திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020 00:00

'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள் வைக்க வேண்டுமா?

Rate this item
(1 Vote)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

                                                                பகுதி :5 / 7

'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள் வைக்க வேண்டுமா?

குர்ஆன், ஹதீஸில் இடம்பெறும் 'லைலத்' என்ற இந்தச் சொல் சில இடங்களில் இரவு என்ற பொருளையும், சில இடங்களில் ஒரு முழுமையான நாளையும் குறிக்கும் என்பதே நமது நிலைபாடு. எந்தெந்த இடங்களில், எப்படி பொருள் வைக்க வேண்டும்? என்பதை முந்தைய தலைப்பில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம் - அல்ஹம்துலில்லாஹ்.

இருப்பினும் 'லைலத்' என்ற சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் 'இரவு' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று மாற்றுக்கருத்தினர் வாதிக்கின்றனர். எனவே 'லைலத்' என்ற இந்தச் சொல்லுக்கு இரவு என்று பொருள் கொடுக்க இயலுமா? என்பதை சிந்திப்பதற்காக கீழ்க்காணும் ஐந்து ஹதீஸ்களை ஒரு உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்.

ஹதீஸ் - 1 :

'எவன் குறி சொல்பவனிடம் சென்று அவனிடத்தில் எதைப் பற்றியாவது கேட்டால், அவனுக்கு''நாற்பது நாட்கள்''தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸஃபிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

அறிவித்தவர் : ஸஃபிய்யா (ரழி) அவர்கள்

நூல் : சுனனுல் குப்ரா பைஹகீ. பாகம்-8, பக்கம்-138. ஹதீஸ் எண்: 16952

மேற்காணும் ஹதீஸில் நாற்பது நாட்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ''அர்பயீன லைலத்தன்' என்று வந்துள்ளது. 'லைலத்' என்ற இந்த சொல் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும் என்று நாம் கூறுகிறோம். 'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என மாற்றுக்கருத்தினர் கூறுகின்றனர்.

இங்கு லைலத் என்ற சொல்லுக்கு இரவு என்று பொருள் வைத்தால் குறிகேட்பவனின் 'நாற்பது இரவுகளின்' தொழுகைகள் மட்டும்தான் ஏற்றுக் கொள்ளப்படாது என்று பொருள் அமைகிறது. அப்படியானால் குறிகேட்டவன் பகலில் தொழுத அனைத்து தொழுகைகளும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பொருள்படுகிறது. என்ன விபரீதம் பாருங்கள்..!. குறிகேட்பவன் குறித்த மாற்றுக்கருத்தினரின் நிலைப்பாடு இதுதானா? – அவர்களே விளக்கட்டும்.

எனவே இந்த ஹதீஸில் லைலத் என்ற சொல், நாற்பது என்ற எண்ணிக்கையோடு இணைந்து வருவதால், 'ஒருமுழுமையான நாள்' என்று அதற்கு அர்த்தம் வைப்பதே அறிவுடைமையாகும்.

ஹதீஸ் - 2 :

'எவன் மது அருந்துகிறானோ அவனுடைய'40 நாட்கள்'தொழுகை ஏற்று கொள்ளப்பட மாட்டாது. அவர் தவ்பா செய்துவிட்டால் அல்லாஹ் அவன் தவ்பாவை ஏற்றுக் கொள்வான்.

'மீண்டும் குடித்தால்'40 நாட்கள்'தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் குடித்து தவ்பா செய்தால் அப்போதும் மன்னிப்பான்.

'நான்காவது முறை குடித்தால் அப்போது'40 நாட்கள்'தொழுகை ஏற்று கொள்ளப்பட மாட்டாது. அதன் பிறகு தவ்பா செய்தால்; அல்லாஹ் அவனுடைய தவ்பாவை ஏற்க மாட்டான். அவனுக்கு நரகத்தின் பானத்திலிருந்து குடிக்க கொடுப்பது அல்லாஹ் மீது ஆகிவிட்டது.

அறிவித்தவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள்.

