செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 20

Rate this item
(0 votes)

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 20

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்?

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களில் பலர், அல்லாஹ்வின் பேருதவியால் நமது பிரச்சாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, விழிப்படைந்து இதுநாள் வரை பிறைகள் விஷயத்தில் தவறான நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி தற்போது கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர் அல்ஹம்து லில்லாஹ்.

அக்கேள்விகளுக்கு குர்ஆன் சுன்னா ஒளியில் பதிலளிக்க முடியாத மாற்றுக் கருத்துடையோர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறையைப் புறக்கண்களால் பார்க்கும் பழக்கம் மட்டுமே இருந்துள்ளதால்தான் நாங்களும் அவ்வாறு செய்கிறோம். நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள், இல்லையே? என்ற ஒரு மலிவான வாதத்தை முன்வைப்பதாக அறிகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களும் அன்றைய உம்மத்தினரும், கணிப்பொறியையோ (Computer), இணைய தளங்களையோ (Websites), வலை பின்னல் இணைப்புகளையோ (Internet Connection) பயன்படுத்தாத நிலையில் இவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட கேள்வியை மாற்றுக் கருத்துடையோர் மக்களிடையே பரப்புவது எந்த விதத்தில் நியாயம்? என்று அவர்கள் பாணியிலேயே கேட்கிறோம். நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்? என்று மாற்றுக் கருத்துடையோர் தற்போது வாதிப்பதே அல்லாஹ்வின் மார்க்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றே கருதுகிறோம்.

உலக ஆதாயத்திற்காக தங்கள் இயக்கங்கள் பெயரில் வருடத் துவக்கத்தில் ஒரு தவறான காலண்டரை வெளியிட்டு விட்டு அதில் 29 நாட்களையும் பார்த்து விட்டு, மாதத்தின் 29-ஆம் நாள் என்று அவர்கள் கருதும் ஒருநாளில் மஃரிபு நேரத்தில் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க முயற்சி செய்பவர்கள் இத்தகைய கேள்வியைக் கேட்பது நியாயம்தானா? காலண்டர் எதையும் வெளியிட்டு வியாபாரம் செய்யாதவர்கள் இந்தக் கேள்வியை கேட்டால் குறைந்த பட்ச நியாயம் அதில் இருக்கிறது என்று கூறலாம்.

பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்த பிறகே அமல் செய்ய வேண்டும் என்று கூறும் அறிஞர்களும், ஜமாஅத் தலைவர்களும் அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுமில்லை, பிறைகளைப் புறக்கண்களால் பார்த்து அவதானித்து வருவதுமில்லை. எனினும் பிறைகளைப் புறக்கண்களால் பார்ப்பது ஃபர்ளான கடமையில்லை என்ற நிலையிலும், ஹிஜ்ரி கமிட்டியினாராகிய நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால் சற்றொப்ப 40 வருடங்களுக்கும் மேலாகப் பிறையின் அனைத்து படித்தரங்களையும் (மனாஜில்) கவனமாகப் பார்த்தும், அவதானித்தும் வருகிறோம் - அல்ஹம்து லில்லாஹ்.

அவ்வாறு பிறைகளைப் புறக்கண்களால் அவதானித்து அப்பிறையின் படித்தரங்கள் (மனாஜில்) காட்டும் தேதிகளை, துல்லியமாகக் கணக்கீடு செய்யப்பட்டு மக்கள் பின்பற்றிவரும் ஹிஜ்ரி கமிட்டியின் சந்திர நாட்காட்டியின் தேதிகளோடு ஒப்பிடுகையில், எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் பிறையின் படித்தரங்களோடு (மனாஜில்) மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் ஒத்துப் போவதைப் பல வருடங்களாக அவதானித்து உறுதியும் செய்துள்ளோம்.

