செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமா?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 5

5. மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமா?

ஃபஇன்கும்ம அலைக்கும் (உங்களுக்கு மறைக்கப்படும்போது) என்பதின் பொருள் என்ன? என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம். நபிமொழிகளில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வாக்கியத்திலுள்ள கும்ம என்ற சொல்லுக்கு 'மேகமூட்டம்' என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். அரபு மொழி அறிஞர்கள் எனப்படுவோர் பிறை குறித்து பேசும்போது சற்று எச்சரிக்கையோடும், நிதானத்தோடும் நடந்து கொள்ள வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு மார்க்க அறிவில் அபிவிருத்தி செய்வானாக, பிறைகள் விஷயத்தில் தெளிவை அளிப்பானாக என்று அவர்களுக்காக பிராத்திக்கிறோம்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிவாரத்தில் ஏற்படும் தேய்பிறைகள் அனைத்தும், புறக்கண்களுக்கு ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும். பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் இதை அறிந்திருப்பர். நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையும் இதுவே. இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குத் திசையில் தெரியும் என்று மேற்படி அறிஞர்களுக்கு சொன்னது யார்? எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்? இக்கேள்விகளுக்கு மாற்றுக் கருத்துடைய அரபுமொழி புலமை பேசும் அவ்அறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.

இன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத் தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களோடு நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பது நாட்களாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் அவர்கள் பதில்சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப்பார்ப்போம் என்று பதில் சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இன்னும் மேகமூட்டம் மட்டும்தான் ஒருவர் பிறை பார்ப்பதை மறைக்குமா? 

• கடும் சூறைக்காற்றால் ஏற்படும் மாசுகள்,

• புளுதிப் புயல் போன்றவற்றால் ஏற்படும் தூசிதுகள்கள், 

• புகை மூட்டம், 

• பனிப்பொழிவுகள், 

• அதிகமான வெளிச்சம், 

• பார்வைக் கோளாறு 

போன்ற காரணங்களாலும் பிறை நம் புறக்கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படும் வாய்ப்புள்ளதே அப்போது என்ன செய்வது? அவர்கள் கருத்துப்படி 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு மேகமூட்டமாக இருந்தால் மட்டும்தானே மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யமுடியும்?. நபி (ஸல்) அவர்கள் மேகத்தை குறித்து இங்கு குறிப்பிடவில்லை என்பது தான் உண்மையான விளக்கமாகும். 

இல்லை இல்லை 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தை தூசி, புகைமூட்டம், வெளிச்சம், பார்வை கோளாறு, பனிப்பொழிவு என்பன போன்ற அனைத்து காரணங்களுக்கும் பொருந்தும் என்று இவர்கள் தற்போது ஒப்புக்கொள்ளத் தயாரா? அப்படி ஒப்புக் கொள்வதாக இருந்தால், 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு 'மேகமூட்டம்' என்று நாங்கள் தவறான விளக்கம் அளித்துவிட்டோம் மக்களிடம் அறிவிக்க தயாரா? 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வார்த்தை மேற்சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் என்றும் மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லட்டும். தாங்களாகவே முன்வந்து பகிரங்கமாக இதை ஒப்புக்கொள்ளுமாறு மேற்படி அறிஞர்களை வேண்டுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தின் அரபுமொழி வழக்கப்படி மேகம் என்பதற்கு 'ஸஹாப்' மற்றும் 'கமாம்' என்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை முன்னர் தெரிவித்தோம். இந்நிலையில் மாதம் 29 நாட்களை கொண்டதாக இருந்தால் 29-வது நாளில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோல மாதம் 30 நாட்களை கொண்டதாக இருந்தால் அந்த 30-வது நாளில் நாளில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு சந்திர மாதத்தின் இறுதி நாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படுகின்றதே அதற்கு அரபு மொழியில் எப்படி சொல்ல வேண்டும்? அந்த நாள் எதைக் குறிக்கிறது? அந்த நாள் சந்திர மாதத்தின் இறுதிநாளா இல்லையா? இவற்றை இந்த அரபு மொழி புலமை பேசும் அவ்வறிஞர்கள் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் 55:5)

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன (அல்குர்ஆன் 35:13)

