செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

நபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான் சொன்னார்களா?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 6


6.நபி (ஸல்) அவர்கள் 'கும்ம' என்று மட்டும்தான் சொன்னார்களா?

'கும்ம' என்ற இந்த ஒரு பதம் மட்டும்தான் ஹதீஸ்களில் வருகிறதா என்றால் அதுவுமில்லை. மறைக்கப்படும் பொழுது நீங்கள் கணக்கிடுங்கள் போன்ற வாசகங்களைத் தாங்கி பல ஹதீஸ்கள் உள்ளதே அவை எல்லாம் நம் மக்கள் மன்றத்தில் இன்னும் பிரச்சாரமாக வைக்கப்படாமல் இருப்பதின் ரகசியம் நமக்கு இன்னும் புரியவில்லை. 

இதோ அந்த ஹதீஸ்களின் பட்டியலிலிருந்து ஒருசிலவற்றை இங்கு தருகிறோம். ருஃயத் என்பதற்கு புறக்கண்ணால் பார்த்தல் என்பது பொருள் ஆகாது மாறாக அது பரந்து விரிந்த பொருள்தரும் ஒரு சொல்என்பதை நாம் முன்னரே விளக்கி விட்டோம். இருப்பினும் 'ருஃயத்', 'ரஆ' போன்ற சொல்லுக்கு 'புறக்கண்ணால் பார்த்தல்', 'புறக்கண்ணால் காணுதல்' போன்ற பதங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக பின்வரும் நபிமொழிகளின் இறுதியில் குறிப்புகள் தந்துள்ளோம். 

மாற்றுக் கருத்துள்ளவர்கள் சரிகாணும் கீழ்க்காணும் ரிவாயத்துகளின் மொழி பெயர்ப்புகளில்கூட ஃபக்திருலஹூ என்பதற்கு நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மொழிபெயர்த்தவர்களால் மறுக்க இயலவில்லை என்பதையும் நீங்களே காணுங்கள். அதுபோல 'கும்ம' என்ற பதத்தைப் போல 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய', 'குபிய' போன்ற பதங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளதையும் காணுங்கள். இதோ அந்த ரிவாயத்துகள்...

صحيح البخاري  - كتاب الصومباب قول النبي صلى الله عليه وسلم - حديث

حدثنا عبد الله بن مسلمة ، حدثنا مالك ، عن نافع ، عن عبد الله بن عمر رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال : لاَ تَصُومُوا حَتَّى تَرَوْا الهلال وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْفَاقْدِرُوا لَهُ " *.

1. ரமழான் மாதத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறும் போது அவர்கள் சொன்னார்கள்: பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும். நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;. அதுஉங்கள் மீது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : புகாரி :1906.

குறிப்பு : இங்கு கவனிக்காதவரை என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்க்காதவரை என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.
 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ« الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِى الثَّالِثَةِ - فَصُومُوا لِرُؤْيَتِهِ  وَأَفْطِرُوالِرُؤْيَتِهِفَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْفَاقْدِرُوا لَهُ ثَلاَثِينَ ». صحيح مسلم - (3 / 122).  2551


2. ரமழான் மாதத்தை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறினார்கள் அப்போது அவர்கள் தன் இரு கைகளை கொண்டு சைகை செய்தார்கள். மாதம் இவ்வாறு இவ்வாறு மேலும் இவ்வாறு இருக்கும் பிறகு மூன்றாவது முறையில் கையின் பெருவிரலை மட்டும் மடக்கி காட்டினார்கள் எனவே நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டுநோன்பு வையுங்கள்; மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள்.உங்கள் மீது அது மங்கும் போது அதை நீங்கள் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் :2551.

குறிப்பு : இங்கு காட்சியை அடிப்படையாகக் கொண்டு என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்த்து என்று மொழிபெயர்ப்பது தவறாகும். 

