செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 07:50

முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்:

Rate this item
(1 Vote)

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்

அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3

 

முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்:

உலக நேரம் 16 மணிக்குப் பிறகு புவிமைய சங்கமம் நடைபெற்று, கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு சங்கமம் நடைபெறும் முன்னரே மறுநாள் விடிந்து விடுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்வியின் விளக்க ஆய்வுகளின் உட்பகுதியில் நாம் இருக்கிறோம். இக்கேள்வியின் பதிலை மிக ஆழமாக புரிவதென்றால், இதன் முன்னர் விளக்கிய நாட்காட்டியின் அடிப்படை விஷயங்களோடு, முஸ்லிம்கள் (தீர்க்கரேகை - Meridian) முன்னோக்கும் திசைப்பற்றி விளங்கிக் கொள்வதும் மிக அவசியமானதாகும். ஒரு குழந்தையின் பிறப்பு பதியப்படுகின்ற விளக்கமே போதுமானதாக இருந்தாலும், சிந்திக்கும் பல மக்களுக்கு இன்னும் நாட்காட்டியின் அடிப்படைகளை விளக்குவதற்காக ஒரு சில தகவல்களை மேலதிகமாக இங்கே தருகின்றோம்.

பூமி தினமும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது என்பதை நாம் நன்றாக அறிவோம். உலகில் எப்போதுமே இரு கிழமைகளும், இரு தேதிகளும் இருந்து கொண்டே இருக்கும் என்பது பற்றி நம்மில் அனைவரும் அறிந்திருப்பது சந்தேகமே. இருகிழமைகள் (தேதிகள்) இப்பூமிப் பந்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அறிந்தவர்களில் ஒரு சிலரே மேற்படி விமர்சனத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும் அறியத் தருகிறோம்.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வரும் கால அளவை நாம் ஒரு நாள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு நாளுக்கும் பிரத்தியேகமாகப் பெயரிட்டு அடையாளப் படுத்தியுள்ளோம். அதாவது யவ்முல் அஹத் (முதல் நாள்) என அரபு மொழியிலும், ஞாயிற்றுக்கிழமை என தமிழிலும், சன்டே (Sunday) என ஆங்கிலத்திலும் கூறி வருகின்றோம். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கிழமைகள் வரைப் பெயரிட்டு ஒரு வாரம் எனக் கணக்கிட்டு வருகின்றோம். ஒரு கிழமை என்பது பூமியில் எங்கிருந்து ஆரம்பித்து எங்கு சென்று முடிகிறது என்ற கேள்வி எழுவது இயற்கையே. இக்கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும்.

ஒரு நாட்காட்டியை தயாரிப்பதற்கான அடிப்படை விஷயங்களைப் போதித்துள்ள நமது மார்க்கம் ஒரு கிழமையின் துவக்க இடம் பற்றியும் தெளிவாக தெரிவித்துள்ளது. அதாவது நம் முஸ்லிம் சமூகத்திற்கு வல்ல அல்லாஹ் வெள்ளிக் கிழமையை சிறப்பான நாளாக ஆக்கித் தந்துள்ளான். அன்று மட்டுமே நாம் லுஹர் நேரத்தில் இரண்டு ரக்அத்கள் மட்டும் கொண்ட ஜும்ஆத் தொழுகையை தொழுது வருகின்றோம். மற்ற நாட்களில் நான்கு ரக்அத்துகள் கொண்ட லுஹர் தொழுகையை தொழுது வருகின்றோம்.

ஒரு நாள் எங்கு மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்ஆ தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை மார்க்க அடிப்படையில் விளங்கிக் கொள்ளலாம். ஜூம்ஆ தொழுகை அல்லாத மற்ற தொழுகைகளை வைத்தோ, முஸ்லிம்களின் பிற வணக்கங்களை வைத்தோ கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது.

இவ்வாறு கிழமைகள் மாறும் இடத்திற்கு நிரூபிக்கப்பட்ட பூமியின் நிலவியல் விஞ்ஞானம் (Earth Geographical Science) சான்று பகர்கின்றது என்பதை முன்னர் படித்தோம். அந்த இடம் பசிபிக் பெருங்கடலில் (International Dateline-IDL) உலகத் தேதிக்கோடு என்று கூறப்படும் இடத்தில் இருப்பதை அறிய முடிகின்றது.

புரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரேசூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.

அவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும். அதேவேளை ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.

பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கன்சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையை தொழுது கொண்டிருப்பார்கள்.

அந்த இடத்தில் கோடு போடாமலேயே கோடு போடப்பட்டதாக கூறுவதும், உலகப்படங்களில் கோடு போட்டு காட்டுவதும் கற்பனையே. இருப்பினும், நமது இஸ்லாம் கூறும் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையும், லுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறும் பகுதியாக அந்த இடமே உள்ளதை யாரும் மறுக்கவே இயலாது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல மக்காவுக்கு கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழுகிறார்கள். அதுபோல மக்காவுக்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களது கிப்லாவின் திசையாக கிழக்குத் திசை நோக்கி தொழுகிறார்கள். கிப்லாவை மையப்படுத்தி இவ்வாறு முழுஉலக முஸ்லிம்களும் அணியணியாக, வரிசையாக நிற்பதாகக் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கி தோழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் இடமாக இந்த உலகத் தேதிக்கோட்டுப் பகுதி அமையும்.

இவ்வாறு அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த கிப்லாவிற்கு முன்னர் சூரியன் உதிக்கும் முதல் பகுதியாகவும், கிப்லாவிற்கு பின் சூரியன் உதிக்கும் இறுதிப் பகுதியாகவும், அவ்விரு பகுதிகளும் சந்திக்கும் இடமாகவும் இந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது.

அந்த இடத்தைக் குறிப்பிட்டு இறை வேதமான குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம். அல்குர்ஆனின் 55:17 வசனம் இரண்டு கிழக்குகளின், இரண்டு மேற்குகளின் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுகிறது. மேற்கண்ட இந்த வசனம் எவ்வாறு அந்த இடத்திற்கு பொருந்தும் என்ற கேள்வி எழுவது இயற்கையே.

பூமியின் நிலவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்கு, மேற்கு என்ற பெயர்களில் ஒரேயொரு திசை இருப்பதாகத்தான் நாம் படித்துள்ளோம். இருப்பினும் இரு கிழக்குகளுக்கும் இரு மேற்குகளுக்கும் இறைவன் அல்லாஹ்தான் (ரப்பு) என்று அல்குர்ஆன் கூறுகிறது. பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டு கிழக்குத் திசைகளும், இரண்டு மேற்குத் திசைகளும் சங்கமித்தால்தான் மேற்படி இறைவசனத்திற்கு நேரடிப் பொருள் இருப்பதாக அமையும். இதற்கான விடை சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில்தான் உள்ளது.

அதாவது அந்த சர்வதேசக் கோட்டுப் பகுதியின் அருகாமையில் வாழும் மக்களில் ஒருசாரார் ஒருகிழமையிலும், மற்றொரு சாரார் அடுத்த கிழமையிலும் இருப்பர் என்பதை அறிந்தோம். அதாவது ஒருசாராருக்கு வியாழக்கிழமைக்குரிய சூரியன் கிழக்கில் உதிப்பதையும், மற்றொரு சாராருக்கு வெள்ளிக்கிழமைக்குரிய சூரியன் அதே கிழக்குத் திசையில் உதிப்பதையும் காணலாம். அங்குதான் வெள்ளிக்கிழமை நாளுக்குரிய ஜும்மா தொழுகையும், வியாழக்கிழமை நாளுக்குரிய லுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறுகின்றது. அந்த இருநாட்டவரும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு கிழமைக்குரியவர்களாக இருப்பதைத்தான் ரப்புல் மஷ்ரிக்கைனி வரப்புல் மஃரிபைன் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். விஞ்ஞானம் விழித்திடும் முன்னரே இவற்றைப் பற்றி இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது வியப்பல்லவா?

இரு கிழக்குகளும், இரு மேற்குகளும் வரவேண்டும் என்றால் தொழுகையை நிறைவேற்றும் மக்கள் எதையாவது உலகில் முன்னோக்கினால்தான் அது சாத்தியப்படும். அப்படி முன்னோக்கும் திசைப்பற்றியும் நாம் அறிய வேண்டியம். முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கத்தில் இப்பகுதியை நீங்கள் மிக நிதானமாக உள்வாங்க வேண்டும்.

