செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 13

Rate this item
(0 votes)

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 13

பலஹீனமான அறிவிப்புகள் பிறைபார்த்தலுக்கு ஆதாரமாகுமா? - PART2

ரிப்யீ பின் கிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தி:

حدثنا مسدد ، وخلف بن هشام المقرئ ، قالا : حدثنا أبو عوانة ، عن منصور ، عن ربعي بن حراش ، عن رجل ، من أصحاب النبي صلى الله عليه وسلم قال : اختلف الناس في آخر يوم من رمضان ، فقدم أعرابيان ، فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلا الهلال أمس عشية ، " فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا " *. )سنن أبي داود  - كتاب الصوم باب شهادة رجلين على رؤية هلال شوال - حديث : ‏2005‏(.

ரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து, நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: ரிப்யீ பின் ஹிராஷ், நூல்: அபூதாவூத் 2005.

حدثنا أبو بكر النيسابوري , ثنا الحسن بن محمد بن الصباح , ثنا عبيدة بن حميد , عن منصور , عن ربعي , عن رجل , من أصحاب النبي صلى الله عليه وسلم , أن النبي صلى الله عليه وسلم أصبح صائما لتمام الثلاثين من رمضان , فجاء أعرابيان فشهدا أن لا إله إلا الله وإنهما أهلاه بالأمس , فأمرهم " فأفطروا " .  (سنن الدارقطني  - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1921‏).

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் முப்பதாம் நாளில் நோன்பு நோற்றவர்களாக சுப்ஹூ வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர். எனவே அவர்கள் அவர்களை நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ரிப்யீ, நூல்: தாரகுத்னீ

மேற்படி அறிவிப்பை வைத்துக்கொண்டு அந்த இரண்டு கிராமவாசிகள் பிறையை பார்த்துவிட்டுத்தானே நபி (ஸல்) அவர்களிடம் அறிவிக்கின்றார்கள் என்று வாதம் வைக்கின்றார்கள். முதலில் ரிப்யீ பின் ஹிராஷ் என்ற தாபியீ அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை மீண்டும் படித்துத் பாருங்கள்.

மேற்காணும் அபூதாவூது 2005-வது அறிவிப்பில் இடம்பெறும் அஷிய்யா என்ற பதம் இரவு உணவு சாப்பிடும் நேரத்தைக் குறிப்பதாகும். மேலும் அங்கே கிராமவாசிகள் பிறை பார்த்ததாக எந்த நேரடி வாசகமும் இல்லை. இன்னும் பிறை பற்றி அஷியிய்யா நேரத்தில் மக்கள் சப்தமிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறியதாகவே செய்தி இடம்பெறுகிறது. மேலும் தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பிலும் யாரும் பிறை பார்த்ததாக நேரடி வாசகம் எதுவும் இல்லை.

மேற்கண்ட இரு அறிவிப்புகளின் இடம் பெற்றுள்ள 'நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர்', 'சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர்' போன்ற வாசகங்களை நேரடியாக மொழிபெயர்த்தால் நகைப்புகுரியதாகவே அமையும். இந்நிலையில் மேற்கண்ட இரு அறிவிப்புகளுமே முர்ஸல் அறிவிப்புகள் ஆகும் என்பதை வசதியாக மறந்தது ஏன்? என்று இந்த அறிவிப்புகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்பவர்களை நோக்கிக் கேட்கிறோம்.

முர்ஸல் என்றால் இடையில் விடுபட்டது என்பது இதன் சொற்பொருளாகும். அதாவது அர்ஸல் என்ற இறந்த கால வினைச் சொல்லிலிருந்து வந்த இஸ்மு மஃப்ஊல் வடிவமே முர்ஸல் என்பதாகும். இதன் பொருள் பொதுவாக விட்டுவிட்டான் என்பதுதான்.

