செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள் என்ற கூற்றின் விளக்கம் என்ன?

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 7

7. பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள் என்ற கூற்றின் விளக்கம் என்ன? 

இதுவரை 'அல்அஹில்லாஹ்', 'மவாகீத்', 'மவாகீத்து லின்னாஸ்', 'லி ருஃயத்திஹி', 'ஃபஇன்கும்ம அலைக்கும்', 'ஃபக்துரு', 'ஃபஉத்தூ' போன்ற சொற்களை உள்ளடக்கியுள்ள 'ஸூமூ லி ருஃயத்திஹி' (صُومُوا لِرُؤْيَتِهِ) என்ற கருத்தைச் சொல்லும் ஹதீஸின் முழுமையான ஹதீஸ்களான முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306), ஸஹீஹ் இப்னு ஹூசைமா (1789) வின் ஹதீஸ்களிள் விரிவான விளக்கங்களை இதுவரை படித்துள்ளோம். 

பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழியையும் மேற்படி அறிஞர்கள் பிரதான ஆதாரமாக வைக்கின்றனர். புறக்கண் பார்வைக்கு மாற்றுக் கருத்தினர் கூறும் இரண்டாவது ஆதாரமான அதையும் சற்று ஆராய்வோம்.

عبد الله بن دينار عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال : " الشهر تسع وعشرون ليلة فلا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له. مسند الموطأ - (1 / 146)  "

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் சரியான மொழிபெயர்ப்பானது : இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே! பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;. உங்கள் மீது அது மறைக்கும்போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல்: முஅத்தா 

மேற்கண்ட ஹதீஸை வைத்துக் கொண்டு பார்த்தீர்களா? பிறையை பார்க்காத வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை பார்க்காத வரை நோன்பை விடாதீர்கள்; என்று ரஸூலுல்லாஹ்வே நமக்குக் கட்டளை இட்டு விட்டார்கள் என்று வாதம் வைக்கின்றனர். இது பிறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ள குர்ஆன், சுன்னாவின் ஆதாரக் கூற்றுக்களை உள்ளார்ந்து ஆய்வு செய்யத் தவறியதையே காட்டுகிறது.

பிறைகள் குறித்து நாம் இதுவரை படித்த ஹதீஸ்களை முறைபடுத்துவதெனில்

• குறிப்பிட்ட ஒரு மாதத்தைக் குறித்த நபிமொழிகள் வந்துள்ளன.

• குறிப்பிட்ட ஒரு மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்யுமாறு ரிவாயத்துகள் வந்துள்ளன.

• ஒரு மாதத்திற்கு 29-நாட்கள்தாம் என்ற ரீதியில் ஹதீஸ்கள் உள்ளன.

• 30-நாட்களைக் கொண்ட மாதங்கள் குறித்த ஹதீஸ்களும் உள்ளன.

• ஒரு மாதத்திற்கு 29-நாட்கள் அல்லது 30-நாட்கள் இருக்கும் என்று பொதுவான நபிமொழிகளும் வந்துள்ளன.

• மாதத்தை பூர்த்தியாக்குமாறு பொதுவாக கட்டளையிடப்பட்டுள்ளது

• மாதத்தை எண்ணிக் கணக்கிடுமாறு பல ஹதீஸ்களில் கட்டளைகள் உள்ளன.

• எண்ணிக்கையை பூர்த்தியாக்குமாறும் ரிவாயத்துகள் பல இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு பிறைகள் குறித்து பல வகையிலும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அரபு மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்த அறிஞர்களும், அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அறிஞர்களும், இவற்றை பிரித்தறிந்து ஆய்வுகள் செய்யாமல் அனைத்து ரிவாயத்துகளையும் ஒரே கோணத்தில் அணுகியதின் காரணத்தினால் உலக முஸ்லிம் உம்மத்திற்குள் பிறைகள் குறித்த தெளிவின்மையும், குழப்பங்களும் ஏற்பட்டுவிட்டன.

