செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 11

Rate this item
(1 Vote)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 11

யவ்முஷ்ஷக் என்ற வாதம் எடுபடுமா?

மேலும் இவர்களின் ஆராய்ச்சியின் உச்சகட்டமாக யவ்முஷ்ஷக் يوم الشكசந்தேகமான நாளில் நோன்பு வைக்கக்கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் - பிறந்த பிறையைக் காணாமல் நோன்பை நோற்காதீர்கள் என்பதில்தான் ஷக்குடைய நாள் என்பது சாத்தியப்படும். எனவே காலண்டரை பின்பற்றினால் யவ்முஷ்ஷக் يوم الشك  என்ற நாளே இல்லாமல் போகும் என்கின்றனர். காரணம் இன்னென்ன நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் என்று சந்தேகமற அறியப்பட்டுவிடும் ஆகையால் யவ்முஷ்ஷக் يوم الشك  சம்பந்தமான ஹதீஸை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.

 

இத்தகைய சால்ஜாப்புகள், போலி பேணிக்கைகள் எல்லாம் பிறந்த பிறையை புறக்கண்ணால் மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டியவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைத்தான் காட்டுகிறது என்று மக்களே விளங்கிக் கொள்வார்கள். காலண்டரை பின்பற்றினால் யவ்முஷ்ஷக் يوم الشك  என்ற நாளே இல்லாமல் போகும் என்று இவர்கள் கூறுவதால் சந்தேகத்திற்குரிய நாள் என்று ஒருநாள் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் போலும்?

மார்க்கத்தில் யவ்முஷ்ஷக் என்ற ஒன்று உண்டா? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலும்தானே இஸ்லாமிய மார்க்கம். இதில் யவ்முஷ்ஷக் அதாவது சந்தேகத்திற்குரிய நாள் என்பது உண்டென்றால் அதைப்பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியிருக்க மாட்டார்களா? எனவே யவ்முஷ்ஷக் பற்றி பேசுவோர் திருமறை குர்ஆனிலிருந்து நேரடியான ஆயத்தை ஆதாரமாகத் தந்துவிட்டு பேசட்டும். அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஸஹீஹான ஒரு ஹதீஸையாவது இதற்கு ஆதாரமாகக் காட்டட்டும்.

இப்படி நாம் கூறியவுடன் ஒருவேளை இதோ அதற்கு ஆதாரம் என்று கீழ்க்காணும் ஸஹாபியுடைய கூற்றை ஹதீஸ் என்று நினைத்துக் கொண்டு சொல்லக்கூடும்.

صحيح البخاري - (2 / 673(

 وقال صلة عن عمار من صام يوم الشك فقد عصى أبا القاسم صلى الله عليه و سلم

எவர் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைக்கிறாரோ அவர் அபுல்காஸிமிற்கு மாறுசெய்துவிட்டார். அறிவிப்பாளர் - அம்மார் பின் யாஸிர் ரழி, நூல் : புகாரி - 2/673.

ஹாகிமிலும் இதே அறிவிப்பாளரால் ஒரு அறிவிப்பு உள்ளது. அச்செய்தியில் இடம்பெறும் அல்இஸ்ஹாக் மற்றும் அபூஹாலித் என்பவர்களைப் பற்றி விமர்சனங்கள் உள்ளன. அந்த செய்தி தெளிவான விமர்சனத்திற்குட்பட்டது என்பதை கருத்தில் கொண்டும், ஆக்கத்தின் நீளம் கருதியும் இங்கே தவிர்க்கிறோம்.

இருப்பினும் அபுல்காஸிமை நிராகரித்துவிட்டார் என்று படர்க்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி நபித்தோழர் அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர்கள் கூறியதாக அவர்களது சொந்த கூற்றாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்பை மவ்கூஃப் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகிறார்கள். மவ்கூஃப் என்றால் நபித்தோழரின் சொந்தக்கூற்று, நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல என்பதாகும்.