ஏனெனில் முர்ஸல் வகை நபிமொழியில் அறிமுகமான அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அறிவிப்பாளர் தொடர் விடப்பட்டு விடுகிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க நபிமொழிக்கான நிபந்தனைகளில் ஒன்றான (அறுபடாத) அறிவிப்பாளர் தொடர்ச்சியை இழந்த காரணத்தினாலும், விடுபட்ட அறிவிப்பாளரின் விவரம் தெரியாததாலும் அவ்வாறு விடுபட்டவர் நபித்தோழர் அல்லாதவராக இருக்கலாம் என்ற காரணத்தாலும் இந்த முர்ஸல் வகை நபிமொழி ஏற்றுக் கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும் என்று தைஸீரு முஸ்தலஹுல் ஹதீத் போன்ற ஹதீஸ்கலை நூல்களில் நாம் காணமுடிகிறது.

ஒரு செய்தி நபி (ஸல்) அவர்களிடம் இருந்து பெறப்பட்டதா என்பதை அறிவதுதான் ஹதீஸ் கலையின் முக்கிய விதியாகும். ஆறிவிப்பாளர்களின் தொடர் எத்தகைய சந்தேகங்களுக்கும் பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை சீராக சென்று முடிந்தால்தான் அந்தச் செய்தி ஹதீஸ் என்ற தரத்தை அடையும். அதுவரை அதை செய்தியை ஹதீஸாக ஏற்க முடியாது. ஒரு செய்தி நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் நபித்தோழர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த ஒரு தாபிஈ ஒருவரால் பொத்தாம் பொதுவாக நான் ஒரு ஸஹாபியிடம் கேட்டேன் என்று மறைத்து அறிவித்தால் அது எவ்வகையிலும் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது. எல்லா விதிகளும் சரியாக இருக்கும் ஒரு செய்தியைத்தான் ஸஹீஹ் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் கூறப்படும். மேற்கண்ட செய்தி எவ்வகையிலும் மர்ஃபூவு தரத்தை அடையவே முடியாது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் இந்த அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகிவிட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம்.

எனவே தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பும், அபூதாவூது 2005-வது அறிவிப்பும் எந்த நபித்தோழர் இதை அறிவித்தார்கள் என்ற தகவல் காணப்படாத பலவீனமான அறிவிப்புகளாகிவிட்ட நிலையில் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கு அவைகள் எக்காலமும் ஆதாரமாகாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவாக கஷ்டப்பட்டு, மெல்லவும் இயலாமல், விழுங்கவும் முடியாமல் கீழ்கண்ட ஒரு அறிவிப்பை எடுத்துக் கொண்டு இதோ விடுபட்ட நபித்தோழர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், இதுவே எங்களுடைய ஆதாரம் என்று சிலர் முழங்குகின்றனர். அவர்களுடைய அந்த ஆதாரத்தையும் நாம் இப்போது அலசுவோம்.

இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு:

سنن الدارقطني  - كتاب الصيام  باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1938‏
 حدثنا
محمد بن إسماعيل الفارسي , ثنا عثمان بن خرزاذ , ثنا إبراهيم بن بشار , ثنا سفيان بن عيينة , عن منصور , عن ربعي بن حراش , عن أبي مسعود الأنصاري , قال : أصبحنا صبيحة ثلاثين , فجاء أعرابيان رجلان يشهدان عند النبي صلى الله عليه وسلم أنهما أهلاه بالأمس , فأمر الناس " فأفطروا " *

முப்பதாவது காலையை நாம் அடைந்தோம். அப்போது இரு மனிதர்களான கிராமவாசிகள் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நேற்று அதற்காக இருவர் சப்தமிட்டதாக சாட்சி கூறினர். அச்சமயம் அவர் மக்களுக்கு கட்டளையிட்டார். எனவே நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள். அறிவிப்பவர்: அபீ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி) நூல்: தாரகுத்னீ 1938.

மேற்கண்ட இந்த அறிவிப்புதான் மாற்றுக்கருத்துடையோர் எடுத்துகாட்டும் செய்தியாகும். இதிலும் அவர்களுடைய பிறை நிலைபாட்டிற்கு எந்த ஆதாரமும் காண முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த அறிவிப்பின் பலஹீனமான இலட்சனங்களைப் பாருங்கள்.