அதன் வரிசையில்தான் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட முஅத்தாவின் அறிவிப்பும் அடங்கும். மேற்கண்ட ஹதீஸ் எதை அறிவிக்கின்றது? பிறை பார்க்கிறோம் என்ற ரீதியில் இருபத்து ஒன்பது நாட்களைக் கொண்ட ஒரு மாதத்தை உங்கள் வசதிற்கேற்ப முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ளுங்கள், அதற்கு மேகமூட்டத்தை காரணம் காட்டுங்கள் என்றா கூறுகிறது? அல்லது மஃரிபு வேளையில் மறையும் பிறையை பார்த்துவிட்டு இது அடுத்த நாளுக்குறிய பிறை என்று கூறுகிறதா? இரண்டும் இல்லையே. 

'ஹிலால்' என்ற சொல் அரபு அகராதிகளில் எத்தனை நாட்களுக்குரிய பிறைகள் குறித்த சொல்லப்படும் என்பதை முன்னரே அறிந்தோம். பிறையை பார்க்காத வரை என்றால் எந்த நாளுக்குரிய பிறையைப் பார்க்காதவரை? என்று சொல்லட்டும். 

ஒரு வாதத்திற்காக முதல்நாளின் பிறையைப் பார்க்க வேண்டும், அதுதான் 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். புவிமைய சங்கம தினத்திற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள். சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

ஹிலாலைப் பார்க்கிறோம் என்று கூறிக்கொண்டு மறையும் அந்த முதல்நாளின் பிறையைப் புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று கூறினால் அந்த மாதத்தின் 'முதல் நாளை' இழக்க நேரிடும். 

மேலும் முதல்நாளின் பிறையைப் பார்க்க முடியாமல் ஆகி, இரண்டாவது நாள் மறையும் பிறையை பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று கருதினால் அந்த மாதத்தின் 'முதல் இரண்டு நாட்களை' இழக்க நேரிடும். 

முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் காலங்காலமாக மாதங்களைத் துல்லியமாக, சரியாகத் துவக்காமல் இப்படித்தான் நாட்களையும், இபாதத்துகளையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். பிறைகள் பற்றிய தீர்க்கமான ஞானமில்லாதவர்கள் 'பிறையைப் பார்க்காத வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை பார்க்காத வரை நோன்பை விடாதீர்கள்;' என்று பிரச்சாரம் செய்வதால் சமுதாய மக்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சற்று கவலையோடு சிந்திக்க வேண்டுகிறோம். 

ஒவ்வொரு சந்திரமாதத்தின் இறுதிவாரத்தின் தேய்பிறை இறுதி நாட்களில், குறிப்பாக 27,28,29-வது நாளில் மஃரிபு வேளையில் பிறையை பார்க்க இயலாது என்பது நிதர்சனமான உண்மையாகும். இது பிறை பார்த்தலின் சாதாரண அடிப்படைகளில் உள்ளவையாகும்.

ஒவ்வொரு மாதத்திலும் முதல் நாளுக்குரிய பிறை, அந்த முதல்நாளில் மேற்குத் திசையில் அது மறையும் மஃரிபு நேரத்தில், உலகின் சிலபகுதிகளில் சில நிமிடங்களுக்கு மட்டும் காட்சியளிக்கும். அந்தப்பிறை உதிக்கும் பிறையல்ல மாறாக அது முதல் நாளுக்குரிய மறையும் பிறையாகும். மாதத்தின் வளர்பிறை நாட்களின் ஆரம்ப நாட்களுக்குரிய பிறைகள் மட்டும்தான் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் அது மறையும் நேரத்தில் காணலாம். மாதத்தின் அனைத்து நாட்களுக்குரிய பிறைகளும் மஃரிபு நேரத்தில் மறைவதில்லை. சூரியனைப் போலவே சந்திரனும் (பிறையும்) தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில் மறைகிறது. அப்படி அதிகாலையில் உதிக்கும் சூரியன் சுமார் 12 மணிநேரங்கள் கடந்து மஃரிபு வேளையில் மறைவதென்பது மாதத்தின் அனைத்து நாட்களிலும் நடைபெறும் தினசரி நிகழ்வாகும். ஆனால் சந்திரன் இவ்வாறு இல்லை. சந்திரன் மாதத்தின் அனைத்து நாட்களிலும் ஒருசீராக அதிகாலை நேரத்தில் உதித்து மாலை நேரத்தில் மறைவதில்லை. இருப்பினும் சந்திரன் தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில்தான் மறைகிறது. மாறாக அது மேற்குத் திசையில் உதிக்க வில்லை. சந்திரன் மேற்கே உதித்து கிழக்குத் திசையில் மறைகிறது என்று சிலர் அழுத்தமாக நம்பிக் கொண்டிருப்பதால்தான் இதை இந்த அளவிற்கு அழுத்தமாகச் சொல்கிறோம். 