நூல் : ஷரஹ் அஸ்ஸூன்னா அல் பஃகவி

மேற்காணும் ஹதீஸில் ''நாற்பது நாட்கள்' என்று நாம் பொருள் செய்துள்ள இடத்தில் 'அர்பயீன லைலத்தன்' என்ற சொல்தான் வந்துள்ளது. இங்கும் 'லைலத்' என்ற சொல்லுக்கு இரவு என்று அர்த்தம் வைத்தால், மது அருந்துபவனின் 'நாற்பது இரவுகளின்' தொழுகைகள் மட்டும்தான் ஏற்றுக் கொள்ளப்படாது, அவன் பகலில் தொழுத அனைத்து தொழுகைகளும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் என்றே பொருள்படும்.

மதுவையும், போதையையும் வேறோடும், வேறடி மண்ணோடும் பிடிங்கி எறிந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட எவரும், இப்படிப்பட்ட விபரீதமான பொருளை சரிகாண மாட்டார்கள். எனவே இந்த இடத்தில் லைலத் என்ற சொல்லுக்கு ஒரு முழுமையான நாள் என்று பொருள் வைப்பதுதான் சரியானதாகும்.

ஹதீஸ் - 3 :

'மீசையை கத்தரிப்பதும், நகங்களை வெட்டுவதும், அக்குள் முடியை பிடுங்குவதும், மறைவிட முடியை மழிப்பது ஆகியவற்றில்'நாற்பது நாட்களைவிட'அதிகமாக நாங்கள் விட்டு விடக்கூடாது என எங்களுக்கு நாட்கள் குறிக்கப்பட்டது என்று அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

அறிவித்தவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி).

நூல் : ஸஹீஹ் முஸ்லீம். பாகம்-1. பக்கம்-153, ஹதீஸ் எண் : 622

மேற்காணும் ஹதீஸிலும் ''நாற்பது நாட்கள்' என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் 'அர்பயீன லைலத்தன்' என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இங்கும் 'லைலத்' என்பதற்கு 'நாள்' என்று மொழி பெயர்ப்பதுதான் சரியான பொருளைத் தரும்.

மாறாக இரவு என்று மொழிபெயர்த்தால், 'நாற்பது இரவுகளைவிட அதிகமாக நாங்கள் விட்டு விடக்கூடாது' என்ற அர்த்தமற்ற பொருள் அமையும். ஒரு மனிதனின் நகங்களும், முடிகளும் இரவில்தான் வளருமா? பகல் பொழுதில் வளர்ச்சி பெறாதா? என்பன போன்ற கேள்விகள் எழும்.

அல்லது மீசையை கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடியை பிடுங்குவது, மறைவிட முடியை மழிப்பது போன்ற காரியங்களை பகலில் செய்யக் கூடாது என்று தடை விதிப்பதைப்போல மாற்றுப் பொருள்கூட அமையும். எனவே இந்த ஹதீஸிலும் லைலத் என்ற சொல்லுக்கு ஒரு முழுமையான நாள் என்று பொருள் வைப்பதுதான் சரியானதாகும்.

ஹதீஸ் - 4 :

'ஜமாஅத்துடன் யார்நாற்பது நாட்கள்'தொழுகிறாரோ அவருக்கு நரக விடுதலையும், நயவஞ்சகத்திலிருந்து விடுதலையும் விதிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

அறிவித்தவர் : அனஸ் (ரழி) அவர்கள்,

நூல் : ஷூஅபுல் ஈமான் பைஹகீ. பாகம்-3, பக்கம்-62, ஹதீஸ் எண் 2873

தொழுகை என்ற இறைவணக்கம் ஒவ்வொருநாளும் பகலிலும், இரவிலும் உண்டு. ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை கடமையான தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழுவதற்கு மார்க்கம் வலியுறுத்துவதை அறிவோம்.

இந்த ஹதீஸ் இடம்பெறும் லைலத் என்ற சொல்லுக்கு 'இரவு' என்று மொழி பெயர்த்தால், ஒருவர் இரவுநேர தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுதுவிட்டாலே நரகத்திலிருந்தும், நயவஞ்சகத்திலிருந்தும் அவருக்கு விடுதலையும் கிடைத்து விடும் என்று அர்த்தம் அமையும். மேலும் பகல் பொழுதுடைய தொழுகைகளை அவர் ஜமாஅத்துடன் தொழுதால் இத்தகைய விடுதலை அவருக்கு கிடைக்காது என்று அலட்சியப்படுத்துவதைப் போலவும் பொருள்படுகிறது.