صحيح مسلم  - كتاب الصيامباب وجوب صوم رمضان لرؤية الهلال  - حديث : ‏1865‏

وحدثنا يحيى بن يحيى ، ويحيى بن أيوب ، وقتيبة بن سعيد ، وابن حجر - قال يحيى بن يحيى : أخبرنا وقال الآخرون : حدثنا إسماعيل وهو ابن جعفر ، عن عبد الله بن دينار ، أنه سمع ابن عمر رضي الله عنهما ، قال : قال رسول الله : " « الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ».

3. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதே! அதை (மாதத்தை) நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை (மாதத்தை) கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள், உங்கள் மீது அது மறைக்கப்பட்டு இருந்தாலே தவிர. எனவே உங்கள் மீது அது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் (1865)
 

صحيح ابن خزيمة  - كتاب الصيامجماع أبواب الأهلة ووقت ابتداء صوم شهر رمضان -  باب الأمر بالتقدير للشهر إذا غم على الناس حديث : ‏1790‏.

حدثنا علي بن حجر السعدي ، ثنا إسماعيل يعني ابن جعفر ، عن عبد الله بن دينار ، عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم :

الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْفَإِنْ غُمِّىَ عَلَيْكُمْفَاقْدِرُوا لَهُ" *

4. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதே! அதை (மாதத்தை) நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை (மாதத்தை) கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள், உங்கள் மீது அது மறைக்கப்பட்டு இருந்தாலே தவிர. எனவே உங்கள் மீது அது மங்கும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : ஸஹீஹ் இப்னு குஜைமாஹ் : 1790

மேற்கண்ட இப்னு உமர் (ரழி) அவர்களின் அறிவிப்புகளில் 'கும்ம' என்ற சொல்போல 'உஃமிய', 'யுகும்ம', 'கும்மிய' போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 'ஹிலால்' என்ற பதம் மேற்கண்ட பட்டியலில் 1-வது அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக 'ஜஃலல்லாஹூ அஹில்லத மவாகீத்து லின்னாஸ்' என்று துவங்கும் இப்னுஉமர் (ரழி) அவர்களின் முழுமையான அறிவிப்பை முன்னரே பரிசீலித்துள்ளளோம். அதில் 'அஹில்லாஹ்' அதாவது 'பிறைகள்' எனப் பன்மையாகத்தான் ரிவாயத் செய்யப்பட்டுள்ளது. அவை மக்களுக்கு காலம் காட்டுவதற்காக படைக்கப்பட்டுள்ளதாவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் 2:189 வசனமும் இதையே உறுதி செய்கின்றது. எனவே மேற்காணும் முதலாவது அறிவிப்பில் 'ஹிலால்' என்று ஒருமையில் இடம்பெற்றுள்ள இந்தச்சொல் கூட 'அஹில்லாஹ்' என்று கூறப்படும் பன்மை வார்த்தைக்காகவே கையாளப்பட்டுள்ளது. 'ஹிலால்' என்ற சொல் அரபு அகராதிகளில் சுமார் 14 நாட்களுக்குரிய பிறைகள் குறித்து சொல்லப்படும் என்பதை முன்னரே அறிந்தோம்.

'நிலவு', 'சந்திரன்' என்று அழைக்கப்படும் ஒருமையான ஒரு துணைக்கோளில்தான் 'அஹில்லாஹ்' என்ற பன்மையான பல படித்தரங்கள் (வடிவங்கள்) அதில் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ஹிலால்' என்ற சொல் இந்த இடத்தில் சந்திரனை குறித்துதான் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் அறிவிப்பில் (புகாரி 1906) 'ஹிலால்' என்பதற்கு அஹில்லாஹ்வின் காட்சிகளை கவனித்தறிந்து என்றே பொருள் அமைகிறது. மேற்கண்ட பட்டியலில், இதுவல்லாத இப்னு உமர் (ரழி) அவர்களின் பிற அறிவிப்புகளில் நாம் ஏற்கனவே பிறை சம்பந்தமாக விளக்கியுள்ள அந்த முழுமையான அறிவிப்பில் கையாளப்பட்டுள்ள 'அஹில்லாஹ்' குறித்த வாசகம் அல்லது (ஷஹ்ரு) மாதங்கள் குறித்த வாசகங்களே இடம் பெற்றுள்ளன. மாதத்தில் ஒரேயொரு பிறையை மட்டும் பார்த்தால் போதுமானது என்று இப்னு உமர் (ரழி) அவர்களின் ரிவாயத்து அமையவில்லை.