பிறை மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் உதிப்பதில்லை என்று கூறியுள்ளோம். இதை புரிந்து கொள்வதென்றால் முதல்நாளுக்குரிய முதல் பிறை சூரியன் உதயமாகும் அதிகாலை நேரத்தில் உதிக்கும். பின்னர் சூரியன் மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் சூரியன் மறைந்த பின்னர் சுமார் 48 நிமிடங்கள் அளவிற்கு பின்தங்கி பிறையும் மறையும்.

அதுபோல மாதத்தின் முதல் கால்பகுதி (First Quarter) க்குரிய 7-வது அல்லது 8-வது தேதியைக் காட்டும் பிறையானது நண்பகல் நேரத்தில் கிழக்குத் திசையில் உதிக்கும். பின்னர் மாலை சூரியன் முழுமையாக மேற்கு திசையில் மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறையானது பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருக்கும். சூரியன் மறைந்து சுமார் 6 மணி நேரங்களுக்குப் பின் மேற்குத் திசையில் நடுநிசியில் (நள்ளிரவில்) அந்த அரை நிலவு மேற்கில் மறையும்.

மேலும் மாதத்தின் முழு நிலவு (குரடட ஆழழn) என்னும் பவுர்ணமி நிலவு 14 அல்லது 15-ஆம் தேதியைக் காட்டும். சில மாதங்களில் 13-ஆம் நாளிலும், அரிதாக 16-ஆம் நாளிலும்கூட பவுர்ணமி ஏற்படும். அந்த பவுர்ணமி நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனமாகும்போது, கிழக்குத் திசையில் சந்திரன் முழு நிலவு உதிப்பதை நாம் காணலாம். பின்னர் சூரியன் மறைந்து சுமார் 12 மணிநேரங்களுக்குப் பின் மேற்குத் திசையில் அதிகாலையில் அந்த முழு நிலவு மறைவதையும் காணலாம். சந்திரன் தினமும் கிழக்குத் திசையில் உதித்து மேற்குத் திசையில்தான் மறைகிறது என்பதையும் அது மேற்குத் திசையில் உதிக்க வில்லை என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இன்னும் மாதத்தின் கடைசி கால் பகுதி (Last Quarter) க்குரிய 21-வது அல்லது 22-வது தேதியைக் காட்டும் பிறையானது நள்ளிரவு நேரத்தில் கிழக்குத் திசையில் உதிக்கும். அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், அது நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருக்கும். பின்னர் நண்பகலில் சூரியன் நம் தலை உச்சியில் இருக்கும் நேரத்தில் அந்த அரைவட்ட நிலவு மேற்கில் மறையும். 

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இவை பிறைகள் உதித்து மறையும் நேரத்தை தோராயமாக அறிந்து கொள்ளும் முறைதான். பிறையானது எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எத்தனை மணிநேரத்தில், எத்தனை நிமிடத்தில் மற்றும் நொடிகளில் உதிக்கும் மறையும் என்பதை நாம் அறிவியலின் துணை கொண்டு அறியலாம். மேலும் பிறையானது எந்தக் கோண விகிதத்தில் தற்போது உள்ளது என்பதையும், அது உதிப்பதையும், அதன் வளர்ச்சியையும், பின்னர் அது மறைவதையும், அதன் நிலைகளையும் துல்லியமானக் கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிந்த விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை இங்கு நினைவு படுத்துகிறோம். 

நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக முஅத்தாவில் இடம்பெறும் மேற்கண்ட ரிவாயத்தும் ஒரு மாதத்தை துவங்குவதற்கு பிறைகளை கவனமாக அவதானிக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் சொல்கிறது. தவிர முதல்நாளின் மறையும் பிறையை பார்த்துவிட்டு அடுத்தநாள் மாதத்தை துவங்க வேண்டும் என்ற செய்தி அதில் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். மேற்படி ரிவாயத்தை தற்போது படித்துப் பாருங்கள்.

''இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே! பிறையை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள். உங்கள் மீது அது மறைக்கும்போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்''

அதாவது பிறை முதல் தேதியை காட்டினால் மாதத்தின் முதல் நாளில் நாமும் இருக்க வேண்டும். பிறை ரமழானின் ஏழாவது நாளைக் காண்பித்தால் நாமும் ஏழாவது நோன்பை பிடித்திருக்க வேண்டும் என்பதைத்தான் மேற்காணும் ரிவாயத்து விளக்குகிறது. சந்திரன் காட்டும் தேதியும் நமது கிழமையின் தேதியும் சரியான கணக்கில் இருக்க வேண்டும் என்பதே முக்கிய அடிப்படையாகும். இன்னும் 'இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களை கொண்டதே' என்று ஒரு குறிப்பட்ட மாதத்தைக் சுட்டுவதைப் போன்ற வாசக அமைப்பு உள்ளது. மேலும் 'அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று மாதக் கணக்கீட்டை வலியுறுத்துவதாகவும் இந்த ரிவாயத் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் மேற்கண்ட ஹதீஸ் மூலம் ஒரு மாதத்தின் 29-வது நாளின் மாலை, 30-வது நாளின் இரவில்தான் பிறையைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று விளங்குகிறது என்கின்றனர். இது உண்மையானால், இந்த கருத்தில் வரும் அறிவிப்புகளை ரிவாயத்து செய்த நபித்தோழர் இப்னு உமர் (ரழி) அவர்கள் உட்பட நபித்தோழர்கள் யாரும் மேற்படி 29-வது நாளன்று மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பிறையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும். அல்லது வேறு யாரையாவது பிறையை பார்த்து வருவதற்கு அனுப்பியிருக்க வேண்டும். இதில் எதையுமே அவர்கள் செய்யவில்லையே ஏன்? சிந்திக்க வேண்டாமா? 

அவ்வளவு ஏன் இவ்வாறு மஃரிபு வேளையில் பிறையை பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்தியிருந்தால், கடமையான மஃரிபு தொழுகையை விட்டு ஸஹாபாக்களில் ஒரு சிலராவது பிறை பார்க்கச் சென்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஜமாஅத் தொழுகையை தாமதமாக தொழுது கொள்ள நபி (ஸல்)அவர்கள் ஏதாவது சலுகை கொடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட எந்த சம்பவமும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்களின் காலத்திலோ நடைபெற்றதாக எந்தக் குறிப்பும் இல்லையே! ஏன்? சிந்திக்க வேண்டாமா? 

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை அப்படியே அடிபிசகாமல் நடைமுறைப் படுத்தியவர்களே ஸஹாபாக்கள். மார்க்கம் சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத ஒன்றை ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். இவற்றை கவனத்தில் கொண்டு இன்று மறையும் பிறையை மஃரிபு வேளையில் பார்த்து விட்டு அடுத்த நாள்தான் முதல் தினம் என்று நினைத்துக்கொண்டு நோன்பையோ, பெருநாளையோ முடிவு செய்ய மேற்காணும் ஹதீஸ் ஒருபோதும் ஆதாரமாகாது. இதை ஸஹாபாக்களின் நடைமுறையை வைத்தே தெளிவுபடுத்துகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் பிறைகளை கவனிக்கும் வாய்ப்பு கிடைக்காத 'ஈலாஉ' சம்பவத்தில் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தின் நாட்கள் இருபத்தி ஒன்பதா (29) அல்லது முப்பதா (30) என்பதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் வல்ல அல்லாஹ் வஹீ அறிவித்து விட்டான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பிறைகளைக் கவனித்து, கணக்கிட்டு வருவதில் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக. 'ஈலாஉ' சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அந்த மாதம் 29 நாட்கள் என்று கூறியதாக இடம்பெறும் ஸஹீஹான ஹதீஸ் நஸாஈ கிரந்தத்தில் 2104-வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிறையைப் பார்த்த பின்புதான் மாதத்தைத் துவங்க வேண்டும். அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிக்கவோ துவங்கவோ கூடாது. இவைதான் மார்க்கம் சட்டம் என்றால், அதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்திருப்பானா? இறை வஹியின் வெளிப்பாடு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் இல்லை என்பதால், மாதத்தைத் துவங்கவும், அதை சரியான நாளில் முடிக்கவும் நமக்கு பிறைகளை தொடர்ந்து அவதானித்து கணக்கிட்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read 3581 times Last modified on வெள்ளிக்கிழமை, 09 ஜூன் 2017 06:21