இதில் அபீ மஸ்வூத் அல் அன்சாரி என்ற நபித்தோழரிடமிருந்து ரிப்யீ பின் கிராஷ் கேட்டதாக அறிவிப்பாளர் தொடர் அறுபடாமல் உள்ளது என்பதே அவர்களின் வாதம். இவ்வாறு வாதம் புரிபவர்களுக்கு ஹதீஸ்கலையை உண்மையிலேயே தெளிவாக படித்திருந்தால் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டியிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுப்யான் பின் உவைனா என்பவரின் இறுதி காலத்தில் மனன சக்தியை இழந்துவிட்டார் என்றும் அவர் செய்திகளை மறைத்து அறிவிப்பார் என்பது அறிஞர்களின் விமர்சனங்களாகும். அதாவது இல்லாததை இருப்பது போலும், இருப்பதை இல்லாதது போலும் ஹதீஸிலும், அறிவிப்பாளர் வரிசையிலும் இணைத்துவிடுவார் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்படி சுப்யான் பின் உவைனாவைப் பற்றி விமர்சித்து உள்ளார்கள்.

மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி என்ற அறிப்பாளரும் பலஹீனமானவரே. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) போன்றவர்கள் இவரைப் பற்றி கூறும்போது, மேற்படி இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதியாகிய இவர் கற்பனை செய்து கூறுவதும், இல்லாததை இணைப்பதும் இவரின் பணியாகும் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி பற்றி இமாம் நஸாயி (ரஹ்) கூறும்போது இவர் பலமற்றவர் என்றும், இவர் கற்பனை செய்து கூறுபவர் என்று இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.

அபூ அகமது பின் ஆதி அவர்கள் இவரைப்பற்றி கூறும்போது இப்னு உவைனாவிடமிருந்து இவர் அறிவிப்பது முர்ஸலாகவே உள்ளது என்கின்றார்கள்.

இமாம் அஹமத் (ரஹ்) அவர்களின் மகனான அப்துல்லாஹ் அவர்கள் இமாம் அவர்களிடம் இவரைப்பற்றி விசாரித்தார். இமாம் அவர்கள் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி அவர்கள் சுப்யானிடமிருந்து அறிவிப்பதாக இவர் கூறினால் அது சுப்யான் பின் உவைனாவிடமிருந்து கேட்டதாக இல்லை. அது வேறு சுப்யானாகும் என்றார்கள்.

இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இவரைப்பற்றி கூறும்போது லைஸ பி ஷை என்று கூறுவார்கள். மேலும் அவர் சுப்யானிடமிருந்து எதையும் எழுதிக்கொள்ளவில்லை. மேலும் அவருடைய கையில் எழுதுகோலை எப்பொழுதும் பார்த்ததேயில்லை. மக்கள் எழுதும் போது சுப்யான் எதையெல்லாம் கூறவில்லையோ அவைகளையெல்லாம் எழுதி வைத்துவிடுவார் என்று கூறியுள்ளார்கள்.

அல் அகீலி அவர்கள் இவரின் பல ஹதீஸ்கள் மீது 'லைஸ லஹூ அஸ்லுன் மின் ஹதீஸி' இப்னு உவைனா என கூறுவார். அதாவது அவருக்கு அபூஉவைனாவின் ஹதீஸில்; எந்த ஒரு மூலமும் கிடையாது என இப்னு அதி கூறும் கூற்றை பதிவு செய்வார்.

இவ்வாறு விண்னை முட்டும் விமர்சனங்கள் மேற்காணும் ரிவாயத்தில் இருக்க, அறிவிப்பாளர் தொடர்பு அறுபடாது வந்துவிட்டதினால் மேற்படி சங்கதிகளை மூடி மறைத்து, அவர்களுடைய நிலைபாட்டிற்கு எந்த சம்மந்தமும் இல்லாத, மேற்படி செய்தியை ஆதாரமாகக் கருதும் மாற்றுக்கருத்துடையோரின் ஹதீஸ் ஆய்வின் மிகவும் பின்னடைந்த போக்கை கண்டு வியப்படைகிறோம். மேற்படி மாற்றுக் கருத்துடையோர் பிறை விஷயத்தில் மக்களை வழி நடத்த கொஞ்சம்கூட தகுதியற்றவர்கள் என்பதற்கு இப்படிப்பட்ட விமர்சனங்குள்ளான செய்திகளை இவர்கள் ஆதாரமாக எடுத்துவைப்பதே சான்றாகும்.

