புதன்கிழமை, 06 மே 2020 00:00

நபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தது பற்றிய விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6F/7

மஃரிபுதான் ஒரு நாளின் தொடக்கம் என்று பரப்பப்படும் தவறான வாதங்கள்

ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபிலிருந்துதான் என வாதிடுவோர், தங்களது கூற்றுக்கு ஆதாரமாக சில செய்திகளை மேற்கோள் காட்டுகின்றனர். அவை நாளின் தொடக்கம் மஃரிபு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக இல்லை. இன்னும் ஹதீஸ்கள் என அவர்கள் காட்டும் ஆதாரங்களில், பல செய்திகள் ஹதீஸாகவும் இல்லை. மாற்றுக்கருத்தினர் தங்களின் பிரதான ஆதாரங்களாக சுட்டிக்காட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட செய்திகளை முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கும் முகமாக இந்த ஆய்வுப் பதிவு அமைகிறது. அத்தகைய செய்திகளும் நமது விளக்கங்களும் பின்வருமாறு...

வாதம் - 6 : நபி (ஸல்) அவர்;கள் தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தல்

حدثنا إسماعيل ، قال : حدثني مالك ، عن يزيد بن عبد الله بن الهاد ، عن محمد بن إبراهيم بن الحارث التيمي ، عن أبي سلمة بن عبد الرحمن ، عن أبي سعيد الخدري رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان ، فاعتكف عاما ، حتى إذا كان ليلة إحدى وعشرين ، وهي الليلة التي يخرج من صبيحتها من اعتكافه ، قال : ' من كان اعتكف معي ، فليعتكف العشر الأواخر ، وقد أريت هذه الليلة ثم أنسيتها ، وقد رأيتني أسجد في ماء وطين من صبيحتها ، فالتمسوها في العشر الأواخر ، والتمسوها في كل وتر ' ، فمطرت السماء تلك الليلة وكان المسجد على عريش ، فوكف المسجد ، فبصرت عيناي رسول الله صلى الله عليه وسلم على جبهته أثر الماء والطين ، من صبح إحدى وعشرين ழூ صحيح البخاري - كتاب الاعتكاف باب الاعتكاف في العشر الأواخر - حديث : ‏1940‏

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாஃப் இருந்தனர். 21-வது நாள் வந்தபோது, அந்த நாளின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ''என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும். அந்த நாள் எனக்கு காட்டப்பட்;டு பின்னர் மறக்கடிக்கப்பட்டடு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தா செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப் படை நாட்களில் தேடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்றைய தினம் வானத்திலிருந்து மழை பொழிந்தது. பள்ளிவாயில் கூரைகளால் வேயப்பட்டிருந்ததால் மழை நீர் பள்ளிவாயிலுக்குள் கொட்டியது. 21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை நான் எனது கண்களால் பார்த்தேன்.

அறிவித்தவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள்

நூல்: புகாரி 1940 (தமிழ் மொழிபெயர்ப்பு எண் : 2027)

விளக்கம் :

 மேற்படி ஹதீஸில் 'லைத்துல் கத்ரு' எனும் 'கத்ருடைய நாளை' எப்போது தேடவேண்டும்? என்ற செய்திதான் இருக்கின்றதே தவிர ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமையவில்லை.

 இருப்பினும் இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்கள், தங்களது இஃதிகாஃபை 21-வது நாளின் சுப்ஹில் (காலையில்) முடித்துள்ளார்கள் என்ற தகவலை வைத்து சிந்திக்கும் போது, ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு இல்லை மாறாக சுபுஹூ வேளைதான் (காலை) என்பதையும் அறிய முடிகிறது.

 காரணம் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபாக இருக்குமேயானால், இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய தினம் காலையிலிருந்து மஃரிபுவரை உள்ள நேரத்தின் அமல்களை தவற விட்டிருக்கவே மாட்டார்கள். தங்களது இஃதிகாஃபை அந்த 21-வது நாளின் மஃரிபு நேரம்வரை தாமதித்து, பின்னர் அந்த மஃரிபு நேரத்தில்தான் வெளியேறி இருப்பார்கள். ஆனால் அப்படி செய்யாமல் ஸூப்ஹில் வெளியேறி உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ரு என்பதற்குத்தான் ஆதாரமாக அமைகிறது. ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்பவர்களுக்கு எதிரான ஹதீஸ் இது என்பதை முதலாவது பரிந்து கொள்ள வேண்டும்.

 இரண்டாவதாக, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அந்த ரமழான் மாதத்தின் 21-வது நாளின் காலைப் பொழுதில் இருந்த நிலையில், 'என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கட்டளையிட்டுள்ளதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இது நிதானமாக கூர்ந்து கவனிக்கப்பட வேண்டுய ஒரு விஷயமாகும்.

 நடப்பு ரமழான் மாதம் 30 நாட்களில் முடியும் என்பதை முற்கூட்டியே தெரிந்து இருந்தால்தான், 21-வது நாளின் காலைப் பொழுதில் இருந்து கொண்டு, 'கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும்' என்று அறிவிக்க முடியும். இதிலிருந்தே நபி (ஸல்) அவர்களும், அன்றைய ஸஹாபாக்களும் ஒரு தெளிவான மாதக் கணக்கீட்டு முறையை பின்பற்றியுள்ளதை அறிய முடிகிறது. மேலும் அவர்கள் நடப்பு மாதத்தை முடிப்பதற்கு 29-வது நாளின் மஃரிபு வேளையில் பிறை பார்த்து செயல்படவில்லை என்பதும் இதிலிருந்து புரிகிறது.

