செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 14

Rate this item
(0 votes)

பிறையும் புறக்கண்ணும்!!!- பகுதி : 14

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும்.

பிறைகளை புறக்கண்களால் பார்ப்பது சம்பந்தமான ஆய்வுக்கட்டுரையே இது என்பதால் இந்த சாட்சி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் எதிர்தரப்பினர் சாட்சி விஷயங்களிலும் புறக்கண்பார்வை உள்ளடங்கியுள்ளது என்றும், இதுவும் எங்களுடைய பிறை நிலைபாட்டிற்கு ஆதாரம் எனவும் தற்போது வலியுறுத்த ஆரம்பித்துவிட்டதால், பிறைசாட்சி சம்பந்தமான செய்திகளையும் ஆய்வு செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.

மாற்றுக்கருத்துடையோரின் நிலைபாட்டின்படி தத்தமது பகுதியில் அல்லது சர்வதேச நாடுகளில், ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் (அவர்களின் பாஷையில் 29 நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு) புறக்கண்ணால் பார்க்கவேண்டும், அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும், அல்லது முப்பது நாட்களாக முழுமை செய்து அந்த மாதத்தை முடிக்க வேண்டும். இதுதான் அவர்களின் பிறை நிலைபாடு. ஒரு மாதத்தின் இறுதிநாட்களில் தேய்பிறைகள் மஃரிபு வேளையிலா தெரியும்? 29-ஆம் நாளின் பிறையை மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பார்க்கலாம் என்று இவர்கள் நம்பியுள்ளதே இவர்களுக்கு சந்திரன் எந்த திசையில் உதிக்கிறது எந்த திசையில் மறைகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. (வீடியோ ஆதாரம் பார்க்க)

ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையிலும், 29-ஆம் நாளுக்குரிய பிறையை 28-ஆம் நாளின் மஃரிபு வேளையில் மேற்குத்திசையில் புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்றால் அந்த மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் பார்க்க வேண்டும்? அவர்கள் கூற்றுப்படி 29 நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு என்பதற்கு எந்த மார்க்க ஆதாரமும் கிடையாது.

ஒரு மாதத்தின் 30-ஆம் நாள் பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் புறக்கண்ணால் பார்க்கவேண்டும், அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியை பெறவேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை என்பதற்கு இதுவரை ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியையோ மாற்றுக் கருத்துடையோரால் சமர்ப்பிக்க இயலவில்லையே ஏன்? சிந்திக்கக்கூடாதா?. தேய்பிறைகள் மஃரிபு வேளையிலோ, மேற்குத்திசையிலோ காட்சியளிப்பதில்லை அவைகள் ஃபஜ்ரு நேரத்தில் கிழக்கு திசையில்தான் காட்சியளிக்கும் என்ற சாதாரண அடிப்படை விஷயத்தை மறுத்து 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்களா? மக்களே சற்று சிந்தியுங்கள்.

பிறைகளை புறக்கண்களால் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் பார்க்கவேண்டும் என்ற தங்களுடைய பிறை கொள்கைக்கு ஆதாரங்கள் என்று கூறிவந்த பல செய்திகள் அவர்களுடைய பிறை நிலைபாட்டிற்கு எதிரானதாகவும், பலஹீனமான, இட்டுக்கட்டபட்ட செய்திகளாகவுமே உள்ளதை பலஹீனமான அறிவிப்புகள் பிறைபார்த்தலுக்கு ஆதாரமாகுமா? என்ற இந்த தலைப்பின்கீழ் தொடர்ந்து படித்துவருகிறோம்.