'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற நபிமொழியைத் தவறாக விளங்கி ஒரு வருடத்திற்கு ஷஃபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும், அதுவும் 29-வது நாள் என்று அவர்கள் தாங்களாக தீர்மானித்துக் கொண்ட ஒரு நாளில் மட்டும் தெரியாத பிறையைத் தேடிக் கொண்டு மேற்கு நோக்கி பார்க்கும் மாற்றுக் கருத்தினர் தாங்கள்தாம் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற நபிமொழியை அமல் செய்கிறோம் என்று சொல்வார்களே யானால், சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகப் பிறையின் அனைத்துப் படித்தரங்களையும் (மனாஜில்) கவனமாகப் பார்த்தும், அவதானித்தும் வரும் ஹிஜ்ரி கமிட்டியினர்களே பரிசுத்தமான ஒரிஜினல் 'ஸூமூ லி ருஃயத்திஹி'யினர் என்பதை இங்கு ஆணித்தரமாகப் பதிவு செய்கிறோம். ஒரு வருடத்தில் இரண்டு தினங்கள் மட்டும் பிறை பார்க்க முயலும் இவர்கள் ஸூமூ லி ருஃயத்திஹி யினர் என்று சொல்வதற்கு எந்தத் தகுதியும் படைத்தவர்கள் அல்லர் என்பதையும் மக்களே நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

இன்னும் நபி (ஸல்) காலண்டரையா பின்பற்றினார்கள் இல்லையே! என்று வாதம் புரிவோர், முதலில் ஒவ்வொரு பள்ளிவாயில் நிர்வாகத்திடமும் சென்று தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள நபி (ஸல்) தொழுகை அட்டவணையையா பின்பற்றினார்கள்? இல்லையே! எனவே அதை கழற்றி விடுங்கள் என்று வாதம் புரிந்துவிட்டு நம்மிடம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பட்டும். எனவே பள்ளிவாயில்கள் தோரும் வைக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற தொழுகை கணக்கீட்டு அட்டவணையை சரிகண்டு அதில் எந்தக் கேள்விகளும் கேட்காமல், அதை சந்தேகமின்றி நடைமுறைப் படுத்துவோர் நபி (ஸல்) அவர்கள் தேதிகளை முடிவு செய்ய காலண்டரையா பின்பற்றினார்கள்? என்று வினவுவது அறியாமை அல்லாமல் வேறென்ன?

இன்னும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இன்று இருப்பது போல விஞ்ஞான சாதனங்களும், அறிவியல் தொழில் நுட்பங்களும் நிறைந்திருந்து அவற்றையெல்லாம் ஹராம் என்று அவர்கள் புறக்கணித்து விட்டு பிறந்த பிறையைப் புறக்கண்களால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நமக்குக் கட்டளையிட்டிருந்தால் ஒருவகைக்கு மேற்கண்ட இவர்கள் வாதத்தில் ஓர் அர்த்தம் இருக்கும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகத்தில் இருந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள் என்று நம்மை நோக்கி இவர்கள் வினா எழுப்புவது வேடிக்கையிலும் வேடிக்கையே, அறியாமையின் வெளிப்பாடே. காரணம் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களே அன்றிருந்த முஸ்லிம் உம்மத்தின் அன்றைய அறிவியல் நிலையைத் தெளிவுபடுத்தியும் விட்டார்கள். அதாவது...

حدثنا آدم ، حدثنا شعبة ، حدثنا الأسود بن قيس ، حدثنا سعيد بن عمرو ، أنه سمع ابن عمر رضي الله عنهما ، عن النبي صلى الله عليه وسلم ، أنه قال : " إنا أمة أمية ، لا نكتب ولا نحسب ، الشهر هكذا وهكذا " يعني مرة تسعة وعشرين ، ومرة ثلاثين *.  (صحيح البخاري  - كتاب الصوم  باب قول النبي صلى الله عليه وسلم : " لا نكتب - حديث : ‏1827‏).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நாம் 'உம்மீ' கூட்டத்தார் (சமுதாயம்). நாம் எழுதுவது இல்லை மேலும் நாம் எண்ணுவதும் இல்லை. மாதம் என்பது இவ்வாறு இவ்வாறு இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), நூல்:புகாரி(1913).

இப்படி நாம் கூறியவுடன் இன்னா உம்மத்துன் உம்மியத்துன். லா நக்துபு வலா நஹ்ஸிபு என்ற மேற்கண்ட ஹதீஸில் நஹ்ஸிபு என்ற பதம் ஹிஸாப் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும் ஹிஸாப் என்றால் கணக்குதான் அது விண்கலையல்ல என்று விவாதிக்கின்றனர். காரணம் இது நபி (ஸல்) எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபி என்ற செய்தியை வைத்தும், இந்த ஹதீஸில் பிற்பகுதியில் வரும் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்ற வாசகத்தை வைத்தும் ஹிஸாப் என்றால் பொதுவாக கணக்கு என்ற பொருள்தான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதுவும் தவறான வாதமாகும்.