மேற்கண்ட இரு வசனங்களையும் சற்று நிதானமாக சிந்தியுங்கள். திட்டமிட்ட துல்லியமான கணக்கின்படி இயங்கும் சூரியனும், சந்திரனும் தனது அதிகாரத்தில் இருப்பதாக வல்ல அல்லாஹ் கூறுகிறான். மேற்படி சந்திரன் மக்களுக்குத் தேதியைக் காட்டும் என்றும் (2:189) வல்ல அல்லாஹ் கூறுகிறான். இன்னும் இன்னென்ன மாதத்திற்கு இத்தனை இத்தனை நாட்களே என்று அல்லாஹ் தனது பதிவுப் புத்தகத்தில் என்றோ விதியாக்கி விட்டான் (அல்குர்ஆன் 9:36) வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ் இதை விதியாக்கிவிட்ட நிலையில், மேகமூட்டத்தைக் காரணம் காட்டிக் கொண்டு 29-நாட்கள் கொண்ட மாதத்தை 30-நாட்களாக மாற்ற முடியுமா? இன்னும் மாநிலப்பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப்பிறை என்று அவரவரவர்கனள் தத்தமது விருப்பப்படி ஒரு மாதத்திற்குரிய தேதிகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்வது சரிதானா? 

இன்னும் 29-வது நாளில் மேகமூட்டமாக இருந்தால் அந்த மாதத்தை 30 நாட்களாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தை சரிகாணும் அறிஞர்(!) ஒருவர் பிறை ஓர் விளக்கம் என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டு தான் அறிவார்ந்த ரீதியில் வாதிப்பதாக நினைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். அதாவது

(மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை. மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படாவிட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம். மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.)

இவ்வாறு 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு மேகமூட்டமாக இருந்தால் என்று தவறாக பிரச்சாரம் செய்பவர்களை நாம் பரிகசிக்க வில்லை மாறாக அவர்கள் மீது பரிதாபப்படுகிறோம். காரணம் நம் சமுதாயம் நன்கு படிப்பு ஏறும் மாணவர்களை இவ்வுலக செல்வங்களை திரட்டும் நோக்கில் இவ்வுலகக் கல்வியை மட்டும் படிக்க வைத்து மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக்கி அழகு பார்க்கிறது. அதேவேளையில் படிப்பில் ஆர்வமில்லாத சராசரி மாணவர்களைத்தான் அவர்கள் பெற்றோர்கள் அரபு மொழியை பயிற்றுவிக்கும் (இலவச) மதரஸாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் அவர்கள் அரபு மொழியைக்கூட அங்கு சரியாக படிக்காத நிலையில் வெளிவந்தாலும், மக்கள் இவர்களை இஸ்லாமிய மார்க்கக் கல்வியை பரிபூரணமாக படித்து வந்துவிட்டனர் என நம்புகின்றனர். மேலும் அவர்களை சமுதாயத்தில் 'ஆலிம்கள்' என்றும் அறிமுகப்படுத்தி அவர்கள் மார்க்கம் என்று எதைக் கூறினாலும் கண்மூடி ஏற்றும் செயல்படுகின்றனர். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது. இங்கு நாம் அனைத்து உலமாக்களையும் குறிப்பிடவில்லை. ஆலிம்களில் பெரும்பான்மையினர் நிலை இவ்வாறுதான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

மேகமூட்டமாக இருந்தால் சில்வர் அயோடைடு (Silver Iodide) போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்தி அம்மேகக் கூட்டத்திலிருந்து செயற்கை மழையைப் பொழியச் செய்யும் அறிவியல் யுகத்தில் நாம் வாழ்கிறோம். அம்மேகங்களை கலைத்துவிடும் இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள் பற்றிய பாடங்களையும் அரபு மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய விஞ்ஞான உண்மைகள் பற்றியும் அறிந்திருந்தால் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு 'மேகமூட்டம்' என்று நம் மதரஸாக்கள் உருவாக்கிய ஆலிம்கள் தவறாக மொழிபெயர்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் அவர்கள் மீது நாம் கோபம் அடையவில்லை மாறாக அனுதாபப் படுகிறோம்.