எனவே ஒருநாளுக்குரிய கடமையான அனைத்து தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று நமது மார்க்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், லைலத் என்ற சொல்லுக்கு இரவு என்று மொழி பெயர்த்து, இரவு நேரத்தின் தொழுகைகளை மட்டும் ஜமாஅத்தாக தொழுவதற்கு ஆர்வமூட்டும் வகையில் பொருள் கொள்வது சரியானது அல்ல. எனவே இந்த ஹதீஸிலும் லைலத் என்ற சொல்லுக்கு முழுமையான ஒரு நாள் என்று மொழி பெயர்ப்பதே சரியானதாகும்.

ஹதீஸ் - 5 :

எவன்நாற்பது நாட்கள்'உணவை பதுக்குகின்றானோ, அவனை விட்டும் அல்லாஹ் நீங்கிவிட்டான். அவனும் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் விட்டான்....

அறிவித்தவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள்.

நூல் : அஃக்பாருல் மக்கா அல்-ஃபாக்கிஹீயீ. பாகம்-4, ஹதீஸ் : 449

மேற்காணும் ஹதீஸிலும் லைலத் என்பதற்கு நாள் என்று மொழிபெயர்த்தால்தான் சரியான, முழுமையான பொருள் அமையும். மாறாக 'லைலத்' என்பதற்கு 'இரவு' என்று பொருள் வைத்தால், உணவுப் பொருட்களை இரவில் பதுக்குவோரை விட்டும்தான் அல்லாஹ் நீங்கிக் கொள்கிறான் என்றே பொருள் வரும். அப்படியானால் உணவுப் பொருளை பகலில் பதுக்கலாமா? என்ற கேள்வியும் எழும்.

எனவே இதுவரை படித்த விளக்கங்களை மனதில் கொண்டு 'லைலத்' என்ற இந்த சொல் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும் என்பதை தெளிவாக புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்நிலையில், 'லைலத் என்பதற்கு நீங்கள் பொருள் வைப்பது போலத்தான் முற்கால அறிஞர்களும் மொழிபெயர்த்தார்களா? என்று நம்மை நோக்கி மற்றொரு வாதத்தையும் தற்போது எழுப்புகின்றனர்.

பிறைகளை கணக்கிட வேண்டும் என்று பிறைக் கணக்கீட்டிற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து நேரடியான ஆதாரங்களை நாம் எடுத்துரைத்த போதும், இதுபோன்ற வாதத்தையே எழுப்பினர். முற்கால இமாம்கள் பிறைக் கணக்கீட்டை போதித்தார்களா? ஸஹாபாக்கள் பிறைகளை கணக்கிட்டார்களா? என்று நம்மை நோக்கி மாற்றுக் கருத்தினர் கேள்வி எழுப்பினர்.

அவர்களின் வாதங்களுக்கு பதில் அளிக்கும் முகமாக ஸஹாபாக்கள் பிறைக் கணக்கீட்டை நடைமுறைப்படுத்திய ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். பிறைகளை கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்திய முற்கால இமாம்களின் கூற்றுக்களையும் ஆதாரங்களுடன் பகிரங்கமாக வெளியிட்டோம். நம்முடைய விளக்கங்களை மாற்றுக் கருத்துடையோர் பரிசீலித்தார்களா? என்றால் இல்லவே இல்லை..!!

எனவே லைலத் எனும் இந்த அரபுச் சொல் குறித்த விஷயத்திலும், குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியான விளக்கங்களை நாம் எடுத்துக் காட்டிய பிறகும், 'நீங்கள் பொருள் வைப்பது போலத்தான் முற்கால அறிஞர்களும் மொழிபெயர்த்தார்களா? என்று மாற்றுக் கருத்தினர் வாதம் எழுப்புவது, சத்தியத்தை எப்படியாவது மறுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருப்பதையே காட்டுகிறது.

எங்கள் கடமை சத்தியத்தை எடுத்துச் சொல்வதே. யாருக்கு நேர்வழியை வழங்க வேண்டும் என்ற முடிவு அல்லாஹ்விடமே உள்ளது என்பதையும் பதிவு செய்கிறோம்.

Read 862 times Last modified on வெள்ளிக்கிழமை, 01 மே 2020 10:22