுடைமையாகாது என்பதை நாம் நன்கு விளங்கியுள்ளோம். 

மேலும் திருமறை குர்ஆனின் சூரத்துல் ஹஜ் அத்தியாயத்தின் 27-வது வசனத்தில் ''ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் வெகு தொலைவிலிருந்து நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்'' என்று மெலிந்த ஒட்டகத்தைக் குறிப்பிட்டே அல்லாஹ் விவரிக்கின்றான். இன்றைய சூழ்நிலையில் ஹஜ்ஜிற்;கு எவரும் ஒட்டகத்தில் செல்வதில்லை. விதவிதமான வாகனங்களில் செல்கின்றனர். 'மெலிந்த ஒட்டகம்' என்ற சொல் ஒட்டகம் அல்லாத வேறு பொருளைத் தராது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கண்ட வசனத்தை வைத்துக்கொண்டு மெலிந்த ஒட்டகத்தில் சென்று ஹஜ்ஜூ செய்தால்தான் ஹஜ் நிறைவேறும் என்று சொன்னால் எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் பிறைவிஷயத்தில், ருஃயத் என்ற சொல்லை தவறாக விளங்கி அதையே பிடித்துக்கொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வதும் மிகவும் தவறானதாகும். 

காரணம் 'ருஃயத்' என்ற சொல்லிலிருந்து பிறந்ததுதான் 'ரஆ' என்ற அரபுச் சொல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமறை குர்ஆனில் வல்ல இறைவன் 'ரஆ' என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறான். இச்சொல்லுக்கு கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்களிலேயே நாம் விளங்குகிறோம். புறக்கண்ணால் பார்த்தல் என்ற ஒரு பொருளில் மட்டும் நாம் புரிந்து கொள்வதில்லை. 

இதற்கு உதாரணமாக நபி இபுராஹிம் (அலை) அவர்கள், தமது மகனான நபி இஸ்மாயில் (அலை) அவர்களோடு உரையாடிய நிகழ்வை திருமறை குர்ஆன் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார். '''என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!'' (மகன்) கூறினார்;, ''என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்'' (அல்குர்ஆன் 37:102).

மேற்படி வசனத்தில் இடம்பெறும் இன்னீ அராஃபில் மனாமி – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தையும், ஃபன்ளுர் மாதா தராஉன் கருத்து என்ன என்ற வார்த்தையையும் கவனிக்க வேண்டும். இந்த இறைவசனத்தில் 'ருஃயத்' என்ற மூலச்சொல்லிலிருந்து பிறந்த 'தரா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் 'தரா' என்ற சொல் புறக்கண்ணால் பார்த்தல் என்ற கருத்தில் வரவில்லை. மாறாக, 'கனவு', 'கருத்தை அறிவது' போன்ற பொருளில் வந்துள்ளதை காண்கிறோம்.

இன்னும் பத்ருகளம் பற்றிய நிகழ்வை திருமறை குர்ஆன் (3:13) விவரிக்கும்போது 'ரஃயல்அய்ன்' என்ற சொல்லை புறக்கண்ணால் பார்த்தல் என்பதற்கு வல்ல அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர். இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான். நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. அல்குர்ஆன் (3:13)

மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'ரஃயல்அய்ன்' அதாவது 'புறக்கண்ணால் பார்த்தல்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை. இந்த பேருண்மையையும் இங்கு சுட்டிக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு விஷயத்தை புறக்கண்ணால் மட்டுமே பார்ப்பதற்கு அருள்மறை குர்ஆன் எத்தகைய சொல்லை பயன்படுத்தியுள்ளது? என்று சற்று முன்னர் உங்களுக்கு எழுந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கும்.

எனவே ருஃயத் என்ற அரபு மூலச் சொல்லை தவறாகப் புரிந்து கொண்டு

• பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்றோ

• புறக்கண்ணால்தான் பிறையைப் பார்க்க வேண்டும் என்றோ

• பிறை பார்க்கப்பட்ட பின்னர்தான் புதிய மாதத்தை துவங்க வேண்டும் என்றோ பிரச்சாரம் மிகவும் தவறானதாகும். 