காரணம் இந்த சுயநல உலகில், மார்க்கத்திற்காக நம் பிள்ளைகள் உழைக்க வேண்டும் என்ற நன்னோக்கில் முன்வந்த பெற்றோர்களின் பிள்ளைகளே அவர்கள். இதை நினைத்து நாம் அவர்கள் மீது உயர்ந்த எண்ணமே கொள்கிறோம். எனவே அவர்கள் தங்கள் பெற்றோர்களை கண்ணியப்படுத்தும் நோக்கிலாவது தாங்கள் படித்த கல்வியைக் கொண்டு, ஆர்வத்துடனும், இப்பிறை விஷயத்தில் பிரதான கவனம் எடுத்தும், சத்தியத்தை சரியான முறையில் மக்களுக்கு விளக்குவார்கள் என்று நம்புகிறோம். இப்பிறை விஷயத்தில் ஆர்வம் கொண்ட ஆலிம்களின் முயற்சிகள் எதுவும் வீண்போகாத வண்ணம் அவர்களுக்கு உதவிட இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி கமிட்டி என்றும் தயாராகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு விஷயத்தை ஆய்வு செய்து மக்களிடம் ஒரு கருத்தை சொல்வதாக இருப்பின் ஆய்வாளருக்கு அத்துறை சார்ந்த முழுமையான அறிவு முதலில் வேண்டும். அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவோடு கூடிய ஆய்வுகள்தான் சரியான ஆய்வாகவும், பலன்தரக் கூடியதாகவும் அமையும். இதற்கு சிறந்த உதாரணமாக சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தை இங்கு நினைவு கூறுவது மிகப் பொறுத்தமாக இருக்கும்.

டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore) அவர்கள் கருவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவரும், உலகப் பிரசித்திபெற்ற கருவியல் அறிஞரும் ஆவார். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறுயியல் மற்றும் கருவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது மாணவர்களில் சிலர் கருவியல் பற்றியும், மனிதனின் படைப்பு பற்றியும் அல்குர்ஆனின் வசனங்களை ஆய்வுக்காக அவரிடம் அளித்தனர். அவை பற்றிய தெளிவை தெரிவிக்குமாறும் வேண்டினர். அவ்வசனங்களில் கீழ்க்காணும் வசனமும் ஒன்றாகும்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 96:1-2 

He has created man from a clot. (96:2 Tafsir Ibn Kathir Translation)

Created man, out of a (mere) clot of congealed blood (96:2 Yousuf Ali Translation) 

மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'அலக்' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே ரத்தக்கட்டி (Clot / Clot of Congealed Blood) என்று பல குர்ஆன் விரிவுரையாளர்கள் மொழி பெயர்த்திருந்தனர். ஆனால் மனிதப் படைப்பு பற்றி குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்களை தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட டாக்டர் கீத்மூர் அவர்கள் 'அலக', 'நுத்ஃபா' போன்ற சொற்கள் மிக ஆழமான பொருளைத் தருவன என்றும் அது 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த' (clings, a leech-like substance) கருவின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் மிக ஆழமான சொல் என்று குறிப்பிட்டார். இச்சொற்றொடரை மிக ரத்தின சுறுக்கமாக திருமறைக் குர்ஆன் சொல்லியிருப்பது கண்டு வியப்புற்றார். மனிதன் படைக்கப்பட்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கும் அல்குர்ஆனின் வசனங்கள் (96:1-2, 86:5-7, 22:5, 23:12-13, 16:4, 18:37, 35:11, 36:77, 40:67, 53:46, 75:37, 76:2, 80:19, 32:8, 86:5-7) 21-ஆம் நூற்றாண்டின் நவீன கருவியல் கோட்பாட்டை நிரூபிக்கின்றது என்றும், அவ்வசனங்கள் எவ்வித முரண்பாடுகளுமின்றி மிகத்துல்லியமாக உள்ளன என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தினார்.

இதில் நாம் குறிப்பிடுவது என்னவெனில், 'அலக' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே 'ரத்தக்கட்டி' என்று முற்கால அரபுமொழி அறிஞர்கள் மொழிபெயர்த்தனர். அன்றைய காலத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஒப்ப 'அலக' என்றால் 'ரத்தக்கட்டி' என்று அன்றைய அறிஞர்கள் மேலோட்டமாகப் புரிந்தனர். கருவியல்துறையில் முழுமையான, ஆழமான ஞானமில்லாத காலத்தில் அவ்வாறுதான் மொழிபெயர்க்க முடியும்.

டாக்டர் கீத்மூர் அவர்களும், அவரது தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவும் கருவியல் சம்பந்தமான பல்வேறு குர்ஆன் வசனங்களையும் கற்று, அரபுமொழியில் அமைந்த அச்சொற்றொடர்களின் கருத்தை கவனமாக ஆய்வு செய்து, கருவின் வளர்ச்சியை படம் பிடித்தும் காட்டினர். பின்னர் அலக என்பதற்கு 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த ஒரு பொருள்' என்பதுதான் முழுமையான பொருள் என்பதைப் புரிந்து கொண்டு தற்போதைய மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின் மொழிபெயர்ப்புகளைத் திருத்திக் கொண்டனர்.