மேற்காணும் அறிவிப்பை ஆய்வு செய்வது நமக்கு கட்டாயமில்லை என்றாலும், மேற்கண்ட அறிவிப்பை யவ்முஷ்ஷக் என்பதற்கு ஆதாரமாக யாரும் கருதினால் நபித்தோழர்களின் சொந்தக்கூற்று மார்க்க அடிப்படை ஆதாரமாகுமா? என்பதையும் அவர்கள் விளக்கியாக வேண்டும்.

யவ்முஷ்ஷக் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் நேரடி கூற்றாக வரும் ஒரு ஸஹீஹான ஹதீஸையாவது தாருங்கள் என்றே நாம் கேட்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். அப்படி ஒரு ரிவாயத்தும் இல்லை. இருக்கவும் முடியாது, காரணம் திருமறை குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையை உலகம் படைக்கப்பட்ட நாளிலேயே நிர்ணயம் செய்துவிட்டான் என்று கூறுகிறது. அதில் யம்முஷ்ஷக் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு கீழ்க்காணும் இறைவசனங்களும், நபிமொழிகளும் ஆதாரமாக உள்ளன.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ [التوبة : 36]

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு புனிதமானவை இதுதான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் எவ்விதமெல்லாம் முழுமையாக உங்களை எதிர்கின்றார்களோ அவ்விதமெல்லாம் நீங்களும் முழுமையாக எதிர்க்கவும். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)

4477 - عَنْ أَبِى بَكْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِى بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ …….صحيح مسلم - (5 / 107)

ஹஜ்ஜத்துல் விதாவில் (மினாவில் உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ரஜப் மாதம் ஆகும். என அபூ பக்ரா(ரழி) அறிவித்தார்கள். நூல்: முஸ்லிம் 4477.

ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள்தாம் என்பதில் எத்தனை வாரங்கள்? எத்தனை நாட்கள்? எத்தனை மணிநேரங்கள்? உட்பட அனைத்தும் அடங்கிவிடுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் இத்தனை நாட்கள்தாம் என்று வல்ல அல்லாஹ் நிர்ணயித்துவிட்டதை யவ்முஷ்ஷக் என்று கூறிக்கொண்டு யாராலும் முன்பின்னாக மாற்றிவிட முடியாது. அதாவது ரமழானுக்குரிய நாளை ஷஃபானிலும், ஷவ்வாலுக்குரிய நாளை ரமழான் மாதத்திலும் சேர்க்க முடியாது. அவ்வாறு மாற்றுவது இறைநிராகரிப்பாகும் என்று திருக்குர்ஆன் (9:37) எச்சரிக்கிறது. மேலும், காலத்தைத் திட்டாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வே காலமாக இருக்கிறான். (முஸ்லிம் 2246) என்று காலத்தின் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ [التوبة : 37]

முன்னும் பின்னும் மாற்றுவது நிராகரிப்பையே (குஃப்ரையே) அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அதை (முன்னும் பின்னும் மாற்றுவதை) அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்; மற்றொரு வருடத்தில் அதைத் (முன்னும் பின்னும் மாற்றுவதைத்) தடுத்து விடுகின்றனர். அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கைக்குச் சரியாக்கி கொண்டு, அல்லாஹ் தடுத்ததை தாங்கள் ஆகுமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ், நிராகரிக்கும் (காஃபிர்கள்) கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)

6001 - عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِى ابْنُ آدَمَ يَقُولُ يَا خَيْبَةَ الدَّهْرِ. فَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ. فَإِنِّى أَنَا الدَّهْرُ أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا ». صحيح مسلم - (7 / 45)

ஆதமுடைய மகன் என்னை நோகச் செய்கின்றான். அவன் காலத்தின் நாசம் என்று கூறுகின்றான். உங்கள் எவரும் காலத்தின் நாசம் என திட்டவேண்டாம் ஏனெனில் நிச்சயமாக நானே காலமாக இருக்கின்றேன். அதன் இரவையும் பகலையும் நானே மாற்றுகின்றேன். நான் நினைத்தால் அவை இரண்டையும் பிடித்து வைப்பேன். அறிவிப்பவர்: அபூஹூரைரா (முஸ்லிம் 2246) என்று காலத்தின் முக்கியத்துவத்தை அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.

