செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 18

Rate this item
(0 votes)

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 18

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார்?

அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ இந்த உம்மத்திற்குப் பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று கூறிடவில்லை. ஒரு வருடத்தில் ஷஃபானின் இறுதிநாள், ரமழானின் இறுதிநாள் என அவரவர்கள் நினைக்கும் அந்த இருநாட்கள் மட்டும் பிறையை புறக்கண்களால் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை மார்க்கம் கடமையாக வலியுறுத்தவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம். அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் பிறைகளைப் பற்றி நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளதை இங்கு நினைவுபடுத்துகிறோம்.

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்? நீர் கூறும் அவை மக்களின் தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

'அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்குத் தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.' அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்.

பரிசுத்த இறை வேதம் திருக்குர்ஆன் பிறை பற்றிக் கூறும் போது 'அஹில்லாஹ் - பிறைகள்' என்று பன்மையில் (பார்க்க 2:189) கூறுகிறது. பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனித்தும், துல்லியமாகக் கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே குர்ஆன் சுன்னாவின் கட்டளை. அதன் அடிப்படையில் நோன்பையும், இரு பெருநாட்களையும் அந்த 'அஹில்லா'க்களின் (பிறைப் படித்தரங்களின்) அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறையின் ஒரு வடிவ நிலையை மட்டும் கவனிக்காமல் அனைத்துப் பிறை படித்தரங்களையும் கவனிக்க வேண்டும் என்பது மார்க்கம் இட்டுள்ள கட்டளையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாகப் பின்பற்றுகிறோம். பிரச்சாரம் செய்தும் வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதையும், பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு இஸ்லாமிய நாட்காட்டியை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிடவும் வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம். இதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடி ஆதாரங்களை எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம். இந்தப் பிறைக் கணக்கீட்டு முறையை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லும்போது மாற்றுக் கருத்துடையோர், ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் புறக்கண்களால் பார்க்கவே தேவையில்லை என வாதிடுகின்றார்கள் என்று சர்வ சாதாரணமாக நம்மை குறித்து அவதூறைப் பரப்பி வருகின்றனர்.

அந்தந்த நாளுக்குரிய பிறையைத்தான் அந்தந்த கிழமையில் பார்க்க முடியும், கடந்த காலப் பிறைகளையும், வருங்காலப் பிறைகளின் (மனாஜில்) படித்தரங்களையும் புறக்கண்களால் பார்க்க இயலாததின் காரணத்தால் அவற்றைக் கணக்கிட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு குர்ஆன் கூறும் பல ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதைத்தான் நாட்காட்டி (Calendar) என்கிறோம். இந்த அடிப்படை விஷயத்தைக் கூட விளங்காதவர்கள்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதை மறுப்பதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு வருடத்தில் ஷஃபான், ரமழான் மாதங்களில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மட்டும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் மேற்படி நபர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றனர். அதனால்தான் பிறைகைளைப் புறக்கண்ணால் பார்த்து வருபவர்கள் யார்? என்பதையும் விளக்க வேண்டியுள்ளது.

பிறைகளைக் கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக நம்மை விமர்சிப்போர் நினைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். தமிழக வரலாற்றில் பல வருடங்களாகப் பிறைகளின் படித்தரங்களைப் புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் இப்பணியில் இல்லை என்பதை அறியத் தருகிறோம். இதைப் பெருமைக்காக நாம் சொல்லவில்லை, மாறாக பிறை விஷயத்தில் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் பிறைகளைப் புறக்கண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களைத் தவறான வழியின்பால் இட்டுச்செல்வதை அறியத் தருகிறோம். இந்தப் பிறை விஷயத்தை மையமாக வைத்து முஸ்லிம் உம்மத்தை பிளவுபடுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியை விட்டும் மக்களை மீட்டெடுக்கத்தான் நாம் போராடி வருகிறோம். அப்படிப்பட்ட நம்மைப் பார்த்து, ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் பார்க்கவே கூடாது என்கின்றனர் என்று அவதூறு பரப்புகின்றனர் என்றால் அதை என்னவென்று சொல்வது?