குறிப்பாக ஒரே அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் பல செய்திகளில் ஒரு செய்தியில் மட்டும் ஒரு வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றிருந்தால், (ஷாத்) அதற்கு ஹதீஸ்கலையில் அந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை மாற்றுக் கருத்துடையவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

صحيح البخاري  - كتاب الصومباب قول النبي صلى الله عليه وسلم : " إذا رأيتم - حديث : ‏1823‏

حدثنا آدم ، حدثنا شعبة ، حدثنا محمد بن زياد ، قال : سمعت أبا هريرة رضي الله عنه ، يقول : قال النبي صلى الله عليه وسلم :أو قال : قال أبو القاسم صلى الله عليه وسلم : " صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ " *

5.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள்.அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே உங்கள் மீது புலப்படாத போதுநீங்கள் ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள். என அபூ ஹூரைராஹ்(ரழி) அவர்கள் அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : புகாரி (1823)
 

مسند أحمد بن حنبل  - ومن مسند بني هاشممسند أبي هريرة رضي الله عنه - حديث : ‏9641‏

حدثنا حجاج ، قال : حدثنا شعبة ، عن محمد بن زياد ، قال : سمعت أبا هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم - أو قال أبو القاسم صلى الله عليه وسلم - : " صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِفَإِنْ غَبِيَ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ " *

6.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள்; மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள்; உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹூரைராஹ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : அஹ்மத் (9641)
 

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِىُّ حَدَّثَنَا الرَّبِيعُ - يَعْنِى ابْنَ مُسْلِمٍ - عَنْ مُحَمَّدٍ - وَهُوَ ابْنُ زِيَادٍ – عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-  قَالَ « صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمِّىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعَدَدَ ».  صحيح مسلم - (3 / 124)2567 –

7.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். மேலும் நீங்கள் அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது புலப்படாத போது எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹூரைராஹ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் (2567) 

அதே போல, 

• 'நீங்கள் ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப் படுத்துங்கள்', 

• 'நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்', 

• 'எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள்' 

என்றெல்லாம் பல வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஒரே ஸஹாபி அறிவிக்கும் செய்தியில் மேற்படி வித்தியாசமான சொற்றொடர்களைக் கொண்டு மாற்றி மாற்றி அறிவிக்கப் பட்டுள்ளதால், நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள்? அல்லது மேற்கண்ட அனைத்து சொற்றொடர்களையும் அவர்கள் கூறினார்களா? என்ற கேள்வியும் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்றது. 

தெளிவாக சொல்வதென்றால் அபூஹூரைராஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட அறிவிப்புகளிலும் 'ஹிலால்' - 'பிறை' என்ற சொல் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

நமது பட்டியலில் மேற்கண்ட 5-வது மற்றும் 6-வது அறிவிப்பில் உள்ள செய்திகளில் முப்பதாக முழுமைப்படுத்துங்கள் என்ற வாசகம் உள்ளது. அதுபோல அபுஹூரைராஹ் (ரழி) அவர்களே அறிவிக்கும் அறிவிப்பான 7-வது செய்தியிலோ முப்பது என்ற வாசகம் இடம்பெறாமல் 'எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள்' என்று வந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்களது இரண்டு அறிவிப்புகளுக்கு மாற்றமாக அவர்களின் மற்றொரு அறிவிப்பு உள்ளதையும் காணலாம். 

எனவே இவற்றை கருத்தில் கொண்டு, சந்தேகங்கள் கொள்ள வாய்ப்பே இல்லாத குர்ஆன் கூறுகின்ற அடிப்படையில் சந்திரனில் ஏற்படும் அனைத்து படித்தரங்களையும் கவனமாக ஆராய்ந்து ஒவ்வொரு மாதங்களையும் சரியாக ஆரம்பித்தும், முடிக்கவும் வேண்டும் என்பது சந்தேகத்திடமின்றி புலனாகின்றது. 

