திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020 00:00

ஹிஜ்ரி 1441 ரமழான் நோன்பு அறிவிப்பு

Rate this item
(1 Vote)

ஹிஜ்ரி 1441-இன் ஷஃஅபான் மாதம் கடந்த 25-03-2020 புதன்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. நடப்பு ஷஃஅபான் மாதம் 30 நாட்களைக் கொண்டது.

 

அல்குர்ஆனின் கூற்றுப்படி (36:39) புறக்கண்களால் பார்க்க இயலும் ஷஃஅபான் மாதத்தின் இறுதிப்பிறை வடிவமான 'உர்ஜூஃனில் கதீம்' தினம் 22-04-2020 புதன்கிழமை ஆகும்.

 

23-04-2020 வியாழக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை எனும்) புவிமைய சங்கமநாள் ஆகும். அன்றோடு நடப்பு ஷஃஅபான் மாதம் முடிவடைகிறது.

 

எனவே இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் எதிர்வரும் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்குகிறது. ஏப்ரல்-24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாம் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை நோற்றவர்களாக இருக்க வேண்டும்.

 

சந்திர மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறையானது அந்த முதல் நாளில்தான் புறக்கண்களுக்குத் தெரியும். அல்லாமல் முதல்நாளுக்குரிய தலைப்பிறை மாதத்தின் 29-ஆம் தேதியிலோ, மாதக் கடைசி நாளிலோ தெரியாது. புரிவதற்காக சொல்வதென்றால்...,

 

ரமழான் தலைப்பிறை என்று மக்கள் புரிந்துள்ள ரமழான் முதல்நாளுக்குரிய பிறையானது, எதிர்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் சூரியன் உதித்த பின்னர், சூரியனைத் தொடர்ந்து கிழக்குத் திசையில் அது உதிக்கும் (தோன்றும்). பின்னர் சூரியன் மறைந்து வெளிச்சம் குறைந்த பின்னர், அந்தப் பிறையானது மேற்கில் அது மறையும் போது நமக்குக் காட்சியளிக்கும்.

 

இவ்வாறு ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மஃரிபு நேரத்தில் மேற்கில் பார்க்கப்படும் அந்தப் பிறையானது, ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றுதான் ரமழான் மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சி பகரும். புறக்கண்களால் பார்க்கப்படும் மேற்படி பிறை ரமழான் முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

 

மேற்படி ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மறையும் பிறையை, மேற்கில், மஃரிபு நேரத்தில் பார்த்துவிட்டு, ஏப்ரல் 25-ஆம் தேதி சனிக்கிழமைதான் நாங்கள் முதல் நோன்பை நோற்போம் என்று கூறுவதற்கு மார்க்க ஆதாரமுமில்லை, அது அறிவார்ந்த செயலுமில்லை. இதனால் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை பரிதாபமாக இழக்க நேரிடும். இதை மக்கள் தற்போது புரிந்து வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.

 

சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படியும், கணக்கிடும் படியும் அமைந்துள்ளன (55:5, 6:96). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இதன் அடிப்படையில் ரமழான் முதல் நாள் வெள்ளிக்கிழமை (24-04-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).

 

அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதற்கு, குர்ஆன் சுன்னாவின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. வல்ல அல்லாஹ் இந்த ரமழானின் நன்மைகளை நமக்குப் பரிபூரணமாக கிடைத்திட அருள்புரிவானாக.

 

இவண்,

ஹிஜ்ரி கமிட்டி,
State Head Office : 160/101, வடக்கு மெயின் ரோடு,

ஏர்வாடி – 627103.

திருநெல்வேலி மாவட்டம்.

 

Web : www.mooncalendar.in

Youtube : https://www.youtube.com/user/MoonHijriCalendar/videos

Read 1037 times Last modified on திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020 05:45