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்ணால் பார்த்தே முடிவு செய்தார்கள். அப்படியானால் அன்று அவர்கள் செய்ததைப் போலவே இன்றும் நாமும் நமது தொழுகை நேரங்களை முடிவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இருப்பினும் நம்மில் எவரும் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவைப் புறக்கண்களால் பார்த்து தொழுகை நேரங்களை முடிவு செய்வதில்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சூரியனை மையமாக வைத்து பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்ட கடிகார நேரங்களைப் பார்த்தும், முற்கூட்டியே கணக்கிடப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையையே நாம் நடைமுறை படுத்துகிறோம். இவ்வாறு தொழுகை நேர அட்டவணையைப் பின்பற்றுவது நபிவழிக்கு முரண்பாடாகும் என்று யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. இன்னும் நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக தொழுகையின் வக்துகளை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்த்துதான் தொழுகை நேரத்தைக் கணக்கிட்டார்கள். எனவே தொழுகை நேரங்களை அறிந்துகொள்வதற்கு சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்ப்பது கட்டாய விதியாகும் என்று நம்மில் எவரும் விவாதிப்பதில்லை. 

காரணம் எவ்வித விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில் தொழுகை நேரங்களை ஒரு குச்சியை நிலத்தில் நட்டி, அதன் நிழல்விழும் அளவை வைத்து முடிவு செய்யும் ஒரே வழிதான் அன்று இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலம் சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்த்து தொழுகை நேரங்களை முடிவுசெய்யும் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலம் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அதனால் தொழுகையின் வக்திற்காக சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்களால்; பார்ப்பது மார்க்கக் கடமையில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் நாட்களை (தேதியை) முடிவுசெய்வதற்கு மட்டும் பிறையை புறக்கண்களால் பார்த்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்படி அறிஞர்களிடம் பிறை கணக்கை எதிர்க்கும் நீங்கள், சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து கணக்கிடுடப்பட்டுள்ள தொழுகை கால அட்டவணையை மட்டும் ஏன் ஆட்சேபனை செய்யாமல் பின்பற்றி வருகீறீர்கள்? என்று நாம் கேட்கிறோம். நமது கேள்விக்கு கீழ்க்கண்டவாறு அவர்கள் விடையளிக்கின்றனர். அதாவது ''சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் மேகமூட்டமான நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதை கருதிக்கொள்ளுங்கள் என சூரியன் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் பிறைக்குதான் இந்த நிபந்தனையை கூறினார்கள். மேகமூட்டமாக இருந்தால் 30-ஆக பூர்த்தி செய்யுங்கள் என்ற அளவுகோல் பிறைக்குத்தான் உள்ளது'' என்கின்றனர். 

சூரியன் விஷயத்தில் இவர்களின் கருத்தை ஒரு வாதத்திற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும்;, துல்லியமான சூரிய கணக்கீட்டையும், தொழுகை அட்டவணையையும் தொழுகை நேரத்திற்கு ஒப்புக்கொண்டது, நபி(ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதலான சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து நேரத்தை கணக்கிடவேண்டும் என்பதற்கு எதிரானது அல்லவா? மேற்படி மாற்றுக் கருத்துடையோர் கருத்துப்படி தொழுகை அட்டவணையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்ற வில்லையே. பிறை விஷயத்தில் கூட மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற கருத்தும் நபி(ஸல்) அவர்களின் எந்த வழிகாட்டுதலிலும் இல்லை என்பதே உண்மை.

இன்னும் நோன்பு துறக்கும் நேரத்தைக் (வக்த்) குறித்து கூறும்போது நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக்காட்டி 'இங்கிருந்து இரவு வருவதைக் கவனித்தால்' (ஃபஇதா ரஅய்துமுல் லைல) நீங்கள் நோன்பைத் துறந்து விடுங்கள் (புகாரி) என்று கூறியுள்ளார்கள். மேற்படி ஹதீஸ் வாசத்தில் இடம்பெறும் 'ரஅய்த்தும்' என்ற சொல்லுக்கு 'கண்ணால் காணுதல்' என்று பொருள் கொள்வதில்லை. மேலும் மஃரிபு வேளையில் கிழக்குத் திசை நோக்கி நின்று கொண்டு இரவு வருகிறதா என்று பார்ப்பதுமில்லை. மாறாக கடிகாரத்தை வைத்து முற்கூட்டியே கணக்கிட்டும், நேரத்தைத் துல்லியமாக அறிந்தும் நோன்பை துறந்து (இஃப்தார்) விடுகிறோம். அப்படியானால் நோன்பு துறக்கும் விஷயத்தில் ஏன் இந்த இரட்டை நிலை?

