செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 12

Rate this item
(0 votes)

 பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 12

பலஹீனமான அறிவிப்புகள் பிறைபார்த்தலுக்கு ஆதாரமாகுமா? - PART1

இதுவரை படித்த விளக்கங்களிலேயே நமது இஸ்லாமிய மார்க்கம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க இன்று அதிகமான மக்கள் நினைத்துள்ளதுபோல் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல தேதிகளை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும் என்பதையும் விளங்கியிருப்பீர்கள். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் ஆர்வமூட்டுகிறதே அன்றி தடை விதிக்கவில்லை என்பதையும் தெளிவாக நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

இருப்பினும் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று வாதிடும் சிலர், பலஹீனமான அறிவிப்புகளை சிறிதும் ஆய்வு செய்திடாமல் தங்களின் பிறை கொள்கைக்கு தக்க ஆதாரங்களாக நம்பி அவைகளை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு அவ்வறிஞர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுமே மிகவும் பலஹீனமாகத்தான் உள்ளன என்ற நிலையில், அத்தகைய அறிவிப்புகளில் சிலவற்றை சுருக்கமான தகவல்களுடன் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு:

 حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أبو البختري عبد الله بن محمد بن شاكر ، ثنا الحسين بن علي الجعفي ، ثنا زائدة ، عن سماك بن حرب ، عن عكرمة ، عن ابن عباس ، قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم ، فقال : إني رأيت الهلال - يعني هلال رمضان - ، فقال : " أتشهد أن لا إله إلا الله ؟ " قال : نعم ، قال : " أتشهد أن محمدا رسول الله ؟ " قال : نعم ، قال : " يا بلال أذن في الناس أن يصوموا غدا " تابعه سفيان الثوري ، وحماد بن سلمة ، عن سماك بن حرب. *(المستدرك على الصحيحين للحاكم  - كتاب الصوم حديث : ‏1477‏).

இப்னு அப்பாஸ் அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அவர் கூறினார் நான் நிச்சயமாக பிறையை கவனித்தேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுகிறாயா? அவர் ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? அவர் ஆம் என்றார். பிலாலே நாளை நோன்பு நோற்க மக்களிடம் நீ அறிவிப்பு செய் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: ஹாக்கிம்.

மேற்படி அறிவிப்பை காரணம் காட்டி பார்த்தீர்களா ஒருகிராமவாசி தனித்து வந்து பிறையை கவனித்து அவர்மட்டும் சாட்சி சொன்னதற்கே நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைப்பதற்கு மக்களுக்கு கட்டளையிடுமாறு பிலால் (ரழி) அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள் பாருங்கள் என்று கூறி இந்த அறிவிப்பு பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரம் என்று வாதம் வைக்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது ''ழயீஃபுல் ஹதீஸ்' 'முஸ்தரபுல் ஹதீஸ்' 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப்பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக முஸ்தரபுகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனனஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகிவிட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்கள்.

இதே ரிவாயத்து அபூதாவுதில் 2006-வது அறிவிப்பாகவும், திர்மிதியில் 659-வது அறிவிப்பாகவும் இடம்பெறுகின்றன. அந்த ஸனதுகளில் வலீது என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் பலஹீனமானவர், கத்தாப் - பொய்யர் என்றும் சரியில்லாதவர் என்றும் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர் ரிவாயத்து செய்யும் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இவ்வளவு கடுமையாக விமர்சங்கள் செய்யப்பட்ட பலஹீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட மேற்படி அறிவிப்புகள் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கு எப்படி ஆதாரமாகும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

எனவே பிறையைப் கவனித்து தகவல் கூறி, நோன்பை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலஹீனமானவையாகவே உள்ளன. மேலும் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிறையை நேரடியாக பார்த்து அறிவித்த ஹதீஸ்களை தறாமல், யாரோ பிறையை கவனித்து அவர்கள் தகவல் அளித்த செய்திகளையே புறக்கண் பார்வைக்கு ஆதாரமாக வைக்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

பிறையை பார்த்ததும் ஒதும் துஆ:

பிறையை (ஹிலால்) பார்க்கும் போது ஓத வேண்டிய துஆ சம்மந்தப்பட்ட கீழ்கண்ட அறிவிப்பை கூறி பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டியது இபாதத் என்பதாலேயே நபி(ஸல்) அவர்கள் அதற்கான துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள் என்றும் கூறி பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்றும் சிலர் வாதிடுவதைப் பார்க்கிறோம். எனவே பிறையை பார்த்ததும் ஓதும் துஆ சம்மந்தப்பட்ட அறிவிப்புகளின் நிலையையும் சுறுக்கமாகக் காண்போம்.

