திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020 00:00

லைலத் என்றால் என்ன?

Rate this item
(2 votes)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

                                                                            பகுதி : 4 / 7

லைலத் என்றால் என்ன?

ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என வாதிப்போர் தங்களின் கூற்றிற்கு குர்ஆனிலிருந்து நேரடியான ஆயத்துகளையோ, ஸஹீஹான ஹதீஸ்களையோ ஆதாரமாகத் தருவதில்லை. பெரும்பாலும் பலவீனமான செய்திகள், ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுகள் மற்றும் வரலாற்று சம்பவங்களைத்தான் ஆதாரமாக நம்பி பிரச்சாரம் செய்கின்றனர்.

சில ஹதீஸ்கள், மற்றும் வரலாற்றுச் செய்திகளில் இடம்பெறும் 'லைலத்' என்ற அரபுச் சொல்லுக்கு 'இரவு' என்று மொழிபெயர்த்து அது தங்களுக்கு ஆதாரமாக அமைவதாகக் கூறுகின்றனர். எனவே லைலத் என்ற அரபுச் சொல் பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

'லைல்' என்ற அரபுச் சொல் 'இரவு' என்பதை மட்டும் குறிக்கும். இதன் பன்மைச் சொல்லான 'லயால்' என்பது பொதுவாக 'இரவுகள்' என்று பொருள்படும். இரவுகள் என்று பொருள்படும் 'லயால்' என்ற இந்த அரபுச் சொல்லானது சில இடங்களில் நாட்கள் (அய்யாம்) என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 'நஹார்' என்ற அரபுச் சொல் 'பகல்' என்பதை மட்டும் குறிக்கும். 'யவ்ம்' என்ற அரபுச்சொல் ஒரு 'நாள்' என்பதைக் குறிக்கும். ஆனால் 'லைலத்' அல்லது 'லைலஹ்' என்ற இந்த அரபுச் சொல்லானது தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். அல்குர்ஆனின் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் ஆய்வு செய்வதின் வாயிலாக இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள 'லைலத்' என்ற இந்தச் சொல்லானது குர்ஆனின் பல்வேறு வசனங்களிலும், ஹதீஸ்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. 'லைலத்' என்ற இந்தச் சொல் சில இடங்களில் இரவு என்ற பொருளையும், சில இடங்களில் ஒரு முழுமையான நாளையும் குறிக்கும். ஒரு வாக்கிய அமைப்பில் எந்தச் சொல்லோடு இது சேர்ந்து வருகிறதோ, அந்த சொல்லுக்கு ஏற்றவாறு இதன் பொருள் மாறுபடும்.

உதாரணமாக அப்துல்லாஹ் என்பவருக்கு அப்துல்பாஸித் என்ற ஒரு மகன் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த அப்துல்லாஹ்வின் தாயார் சுமைய்யா என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போது இந்த அப்துல்லாஹ்வை அப்துல்பாஸித்தின் தந்தை என்றும் அழைக்கலாம், அல்லது சுமைய்யாவின் மகன் என்றும் அழைக்கலாம். அப்துல்பாஸித் என்ற தனது மகனோடு இணைத்து சொல்லும்போது அவர் 'தந்தை' என்று அழைக்கப்படுவார். சுமைய்யாவோடு இணைத்து சொல்லும்போது 'மகன்' என்று அழைக்கப்படுவார். புரிந்து கொள்வதற்காகவே இந்த உதாரணம்.

இதுபோன்றே 'லைலத்' என்ற இந்த சொல் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் 'லைலத்' என்ற இந்த சொல் 'யவ்ம்' என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் லைலத் என்பதற்கு இரவு என்றும், யவ்ம் என்ற பதத்திற்கு பகல் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46

நாம் மேற்குறிப்பிட்டுள்ள புகாரியின் 46-வது ஹதீஸில் 'ஹம்ஸூ ஸலவாத்தின் ஃபில் யவ்மி வல் லைலத்தி' என்று 'யவ்ம்' என்ற சொல்லோடு 'லைலத்' என்ற சொல்லும் இணைந்து வருகிறது. பகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என்று பொருள்படும் இந்த ஹதிஸில் யவ்ம் என்ற சொல் பகல் என்றும், யவ்ம் என்ற சொல்லுடன் இணைந்து வரும் லைலத்திற்கு இரவு என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

'லைலத்' என்ற இந்த சொல் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும்போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். இதை புரிந்து கொள்வதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து சில உதாரணங்கள் பின்வருமாறு,

மேலும் நாம் மூஸாவுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தோம்;. பின்னர் காளைக் கன்றைக் எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள் என்று அல்குர்ஆனின் 2:51-வது வசனம் கூறுகிறது.