மேற்கண்ட ஹதீஸைப் பொருத்தவரையில் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு எழுதத் தெரியாது என்றோ, அவர்களுக்கு கணக்குத் தெரியாது என்றோ தனிப்பட்ட எந்த நபரையும் குறித்து ஒருமையில் சொல்லவில்லை. மாறாக 'இன்னா உம்மத்துன் உம்மியத்துன்' அதாவது உம்மத் என்று அன்றிருந்த ஸஹாபாக்கள் அனைவரையும் சேர்த்துச் சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வானியற் பௌதீகம் (Astrophysics) என்னும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை எழுதி பாதுகாப்பதையோ, அதற்காக கணக்கிடும் வான இயற்பியல் கலையையோ அந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்று நாம் இந்த ஹதீஸூக்கு பொருள் கொள்கிறோம். இதுதான் சரியான, நியாயமான, அறிவுப்பூர்வமான பொருள் ஆகும். காரணம் நக்துபு என்ற சொல்லிற்குச் சாதாரண எழுத்து என்றும், நஹ்ஸிபு என்பதற்கு வெறும் கணக்கு என்றும் பொருள் கொண்டால் விபரீதமான முடிவிற்கு நாம் வரவேண்டியிருக்கும்.

உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் எழுத்தறிவில் சிறந்த நபித்தோழர்களை வஹியை எழுதும் பணிக்கு நியமித்தார்கள். அந்நபித்தோழர்கள் இறை வஹியை எழுதுவதில் ஒன்றில் கூட சிறு பிழையில்லாமல் தங்கள் எழுத்துப் பணியைச் சிறப்புடன் செய்தார்கள். இது போன்றே நபி (ஸல்) அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத மன்னர்களுக்கு இஸ்லாமிய மார்க்த்தின் பக்கம் அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதி அனுப்பினார்கள். ஹூதைபிய்யா போன்ற உடன்படிக்கைகள் எழுத்துப் பூர்வமாகவே நிறைவேற்றப்பட்டன. இன்னும் நபி (ஸல்) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் திருமணம் சம்பந்தமாகக் கூட எழுதிப் பதிவுச் செய்யப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. எழுத்தறிவுள்ள ஸஹாபாக்கள் அன்றைய உம்மத்தில் நிறைந்திருந்தனர். சல்மான் அல்ஃபாரிசி (ரழி) போன்ற வேற்று பாஷை தெரிந்தவர்கள் இருந்தனர். தவ்றாத்தை அதன் மூல மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு வேற்று பாஷையின் எழுத்தறிவு படைத்த ஸஹாபாக்கள்கூட நபி (ஸல்) அவர்கள் அவையில் இருந்துள்ளனர். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இப்படி எழுத்தறிவும், கணக்கறிவும் படைத்த உம்மத்தைப் பார்த்து, நபி (ஸல்) அவர்கள் அப்போதைய உம்மதினருக்கு மொழியை எழுதத் தெரியாது, கணக்கு பார்க்கவும் தெரியாது என்று சாதாரணமாகச் சொல்வார்களா?. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த அந்த முஸ்லிம் உம்மத் மொழியை எழுதும் எழுத்தறிவும், அடிப்படையான கணக்கறிவும் பெற்றிருந்த சமுதாயமாகத் திகழ்ந்திருந்தும் நபி (ஸல்) அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள்? அப்படிச் சொல்லியிருப்பதால் அந்த எழுத்து எந்த எழுத்து? அந்தக் கணக்கு எந்தக் கணக்கு? அதன் உட்கருத்து என்ன? என்பதை மாற்றுக் கருத்துடையோர் கொஞ்சம் கூட ஆய்வு செய்யாமல் இருப்பது ஏன்?

மேற்காணும் 'லாநக்துபு' என்ற சொல்லுக்கு வெறும் எழுத்து என்று பொருள் கொண்டால், ஸஹாபாக்களுக்கு எழுதத் தெரிந்திருக்கவில்லை என்று பொருள் வரும். வஹியை எழுதியது உட்பட அவர்களின் எழுத்தறிவு சம்பந்தப்பட்ட மேற்கண்ட அனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும் (நவூதுபில்லாஹ்). எனவேதான் சொல்கிறோம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை எழுதிப் பாதுகாக்கும் அந்த எழுத்து முறையைத்தான் நக்துபு என்ற இச்சொல் கூறுகிறது. எனவே நாட்காட்டியைத் தயாரித்து எழுதிப் பாதுகாக்கும் முறையை அப்போதைய அந்த உம்மத்தினர் தெரிந்திருக்கவில்லை என்பதைத்தான் நபி (ஸல்) அவர்கள் 'லாநக்துபு' என்று கூறியுள்ளதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.