மக்களே! அந்தந்த நாட்களில் தெரியும் பிறை அந்தந்த கிழமைக்குரிய தேதியைத்தான் காட்டும். ஸஹீஹூல் முஸ்லிம் கிரந்தத்தில் 1885-வது நபிமொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் எந்தக் கிழமையில் பிறையைக் கவனிக்கின்றோமோ அது அந்த கிழமைக்குரியது, அடுத்த நாளுக்குரியது அல்ல என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறோம்.

ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாகக் கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய் பிறைகளையாவது கண்டிப்பாகக் பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு பிரயாணத்திற்குச் செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். விமானம் புறப்படும் அந்த நேரத்தில் நீங்கள் பிரயாணத்திற்குத் தயாராக மாட்டீர்கள். மாறாக பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்காக தயாராகுவீர்கள், விமானம் புறப்பட சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்தை அடைய முயல்வீர்கள். அதுபோலத்தான் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை நீங்கள் தெரிந்து பெருநாளைச் சரியான தினத்தில் கொண்டாட வேண்டுமெனில் ரமழான் மாதத்தின் இறுதி நாட்களின் பிறைகளையாவது சரியாகக் கவனித்தும், கணக்கிட்டும் வந்திருக்க வேண்டும். எல்லா பிரயாணத்திற்கும், வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும், குறித்து வைத்துக்கொள்வதற்கும் சந்திர நாட்காட்டி அவசியம் என்பதை உண்மையான முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள். இங்கு நாம் பிரயாணத்திற்கும் பிறைக்கும் முடிச்சுப் போடவில்லை, புரிந்து கொள்வதற்காகவே இந்த உதாரணத்தைக் கூறுகிறோம். மேற்படி உதாரணத்தை மறுத்தாலும் பிறைகளை அவதானித்து, சரியாகக் கணக்கிட்டு வருவதற்கு குர்ஆனும் சுன்னாவும் ஆதாரமாக இருக்கின்றன என்பதைச் சான்றுகளோடு நாம் விளக்கி வருகிறோம்.

சரி, அவ்வாறு நீங்கள் தேய்பிறைகளைக் கணக்கிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த கிழமைக்குரிய தேதியைக் காட்டுகிறது? என்பதைத் தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே. ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது? என்பதை முற்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு திசையில் மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறையானது பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்தப்பிறை 7-வது அல்லது 8-வது தேதியைக் காட்டுகிறது. இது மாதத்தின் முதல் கால்பகுதி (First Quarter) ஆகும்.

மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்குத் திசையில் உதித்துக் கொண்டிருந்தால் அந்தப்பிறை பௌர்ணமி என்னும் முழுநிலவு நாளின் தேதியைத் தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14 அல்லது 15-ஆம் நாட்களில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம். இது மாதத்தின் முழு நிலவு நிலை (Full Moon) ஆகும்.

அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்தப் பிறை 21 அல்லது 22 வது தேதியைக் காட்டும் பிறையாகும். இது மாதத்தின் கடைசி கால் பகுதி நிலை (Last Quarter) ஆகும்.

இதில் முதல் கால் பாதி நிலை 6-வது நாளில் வருவதும், பவுர்ணமி 13 அல்லது 16-வது நாளில் ஏற்படுவதும், இறுதி கால்பகுதி 23-வது நாளில் ஏற்படுவதும் அரிதானதாகும். அதுபோல வளர்பிறைகளின் நிலை (Waxing crescents), முதல் கால் பகுதி நிலை (First Quarter), முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous), முழு நிலவு நிலை (Full Moon), தேய்பிறையை எதிர் நோக்கி தேயும் நிலை (Waning Gibbous), கடைசி கால் பகுதி நிலை (Last Quarter), தேய் பிறைகளின் நிலை (Waning Cresents) போன்றவை மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களைப் பொருத்து தேதிகளால் மாறுபடும்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இவை பிறைகளைத் தோராயமாக அறிந்துகொள்ளும் முறைதான். பிறையானது எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தக் கோண விகிதத்தில் தற்போது உள்ளது என்பதையும், அது உதிப்பதையும், அதன் வளர்ச்சியையும், பின்னர் அது மறைவதையும், அதன் நிலைகளையும் துல்லியமானக் கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிந்த விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

மேலும் கடைசி கால் பகுதி நிலையிலிருந்து (Last Quarter), சந்திரனின் தேய்ந்து வரும் படித்தரங்(மன்ஸில்)களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்தக் கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களை, வடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் 36:39 இறைவசனம் கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால் உர்ஜூஃனில் கதீம் 28-ஆம் நாள் அன்று காட்சியளிக்கும்.

உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.

அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(F), க(G)ம்மிய, ஹஃபிய கும்ம உடைய அல்லது குபிய உடைய நாள் என்கிறோம். அந்த கும்மாவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்குச் சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறித் திரிவோர் சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரங்களான மனாஸிலை منازل புறக்கண்ணால் அறிந்து கொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்குச் சொல்லி இருக்கிறார்களா? அல்லது அவர்களாவது மாதந்தோறும் பிறைகளை அவதானித்துக் கணக்கிட்டு வந்துள்ளார்களா?– சிந்தியுங்கள்

புறக்கண்ணால் பிறைகளைத் தோராயமாகக் கணக்கிடும் முறைதான் விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலத்தில் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த அந்த முஸ்லிம் உம்மத் மொழியை எழுதும் எழுத்தறிவும், அடிப்படைக் கணக்கறிவும் பெற்றிருந்த சமுதாயமாகத் திகழ்ந்தனர் என்றாலும், சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சிகளைக் (முற்கூட்டியே) கணக்கீடு செய்து நாட்காட்டி தயாரிக்கும் வானியற்பௌதீகம் (Astrophysics) என்னும் விஞ்ஞான அறிவு பெற்றிராத உம்மி சமுதாயமாக இருந்தனர் (புகாரி 1913). பிறைகளைக் கணக்கிடுவதற்குப் புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒருநிலை மட்டும்தான் அந்த உம்மி சமுதாய மக்களிடம் இருந்தது. எனவே பிறைகளைப் புறக்கண்ணால் பார்த்தே அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர்.

தற்போதைய விஞ்ஞான முன்னேற்றத்தின் வாயிலாக முதல் பிறை எந்தப் பகுதியில் தென்படும் என்பதைத் துல்லியமாகக் கணக்கீடு செய்ய முடிந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தோராயமாக அறிந்து கொள்வதை விடத் துல்லியமான கணக்கீட்டின்படி ஒப்பிட்டு பார்த்துப் பின்பற்றுவதை நம் மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியுறுத்தியும் ஆர்வ மூட்டியும் இருப்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் இருந்துகொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள், இவ்வாறு பிறைகளைப் புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பதிலாவது உண்மையாளர்களாக இருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து மாதம் முழுவதும் பார்த்து வருவதுமில்லை, பிறைகளை ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை. இதுதான் பிறையைப் பார்த்து நோன்பு வைப்போம் என கூறுபவர்களின் உண்மை நிலை மக்களே!.

ஆக ஹிஜ்ரிகமிட்டியினர் பிறையைப் பார்க்கக்கூடாது என்று சொல்கின்றனர் என்ற அவதூறு பிரச்சாரத்தின் நிலையையும், உண்மையிலேயே பிறைகளைத் தினந்தோறும் கவனித்தும் கணக்கிட்டும் வருபவர்கள் யார்? என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

முஸ்லிம்கள் துல்லியமான நாட்காட்டியை தயாரிப்பதின் மூலம் இழந்த தலைமைத்துவத்தையும், வரலாற்றையும் மீண்டும் பெற்று விடக் கூடாது என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டுள்ள யூத, கிருத்துவ சக்திகளின் சூழ்ச்சி வலைகளைக் கிழித்தெறிந்து இந்த முஸ்லிம் உம்மத்தை எழுச்சிப் பாதையை நோக்கி முன்னேறுமாறு அறைகூவல் விடுத்து அதற்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களைப் பார்த்து சக முஸ்லிம் சகோதரர்களே இதுபோன்ற தரம் தாழ்ந்த அவதூறுகளை அள்ளி வீசுவது மிகமிக வேதனைக்குரியதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3663 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:43