இதுபற்றிய நாம் இறைவேதமான அல்குர்ஆனில் கிப்லா என்னும் முன்னோக்கும் திசையைப் பற்றி கூறுவதை 2-வது அத்தியாயத்தில் 142-வது வசனத்தில் இருந்து பல வசனங்களில் அறியலாம். முன்னோக்கும் திசை இல்லாமல் நாட்காட்டியோ, கிழமைகளோ, தொழுகைகளை அதற்குரிய நாளில் குறித்த நேரத்தில் நிறைவேற்றவோ முடியாது என்பதை நாம் திட்டவட்டமாக அறிந்து கொள்ளலாம்.

நமக்கு அல்லாஹ் முன்னோக்கும் திசையாக கஃபாவை கிப்லாவாக (Meridian) ஆக்கி தொழுகைக்காக அந்த கஃபாவின் திசையையே முன்னோக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அவ்வாறு ஆக்கித் தந்ததால்தான் கீழ்த்திசை நாடுகள், மேல்திசை நாடுகள் என்றெல்லாம் நம்மால் தற்போது கூற முடிகின்றது. மக்காவிலுள்ள கஃபாதான் கிப்லா என்பதைப்பற்றி அல்லாஹ் சிலாகித்துக் குறிப்பிடும் போது நபி(ஸல்) அவர்களுக்கு உலக முஸ்லிம்களும், உலக முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்கும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு கஃபாவை கிப்லாவாக அருளியதின் நோக்கமாக கூறுகின்றான்.

இதை நாம் ஆழமாக சிந்திக்கும் பட்சத்தில் நமக்கு ஒரு நாட்காட்டி இருந்தால்தான் நாம் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் நமக்கும் சாட்சியாக ஆக முடியும் (பார்க்க அல்குர்ஆன் 2:143). அப்போதுதான் உலக முஸ்லிம் உம்மத் கிலாபத் என்னும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடவும் முடியும் என்பதையும் நிதர்சனமாக உணரலாம். தற்போது மேலே கேட்கப்பட்ட கேள்விக்கும் நாம் படித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் முன்னோக்கும் திசைக்கும் என்ன தொடர்புள்ளது? என்று கேட்கத் தோன்றும். கண்டிப்பாக சம்பந்தம் உள்ளது என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை பொறுமையாக படித்தால் தெளிவாக விளங்கும்.

அதாவது உலகில் புவிமைய சங்கமம் ஒரு கிழமையில் நடக்கும் போது மற்றொரு கிழமையும் இருக்கும். உலக நேரம் 16 மணிநேரத்திற்கு முன்னதாக புவிமைய சங்கமம் நிகழும் போது, சங்கமம் நிகழும் நாளும், அதற்கு முந்தைய நாளிலும் உள்ள அனைத்து உலக மக்களும் புதிய மாதத்தின் முதல் நாளில் முறைப்படி நுழைந்து முதல் கிழமையை அடைவார்கள்.

அதேசமயம் உலக நேரம் 16 மணி நேரத்திற்குப் பின் புவிமைய சங்கமம் நிகழும் போது, புவிமைய சங்கமம் நிகழும் கிழமைக்கு முன்னரே கிழக்குப் பகுதி நாடுகளில் சிலர் ஏற்கனவே புதிய கிழமையில் நுழைந்திருப்பார்கள். எனவே இதற்கு தீர்வு என்ன என்பதின் விளக்கங்களையும் நாம் முன்னரே விளக்கி விட்டோம்.

இன்னும் பூமியானது தன்னைத்தானே முழுமையாக ஒருமுறை சுழல்வதை ஒரு கிழமை என்று கணக்கிடப்படுகிறது. ஒரு நாள் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகின்றது என்பதை ஒவ்வொருவரும் அறிந்தால் மேற்படி கேள்வியின் விடையை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொருவரும் எப்படி? எங்கே? எவ்வாறு? எந்த நேரத்தில்? ஒரு கிழமைக்குரிய தேதியை மாற்ற வேண்டும்? என்பதை ஆய்வு செய்யும் போதுதான் முஸ்லிம்களின் முன்னோக்கும் திசைக்கும் அக்கேள்விக்கும் சம்பந்தம் உள்ளது பற்றிய ஆழமான விஷயங்களை உணரலாம்.