இன்னும் நபி (ஸல்) அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முறையாகக் கணக்கிட்டு வசூலித்தார்கள். ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பின்னர் 33 தடவைகள் என்று கணக்கின் அடிப்படையிலான தஸ்பீஹை இந்த உம்மத்திற்கு சொல்லிக் கொடுத்தார்கள். வியாபாரிகள் எடையை சரியான அளவில் கொடுக்கக் கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களே ஒரு தலைசிறந்த வியாபாரியாகத் திகழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்? தபூக் யுத்தத்தின் போது குறைஷிகள் தங்கள் உணவிற்காக அறுத்த ஒட்டகங்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு அதை வைத்தே படை திரட்டி வந்த குறைஷிகள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்தது என்று பல்வேறு நிகழ்வுகளை வைத்துச் சீர்தூக்கிப் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் கணக்கில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றே தோன்றுகிறது. மேலும், இன்றைய முஸ்லிம் அறிஞர்கள் கூட கணக்கிட முடியாமல் தவிக்கும் வாரிசுரிமைச் சட்டக் கணக்கை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்ததே அவர்கள் கணக்கில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு மாபெரும் ஆதாரமாக உள்ளது.

ஆகையால் 'நஹ்ஸிபு' என்ற சொல்லிற்கு வெறும் கணக்கு என்று பொருள் கொண்டால், நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்கவில்லை என்று பொருள் வரும். ஜக்காத்தை வசூலித்தது உட்பட அவர்கள் கணக்கின் அடிப்படையில் செயல்பட்ட மேற்கண்ட அனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும் (நவூதுபில்லாஹ்). எனவேதான் விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை அமைத்திட உதவும் வானியல் பௌதீகம் (Astrophysics) என்னும் விண் கலையைத்தான் அந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்பதையே 'லா நஹ்ஸிபு' என்ற சொல் கூறுகிறது என்கிறோம்.

லாநக்துபு, லாநஹ்ஸிபு என்று மட்டும் தனியாக கூறியிருந்தால், அவர்களுக்கு எழுதவும் தெரியாது, கணக்கிடவும் தெரியாது என நாம் பொதுவாக பொருள் கொள்ளலாம். ஆனால் நபி(ஸல்) அவர்களோ மாதத்தின் மொத்த நாட்கள் எத்தனை வரும் என்ற கணக்கை கூறும்போது இவ்வாறு 'லா நக்துபு', 'லா நஹ்ஸிபு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளார்கள். எனவே மாதத்தை கணக்கிடுவது சம்மந்தமான வானியல் பௌதீகக் கணக்கில் அவர்கள் உம்மி சமுதாயமாக இருந்தார்கள் என்பதையே அவர்கள் விளக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

மாற்றுக் கருத்துடையோர் வாதிப்பதைப் போல நபி (ஸல்) அவர்களுக்கும், அந்த உம்மத்திற்கும் தெரியவில்லை என்று சொன்னது சாதாரண கணிதம்தான் என ஒரு பேச்சிற்காக வைத்துக் கொண்டாலும், பிறை மறைக்கப்படும் போது நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்த உம்மத்திற்குப் பிறைகளைக் கணக்கிடும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் அல்லவா? அதனால் நாம்தான் கணக்கிட வேண்டும் என்பதை நாட்காட்டியை மறுப்பவர்கள் இப்போதாவது ஏற்றுக்கொள்வார்களா?.

இன்னும் நாம் உம்மி சமுதாயமாவோம் என்ற மேற்கூறிய ஹதீஸூக்கு, நவீன அரபிவிற்பனர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் சிலர், மேற்படி ஹதீஸின் உண்மையான பொருளை மக்கள் அறிந்தால் அவர்கள் சந்திர நாட்காட்டியின் பக்கம் செல்வதை யாரும் தடுக்க முடியாமல் ஆகிவிடும் என்பதை தற்போது உணர்ந்துவிட்டனர்.

