செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 10

Rate this item
(0 votes)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 10

இலக்கணமா? அல்லது குறைஷிகளின் தலைக்கணமா?

இன்னும் சில அறிஞர்களோ, அரபி மொழியின் அகராதிப்படியும் அதன் இலக்கணத்தின் படியும். ரஆ, ரஅய்தும், தரவ்ன போன்ற சொற்கள் எந்த இடத்தில் வந்தாலும் நேரடி அர்த்தமான கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும் தான் கொள்ள வேண்டும். மேலும் கருவியின் துணைகொண்டு பார்த்தாலும் கண்ணால்தான் பார்க்கிறோம் என்றும் கூறுகிறார்கள். மேலும் ரஆ என்ற வார்த்தை செயல்பாட்டு வினையைக் குறிக்கிறது. பார்த்தான் என்றால் எதைப் பார்த்தான் என்ற கேள்விக்கு அவன் பார்த்த பொருளின் பெயர் விடையாக வரும். இத்தகைய ஒரேயொரு செயல்பாட்டுவினை மட்டும் ஒரு வாக்கியத்தில் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள். ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை ஒரு வாக்கியத்தில் இருந்தால்தான் பார்த்தல் என்ற விதியோடு மற்ற பொருளும் வரும் என்று தங்களது அரபிப் புலமையை மக்களிடத்தில் வெளிப்படுத்துகின்றனர். முதலில் வினை என்றால் என்ன? செயல்பாட்டுவினை என்றால் என்ன என்பதைக்கூட அறியாத இவர்களின் பேச்சைக் கேட்கும் அரபிமொழி தெரியாத மக்களும் நமது ஆலிம் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றனர்.

மேலும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக என்ற அத்தியாயாத்தில் யானைக் கூட்டத்தை அல்லாஹ் என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா? என்று அல்லாஹ் கேட்கிறான். இதில் யானைக்கூட்டம் என்பது ஒரு பெயர்ச்சொல், இங்கு அல்லாஹ் என்ன செய்தான் என்பது Verb (வினை), எனவே அரபி அகராதியின் விதிப்படி இரண்டு வினைகளைப் பார்த்தல் (தரா) என்று கூறப்பட்டால் அதை சிந்தனையால், கற்பனையால் பார்த்தல் என்ற பொருளைக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, இதா ரஅய்துமுல் ஹிலால்...ஸூமு லி ருஃயத்திஹி...லாத ஸூமு ஹத்தா தரவுல் ஹிலால் போன்ற ஹதீஸ் சொற்றொடர்களில் பிறந்த பிறையை பார்த்தல் என்ற ஒரு செயல்பாட்டு வினைதான் வருகிறது எனவே பிறந்த பிறையை புறக்கண்களால்தான் பார்க்கவேண்டும் என்று தங்களது தவறான வாதத்தை நிலைநாட்டுகிறார்கள்.

மக்களே சற்று சிந்தியுங்கள்! மேற்கண்ட வாதத்தின்படி அல்ஃபீல் அத்தியாத்தின் அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக என்ற வசனங்களில் யானைக்கூட்டம் என்ற ஒரு பெயர்ச்சொல்லும், அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் செய்தான் என்ற ஒரு வினையும்தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபி இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.

இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான் என்பதில் செய்தான் என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.

இன்னும் நாம் என்ன கேட்கிறோம் என்றால், ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள். ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை அவ்வாக்கியத்தில் இருந்தால்தான் சிந்தனையுடன் பார்த்தல் என்ற இலக்கண விதியை இவர்களுக்கு சொன்னது யார்? இந்த இலக்கண விதி எங்கே உள்ளது? எந்த இலக்கணப் புத்தகத்திலும் காணக்கிடைக்காத இந்த இலக்கண விதிக்கு மார்க்க ஆதாரம் அல்லது அங்கீகாரம்தான் என்ன? என்பதை முதலில் சொல்லிவிட்டு அதன்பிறகு தங்களின் தவறான இந்த வாதங்களை பிரச்சாரம் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஒரு விதிமுறை அரபி இலக்கணத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை. ஒரு வாதத்திற்காக அரபி இலக்கணத்தில் இப்படி ஒரு கருத்து இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், அப்படி இருந்தால் மனிதன் தனது கரங்களால் இயற்றிய அரபி இலக்கணம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகுமா என்பதை அவர்கள் முதலில் விளக்க வேண்டும்.

புறக்கண்ணால் பார்த்தல் என்பதற்கு வல்ல அல்லாஹ் ரஅய்யல் அய்ன் என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளான் என்பதை நாம் முன்னரே விளக்கியுள்ளோம். இவர்களுடைய தற்போதைய கூற்றுப்படிப் பார்த்தாலும் வினைச் சொல் வரும்பொழுது தான் கண்ணால் பார்;ப்பதா? அறிவால் பார்ப்பதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஏற்படும். ஆனால் வினைச்சொல் அல்லாத பிற சொற்களோ, ருஃயத் (மஸ்தர்) போன்ற பெயர்ச் சொல்லோ பிறைதொடர்பான ஹதீஸ்களில் வரும்போதும் இதே சர்ச்சையை ஏன் கிளப்புகின்றார்கள். இதிலிருந்து இவர்களது அரபிப்புலமையின் நிலைமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

மக்களே! நபி (ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமான தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துச் சொன்னபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும் அவனது கூட்டாளிகளும் இதே அரபிமொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததற்காக இறுதியில் இறைசாபம் பெற்று அவர்கள் அனைவரும் அழிந்தே போயினர் என்பது முஸ்லிம்கள் எவரும் மறக்கவியலாத வரலாறு.

நபிமார்களின் வாரிசுகளாக தங்களை நம்பும் தற்போதைய ஆலிம்கள், தங்கள் மேற்படி கூற்றிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரத்தைத் தராமல் இல்லாத இலக்கணத்தை கையில் எடுத்துக்கொண்டும், மார்க்க அங்கீகாரம் இல்லாத அகராதி வியாக்கியானங்களையும், இன்னும் யூத தயாரிப்பில் வெளியான அரபிமொழி அகராதியை கூட எடுத்துக்கொண்டும், பிறந்த பிறையை புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும், அதுதான் மார்க்கம் என்று பிடிவாதமாக பேசுவது அழகல்ல. மாறாக அது தாருந்நத்வா குரைஷிகளின் வாதமாகும். இன்னும் தற்போதைய யூத, கிறுஸ்தவர்கள்கூட திருமறைக் குர்ஆனை தவறாக விமர்சனம் செய்யும்போது, இதே அரபி இலக்கணத்தை மேற்கோள்காட்டியே விமர்சிக்கின்றனர் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பிறை குழப்பத்தை தீர்ப்பதற்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிவழியில் இருந்து மக்களுக்கு தெளிவுபடுத்திய பின்னும், அகராதி விளக்கம், இலக்கண இலக்கியம் என்று திசை திருப்புவது மோசடி செயலே என்பதை மக்களே நீங்களே விளங்கிக்கொள்ளவும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3288 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:34