இன்னும் யவ்முஷ்ஷக் يوم الشك என்ற நாளே இல்லாமல் போகுமே என்று கவலையுறுவதுபோல காட்டிக்கொள்ளும் இவர்கள் முஸ்லிம் சமுதாயம் பிரிந்து விடக்கூடாது, நாம் அனைவரும் ஒற்றுமையாக ஓர் அணியில் இருக்கவேண்டும் என்று எண்ணெற்ற குர்ஆன் வசனங்கள் மூலம் வல்ல அல்லாஹ் எச்சரித்திருந்தும் அவ்வசனங்களை நடைமுறைப்படுத்துவதில் கவலை கொள்வதாகவோ, முயற்சி எடுப்பதாகவோ தெரியவில்லை. அவ்வசனங்களைப்பற்றி கொஞ்சம்கூட சிந்திப்பதில்லை.

எங்கள் மத்ஹபு, எங்கள் தரீக்கா, எங்கள் ஜமாஅத்து, எங்கள் இயக்கம், எங்கள் கட்சி, எங்கள் அமைப்பு என்று இந்த முஸ்லிம் உம்மத் மேற்படி நபர்களால்தான் கூறுபோடப்பட்டு சல்லடையாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பிறைவிஷயத்தை பேசும்போது மட்டும் காலண்டரை பின்பற்றினால் யவ்முஷ்ஷக் -يوم الشك என்ற நாளே இல்லாமல் போகும் என்று கூறும் அறிஞர்கள் மேற்கண்ட பிரிவினை விஷயத்தில் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை இந்த ஆய்வுக் கட்டுரையின் இந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஆழ்மனதே தெரிவிக்கும். இதே அறிஞர்களிடம் முஸ்லிம்கள் அனைவரும் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாளில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நாம் கூறினால் ஒற்றுமை கோஷம் போட வந்துவிட்டார்களோ என்று நம்மை நையாண்டி செய்து நாம் முன்வைக்கும் குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களை சுலபமாகத் தட்டிவிடுவதையும் பார்க்கிறோம்.

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக 72 கூட்டம் சம்பந்தமாக முன்அறிவிப்பு என்று மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வரும் பலஹீனமான அறிவிப்பை காரணம்காட்டி, இந்த உம்மத்து பிரிந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த பலஹீனமான அறிவிப்பில்கூட உள்ளது என்ற நிலையிலும், முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களின் பிரிவினைக்கான காரணத்தை நியாயப்படுத்தி தாங்கள் மட்டும்தான் நேர்வழிபெற்ற ஒரே கூட்டம் என்று பறைசாற்றுகின்றனர். ஒற்றுமையை வலியுறுத்தி பிரிவினையைக் கண்டித்துள்ள இறைவனின் எண்ணற்ற கட்டளையையும், இறைதூதரின் வழிகாட்டுதல்களையும் வசதியாக புறக்கணிக்கின்றனர். மேற்கண்ட ஒற்றுமை விஷயத்தில் பேணிக்கையைக் காட்டாதவர்கள் யவ்முஷ்ஷக் சம்பந்தமான செய்தியை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடுமே என்று பாசாங்கு செய்வது வேடிக்கையிலும் வேடிக்கைதான்.