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களை கொண்டதாகவும் இருக்கும். அதுபோல் முப்பது நாட்களைக் கொண்ட மாதங்களும் இருக்கின்றன. இவ்வாறு 29 அல்லது 30 என்ற இருவேறு எண்ணிக்கையில் அமைந்த நாட்களைக் கொண்ட மாதங்களைப் பற்றிய சட்டங்களை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாக அறிவித்திருப்பார்கள். மேற்கண்ட ஹதீஸ்களை அரபு மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்த அறிஞர்கள் இதுபோன்ற கோணங்களில் சிந்திக்காமல் அனைத்துத் ஹதீஸ்களையும் ஒன்றாக விளங்கி மொழிபெயர்த்ததின் காரணமாக மக்களுக்கு அவற்றை பிரித்தறிய முடியாமல் போயிற்று. இதனால் பிறை விஷயத்தில் உலக முஸ்லிம் உம்மத்திற்குள் மிகப்பெரும் குழப்பங்களும் ஏற்பட்டுவிட்டன. இந்த துர்பாக்கிய சூழ்நிலையை மிகுந்த கவலையோடு எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.

பிறை தெரியாவிட்டால் மாதத்தை முப்பதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் விளங்கியுள்ளனர். அதற்கு முதல் முக்கியக் காரணம் பிறைகள் குறித்த ஹதீஸ்களை இத்துறை சார்ந்த முழுமையான ஞானமில்லாத மொழிபெயர்ப்பாளர்கள் மொழி பெயர்த்ததே ஆகும். அதாவது 29 நாட்களில் முடிகின்ற மாதங்களையும், 30 தினங்கள் கொண்ட மாதங்களையும் பிரித்தறிய நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு சிறந்த தீர்வை தரவில்லையா? அதற்கான ரிவாயத்துகள் எங்கே உள்ளன? என்ற கோணத்தில் அம்மொழிபெயர்ப்பாளர்களும் அறிஞர்களும் சிந்திக்க மறந்து விட்டனர். மேற்படி வினாக்களை மனதில் கொண்டு பிறை சார்ந்த ஹதீஸ்களை அணுகாமல் பொத்தாம் பொதுவாக புறக்கண்ணால் அவரவர்கள் பிறையைப் பார்த்து முடிவுசெய்யுங்கள் என்ற ரீதியில் அணுகியுள்ளனர். இதையே பல்லாண்டுகளாக வீரியமாக பிரச்சாரமும் செய்து விட்டனர். அதன் விளைவுகள்தான் உலக முஸ்லிம் உம்மத்தினர் பிறையை மையக் கருத்தாக்கி, பல பிறை நிலைப்பாடுகளையும் தமதாக்கிக் கொண்டு பல பிரிவுகளாக பிரிந்தும் விட்டனர்.
 

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ قَالَسَأَلْتُ جَابِرًا هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَصُومُوا حَتَّىتَرَوْا الْهِلَالَ فَإِنْ خَفِيَ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَوَقَالَ جَابِرٌ هَجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ شَهْرًا فَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ وَقَالَ إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ.مسند أحمد - 23 / 3314670 -

8.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிறையை கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள். எனவே உங்கள் மீது அது மறைந்து இருக்கும் போது முப்பதாக பூர்த்தி செய்யுங்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன் மனைவிகளை விட்டும் ஒருமாதம் பிரிந்து இருந்தனர். மேலும் 29-வது நாளில் இறங்கினார்கள். மேலும் நிச்சயமாக இந்த மாதம் 29 நாட்களை கொண்டது என கூறினார்கள். அறிவித்தவர் : ஜாபிர் (ரழி) அவர்கள், நூல் : அஹ்மத் (14670) 

நமது பட்டியலில் மேற்கண்ட 8-வது அறிவிப்பில் ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்த செய்தியில் முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள் என்று அறிவித்த செய்தியும் அதே ரிவாயத்தில்தான் வந்துள்ளது என்பதை காணுங்கள். இதையும் நாம் கருத்தில் கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். 