அதுபோல ' ஸல்லூ கமாரஅய்த்துமூனி உஸல்ல ' - صلوا كما رأيتموني أصلي– என்னுடைய தொழுகையை நீங்கள் எவ்வாறு கவனித்தீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. இதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். இதை மொழி பெயர்ப்பாளர்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள் என்று பெரும்பாலும் மொழி பெயர்த்துள்ளனர். இதில் என்னுடைய தொழுகையை நீங்கள் எவ்வாறு கவனித்தீர்களோ அல்லது என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ போன்ற மொழிபெயர்ப்பின் வாக்கியத்தில் கண்டீர்களோ அல்லது கவனித்தீர்களோ என்ற சொல் இடம்பெறுகிறது. இந்த சொல்லை வைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை புறக்கண்களால் பார்த்தவர்கள் மட்டும் தொழுதால் போதுமானதாகும் என்று யாரேனும் வாதம் வைத்தால் அது சரியாகுமா?. இன்னும் நபி (ஸல்) அவர்கள் தொழுவதைப் பார்த்து தொழுதுவிட்ட ஸஹாபாக்கள் சொன்னதைக் கேட்டு முஸ்லிம்களாகிய நாம் இன்றும் தொழுது வருவது எப்படி சரியாகும்? என்று இவர்கள் பாணியில் யாரேனும் கேள்வி எழுப்பினால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும்.

இன்னும் லி ருஃயத்திஹி என்பதில் ' லி ' என்பதற்கு பரந்த பொருள் இருந்தாலும் இவ்விடத்தில் 'அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு' என்ற பொருள் இந்த ஹதீஸில் கையாளப்பட்டுள்ளது. அதாவது தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து அளவிடுவதைப் போல நாட்களை அளவிட சந்திரனின் 'அஹில்லாஹ்' (படித்தரங்கள்)தான் கையாளப்பட வேண்டும் என்பதாகும். 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கண்களால் பார்த்து முடிவு செய்ததை சற்று முன்னர் படித்தோம். அதுபோல, மாதம் பிறந்ததை அறிந்து கொள்ள அன்றிருந்த ஒரேவழி பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பதுதான். பிறைகளின் நிலைகளை அறிந்தும், தேதிகளை அமைத்துக் கொண்டு பின்பற்றும் ஒரு நிலை மட்டும்தான் அக்காலத்தில் இருந்தது. அவ்வாறு தேதியை அறிந்து கொண்டு மாதங்களைத் துவங்குவது எல்லா மாதத்திற்கும் உரிய ஒரு செயலாகவே அன்று இருந்து வந்தது. தற்போது மாற்றுக்கருத்தினர் கூறுவதைப் போல பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்து மாதத்தை ஆரம்பிப்பது என்பது ரமழான் மாதத்தின் அசலான (பர்ளு) கடமைகளுள் உட்பட்டதல்ல. தமிழக டவுண்காஜிகளும், ஹிலால் கமிட்டி உலமாக்களும் இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பில் இருக்கின்றனர்.

இதை மறுத்து பிறந்த பிறையைப் புறக்கண்களால் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்து ரமழான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் மார்க்க கடமை என்று இன்னும் அவர்கள் கூறினால் அதற்கான தெளிவான ஆதாரங்களைத் தரவேண்டும். தங்களின் சுயகருத்தை வைத்து விளங்கங்கள் அளிக்காமல் நேரடியான குர்ஆன் வசனங்களிலிருந்தும், ஸஹீஹான ஹதீஸிலிருந்தும் ஆதாரங்களை நமக்கு அவர்கள் காட்ட வேண்டும். பிறைகள் விஷயத்தில் ஹிஜ்ரி கமிட்டியின் நிலைப்பாட்டை தவறெனக் கருதும் மாற்றுக் கருத்தினர் அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இதையே தலைப்பாக வைத்து தங்களுடைய இணையதளங்களிலே எழுத்துப்பூர்வமாக மக்கள் அறியும் வண்ணம் தங்கள் ஆதாரங்களை பதிவு செய்யட்டும்.

