வெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00

அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

பகுதி : 6D/7

வாதம் - 4 : அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வரலாற்றுச் சம்பவம்.

حدثنا معلى بن أسد حدثنا وهيب عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت : دخلت على أبي بكر رضي الله عنه فقال في كم كفنتم النبي صلى الله عليه و سلم ؟ قالت في ثلاثة أثواب سحولية ليس فيها قميص ولا عمامة . وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه و سلم ؟ قالت يوم الإثنين . قال فأي يوم هذا ؟ قالت يوم الإثنين . قال أرجو فيما بيني وبين الليل . فنظر إلى ثوب عليه كان يمرض فيه به ردع من زعفران فقال اغسلوا ثوبي هذا وزيدوا عليه ثوبين فكفنوني فيها . قلت إن هذا خلق ؟ قال إن الحي أحق بالجديد من الميت إنما للمهلة فلم يتوف حتى أمسى من ليلة الثلاثاء . ودفن قبل أن يصبح . صحيح البخاري - (1 ஃ 467) 1321

நான், அபூபக்ர் (ரழி) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்? என்று அவர் கேட்டார்.

வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.

அபூபக்ர் (ரழி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள்.

நான் திங்கட்கிழமை என்றேன்.

இன்று என்ன கிழமை? என்று கேட்டதும்

நான் திங்கட் கிழமை என்றேன்.

அதற்கவர்கள் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள்.

நான், இது பழையதாயிற்றே என்றேன்.

அதற்கவர்கள் இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத்தான் போகும் என்றார்கள்.

பிறகு செவ்வாய்க் கிழமையின் மாலைவரை மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவித்தவர்: ஆயிஷா (ரழி). நூல்: புகாரி(1387)

விளக்கம் :

 மேற்படி அறிவிப்பு ஹதீஸ் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவம்தான் இது. குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களாகும். வரலாற்றுச் சம்பவங்கள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது.

 மேற்படி செய்தியின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று மரணமடைந்தார்கள் என்பதால், தானும் (அபூபக்கர் ரழி) அவ்வாறு திங்கட்கிழமை இரவுக்குள் மரணமடைய விரும்பினார்கள்.

 ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் செவ்வாய்கிழமை மாலைவரை மரணிக்கவில்லை என்று இச்சம்பவம் கூறுகிறது. அவர்கள் மரணித்த நேரம் மேற்படி ரிவாயத்தில் குறிப்பிடப்படவில்லை. புதன் கிழமையின் காலை விடிவதற்கு முன்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த செய்திதான் மேற்படி ரிவாயத்தில் இடம் பெறுகின்றது.

 அரபு மொழி வழக்கில் திங்கள் கிழமையை 'யவ்முல் இத்னைன்', 'லைலத்துல் இத்னைன்' என்றுதான் அழைக்கப்படும். 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' (ஃதுலஃதாஹ்) என்ற அரபு சொற்றொடர் செவ்வாய்க் கிழமையைத்தான் குறிக்குமே அல்லாமல் அது திங்கள் கிழமையை குறிக்காது.

 மேற்படி செய்தியில் செவ்வாய்க் கிழமையின் மாலை வரை அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றுதான் உள்ளது. திங்கட்கிழமை இரவு மரணித்தார்கள் என்றும், அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விடிவதற்குள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவதற்கும் எந்த வாசகங்களும் இல்லை.

 மேற்படி குழப்பம் வருவதற்குக் காரணம் லைலத் என்பதற்கு இரவு என்று மொழிபெயர்த்து 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' என்பதை 'திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு' என்று புரிந்தது முதலாவது தவறாகும்.

 பிறகு மேற்படி ரிவாயத்தின் வாசகங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என மூன்று வௌ;வேறு கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறித்து ரிவாயத் செய்யப்பட்டதை, திங்கள் கிழமை என்ற ஒரே நாளில் நடந்ததாகப் புரிந்து கொண்டது இரண்டாவது தவறாகும். எனவேதான் மாற்றுக்கருத்தினருக்கு இதில் குழப்பம் ஏற்பட்;டுள்ளது.

 முதலாவதாக, அபூபக்கர் (ரழி) திங்கட்கிழமை மரணிக்க ஆசைப்பட்டார்கள். அன்றைய திங்கட்கிழமை அன்றுதான் இது என்ன கிழமை? என்றும் வினவினார்கள். தான் அந்த திங்கள்; கிழமை இரவே மரணிக்க வேண்டுமே என்று விருப்பமும் தெரிவித்தார்கள். இவற்றை மேற்படி செய்தி கூறுகிறது. இவை நடைபெற்றது திங்கள் கிழமைதான். ஆனாலும் அந்த திங்கள் கிழமை அன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்க வில்லை.

 இரண்டாவதாக, அபூபக்கர் (ரழி) அவர்கள் அடுத்தநாள் செவ்வாய்க் கிழமைதான் மரணிக்கிறார்கள். அதுவும் அந்த செவ்வாய்க் கிழமையின் மாலை வரை மரணிக்க வில்லை. மாறாக அந்த மாலைக்குப் பிறகே மரணித்தார்கள். இவை நடைபெற்றது திங்கள் கிழமையை அடுத்து வந்த செவ்வாய்க்கிழமை ஆகும்.

 மூன்றாவதாக, ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ரு என்பதால் புதன் கிழமையின் துவக்கத்தில் அன்று காலைப் பொழுது முழுவதுமாக விடிவதற்குள் ('கப்ல அன் யுஸ்பஹ') அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அடக்கம் நடைபெற்றது தொடர்ந்து வந்த புதன் கிழமை ஆகும். ஆக மூன்று வௌ;வேறு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறித்து ரிவாயத் செய்யப்பட்டதுதான் மேற்கண்ட செய்தியாகும்.

 அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணமடைந்த நாள் (கிழமை) தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ரிவாயத்துகளில் பல பலவீனமாகவும் உள்ளன.

 முஸ்ஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 5977-வது ரிவாயத்தின் படி எந்தக் கிழமையையும் குறிப்பிடாமல் 'ஃபதவஃப்ஃபஹீன அம்ஸா' - அவர் சாயங்காலம் மரணித்தார், அதே இரவில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து முஅம்மர் என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

 இப்னு ஹிப்பான் 6719-வது ரிவாயத்தின் படி 'மாத யவ்முல் இத்னைனி அஷிய்யத்தன் - திங்கட்கிழமை மாலை மரணித்தார்கள் என்றும், 'வ துஃபினா லைலன் - மேலும் அவர் இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்' என்று வந்துள்ளது. இதுவும் பலவீமான செய்தியாகும்.

 அல் அஹாத் வல் மதானி கிரந்தத்தின் 54-வது செய்தியின் படி, ஃபமாத மினல் லைல் வ துஃபின லைலத்துஸ் ஸூலஸாஹ் - அவர் இரவில் மரணித்தார் செவ்வாய்க்கிழமையில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து அபூஸலமா என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இப்படி பல்வேறு ரிவாயத்துகள் இடம்பெற்றுள்ளன.

Read 666 times Last modified on புதன்கிழமை, 06 மே 2020 04:20