வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 00:00

ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு

Rate this item
(1 Vote)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
 
ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு
 
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
அரஃபா நோன்பு  : துல்ஹிஜ்ஜா - 9 புதன் கிழமை (30-08-2017)
ஹஜ்ஜூப் பெருநாள்: துல்ஹிஜ்ஜா - 10 வியாழக் கிழமை (31-08-2017)
 
இவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-08-2017) அன்று துல்கஃதா பிறை-28 'உர்ஜூஃனில் கதீம்' நாள். திங்கள் கிழமை (21-08-2017) அன்று துல்கஃதா பிறை-29 புவிமைய சங்கம (அமாவாசை) தினம். அன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வந்து, அம்முக்கோள்களும் ஒரு கோட்டில் அமைந்து, சந்திரனானது துல்கஃதா மாதச்சுற்றை முடிக்கும் நாள். மேற்படி திங்கள் கிழமையுடன் துல்கஃதா மாதம் 29 நாட்களில் முடிவடைகிறது. 
 
இதை நிரூபிக்கும் வகையில் திங்கள் கிழமை (21-08-2017) அன்று சூரியக் கிரகணமும் நடைபெற உள்ளது. இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம (Geocentric Conjunction) தினத்தில்தான் சூரியக் கிரகணம் நடைபெறும். 
 
எனவே அதற்கு அடுத்தநாள் செவ்வாய்க் கிழமை (22-08-2017) துல்ஹிஜ்ஜா பிறை 1 ஆகும். அன்று சூரியனைப் பின் தொடர்ந்து சந்திரனும் கிழக்குத் திசையில் உதித்து, அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். அந்தப்பிறை அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமார் 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும். 
 
சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படியே அமைந்துள்ளன (55:5). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இதன் அடிப்படையில் அரஃபாநாள் புதன்கிழமை (30-08-2017), ஹஜ்ஜூப் பெருநாள் வியாழக்கிழமை (31-08-2017) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189). 
 
மாறாக ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாள்தான் அரஃபா தினம் என்பதற்கோ, சவுதிஅரேபியா அரசு அறிவிக்கும் தினத்தில்தான் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்கோ எவ்வித மார்க்க ஆதாரங்களும் இல்லை. ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமையில் மட்டுமே தொழ வேண்டும். அதற்கு மாறாக ஒரு அரசாங்கமோ, அல்லது பொதுமக்களோ ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை அல்லாத மற்றொரு நாளில் ஜூம்ஆ தொழுகையை அறிவித்தால், அறிவிக்கப்பட்ட அந்த நாள் வெள்ளிக் கிழமையாக மாறிவிடாது. குறிப்பாக சவுதி அரசாங்கம் கடந்த காலங்களில் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூவுடைய தேதியை அறிவித்துவிட்டு, பின்னர் அதை மாற்றிய நிகழ்வுகளையும் நாம் அனைவரும் அறிவோம். 
 
மேலும் 'கும்ம' (அமாவாசை) எனும் சங்கம நாள்தான் இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதிநாள் ஆகும். அன்றைய தினம் பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.  அந்த சங்கம நாளுக்கு அடுத்தநாள் புதிய மாதத்தின் முதல்நாள் ஆகும். இவற்றிற்கான ஆதாரங்களை நாம் பலமுறை விளக்கி விட்டோம். இந்நிலையில் அமாவாசை நாளில், பிறையைப் பாருங்கள் என்று அறிவிப்பு செய்வதும், பிறை பார்க்கப்பட்டு விட்டதாக நம்புவதும் அறிவார்ந்த செயல் அல்ல. இதை மார்க்கம் வலியுறுத்தவுமில்லை. எனவே இவை போன்ற தரமற்ற அறிவிப்புகளை அலட்சியம் செய்ய வேண்டுகிறோம். 
 
பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் ஹராம் என தடைசெய்துள்ளது. எனவே பெருநாள் தினமான வியாழக்கிழமை (31-08-2017) அன்று இறைவனைப் புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து தியாகத் திருநாள் என்னும் ஹஜ்ஜூப் பெருநாளை அனைவரும் சேர்ந்து சரியான தினத்தில் சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடிட அழைப்பு விடுக்கிறோம்.
 
 
இவண் 
ஹிஜ்ரி கமிட்டி
 
குறிப்பு : ஹிஜ்ரி 1438 ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் தகவல்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் - இன்ஷா அல்லாஹ்.
Read 1228 times Last modified on வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 12:11