அவர்களின் நிலைபாட்டை தெரிவிக்காத ஒரு செய்தியை அவர்கள் ஆதாரமாக கொண்டுவந்ததில் அது கூட தேறவில்லை என்ற நிலையில் பிறையை புறக்கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட வேண்டும் என்ற அவர்களின் கூற்றை எவ்வாறு நிரூபிக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், அல்லாஹ்வின் உதவியால் இந்த பிறை விஷயங்கள் பற்றி முழுவீச்சில் நாம் ஆய்வுக் களத்தில் இறங்கிய பிறகுதான், மாற்றுக்கருத்துடையவர்கள் ஹதீஸ்களை இப்படிகூடவா வளைத்து திரித்து தங்களுடைய ஆதாரத்திற்காக எடுத்து வைப்பார்கள் என்பதையும், அவர்கள் ஹதீஸ்களை கையாளும் அவல நிலையையும் அறிந்து கொண்டோம். தங்களின் சுயஅறிவிற்கு ஒத்துவராத செய்திகளை அது ஸஹீஹாதாக இருக்கும் நிலையில்கூட அவற்றைத் தட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அவ்வதீஸ்களை துருவித் துருவி ஆய்வு செய்து பலஹீனமாக்க முயலும் அவர்கள், பிறை விஷயத்தில் மட்டும் பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரமாக்க காண்பித்து மக்களை ஏமாற்றும் மோசமான போக்கை கண்டு உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாகினோம். இப்புத்தகத்தை கவனமாக வாசித்துவரும் நீங்கள்கூட இதே மனநிலைமையில் இருக்கலாம்.

ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் பிரபல மௌலவி, சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று அவர் சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலஹீனமான அறிவிப்புகளைக்கூட தமது பிறைநிலைபாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப்பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்று மக்கள் மன்றத்தில் கேட்கிறோம்.

இன்னும் தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக்கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? என்ற நமது ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்ட புத்தகத்தை நீங்கள் படித்தால் முர்ஸலான அறிவிப்புகள் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.

நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்து கொள்ளலாமா? :

حدثنا محمد بن إسماعيل قال : حدثنا إبراهيم بن المنذر قال : حدثنا إسحاق بن جعفر بن محمد قال : حدثني عبد الله بن جعفر ، عن عثمان بن محمد ، عن سعيد المقبري ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم قال : " " الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والأضحى يوم تضحون " *.(سنن الترمذي  الجامع الصحيح  - أبواب الجمعة أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم -  باب ما جاء في أن الفطر يوم تفطرون حديث : ‏665‏).

நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் கிழமையாகும். பெருநாள் நீங்கள் நோன்பு பிடிக்காத கிழமையாகும். ஹஜ்ஜுப் பெருநாள் நீங்கள் குர்பானி கொடுக்கும் கிழமையாகும் ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபு ஹுரைராஹ் (ரழி), நூல்: திர்மிதீ,அபூதாவூத்.

மேற்கண்ட அறிவிப்பை வைத்து மாற்றுக்கருத்துடையோர், நாமாக நோன்பு என்று ஒருநாளை முடிவு செய்துவிட்டால் அது நோன்பு நாளாகிவிடும் என்றும் அதுபோல நாம் விரும்பியபடி அனைவரும் சேர்ந்து பெருநாள் என்று ஒருநாளை முடிவெடுத்து விட்டால் அது பெருநாள் தினமாகிவிடும் என்றும் கூறுகின்றனர். முதலில் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியிருப்பார்களா? என்று சிந்தியுங்கள்.

நீங்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் நோன்பு என்றால் அதில் நீங்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்? தனித்தனி நபர்களையா? அந்தந்த ஊர்களில் வாழும் முஸ்லிம்களையா? அல்லது சர்வதேச முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்து குறிக்குமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.

சரி இந்த அறிவிப்பாவது ஸஹீஹானதுதானா என்றால் அதுவுமில்லை. இந்த அறிவிப்பில் இப்ராஹிம் பின் முன்திர் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப்பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) மற்றும் ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்றோர் கூறும்போது இவர் வெறுக்கக்படக்கூடியவர் மேலும் கல்கில் குர்ஆன் (குர்ஆன் படைக்க பட்டதா) என்ற விஷயத்தில் இவர் பேசப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் முஹம்மது என்பவரும் இடம் பெற்றுள்ளார். அவரை சந்தேகத்திற்குரியவர், வெறுக்கக்படக்கூடியவர் என்று இமாம் தஹபி (ரஹ்) மற்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி படித்தவுடனேயே இது பலஹீனம்தான் என்று பளிச்சென்று தெரியும் மேற்கண்ட அறிவிப்பா? புறக்கண்ணால் பிறந்த பிறையை பார்ப்பதற்கு ஆதாரம்? மேலும் மேற்கண்ட அறிவிப்பில் சில வார்த்தை மாற்றங்களுடன் வந்துள்ள அனைத்து செய்திகளும் பலஹீனமானவைகளே.