மேலும் மேற்கண்ட பட்டியலில் உள்ள அறிவிப்புகளில் 'கும்ம' என்ற சொல்லைப் போலவே 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய' அல்லது 'குபிய' போன்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ள பல்வேறு ஹதீஸ்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பதிந்துள்ளோம். ஆக்கத்தின் நீளம் கருதி மற்ற ரிவாயத்துகளை இங்கு தவிர்க்கிறோம். 

மேலும் 'ஹஃபிய' என்ற சொல்லுக்கு மறைத்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் கொள்ள இயலாது என்பதை அனைவரும் அறிவோம். இவைபோன்ற ஹதீஸ்களெல்லாம் மக்கள் மன்றத்தில் மறைக்கப்பட்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும், 'ஃபஇன்கும்ம அலைக்கும்' - 'உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால்' முப்பது நாட்களாக பூர்த்தி செய்யவேண்டும் என்ற சிலரது தொடர் பிரச்சாரங்களின் நிலையை மக்களே சற்று எண்ணிப் பாருங்கள்.

நாம் கேட்பது என்னவென்றால் பிறைகள் குறித்து வரும் மேற்காணும் ரிவாயத்துகளில் மறைக்கப்படும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பல பதங்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ள நிலையில் பிறைபற்றி பேசும் அறிஞர்கள் மேற்காணும் ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் இன்னும் எடுத்து வைக்காதது ஏன்? என்று கேட்கிறோம். 'ஃபஇன்கும்ம அலைக்கும்' என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு இல்லாத மேகமூட்டத்தை முன்னிலைப்படுத்தும் ஆலிம்கள் மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் குறித்து ஏன் இன்னும் ஆய்வுசெய்ய முன்வரவில்லை? 

இன்னும் பிறை சம்பந்தமாக 'கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பல ரிவாயத்துகளிலும் வலியுறுத்தி கூறி இருக்கையில், நபி (ஸல்) அவர்கள் ஏதோ பிறையின் படித்தரங்களை கணக்கிடுவதை ஹராம் என்று தடுத்ததைப் போன்ற ஒரு தவறான மாயையை மக்களிடம் ஏற்படுத்துவது ஏன்? இதனால் அவர்கள் அடையும் இலாபம்தான் என்ன? என்று கேட்கிறோம்.

அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை மனிதர்களுக்கு தேதியை அறிவிப்பதாக அமைத்துள்ளான். எனவே அவற்றைக் கவனித்து அறிந்து அதனடிப்படையில் சரியான நாளில் அனைத்து மாதங்களையும் துவக்க வேண்டும். அதுபோல ரமழான் மாதத்தையும் சரியாக துவங்கி, பிறைகளைக் கவனித்தறிந்து சரியான தினத்தில் பெருநாளையும் கொண்டாட வேண்டும். சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் சங்கம தினமான கும்மவுடைய நாள் (Geocentric Conjunction Day) ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளாகவே இருக்கும். அப்போது பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும். அப்படி மறைக்கப்படும் அந்த கும்மவுடைய நாளை ஏற்கனவே சந்திரனில் ஏற்பட்ட படித்தரங்களான தேய்பிறைகளை பார்த்த மாதத்தோடு சேர்த்து கணக்கிட்டு (அல்லது எண்ணி) மாதத்தை மிகச்சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இவைதான் மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு உணர்த்தும் பாடமாகும். 

ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும், அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எங்கும் சொல்லிட வில்லை. இன்று மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் துவங்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்திட வில்லை. பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பின்புதான் ரமழான் நோன்பைத் துவங்க வேண்டும் அல்லது பெருநாள் தினம் (ஷவ்வால்-1) என்று தீர்மானிக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வடை தூதரோ கட்டளையிட வில்லை. எனவே பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று கூறும் மாற்றுக் கருத்துடையோரின் புறக்கண் பார்வைக்கு 'ஸூமுலிருஃயத்திஹி' என்ற வாசகங்கள் வரும் எத்தகைய ஹதீஸ்களும் எவ்விதத்திலும் ஆதாரமாகாது என்பது மிகவும் தெளிவாக நிரூபணமாகி விட்டது.
 
 

 


 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Read 3535 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:26