அதனால் இனிவரும் காலங்களில் மேற்படி ஹதீஸூக்கு நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள் என்று திரித்துக்கூறி மக்கள் மத்தியில் ஒரு மோசடியான, அபாயகரமான, அறிவீனமான ஒரு புதிய பிரச்சாரத்தையும் துவங்கிடத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள எச்சரிக்கிறோம். தோற்றத்திலும், ஆடையிலும் மட்டும் முஸ்லிம்களாக வாழ்பவர்களை மக்கள் அடையாளம் காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இவர்கள் கூறுவது போல் கணக்கிடுவதும் கூடாது எழுதுவதும் கூடாது என மொழிபெயர்த்தால், முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுதும் முறைகளும், கணக்கும் ஹராம் என்ற நிலை ஏற்படும் என்பதை இவர்கள் கொஞ்சம் கூட சிந்திக்க வில்லையா? அல்லது துல்லியமாகக் கணக்கிடுவது ஹராம், ஆனால் வியாபார நோக்கில் தோராயமான நாட்காட்டியை வெளிடக் கணக்கிடுவது மட்டும் ஹலால் என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா? – யாமறியோம்.

அல்லாஹ் நமக்கு பிறைகளின் படித்தரங்களைத் தேதிகளுக்காக நிர்ணயித்து விட்டான். அவற்றை கணக்கிட்டுக் கொள்ளுமாறு மார்க்கம் தெளிவாக வலியுறுத்துகிறது. பிறைகளின் படித்தரங்கள் அல்லாத, நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்த (நுஜூமிய்யா) கணக்கை நாம் வன்மையாக மறுக்கிறோம், எதிர்க்கிறோம். காரணம் நட்சத்திரத்தை மையமாக வைத்து அளவிடப்படும் (Sidereal Month) சிடேரியல் மாதமானது 27 நாட்களை மட்டுமே கொண்டது. இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பதற்கு முரணானதாகும். அதனாலேயே சிடேரியல் (Sidereal Month) மாதக் கணக்கீட்டை நாமும் மறுக்கிறோம்.

மேலும் இன்று மக்கள் பரவலாகப் பயன்படுதிவரும் 'ஆங்கில நாட்காட்டி' என்ற 'கிரிகோரியன் நாட்காட்டியும்' முழுமையான நுஜூமிய்யா என்னும் நட்சத்திரக் கணக்கில் ஆனாது என்பதையும் நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர். இதைப் போல வானசாஸ்திரம் (Astrology), ஜோதிட பால்கிதாபு பஞ்சாங்கங்கள் முதலிய அடிப்படையற்ற மூடக் கருத்துக்களையும் முன் வரிசையில் நின்று நாம் எதிர்த்து வருகிறோம். அத்தகைய பஞ்சாங்க கணக்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம். காரணம் இவை நபி (ஸல்) அவர்கள் கணக்கிடச் சொல்லி காட்டித் தந்த வழி முறைக்கு நேர் எதிரானதாகும். ஆனால் துல்லியமாகக் கணக்கிடுவதை திட்ட வட்டமாக எதிர்த்து வரும் நபர்களும், இயக்கங்களும் தங்களின் தோராயமான நாட்காட்டியை பஞ்சாங்கங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைத்து வருகின்றார்கள் என்ற ரகசியத்தை பகிரங்கமாகத் தெரிவிக்கிறோம்.

இந்நிலையில் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதமானது 29.53 நாட்களைக் கொண்டது. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களே என்பதை வரையறுத்து விளக்கியுள்ளதை, வானவியலும் (Astronomy) கூறும் சந்திரனை மையமாக வைத்து அளவிடப்படும் (Synodic Month) சினோடிக் மாதக் கணக்கீடு மிகத்துல்லியமாக நிரூபித்தும் விட்டது. இந்த கணக்கீட்டைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் ஏற்று நடைமுறைப் படுத்துகிறன்றோம்.