حَدَّثَنَا أَبُو عَامِرٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَايِنِيُّ ، حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ ، قَالَ " اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . مسند أحمد بن حنبل » مُسْنَدُ الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ بَاقِي الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ أَبِي مُحَمَّدٍ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ...

அல்லாஹ்வே, அதை அபிருத்தி உள்ளதாகவும், ஈமானையும், இஸ்லாமையும், சாந்தியையும் தரக்கூடியதாக ஆக்கிவைப்பாயாக! உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான். நூல்: முஸ்னத் அஹமத் அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி)

மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் சுப்யான் அல் மதாயினி மற்றும் பிலால் பின் யஹ்யா என்பவரும் பலஹீனமானவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விபரங்களை மட்டும் சுறுக்கமாக இங்கே தந்துள்ளோம்.

சுலைமான் பின் சுப்யான் என்பவர்பற்றிய விமர்சனங்களில், இமாம்களான இப்னு ஹஜர், தாரக்குத்னீ மற்றும் தஹபீ ஆகியோர் அனைவரும் மேற்படி சுலைமான் பின் சுப்யானை பலஹீனமாவர் ழயீப் என குறிப்பிடுகின்னர். அதைப்போல், இமாம்களான அபூ ஹாதிம் அல் ராஸி, அபூ சுர்ஆ அர் ராஸி, அலி இப்னு மதனீ, முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி மற்றும் யாகூப் பின் சீபா ஆகியோர்கள் மேற்படி நபரை முன்கருல் ஹதீஸ் - ஹதீஸ்களில் தடுக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர். இன்னும் எஹ்யா பின் மயீன், நஸாயீ, மற்றும் அபீ பிpச்ர் அத் துலாவி, லைஸ பி ஸிகா அவர் நம்பகமானவர் அல்ல என்றும் விமர்ச்சித்துள்ளார்கள்.

பிலால் பின் யஹ்யா என்பவர் பற்றிய விமர்சனங்களில், இமாம் இப்னு ஹஜர் அவர்கள் லையினுல் ஹதீஸ் - ஹதீஸ்களில் பலஹீனமானவர் மேலும், தக்ரீபுத்தஹ்ஸீபில் மஜ்ஹூல் இனம் காணப்படாதவர் என்று கூறப்பட்டுள்ளது. இவரை இப்னு ஹிப்பான் அவர்கள் பலஹீனமானவர் ழயீப் எனக் கூறியுள்ளார்கள்.

 ஆக, இந்த அறிவிப்பின் தரம் எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப்பட்டுள்ளதை வைத்தே உணர்ந்து கொள்ள இயலும். மேலும் இவ்வாறான ஹிலாலை பார்த்து துஆ ஓத வேண்டும் போன்ற அறிவிப்புகள், சிறுசிறு வார்த்தை மாற்றங்களுடன் இடம்பெறுகின்றன. அத்தகைய அறிவிப்புகள் அனைத்தும் பலஹீனமான தரத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் பிறந்த பிறையை புறக்கண்ணால், முப்பதாம் நாள் மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க என்ற பிறை நிலைபாட்டை கொண்டவர்களுக்கு இந்த பலஹீனமான அறிவிப்பில் கூட எந்த ஆதாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹிலால் என்ற பதம், சந்திரனின் 12 படித்தரங்களையும் குறிக்கும் என்பதை ஏற்கனவே நமது ஆய்வில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். எனவே எந்த நாளின் ஹிலாலைப் பார்த்து இந்த துஆவை ஓத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், 30-வது நாள் பார்க்கும் பிறைக்கு மட்டும்தான் தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்?

மேற்கண்ட பலஹீனமான செய்தியை நம்பியிருக்கும் மாற்றுக் கருத்துடையோர் கீழ்க்காணும் கேள்விகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு சிந்தித்து பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

1.பிறந்த பிறையை பார்த்து இந்த துஆவை ஒத வேண்டும் என்று சொல்பவர்களில் நீங்களும் இருந்தால் இவ்வாறு எத்தனை தடவை பிறந்த பிறையை நேரடியாக பார்த்து இந்த துஆவை ஓதியுள்ளீர்கள்? அல்லாஹ்வை முன்னிருத்தி தங்கள் நெஞ்சில் கை வைத்து அவர்கள் கூறுங்கள்.