பூமியானது தன்னைத்தானே முழுமையாக ஒருமுறை சுழல்வதை ஒரு கிழமை என்கிறோம். இருப்பினும் நாம் முன்னோக்கும் நமது கிப்லாவில் இருந்து நோக்கும் போது, பசிபிக் கடல் பகுதியான உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் இரண்டு கிழமைகளும் இரண்டு தேதிகளும் இருந்து கொண்டே இருப்பதை அறியலாம்.

பூமியில் 24 மணிநேரங்கள் கொண்ட ஒருநாள் என்பதை அளவிட வேண்டும் என்றால் பூமி ஒரு முறை சுற்ற வேண்டும். பூமி ஒரு முறை சுற்றிவிட்டது என்பதை நாம் எதைக் கொண்டு எப்படி அறிவது? பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் தற்போது கற்பனை செய்து ஒரு கோடு போட்டு, அதிலிருந்து சுற்றி அந்த கோட்டிற்கு மீண்டும் வரும் வரை ஒரு நாள் எனக் கூறலாம். அப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் குறியீடாக வைத்துக் கொண்டாலும், குறிக்கப்பட்ட அந்தக் குறியீடும் பூமியின் பரப்பில் இருப்பதால் பூமி சுற்றும் போது அப்படி குறிக்கப்பட்ட இடமும் பூமியோடு சேர்ந்தே சுற்றிக்கொண்டு வரும். அப்போது நாம் எங்கிருந்து பார்த்தாலும் அங்கே அந்தக் கோடும் பூமியில் வசிக்கும் நம்முடனேயே தொடர்ந்து வருவதை அறியலாம். எனவே பூமியில் நாம் கோடிட்டாலும், பூமிக்கு வெளியே இப்பூமியை தொடாமல், நிலையாக ஒரு இடத்தில் இருக்கின்ற மற்றொரு பொருளை மையமாக வைத்தால்தான் பூமி ஒரு முறை சுற்றி விட்டது என்பதை அறிய முடியும்.

அப்படி பூமியைத் தொடாத நிலையாக இருக்கும் அந்தப் பொருள் எந்தப் பொருள்? என்பதை கண்டறிய வேண்டும். சூரியன் என்ற அந்த பிரம்மாண்ட கோளை மையமாக வைத்தே பூமி உட்பட சூரிய குடும்பத்திலுள்ள அனைத்துக் கோள்களும் தத்தமது நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றிவருவதை அறிந்து, பூமியைத் தொடாத நிலையாக இருக்கும் அந்தப் பொருள் சூரியனே என்பது தெளிவாகிறது.

பூமியில் ஒரு நாளை கணக்கிட வேண்டுமெனில், அந்த சூரியன் 90 டிகிரி கோணத்தில் அது நம் தலைக்கு உச்சியில் நேராக வருவதைக் கணக்கிட்டு, மீண்டும் அந்த சூரியன் அதே 90 டிகிரி கோணத்தில் நம் தலைக்கு உச்சியில் வரும் போது, பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழன்று முடித்து விட்டது என்ற அடிப்படையில் ஒரு நாளின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் தத்தமது தலைக்கு உச்சியில் இதுபோன்று சூரியன் வருவதை வைத்து கணக்கிட்டால் அவரவர் பகுதிக்குத்தான் கிழமையை கணக்கிட முடியும். அப்போதும் பல தேதிகள், பல கிழமைகள், பல நாட்காட்டிகள் என்று மீண்டும் குழறுபடிகள் வருவதை அறியலாம். அப்படி உலகில் பல தேதிகள் பல கிழமைகள் வருவதை யாரும் நியாயப்படுத்தினால், நாம் நபிக்கு சாட்சியாகவும், அவர்கள் நமக்கு சாட்சியாகவும் இருக்க வேண்டும் என்ற கிப்லா வசனமும் (2:143) அர்த்தமற்றதாக ஆகிவிடும். அத்துடன் கிப்லா, ரப்புல் மஷ்ரிகைனி ரப்புல் மஃரிபைனி, சூரியனும் சந்திரனும் கணக்கின் படியே உள்ளன, பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ளலாம், மனித குலத்திற்கு நாட்காட்டி போன்ற அனைத்து இறைவாக்குகளையும் புரிந்து கொள்வதற்கு இயலாமல் ஆகிவிடும்.