ஆக யவ்முஷ்ஷக் என்ற மார்க்கத்தில் ஆதாரமில்லாத ஒரு நாளை உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து வாதம் எழுப்புவது அவ்வாறு வாதம் வைக்கும் அறிஞர்களின் அறியாமை என்று நாம் எடுத்துக் கொள்வதா? அல்லது மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்துவதற்கு மேற்படி அறிஞர்களால் நடத்தப்படும் திட்டமிட்ட பிரச்சாரமா? அல்லது முஸ்லிம்கள் எந்த விஷயத்திலும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்ற இஸ்லாத்தின் எதிரிகளின் சதிதிட்டமா? இதில் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்ட அறிஞர்களே நமக்கு விளக்கிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இனியும் யவ்முஷ்ஷக் என்ற நாளை நம்புபவர்கள் கீழ்காணும் கேள்விகளுக்கு விடையளிப்பது கடமையாகும்.

1.யவ்முஷ்ஷக் என்ற நாளில் நோன்பு வைக்கக்கூடாது என்பதற்கும், யவ்முஷ்ஷக் நாள் உண்மையிலேயே இருக்கின்றது என்பதற்கும் குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் எங்கே உள்ளது? அந்த நேரடி ஆதாரத்தைத் தரவேண்டும்

2.யவ்முஷ்ஷக் என்ற நாள் இந்தநாள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லது யவ்முஷ்ஷக் என்ற நாள் 29-வது நாளைக் குறிக்கிறதா? அல்லது 30-வது நாளைக் குறிக்கிறதா? இதற்கான மார்க்க ஆதாரம் எங்கே?

3.யவ்முஷ்ஷக் நாளில் நோன்பு நோற்கக்ககூடாது என்பதை ரமழான் மாதத்தின் இறுதியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ?

4.யவ்முஷ்ஷக் என்ற இந்த சித்தாந்தம் ரமழான் நோன்புக்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற எல்லா சுன்னத்தான நோன்புகளுக்கும் பொருந்துமா?

5.யவ்முஷ்ஷக் என்ற இந்த சித்தாந்தம் ரமழான் மாதத்திற்கு மட்டும்தான் பொருந்துமா? மற்ற எல்லா மாதங்களுக்கும் பொருந்துமா?

6. மாற்றுக் கருத்துடையோர் ரமழான் முப்பதாவது இரவில் பிறை தென்பட்டுவிட்டால் யவ்முஷ்ஷக் என்ற நாள் வராது என்றும் முப்பாதவது இரவில் பிறை தென்படாவிட்டால் அந்த நாள் யவ்முஷ்ஷக் ஆகும் என்றும், அப்போது மஃரிபு வேளையிலிருந்து பிறையை தேடி அலையவேண்டும் என்றும் நம்பி பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்கின்றோம் என கூறி மேற்படி யவ்முஷ்ஷக் நாளன்று எவ்வாறு நோன்பை வைக்கின்றார்கள்? இவ்வாறு நோன்பை நோற்பது அபுல் காசிம் அவர்களுக்கு மாறு செய்வதாகாதா?

7. ரமழான் முப்பதாவது இரவில் பிறை தென்பட்டுவிட்டால் யவ்முஷ்ஷக் இல்லை என்பதும், அதேவேளையில் அந்த முப்பதாவது இரவில் பிறை பார்க்காமல், பிறை தகவல் பெறாமல் போனாலும் யவ்முஷ்ஷக் நாள்தான் எனக்கூறுவதென்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?

8. சந்திரனின் படித்தரங்களைப் பற்றிய துல்லியமான கணக்கை அறிந்து, கணக்கிட்டு அதனடிப்படையில் சந்திர கிரகணம், சூரியக் கிரகணம் போன்றவைகளை முன்கூட்டி அறிவிக்கும் இந்த காலக்கட்டத்தில் யவ்முஷ்ஷக் எப்படி ஏற்படும்?