இதன் வரிசையில் பிறை பார்த்த சாட்சியை ஏற்றுக்கொள்ளலாமா? பிறை பார்த்ததற்கு ஒரு சாட்சி மட்டும் போதுமா? அல்லது பிறை பார்த்ததற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் தேவையா? போன்ற சர்ச்சைகள் நிலவிக்கொண்டே இருப்பதையும் அறிவோம். இத்தகைய பிறை சாட்சி சம்பந்தப்பட்ட செய்திகளையும் நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அதாவது இந்த பிறைசாட்சி சம்பந்;தமான விஷயத்திற்குக்கூட மாற்றுக்கருத்துடையோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இதுகாலம்வரை சமர்ப்பிக்கவில்லை. இவர்கள் ஆதாரமாக நம்பியுள்ள ஒரு சாட்சியைக் கொண்டு பிறையை தகவலை செயல்படுத்தியதாக வரும் அனைத்து செய்திகளும் பலஹீனமாக உள்ள நிலையில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தகவல் பெற்று செயல்பட்டதாக வரும் செய்திகளும் முர்ஸலான, மவ்கூப் செய்தியாகவே உள்ளன என்பதுதான் வேதனையிலும் வேதனை. எனவே அவற்றைப்பற்றியும் நாம் சுறுக்கமாக இங்கே ஆய்வுசெய்வோம்.

مسند أحمد بن حنبل  - أول مسند الكوفيين حديث أصحاب رسول الله صلى الله عليه وسلم - حديث : ‏18510‏

حدثنا يحيى بن زكريا ، قال : أخبرنا حجاج ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه ، فقال : ألا إني قد جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم ، وسألتهم ، ألا وإنهم حدثوني ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأنسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان مسلمان ، فصوموا وأفطروا " *

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ''அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை விடுங்கள். மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் அறுத்து பலியிடுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பதாக முழுமையாக்கி கொள்ளுங்கள். மேலும் இரண்டு முஸ்லிம்களின் சாட்சியை பெற்றால் நோன்பு வையுங்கள் நோன்பை விடுங்கள். அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: அஹமத்

السنن الكبرى للنسائي  - كتاب الصيام  ذكر الاختلاف على سفيان في حديث سماك - حديث : ‏2395‏

 أخبرنا إبراهيم بن يعقوب ، قال : حدثنا سعيد بن شبيب أبو عثمان ، وكان شيخا صالحا بطرسوس ، قال : أخبرنا ابن أبي زائدة ، عن حسين بن الحارث الجدلي ، عن عبد الرحمن بن زيد بن الخطاب ، أنه خطب الناس في اليوم الذي يشك فيه فقال : ألا إني جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم وسألتهم ، وإنهم حدثوني أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته ، وانسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان فصوموا وأفطروا " *.

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ''அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை விடுங்கள். மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் அறுத்து பலியிடுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பதாக முழுமையாக்கி கொள்ளுங்கள். மேலும் இருவரின் சாட்சியை பெற்றால் நோன்பு வையுங்கள் நோன்பை விடுங்கள். அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: அஹமத்

سنن الدارقطني  - كتاب الصيام  باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1920‏

 حدثنا أبو بكر , ثنا أبو الأزهر , ثنا يزيد بن هارون , ثنا الحجاج , عن الحسين بن الحارث , قال : سمعت عبد الرحمن بن زيد بن الخطاب , يقول : إنا صحبنا أصحاب النبي صلى الله عليه وسلم وتعلمنا منهم وإنهم حدثونا أن رسول الله صلى الله عليه وسلم , قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته , فإن أغمي عليكم فعدوا ثلاثين , فإن شهد ذوا عدل فصوموا وأفطروا وأنسكوا " *

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ''அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை விடுங்கள். மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் அறுத்து பலியிடுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். மேலும் நீதமானவர்களில் இருவரின் சாட்சியை பெற்றால் நோன்பு வையுங்கள் நோன்பை விடுங்கள் இன்னும் அறுத்து பலியிடுங்கள். அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: தாரகுத்னீ

معرفة الصحابة لأبي نعيم الأصبهاني  - باب العين  عبد الرحمن بن زيد بن الخطاب  - حديث : ‏6626‏

 حدثنا أبو بكر بن مالك ، ثنا عبد الله بن أحمد بن حنبل ، حدثني أبي ، ثنا يحيى بن زكريا ، ثنا حجاج يعني ابن أرطأة ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه من رمضان ، قال : ألا إني قد جالست أصحاب النبي صلى الله عليه وسلم وساءلتهم ، ألا وإنهم حدثوني أن النبي صلى الله عليه وسلم ، قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأمسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، فإن شهد شاهدان مسلمان فصوموا وأفطروا " *