எனவேதான் கடமையான தொழுகையான வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையையும், வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும் வைத்து வல்ல அல்லாஹ் நமக்கு பிரித்துக் காட்டியுள்ளான். அந்த சர்வதேசக் கோட்டுப் பகுதியை ஒரு நாளின் ஆரம்ப பகுதியாகவும், முடியும் பகுதியாகவும் கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத கடல் பகுதியாக அமைத்து நமக்கு இலகுவாக்கியுள்ளான். பல தேதிகள், பல கிழமைகள், பல நாட்காட்டிகள் என்று எத்தகைய குளறுபடிகளும் வராத வண்ணம் உலகத்தேதிக் கோட்டை வைத்தே நாம் தீர்வு கொள்கின்றோம். முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் கஃபாவின் திசையும், முஸ்லிம்களின் தொழுகையும் இதில் முக்கிய பங்காற்றுவதை அறியலாம்.

இந்தத் தீர்வுதான் தொழுகை நேரம், கிப்லாத்திசை போன்ற இஸ்லாமிய மார்க்க அடிப்படைக்கும், விஞ்ஞான புவியியல் அடிப்படைக்கும் முரணாகாத மிகத்துல்லியமாகப் பொருந்துகின்ற தீர்வாகும். ஆகவே தான் சைபர் டிகிரி (ZERO Degree) என ஆரம்பித்து 360 டிகிரி என்று பூமியின் ஒரு சுற்று உலகத்தேதிக் கோட்டை வைத்து கணக்கிடப்படுகிறது. எனவேதான் அந்தப் பகுதி உலகத் தேதிக்கோடுப் பகுதி என அழைக்கப்படுகிறது.

சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு தளத்தில் அல்லது ஒரே நேர்கோட்டில் (Geocentric Conjunction with Solar Eclipse) சங்கமிக்கும் புவிமைய சங்கமம் என்ற நிகழ்வு உலகநேரம் (UT) எத்தனையில் நடைபெற்றாலும், அது நடைபெறும் அந்தக் கிழமைக்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள்தான் என்பதை திட்டவட்டமாக அறிந்து கொள்ளலாம். அதுபோல புவிமைய சங்கமம் உலகநேரம் 16 UT யில் நடைபெறும் முன்பாகவே விடிந்துவிட்ட கிழக்கத்திய நாடுகளில் விடிந்த அந்த நாளைக் கணக்கிடாமலும், கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் பிழையானதாகும். அப்படி கருதுவது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும். நாட்காட்டியில் குழப்பத்தை விளைவிக்கும். இவற்றை முஸ்லிம்களின் முன்னோக்கும் திசை சம்பந்தமாக நாம் விளக்கியுள்ள இவ்விஷயங்கள் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் நமக்கு இலகுவாக விளங்குவதற்காக வல்ல அல்லாஹ், நமது கிப்லாவான கஃபாவை நம்மை தவாப் செய்யும் படி கட்டளையிட்டுள்ளான். இந்த தவாபை மையப்படுத்தியாவது

பூமி எவ்வாறு சுழல்கின்றது?

பூமியில் எவ்வாறு கிழமை மாற்றங்கள் ஏற்படுகின்றன?

ஏழு கிழமைகள் கொண்ட வாரம் எவ்வாறு சுழற்சி முறையில் வருகின்றது

என்பதை மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் சிந்தித்து விளங்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக கடிகார சுற்றுக்கு மாற்றுத் திசையில் (Anti Clockwise) சுழல்கின்றது. அதேபோலவே நாமும் நமது கிப்லாவான கஃபாவை கடிகார சுற்றுக்கு மாற்றுத் திசையில் (Anti Clockwise) தஃவாப் சுற்றி வருகின்றோம். தவாப் செய்வதற்காக கஃபாவின் எப்பகுதியில் நாம் நுழைந்தாலும் 'ஹஜருல் அஸ்வத்' கல் பதிக்கப்பட்டிருக்கும் கஃபாவின் அந்த மூலையில் (Corner) இருந்தே நமது சுற்றை ஆரம்பிக்க வேண்டும். நாம் தவாப் செய்வதை 'ஹஜ்ருல் அஸ்வத்' கல் பதிக்கப்பட்டிருக்கும் கஃபாவின் அந்த மூலையில் இருந்து துவங்குவதைப் போல பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தே தினமும் கிழமைகளை துவக்க முடியும். அந்த இடமே உலகத் தேதிக்கோடாகும் (International Dateline).