மேலும், மேற்கண்ட அறிவிப்பில் உள்ள வாசகங்களை உற்று நோக்கும் போது, ஒரே நாளில் தான் அனைவரும் நோன்பிருக்க வேண்டும். அதே போல் ஒரே நாளில் தான் பெருநாளாகும் என்பதைத்தான் அந்த செய்தி தெளிவுபடுத்துகின்றது. எனவே மேற்கண்ட அறிவிப்புகள் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்திருக்குமானால் அது ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஆதாரமான செய்தியாகவே அமைந்திருக்கும். மேலும் அவர்கள் கூறுவது போல் மக்கள் தீர்மானத்தின்படி மாதத்தை ஆரம்பித்தும் பெருநாளை முடிவு செய்தும்  கொள்ளலாம் என்ற நிலைபாட்டை அந்த அறிவிப்பில் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எனவே அவர்களுடைய நிலைபாட்டிற்கு மேற்கண்ட இந்த அறிவிப்பும் ஆதாரமாக அமையவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

மேற்கண்ட பலஹீனமான அறிவிப்புகளை, பல விமர்சங்களைக் கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திகளை முன்னிருத்தி மாதத்தைத் தீர்மானிக்க 30-வது நாள் இரவில் மேற்குத் திசையில் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்ற அவர்களின் நிலைபாட்டிற்கு இவைகளே ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்களுடைய நிலைபாட்டிற்கு எந்தவிதமான தரமான, ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகிவிட்டது. இன்னும் பிறை பார்த்தல் சம்பந்தமாக மாற்றுக்கருத்துடையோர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் ஒன்று பலஹீனமான செய்தியாக இருக்கும், அல்லது அவர்களின் நிலைபாட்டிற்கு ஆதாரமாக அவைகள் அமையாது என்ற நிலையில்தான் உள்ளன.

மேலும் அவர்களுடைய புறக்கண்பார்வை அடிப்படையில், 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்த்து அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்வதுதான் நபிவழி என்றும், அன்றைய முப்பதாம் இரவு மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்பதும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்று நம்பியுள்ளனர். மாற்றுக்கருத்துடையோரின் இந்த நம்பிக்கைக்கும், நிலைபாட்டிற்கும் நபி (ஸல்) அவர்களின் எவ்விதமான சொல், செயல், அங்கீகாரம் உள்ள ஒரு ஸஹீஹான ஹதீஸைக் கூட இதற்கு ஆதாரமாக இதுவரை காட்டமுடியவில்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

மாற்றுக்கருத்துடையோரின் மேற்படி நம்பிக்கைக்கும், அவர்களின் பிறை நிலைபாட்டிற்கும் குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இல்லவே இல்லை என்பதை இவர்களை கண்ணியமாக அணுகி, குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை சமர்ப்பித்து, சுட்டிக்காட்டி, பல விளக்கங்களை அளித்தும் அவற்றை எல்லாம் கொஞ்சம்கூட ஏறிட்டு பார்க்காமல் 'பிறந்த பிறையை புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும்' என்று இன்றும் அடம்பிடித்து வருவதை பார்க்கிறோம். இவ்வாறு அடம்பிடித்து, மார்க்கத்தின் பெயரில் மக்களையும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்லும் மேற்படி அறிஞர்கள் பிறைவிஷயத்தில் தங்கள் மனோ இச்சையைத்தான் மார்க்கமாக பின்பற்றுகின்றனர், இன்னும் உலக ஆதாயங்களை பெறுவதற்காகவும், பெருக்குவதற்காகவுமே சத்தியத்தை மூடி மறைக்கின்றனர் என்பதை மக்களே நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3595 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:38