ஏனெனில் யவ்முஷ்ஷக் என்ற ஒரு மாயநாளுக்கு குர்ஆனிலிருந்து ஒரு ஆயத்தையோ, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலிருந்து ஒரேயொரு ஸஹீஹான ஹதீஸையோ இதுவரை ஆதாரமாக காட்டிட இயலாத நிலையிலும் யவ்முஷ்ஷக் என்ற இல்லாத ஒருநாளைப் பற்றி மணிக்கணக்கில் பிரச்சாரம் செய்து அதை இணையதளங்களிலே பரப்பிவிடும் அறிஞர்களை என்னவென்று சொல்வது? பிறைஆய்வுகளில் மிகவும் பின்தங்கியுள்ள அவ்வறிஞர்களின் பிரச்சாரங்களின் தொனி எந்தஅளவிற்கு சென்றுவிட்டது என்றால் நபி(ஸல்) அவர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தை யவ்முஷ்ஷக் - சந்தேகமான நாள் என்ற சந்தேகத்துடன்தான் வாழும்படி விட்டுச் சென்றுவிட்டார்கள் போலும் என்று பாமரனும் நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. இந்த பேராபத்தின் அபாய விளைவுகளை மேற்படி அறிஞர்கள் என்றுதான் உணர்வார்களோ!

அதே நேரத்தில் அல்குர்ஆனின் கீழ்கானும் வசனங்கள் உட்பட பிறைகளை வைத்து தேதிகளை அறிந்துகொள்வது சம்பந்தமாக வரும் பல்வேறு வசனங்களை நாம் ஆய்வு செய்து பார்க்கையில் யவ்முஷ்ஷக் - அதாவது சந்தேகமான நாள் என்ற ஒன்றை வல்ல அல்லாஹ் ஏற்படுத்திடவே இல்லை என்பதைத்தான் புரிந்திட முடிகிறது.

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ  [يس : 39]

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39) என்று கூறுகிறான்.

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآَيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ [يونس : 5]

அவன்தான் சூரியனைச் ஒளியாகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். அல்குர்ஆன் 10:5

صحيح البخاري - (2 / 676) 1815 - حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم )

ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத்தவிர. எனவே அந்த நாட்களில் அவர் நோன்பு நோற்றுக்கொள்ளலாம். அறிவிப்பவர்: அபூஹரைரா (ரழி). நூல்: புகாரி 1815 (தமிழ் மொழிபெயர்ப்பில் : 1914)

இன்னும் ஷஃபான் மாதத்தின் இறுதி தினங்களில் நோன்பு வைக்க கூடாது என்பது நபிவழி. அதுபோல வழக்கமாக நோன்பு வைக்கும் ஒருவர் மாதத்தின் கடைசி நாட்களில் நோன்பு வைக்கலாம் என்பதும் நபிவழியாகும். இதிலிருந்து விளங்குவது என்னவென்றால், வழக்கமாக நோன்பு நோற்பவர் பிறைகளின் தேதிகளை அறிந்து எந்த மாதத்திற்குரிய கிழமைகளில் நாம் நோன்பு நோற்றிருக்கிறோம் என்ற தெளிவுடன் இருப்பார். ரமழான் மாத நோன்பை மட்டும் வைக்கும் ஒருவர் அனுமானமாக இரு தினங்களுக்கு முன்னதாகவோ, ஒரு தினத்திற்கு முன்னதாகவோ நோன்பு வைத்துக் கொண்டு எனக்கு ரமழான் மாதம் முழுமையாக கிடைத்துவிட்டது என கூறினால் அவர் இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் புரிந்தவராகின்றார் என்பதுதான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் பெறவேண்டிய பாடமாகும்.

எனவே ஒருவர் ரமழான் மாத நோன்புகளை மட்டும் நோற்பவராக இருந்தால், அவர் ரமழானின் முந்தைய மாதங்களின் கணக்கையும், தேதியையும் அறியாமல் நோன்பு வைக்கக் கூடாது. அவர் சந்திரனின் படித்தரங்களை கவனித்து அறிந்த பின்னரே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அல்லது முடிக்கவேண்டும் என்பதுதான் மேற்படி ஹதீஸ்கூறும் நிபந்தனையாக உள்ளது.

மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸில் இருந்து விளங்கும் இன்னொரு முக்கிய பாடம் என்னவென்றால் ரமழான் மாதத்தின் ஒரு தினத்திற்கு முன்னதாகவோ, இரு தினத்திற்கு முன்னதாகவோ நோன்பு வைக்க வேண்டாம் என்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு அன்றே கட்டளையிட்டுள்ளதை சற்று சிந்திக்க வேண்டும். அதாவது தத்தமது பகுதி பிறை நிலைபாட்டில் உள்ளவர்கள் பிறை பார்க்கும் வரை நோன்பை ஆரம்பிக்க முடியாது, ஏனென்றால் பிறையை பார்க்கும் வரை அல்லாஹ் மாதத்தை நீட்டியுள்ளான் என கூறிவருகின்றார்கள். மேற்படி ஹதீஸோ ரமழான் துவங்குவதற்கு ஒரு நாளோ இரு நாளோ மீதி இருக்கும் போது நோன்பு வைக்காதீர்கள் என்று திட்டவட்டமாக கூறுகின்றது. எனவே அன்றைய சமுதாயம் பிறையை பார்க்கும் முன்பே மாதம் 29 தினங்களில் முடிந்துவிடும், அல்லது 30 தினங்களில் முடிந்து விடும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி இருந்தால் தான் மாதத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மீதி இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், மேற்படி ஹதீஸை நாம் அலசும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் துல்லியமாக மாதம் எப்போது துவங்கும் என்பதை அறிந்தும், பேணுதலுக்காக முந்தைய மாத நாட்களையும் ரமழானில் சேர்த்து 32 அல்லது 31 நோன்புகள் வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என்பதால் கூட மேற்படி உத்தரவின் மூலம் அதை இஸ்லாம் தடுத்திருக்கலாம் என்றும் இத்தருணத்தில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகவே தான் நபி(ஸல்) அவர்கள் ரமழான் துவங்கும் தினத்தில் தான் சரியாக நோன்பை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்ற இந்த கட்டளையை கொடுத்துள்ளார்கள் போலும்.

நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த முஸ்லிம் சமுதாயம் எவ்வித விஞ்ஞான முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் பிறைகளை கவனிப்பதிலும், மாதத்தை துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகச்சரியாக செயல்பட்டு முன்னனியில் இருந்துள்ளார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது. அதே வேளையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களைத்தான் முன்மாதிரியாக கருதுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் இன்றைய தத்தமதுபகுதிபிறை, சர்வேதேசப் பிறை நிலைபாடுகளிலுள்ளவர்கள் பிறைகளை கவனிப்பதிலும், மாதத்தை துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகவும் பின்தங்கி ரமழான் மாதத்தில்கூட இரண்டு நோன்புகளையோ அல்லது ஒரு நோன்பையோ சர்வசாதாரணமாக இழக்கும் நிலையில் இருப்பதை பார்த்து பரிதாபப்படுகிறோம். மூன்றாம் பிறையைத்தான் நபி(ஸல்) அவர்கள் முதல் பிறையாக எடுத்துக்கொள்ள கட்டளையிட்டுள்ளார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் கூறியதாக அவதூறாக பிரச்சாரம் செய்யும் மௌலவிமார்கள் தயவுசெய்து மேற்படி ஹதீஸை நிதானமாக படித்து தங்களின் தவறான நிலைபாட்டை திருத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.

ஆக யவ்முஷ்ஷக் என்ற பெயரில் நாள் ஒன்று இருப்பதாகவும், அந்த நாளில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பது ஹராம் என்றும், செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். மேற்படி ஹதீஸிலும் யவ்முஷ்ஷக் என்ற வார்த்தை எங்கேயும் இடம்பெறவில்லை. யவ்முஷ்ஷக் என்ற ஒரு நாள் இருப்பதாகக்கூட அந்த செய்தியில் கூறப்படவில்லை. ஒரு நாளையோ இரு நாட்களையோ கொண்டு ரமழான் மாதத்தை முற்படுத்தாதீர்கள் எனக் கூறப்படும் வாசகத்தை வைத்து இரண்டு நாட்களும் ஷக்குடைய நாள்தான் என்றோ, அல்லது ஒரு நாள்தான் ஷக்குடைய நாள் என்றோ யாரும் கூறினால் அது அவர்களின் சுயவிளக்கமும், அறியாமையும், மனோ இச்சையுமே ஆகும். இவர்கள் கூறுவது உண்மையென்றால், ஒருவருக்கு அந்த நாள் சந்தேகமான நாள், மற்றவருக்கு நோன்பு வைக்க அனுமதி என்ற இரு நிலைபாடும் இந்த செய்தியில் உள்ளதால் இவர்களுடைய யவ்முஷ்ஷக் என்ற வாதம் இங்கே தவிடுபொடியாகிவிட்டது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