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ''அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை விடுங்கள். மேலும் அதன் காட்சியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பதாக முழுமையாக்கி கொள்ளுங்கள். மேலும் இரண்டு முஸ்லிம்களின் சாட்சியை பெற்றால் நோன்பு வையுங்கள் நோன்பை விடுங்கள். அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்:மஹாரிபத்து ஸஹாபா

மேற்கண்ட நான்கு அறிவிப்புகளையும் ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற தாபியீதான் அறிவிக்கின்றார். மேலும் அந்த தாபியீ அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் என்ற தாபியீ இடமிருந்து அறிவிப்பதாகவே செய்தியில் உள்ளது. அந்த தாபியீயும் நபித்தோழர்களான ஸஹாபாக்களிடம் இருந்தே அறிந்ததாக கூறுகின்றார். அதை அவருக்கு அறிவித்த ஸஹாபியின் பெயரை அவர் வெளியிட்டு கூறவில்லை என்பது இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

அதில் ''நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக' என்ற வாசகங்கள் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்களின் சொற்பொழிவின் கருத்துக்களாகும்.

ஸஹீஹான ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரணாக இருப்பதாக தாங்கள் கருதினால் அவைகளை பின்பற்றக் கூடாது என வாதிடும் இவர்கள், தற்போது ஸஹாபாக்களின் கூற்றையும் விட கீழ்நிலையில் உள்ள தாபியீன்களின் கூற்றையும் ஏற்கத் தயாராகிவிட்டது அவலத்திலும் அவலம்.

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் இரண்டு வயதுடைய குழந்தையாக இருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மேலும் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபியும் அல்ல. மேலும் இவர்களுக்கு இரண்டு வயது இருக்ககும்போதே நபி(ஸல்) அவர்கள் மரணித்தும் விட்டதால், இவர் ஸஹாபிகளிடம் இருந்தே ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார்கள்.

ஹீசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்பவர் தாபியீ ஆவார். அவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடமிருந்து மாணவர் என்ற ரீதியில் கேட்காமல், ஏதோ உரை நிகழ்த்தும் போது கேட்டதாகவே இச்செய்தி பதியப்பட்டுள்ளது. மேலும் இச்செய்தியை வேறு எந்த ஸஹாபியோ அல்லது தாபியோ நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக அறிவிப்புகளில் இல்லை. ஆகவே இந்த செய்தி முர்ஸல் என்னும் முன்கதீ (தாபியின் தரத்தில் உள்ளவர் அறிவிப்பதாகும்)

மேலும் நான்கு நூற்களில் வரும் அறிவிப்புகளையும் ஹீசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற ஒரே நபர்தான் இந்த செய்தியை அறிவித்திருந்தும், அந்த அறிவிப்புகளில் ''இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும்' என்றும், ''இருவரின் சாட்சி இருந்தாலே' என்றும், அதன் பிறகு ''நீதமான இரு சாட்சிகள்' எனவும் வார்த்தைகளை மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம்.

ஒரு அறிவிப்பில் இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும் என பதியப்பட்டுள்ளது. அதே நபர் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் இருவரின் சாட்சி இருந்தாலே போதுமானது என பதியப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் அல்லாதவர்களின் சாட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டாவது அறிவிப்பு கூறுகின்றது என நாம் விளங்கிக்கொள்ளலாமா? மேலும் அதே நபர் அறிவிக்கும் அடுத்த அறிவிப்பில் நீதமான இரு சாட்சிகள் என கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் கணிசமானோர் நீதமாக இல்லாமல் இருக்கும் போது நீதமான பிற மதத்தவர்கள் கூறும் சாட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என்று இந்த அறிவிப்பு கூறுகின்றதா? என்பதையெல்லாம் இந்த அறிவிப்பு பலமானது என்று கூறுவோர் பதில் தர கடமைப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் என்பவர் பலஹீனமானவர் ஆவார்.

قال الذهبي في الكاشف : أحد الأعلام ، على لين فيه ... قال أحمد : كان من حفاظ الحديث ... وقال أبو حاتم : صدوق يدلس ، فإذا قال حدثنا فهو صالح ...