Created man from a clinging substance. (96:2 Sahih International Translation)

இது போன்ற ஒரு நிலையில்தான் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்றால் 'உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால்' என தவறான மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்தால்தான் அதன் உண்மையாக பொருளை விளங்க முடியும். 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு 'உங்களுக்கு மறைக்கப்படும்போது' என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்த சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக ஒவ்வொரு மாதத்தில் இறுதிநாளிலும் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும். 

சந்திரனில் அதன் படித்தரங்களின் காட்சி எவ்வாறு ஏற்படுகின்றன என்பதின் அறிவியல் நிலைகளை மனிதர்கள் விளங்கிக் கொள்ளாத நேரத்தில் சந்திரன் எப்படி வானத்தில் மறைக்கப்படும் என ஒரு மனிதன் சிந்தித்தால் அவனுக்கு மேகம்தான் சந்திரனை மறைக்க முடியும் என அவன் நினைப்பான். இது எப்போதாவது அரிதாக மழைக் காலங்களில் நடக்கும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். நம் பகுதியில் மழையாக இருந்தால், மழை பொழியாத பிற பகுதிகளில் மேகங்கள் சூழாமல் வானம் தெளிவாக இருக்கலாம். அங்கு மேகம் பிறையை மறைக்கும் என்ற நிலை இருக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சில சமயம் நாம் சந்திரனை பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது கண்முன்னே வானில் தவழும் மேகங்கள் நகர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனை தற்காலிகமாக மறைத்துவிடும். அச்சமயம் நண்பர் ஒருவர் என்ன பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என நம்மிடம் கேட்டால் நாம் சந்திரனின் காட்சியை ரசித்து கொண்டிருந்தேன் தற்போது மேகம் மறைத்து விட்டது என்றே கூறுவோம். அப்போது அவர் சந்திரனின் காட்சியை நான் பார்க்கவில்லையே அதனால் சந்திரன் இருக்க வாய்ப்பே இல்லை என்று வாதித்தால் அவரைப்பற்றி நாம் என்ன கூறுவோம்? அதைப்போல்தான் 'கும்ம' என்ற சொல்லுக்கு 'மேகம் மறைப்பது' என்று வாதிப்பதின் நிலையாகும். 

பூமியை தனது நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சந்திரன் துல்லியமாக சுற்றிவருகிறது. ஒரு மாதத்திற்கு 29 நாட்களாக இருந்தால் 28 நாட்களும், மாதம் 30 நாட்களாக இருக்கும் போது 29 நாட்களும் மக்களுக்கு காட்சி தருகிறது. சந்திர மாதத்தின் இறுதிநாளான அந்த ஒரு நாள் மட்டும் சந்திரனின் காட்சியை பொதுவாக நாம் காண முடியாமல் போகிறது. ஏனெனில் மாதத்தின் இறுதிநாளான அன்று, சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் சமதளத்திலோ அல்லது ஒரே நேர்கோட்டிலோ வருவதால் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படுகிறது. இவ்வாறு சந்திரனின் ஒளி பூமிக்கு மறைக்கப்படும் அந்த நிலை ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு சந்திரன் மறைக்கப்படும் இந்த நிலையைத்தான் நபி(ஸல்) அவர்கள் 'கும்ம' என்று நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதை முதலில் நாம் கற்றறிய வேண்டும். நமது மார்க்கத்தில் கல்வி கற்பது முக்கியக் கடமைகளில் ஒன்றாக உள்ளதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

'கும்ம' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை நாம் வழங்க இயலும் என்றாலும் தவறான அர்த்தமான மேகமூட்டம் என்று மொழிபெயர்த்து, நாட்களை மாற்றி மாதங்களை தவறாக ஆரம்பிப்பது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்கிறோம். இதே 'கும்ம' என்ற சொல் திருமறை குர்ஆனின் (10:71) ஐயம்சந்தேகம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளதையும் நினைவூட்டுகிறோம். 'கும்ம' என்பதற்கு மேகமூட்டம் என்றுதான் அர்த்தம் செய்யவேண்டும் என்று சொல்வோர் அல்-குர்ஆனின் 10:71 வசனத்திற்கும் இதே மேகமூட்டம் என்ற மொழிபெயர்ப்பை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது.


 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read 3379 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:29