ஆக அஷ்ஷஹரு திஸ்வூன் வ இஷ்ரூன். லாத ஸூமு ஹத்தா தரவுல் ஹிலால் என்ற நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மேற்படி ஹதீஸானது இருபத்து ஒன்பது நாட்களைக் கொண்ட ஒரு மாதத்தை நம் வசதிக்கேற்ப முப்பதாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்றோ, முதல்நாள் மஃரிபு வேளையில் அந்தநாளின் மறையும் பிறையை பார்த்துவிட்டு இது அடுத்தநாளுக்குறிய பிறை என்றோ, பிறந்த பிறையை பார்த்துவிட்டுத்தான் நோன்பு பிடிக்கவேண்டுமென்ற ஷியாக்களின் வழிமுறையையோ கூறவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

எனவே பிறையின் படித்தரங்களை கவனிக்காமல் நோன்பு நோற்காதீர்கள், அவைகளை கவனிக்காமல் பெருநாளை கொண்டாடாதீர்கள். உங்களுக்கு அது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்ற மேற்கண்ட நபிமொழியை வைத்து பிறந்த பிறையை புறக்கண்களால்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வது தவறான வாதமாகும்.

ஆக ஸூமு லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி, லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ - போன்ற ஹதீஸ்களை வைத்து பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்வது தவறு என்பதும் தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிவிட்டது.

எனவே சந்தேகத்திற்குரிய நாளில் (யவ்முஷ்ஷக்) எவரையும் நோன்பு பிடிக்க ஹிஜ்ரி கமிட்டி கூறவில்லை. நபி(ஸல்) அவர்களும் கூட மக்களுக்கு அவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக எந்த சந்தேகமும் இல்லாமல் துல்லியமாக உள்ள சந்திரனின் படித்தர கணக்கின் அடிப்படையில் தங்களின் வணக்க வழிபாடுகளை சரியான நாளில் செய்வதற்காகத்தான் ஹிஜ்ரி கமிட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை ஓய்வின்றி செய்து கொண்டுவருகின்றது. மக்களை மீண்டும் சந்தேகத்திற்குரிய (யவ்முஷ்ஷக்) நாட்களில் கொண்டுபோய் விட்டு அவர்களின் இபாதத்களை வீணாக்க முயற்சி செய்பவர்கள்தான் உண்மையில் மக்களிடம் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றார்கள் என்பதையும் இத்தருணத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறைவிஷயத்தில் தங்களுக்கு இருக்கின்ற அறியாமையையும், பின்னடைவுகளையும் மக்கள் விளங்கிவிட்டால் அது தங்களுக்கு அவமானமாக ஆகிவிடுமே என்று கருதிய ஆலிம்களின் பெரும்பான்மையினோர் அவற்றிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காகத்தான் யவ்முஷ்ஷக் போன்ற குழப்பமான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்து சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அத்தகையோர் அல்லாஹ்வின் திருப்பெருத்தத்தை மட்டும் நாடி தவ்பா செய்து மீண்டும் தங்கள் ஆய்வுகளை மறுபரிசீலனை செய்து சத்தியத்தை பின்பற்றும் படி ஹிஜ்ரி கமிட்டி கேட்டுக்கொள்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3384 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:36