قال أبو حاتم : صدوق ، يدلس عن الضعفاء يكتب حديثه ، فإذا قال : حدثنا ، فهو صالح لا يرتاب فى صدقه و حفظه إذا بين السماع ، لا يحتج بحديثه

قال إبن حجر في التقريب : صدوق كثير الخطأ و التدليس ، أحد الفقهاء

قال أبو زرعة : صدوق يدلس

قال يحي بن معين : قال أبو بكر بن أبى خيثمة ، عن يحيى بن معين : صدوق ، ليس بالقوى ، يدلس عن محمد بن عبيد الله العرزمى ، عن عمرو بن شعيب

قال عبد الله بن المبارك  :  كان الحجاج يدلس

قال النسائي : ليس بالقوي

قال يعقوب بن شيبة : واهى الحديث ، فى حديثه اضطراب كثير ، و هو صدوق ، و كان  أحد الفقهاء

காஷிப் என்ற புத்தகத்தில் மேற்கண்ட ஹஜ்ஜாஜ் என்பவரைப்பற்றி அறிஞர்கள் கூறுவதாக இமாம் தஹபி அவர்கள் கூறும்போது, இவர் அறிஞர்களில் ஒருவராவார். அவர் மீது சில பலஹீனங்கள் உள்ளன. இமாம் அஹமது அவர்கள் கூறும் போது இவர் ஹதீஸ் மனனம் செய்தவர்களில் இருந்தார் மேலும் அபூஹாதிம் அவர்கள் இவரை ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர் என்ற கூறியுள்ளார்கள். அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர்.

யாகூப் பின் ஷைபா அவர்கள் ஹஜ்ஜாஜைப் பற்றிக் கூறும்போது ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் இருக்கும், அவர் ஒப்புக்கொள்ளப்பட்டவர், அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்கின்றனர்.

இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இவரை பலமில்லாதவர் எனக் கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கூறும்போது: ஹஜ்ஜாஜ் அவர்கள் இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார் என்று விமர்சித்துள்ளார்கள்.

யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள் கூறும்போது : ஒப்புக்கொள்ளப்பட்டவர், பலமில்லாதவர், அவர் முகமது பின் உபைதுல்லாஹ் விடமிருந்து அமர் பின் ஷுயைப்பிடமிருந்தும் இருட்டடிப்பு செய்பவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

அபூஹாதிம் அல் ராஸி (ரஹ்) கூறுகின்றார்கள் : ஒப்புக்கொள்ளப்பட்டவர், இவர் பலஹீனமான நபர்களிடமிருந்து இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர். அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் அதை எழுதியும் கொள்ளலாம். அந்த செய்தி உண்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் செவியுற்று தெளிவு பெற்றாலே தவிர. இல்லையெனில் அந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது.

தக்ரீபில் இப்னு ஹஜர் (ரஹ்) கூறும்போது, அதிக தவறு செய்யக் கூடியவர் இருட்டடிப்பு செய்பவர், அறிஞர்களில் ஒருவர்.

அபூ சுர்ஆ கூறும் போது: ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர்

மேலும் மேலே நாம் பதிந்துள்ள நான்கு அறிவிப்புகளிலும் ஹஜ்ஜாஜ் என்பவர் حدثنا - ஹத்தஸனா' என அறிவிக்காமல் عن”- அன்' என்ற பதத்தை கொண்டே அறிவித்துள்ளார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இன்னும் இந்த செய்தியை அறிவிக்கும் ஹீசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ அவர்கள்கூட நம்பகமானவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் ஏதுமில்லை. ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை நல்லவராக இருக்கலாம் என்ற சந்தேக வார்த்தையை கொண்டே குறிப்பிடப்படுகின்றார்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத, பலஹீனமான அறிவிப்பாளர் வரிசை கொண்ட, குழப்பமான வார்த்தைகளை உள்ளடக்கிய மேற்கண்ட இந்த அறிவிப்பு எப்படி நபிமொழியாக அமையும் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்கள் அறிவித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறி, அவ்வாறு அறிவித்த நபித்தோழர்கள் யார் யார்? என்று அடையாளம் காட்டாமல் வந்துள்ள இந்த அறிவிப்பு ஷாஹிதானி என்ற இரண்டு சாட்சிகளின் விஷயத்திற்கோ, பிறைபார்த்தலுக்கோ, பிறைபார்த்த தகவல்களுக்கோ ஒரு போதும் ஆதாரமாக அமையாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3960 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:39