 இதேபோன்று அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் (2036) பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் 20-வது நாளின் காலைப் பொழுதில் இருந்து கொண்டு, கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருங்கள் என்று கட்டளையிட்டதாக வருகிறது. 20-வது நாளிலிருந்து, கடைசி 10 நாட்களை எண்ணினால் அந்த ரமழான் மாதம் 29 நாட்களில் முடிந்ததை அறியமுடிகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும், ஒரு மாதம் எப்போது முடிவடையும்? என்பதை முற்கூட்டியே அறிந்த நிலையில் இருந்துள்ளார்கள் என்பதைத்தான் இது போன்ற ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிய முடிகிறது. மாறாக ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று இந்த ஹதீஸ்கள் சொல்லவில்லை.

 ஒரு சந்திர மாதத்தின் முதல்நாளை தொடங்குவதற்கு, நடப்பு மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில், மேற்குத் திசையில் பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும். மேலும் அன்று பிறையை பார்த்த பின்னரே புதிய மாதத்தின் முதல்நாளை தொடங்கிட வேண்டும். இதுபோன்ற சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தமிழகப்பிறை, இலங்கை தேசியப்பிறை, சவுதிப்பிறை மற்றும் சர்வதேச பிறைத் தகவல் போன்ற பிறை நிலைபாடுகள். அத்தகைய பிறை நிலைபாடுகள் அனைத்திற்கும் எதிரான ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைகிறது.

 மேற்படி பிறை நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவோர், ரமழான் 20-வது நாளிலோ, 21-வது நாளிலோ இருந்து கொண்டு நடப்பு ரமழான் மாதத்தில் பின்வரும் 10 நாட்களும் இஃதிகாஃப் இருங்கள் என்று தமது ஜமாஅத்தினருக்கு அறிவிக்க முடியுமா? முடியவே முடியாது. காரணம் மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில், மேற்குத் திசையில் பிறையை புறக்கண்களால் பார்த்தால்தான் நடப்பு ரமழான் மாதத்திற்கு எத்தனை நாட்களில் முடியும்? என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மாத முடிவை முற்கூட்டியே தெரிந்த நிலையில் பிறை கணக்கீட்டில் இருந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஸ்கள் பறைசாற்றுகிறது.

 மேற்படி ஹதீஸை வைத்துக் கொண்டு 21-வது நாள் ஃபஜ்ருக்கு முந்திய இரவில் மழை பெய்தது என்றும், அந்த இரவுதான் 21-வது நாளைக்குரிய இரவு என்றும் தவறாக புரிந்து கொண்டு, 21-வது நாளின் பகலுக்கு முன்னால் இரவு இருப்பதாக மாற்றுக் கருத்தினர் வாதிக்கின்றனர். இதுவும் தவறான வாதமாகும்.

 21-வது நாள் ஃபஜ்ருக்கு முந்திய இரவில் மழை பெய்தது என்றும் அந்த இரவுதான் 21-வது நாளைக்குரிய இரவு என்றும் இந்த ஹதீஸில் எந்த வாசகங்களும் இல்லை. அவ்வாறு எங்கு இடம்பெற்றுள்ளது? என்பதை மாற்றுக் கருத்தினர் காட்டட்டும். அப்படிப்பட்ட எத்தகைய வாசகங்களும் ஹதீஸில் இல்லை என்பதே உண்மை. வீண் கற்பனைகள் ஒருபோதும் மார்க்கமாகாது.

 மேற்படி ஹதீஸில் இடம்பெறும் 'லைலத்' என்ற சொல்லுக்கு 'இரவுதான்' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என மாற்றுக் கருத்தினர் புரிந்துள்ளதால் ஏற்பட்ட குழப்பமே இது.

 'லைலத்துல் கத்ரு' எனும் கத்ருடைய நாள் என்பது ஒரு பகலையும், ஒரு இரவையும் உள்ளடக்கிய, 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு முழுமையான நாள் ஆகும். மேற்படி ரிவாயத்தில் 21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் பார்த்திருக்கிறார். எனவே அன்றைய தினமான 21-வது நாள் அல்லாஹ்வின் நாட்டப்படி கத்ருடைய நாளாக இருந்திருப்பின், லைத்துல் கத்ரு எனும் 24 மணிநேரம் கொண்ட அந்த நாளை அனைவரும் அடைந்திருப்பர் என்பதை விளங்க முடிகிறது.

 கத்ருடைய நாளின் பலனை முழுமையாக அடைந்து கொள்வதற்காகவும், நபி (ஸல்) அவர்கள் 21-ஆம் நாளின் காலைப் பொழுதிலேயே 'என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும்;' என்று ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டு உள்ளார்கள். ஆக நாம் ஏற்கனவே கூறியது போல, மேற்படி ஹதீஸில் லைத்துல் கத்ரு நாளை எப்போது தேடவேண்டும்? என்ற செய்தியும், பிறை கணக்கீட்டை வலியுறுத்தும் செய்தியும்தான் இருக்கின்றதே தவிர ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்பதற்கு இந்த ஹதீஸூம் ஆதாரமாக அமையவில்லை.

 '21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை நான் எனது கண்களால் பார்த்தேன்' என்ற செய்திகூட அறிவிப்பாளரின் சொந்த கூற்றாகும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸ் குறித்து நாம் இதுவரை அளித்துள்ள விளக்கங்களை மாற்றுக் கருத்தினர் நிதாமான படித்து சிந்திக்க வேண்டுகிறோம்.

Read 380 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:20