2.அப்படியே நீங்கள் ஒதியிருந்தாலும், உஙகளின் மனசாட்சி அது பிறந்தநாளுக்குரிய பிறை தான் (தலைப்பிறைதான்) என்று ஊர்ஜிதமாக சொல்கின்றதா?

3.30-வது நாள் பார்க்கும் பிறைக்குதான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை நீங்கள் எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?

4.உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான் என்ற வாசகம் அந்த துஆவில் இடம்பெற்றிருக்கையில் நம் அனைவருக்கும் ரப்பாகிய வல்ல அல்லாஹ் பிறைகளை பற்றி அல்குர்ஆனில் கூறியுள்ளவற்றை என்றாவது சிந்தித்ததுண்டா? அவற்றை நடைமுறைப்படுத்த தயாரா?

5.பிறைக்கும் நமக்கும் ரப்பாகிய அல்லாஹ்தான் ஒரு மாதத்தில் புறக்கண்களால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்தைப் பற்றி கூறியுள்ளான். அந்த உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலை பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதலாமா?

6.தேய்பிறையின் இறுதி நாளான உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலுக்கும் மேற்படி துஆ பொருந்தும் என்றால், அதற்கு அடுத்தநாள் சங்கமதினம் என்பதையும், அந்த சங்கம தினத்திற்கு அடுத்தநாள்தான் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

7.இல்லை உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலை பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதக்கூடாது என்றால், ஏன் ஓதக்கூடாது, உர்ஜூஃனில் கதீம் என்ற படித்தரம் பிறையில்லையா? அது பிறையில் சேராது என்பதை ஆதாரங்களுடன் விளக்கத்தயாரா?

8.பிறந்த பிறையை பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும், அந்த பிறையை பார்க்கும் போது துஆ ஒத வேண்டும் என்று கூறுபவர்கள், யாராவது பிறையை பார்த்தால் டவுண் காஜியிடமோ, எங்கள் இயக்கத்தின் தலைமைக்கோ, பிறை கமிட்டியிடமோ அறிவிக்கவும் என்று விளம்பரப்படுத்துகின்றார்கள். அப்படி பிறந்த பிறையை பார்த்த தகவலை மேற்படியார்களுக்கு பார்த்தவர்கள் அறிவிக்கும் போது நீ முதலில் துஆவை ஓதிவிட்டாயா? என்று எந்த டவுண்காஜி கேட்கிறார்? டவுண்காஜிகளுக்கு இவ்வாறு பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துள்ளதா? பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா? ஒருவேளை இந்த துஆவை ஒதத் தெரியாதவர்கள் பிறையை பார்த்து விட்டு அறிவிக்கும் போது அவரின் அந்த தகவலை ஏற்று அமல்செய்யலாமா?

கடந்த 2000-ஆம் ஆண்டு நெல்லை ஏர்வாடியில் பிறை விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில் அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறை பார்க்கவேண்டும் என்று ஒரு சாராரும், சர்வதேச பிறை கொள்கைதான் சரி என்ற மற்றொரு அணியினராக விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை ஆரம்பிக்கும் போது சர்வதேச பிறை கொள்கை தரப்பில் இருந்தவர்கள், இந்த ஹிலாலைப் பார்த்து ஒதும் துஆவை ஒதி நிகழ்ச்சியை ஆரம்பித்த போது, தத்தமது பிறை கொள்கையினர் ஆரம்பிக்கும் போதே பலஹீனமான ஹதீஸா என்று கேலிசெய்தனர். அவ்வாறு கேலிசெய்த தத்தமதுபகுதி பிறையினர் பின்னால் அவர்களின் இதழ் ஒன்றில் இந்த துஆ செய்தியை பிரசுரித்திருந்தார்கள். அப்போது சர்வசேத பிறை கொள்கையினர் அவர்களை கேலிசெய்தனர். இச்சம்பவம் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதால் மக்களின் மறதியை பயன்படுத்தி தற்போது தங்களுடைய பிறை கொள்கையை நிலைநாட்டிட வேறு வழியில்லை என வரும்போது இவ்வாறான பலஹீனமான ஹதீஸ்களையும் தூக்கி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இது போன்ற குற்றச்சாட்டுகளையும், இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் எழுப்ப இயலும் என்றாலும் மேற்படி துஆ சம்பந்தப்பட்ட அறிவிப்பு யாரும் மறுக்க இயலாத வகையில் அமைந்துள்ள ழயீஃபான - பலஹீனமான செய்தியாகும் என்பதால்தான் அதுபற்றி சுறுக்கமாக தகவல்களை மட்டும் இங்கு சம்ர்ப்பித்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3641 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:38