முஸ்லிம்களின் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையும் அருகருகே நடைபெற்று கிழமைகள் மாறும் பகுதியாகவும் அந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதியே அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுகின்றோம்.

ஆக மேற்கண்ட கேள்வியின் பதிலை மிக ஆழமாக புரிவதென்றால் முஸ்லிம்கள் (தீர்க்கரேகை - Meridian) முன்னோக்கும் திசைப்பற்றிய விளக்கமும் அவசியமானது என்பதை தற்போது நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஆக இதுவரை படித்துள்ள கிப்லா பற்றிய விளக்கங்களின் சுருக்கமாவது..

அ) முஸ்லிம்களாகிய நாம் நமது தொழுகைக்காக முன்னோக்கும் திசையான 'கிப்லா' வின் முக்கியத்துவத்தை அல்குர்ஆன் (2:143) தெளிவு படுத்தியுள்ளது. வல்ல அல்லாஹ் தொழுகைக்காக அந்த கஃபாவின் திசையையே முன்னோக்குமாறு நமக்குக் கட்டளை இட்டுள்ளான்.

ஆ) கஃபா நமக்குக் 'கிப்லா'வாக (Meridian) அமைந்துள்ளதால்தான் கீழ்த்திசை நாடுகள், மேல்திசை நாடுகள் என்றுகூட நம்மால் பிரித்துக் முடிகின்றது.

இ) நாம் நமது 'கிப்லா'வான 'கஃபா'வை கடிகார சுற்றுக்கு மாற்றுத் திசையில் (Anti Clockwise) தஃவாப் சுற்றி வருகின்றோம். அதுபோல பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக கடிகார சுற்றுக்கு மாற்றுத் திசையில்தான் (Anti Clockwise) சுழல்கின்றது.

ஈ) நாம் தவாப் செய்வதை 'ஹஜ்ரல் அஸ்வத்' கல் பதிக்கப்பட்டிருக்கும் கஃபாவின் அந்த மூலையில் இருந்து துவங்குகிறோம். இந்த தவாபை மையப்படுத்தியாவது ஏழு கிழமைகள் கொண்ட வாரம் எவ்வாறு சுழற்றி முறையில் வருகின்றது என்பதை சிந்திக்க வேண்டும்.

உ) பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தே தினமும் கிழமைகள் துவக்குகின்றன. அந்த இடமே உலகத் தேதிக்கோடாகும் (International Dateline).

ஊ) உலகில் எப்போதுமே இரு கிழமைகளும், இரு தேதிகளும் இருந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்களின் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும் அருகருகே நடைபெற்று கிழமைகள் மாறும் பகுதியாகவும் அந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதியே அமைந்துள்ளது.

எ) அந்த இருநாட்டவரும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு கிழமைகளுக்கு உரியவர்களாக இருப்பதைத்தான் 'ரப்புல் மஷ்ரிக்கைனி வரப்புல் மஃரிபைன்' (55:17) என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான்.

ஏ) அந்த சர்வதேசக் கோட்டுப் பகுதியை ஒரு நாளின் ஆரம்ப பகுதியாகவும், முடியும் பகுதியாகவும் கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத கடல் பகுதியாக அல்லாஹ் அமைத்துள்ளான்.

ஐ) நபி(ஸல்) அவர்களுக்கு உலக முஸ்லிம்களும், உலக முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்கும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதே நமக்கு 'கஃபா'வை 'கிப்லா'வாக அருளியதின் நோக்கமாக அல்லாஹ் கூறுகின்றான்.

ஒ) இரு கிழக்கும் இரு மேற்கும் சந்திக்கும் இரு திசைகளும் அருகாமையில் இருந்தாலும், கிப்லாவின் கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை மேற்கு நோக்கி தொழுகின்றார்கள். அதே பகுதியில் வாழும் கஃபாவின் மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையை கிழக்கு நோக்கி தொழுவார்கள். இதுவும் உலக தேதிக்கோட்டின் முக்கியமான அம்சமாக உள்ளது.

 இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தொடர்ந்து படிக்க :  பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04.

Read 2649 times Last modified on புதன்கிழமை, 12 பிப்ரவரி 2014 13:49