நிரூபிக்கப்பட்ட வானவியல் (Astronomy) என்னும் அறிவியலின் பேருண்மையும், வானசாஸ்திரம் (Astrology) என்ற மூட நம்பிக்கையும் வெவ்வேறானவை என்பதை உணராதவர்கள் இரண்டையும் குழப்பி ஹிஜ்ரி கமிட்டியினர் நுஜூம் கணக்கைச் சொல்கின்றனர் என்று அறியாமல் கூறுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்தான் தெளிவைக் கொடுக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்பட முடியாது என்பதை உறுதி செய்யும் முகமாக வல்ல அல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களை கொண்டதாகவும் இருக்கும் என்பதை கூறியதோடு, அது கிருஸ்துவ நாட்காட்டியில் தற்போது மாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் வைத்துள்ளது போல் உங்கள் இஷ்டப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு (9:37) என்றும் எச்சரித்து விட்டு, சந்திரனின் படித்தரங்களை அல்லாஹ் உங்களுக்குத் தேதிகளாக ஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன் 2:189 வசனம் மூலம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

எனவே சந்திரனின் படித்தரங்களைக் கொண்டே ஒரு மாதத்தின் நாட்களின் எண்ணிக்கையை 29 அல்லது 30 என நிர்ணயிக்க வேண்டும். இதில் 29 நாட்கள் கொண்ட மாதத்தை 30 நாட்கள் என்றும், 30 நாட்கள் கொண்ட மாதத்தை 29 நாட்கள் என்றும் மாற்றுவது இறை நிராகரிப்பைச் சாரும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தேதிகளுக்குப் பிறை படித்தரங்களே அடிப்படை என்ற அல்குர்ஆனின் வழிகாட்டுதல் படியே நபி (ஸல்) அவர்களும் மிகச் சரியாகக் கணக்கிட்டார்கள். வல்ல அல்லாஹ் தனது தூதர் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தவனாகவே இருந்தான்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இட்ட பல கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாற்றமாக, யூதர்களும், கிருஸ்துவர்களும் 'கிரிகோரியன்' நாட்காட்டி என்ற ஒன்றைத் தயாரித்து அதில் பல குளறுபடிகளைச் செய்து, மாதங்களிலும் நாட்களிலும் பல இடைச் செறுகல்களை ஏற்படுத்தி, அந்த 'கிரிகோரியன்' நாட்காட்டிதான் மிகச் சரியான நாட்காட்டி என்பதாகப் பிரச்சாரமும் செய்து, அவர்களுடைய நாட்காட்டிக்கு முஸ்லிம்களையும், முழு உலக மக்களையும் நம்ப வைத்து அடிமைகளாக ஆக்கிவிட்டனர். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை முழுமையாகப் புறக்கணிக்க வைத்து விட்டனர். அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாம் காட்டித்தந்த நாட்காட்டி முறைகளை ஆய்வு செய்து அதற்கு எதிராக அவர்கள் 'கிரிகோரியன்' காலண்டர் என்ற கற்பனை நாட்காட்டியைத் தயாரித்து உலகை ஏமாற்றியதோடு அல்லாமல், அவர்களுடைய கிப்லாவை உலகில் உள்ள அனைவரும் பின்பற்றும் படிச் செய்து விட்டதின் சூழ்ச்சிகளை நம்மில் எத்தனை பேர் ஆராய்ந்து அறிந்துள்ளனர்?

அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 'கிரிகோரியன்' நாட்காட்டிக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்ய வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, அல்லாஹ்வின் அத்தாட்சியான ஹிஜ்ரி நாட்காட்டியை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் முகமாக நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள் என்று கேள்வி எழுப்பியும், எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது என்று பிரச்சாரமும் செய்கிறார்கள் என்றால் இந்த அறியாமையை எங்கே போய்ச் சொல்வது?

ஹிஜ்ரி நாட்காட்டியை மக்கள் பின்பற்றிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றினால் தவறில்லை என்று முஸ்லிம் அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ் கூறும் பிறைப் படித்தரத்தின் கணக்கீட்டை நடைமுறைக்கு வராமல் அம்முஸ்லிம் அறிஞர்கள் தடுக்கவும் துணிந்துள்ளனர்.

இன்னும் பிறந்த பிறையை மஃரிபு வேளையில் மேற்கு திசையில் அது மறையும் நேரத்தில் புறக்கண்களால் பார்த்த பின்னரே அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும் என்று நம்பியுள்ள அறிஞர் பெருமக்களை வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் நாட்காட்டியை இந்த முஸ்லிம் உம்மத்தில் எப்படி நிலைநிறுத்தப் போகிறோம்? சற்று சிந்தியுங்கள் மக்களே!.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்!!!

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,

பாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,

பாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,

பாகம் 16பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,

 

Read 3522 times Last modified on திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 06:44