ரமழான் துவக்கத்தையும், இரு பெருநாள் தினங்களையும் தீர்மானிக்க பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது, நமது மார்க்கம் கட்டளையிட்டுள்ள முக்கியக் கடமை என்று மாற்றுக் கருத்தினர் நம்பியுள்ளனர். அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது கடமை என்றால், 

• நபி (ஸல்) அவர்களும் பிறந்த பிறையை தமது கண்களால் அவசியமாகப் பார்த்திருப்பார்கள். 

• தமது மனைவிமார்களுக்கும், தோழர்களுக்கும் பிறந்த பிறையைப் புறக்கண்களால் மேற்கு திசையில் மஃரிபு நேரத்தில் சென்று பார்க்கும்படி கட்டளை இட்டிருப்பார்கள். 

• பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று நிச்சயமாக கட்டளை இட்டிருப்பார்கள். 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவற்றில் எதையுமே செய்யவில்லை. மாறாக அவர்கள் சந்திரனில் ஏற்படும் அனைத்து படித்தரங்களின் காட்சியையும் அவதானித்து மாதத்தை முடிவு செய்து வந்தார்கள். நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306), ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்கள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

மேலும் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த நாட்களில்? எந்தெந்த நேரங்களில்? எந்தத் திசையில்? இன்று இவர்கள் கூறுவது போல் பிறையைத் தேடினார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 29-வது நாளின் பின்னேரம் 30-வது நாளின் இரவு என்ற அந்தநாளில், மஃரிபு நேரத்தில், மேற்குத் திசையில் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்கு சிறு விபரங்கள் கூட ஹதீஸ்களில் காணப்படவில்லை. இதையும் உங்கள் கவனத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம். 

ஆக 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்று பிறை தொடர்பாக வரும் இந்த சொற்றொடரில் 'ருஃயத்' என்ற அரபு மூலச்சொல்லுக்கு மாற்றுக் கருத்தினரின் வாதப்படி 'புறக்கண்ணால் பார்த்தல்' என்று ஒரு பொருளை மட்டும் கொள்ளவே முடியாது. மாறாக அஹில்லாக்களின் (பிறையின் படித்தரங்களின்) காட்சிகளை கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்களையே இந்நபிமொழி தெளிவாக உணர்த்துகின்றது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். 

• குர்ஆனும் சுன்னாவும் நவீன அறிவியலோடு எவ்வாறெல்லாம் ஒத்துப்போகின்றன?

• பிறைகளின் படித்தரங்கள் மனிதர்களுக்கு எவ்வாறு நாட்காட்டியாக அமையும்? 

•பூமியில் ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் பகுதிகளில் எவ்வாறு தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும்? 

இவை போன்ற ஆய்வுகளை அரபு மொழி மதரஸாவில் பயிலும் மாணவர்களுக்குப் படித்துக் கொடுப்பதில்லை. மேற்படி கல்வி முறையிலிருந்து உருவாகும் மாணவர்களால் விண்ணியல் குறித்து குர்ஆன் சுன்னா கூறுவதென்ன? என்பதை அவர்களால் புரிந்து கொள்ளவும் இயலவில்லை. இதனால்தான் இப்பிறை பிரச்சனைக்கு இந்த நூற்றாண்டுவரை எத்தகைய தீர்வுகளைகளையும் உலமாக்களால் தர முடியவில்லை. இது ஒரு வேதனையான விஷயமாகும். எனவே பிறைகள் குறித்து குர்ஆன், சுன்னா அடிப்படையில் நவீன அறிவியலோடு ஆய்வு செய்து கூறப்படும் விஷயங்களை குறிப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து இறுதிவரை படித்தறிந்து, மேற்படி உலமாக்களுக்கும் விளக்கிட வேண்டுகிறோம். 
 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read 3688 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:42