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைபடி 40 நாட்கள் தங்கள் ஊரை விட்டும் வெளியேறி இருந்தார்கள். தங்களின் பொறுப்புகளை ஹாரூன் (அலை) அவர்களிடம் விட்டுச் சென்றார்கள். அந்நேரத்தில் சாமிரி என்பவன் அம்மக்களை வழிகெடுத்து ஒரு காளைக் கன்றை வணங்கும்படி செய்தான். நாற்பது நாட்கள் கழித்து ஊர் திரும்பிய மூஸா (அலை) அவர்கள், காளைக் கன்றின் சிலையை மக்கள் வணங்குவதைப் பார்த்து பொறுப்பாளரான ஹாரூன் (அலை) அவர்களிடம் கோபமுற்றார்கள். இந்த சரித்திரத்தை அல்குர்ஆன் பல இடங்களில் நினைவுபடுத்துகிறது.

இதில் நாம் கூறுவது என்னவெனில் மேற்படி அல்குர்ஆனின் 2:51-வது வசனத்தில் 'அர்பயீன லைலதன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு '40 நாட்கள்' என்றே பொருள் கொள்ள வேண்டும். 'லைலத்' என்ற இந்த சொல் 'நாற்பது' என்ற எண்ணிக்கையுடன் இணைந்து வருவதைக் காணலாம்.

அல்குர்ஆனின் மேற்படி வசனத்தில் இடம் பெறும் 'லைலத்' என்ற சொல்லுக்கு இரவு என்று மொழி பெயர்த்தால், அல்லாஹ்விடம் உரையாடுவதற்காக மூஸா (அலை) அவர்கள் 40 இரவுகள் ஊரை விட்டும் வெளியே இருந்தார்கள் என்று பொருள் வரும். மூஸா (அலை) அவர்கள் 40 இரவுகள் மட்டும்தான் வெளியே சென்றார்கள் என்றால் பகல் பொழுதில் அவர்கள் ஊரில்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் சாமிரி என்பவன் அம்மக்களை வழிகெடுத்திருக்க வாய்ப்பில்லை. பகல் பொழுது முழுவதும், தான் ஊரில் இருந்த நிலையில் காளைக் கன்றின் சிலையை மக்கள் வணங்கியதற்காக ஹாரூன் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) கோபமடைந்ததிலும் அர்த்தமில்லை. ஹாரூன் (அலை) அவர்களை பொறுப்பாளியாக நியமிக்க வேண்டிய அவசியமுமில்லை. இவற்றை சிந்திக்கும் போது மூஸா (அலை) அவர்கள் நாற்பது முழுமையான நாட்கள் ஊரில் இல்லை என்பதைப் புரிய முடிகிறது.

எனவே மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'அர்பயீன லைலதன்' என்பதில் லைலத் என்ற சொல்லுக்கு முழுமையான ஒரு நாள் என்ற பொருளைத்தான் கொடுக்க முடியும். இதுபோலவே அல்குர்ஆனின் 97:1, 7:142, 2:187 போன்ற வசனங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்படி விளக்கம் கொடுத்துள்ளதால் இதை ஆய்வுசெய்து உண்மையை உணர முயலாதவர்கள், லைலத் பற்றிய நமது கருத்தை கண்மூடி எதிர்க்கின்றனர். கிண்டலும் செய்கின்றனர். உதாரணமாக அல்குர்ஆன் 2:187 வசனத்தில் இடம்பெறும் லைலத் என்ற சொல்லுக்கு, 'நாள்' என்று எப்படி பொருள் வைப்பீர்கள்? நோன்பு வைத்துக் கொண்டு மனைவியுடன் நீங்கள் சேர்வீர்களா? என்று அறிவார்ந்து வாதிக்கின்றனர்.

அல்குர்ஆனின் 2:187 வசனத்தை பொருத்தவரை நோன்பு காலங்களில் காலையில் என்ன செய்ய வேண்டும்? இரவில் என்ன செய்ய வேண்டும்? ஸஹர் உணவை எப்போது உட்கொள்ள வேண்டும்? மனைவியுடன் எந்த நேரத்தில் இணையலாம்? என்பதை தெளிவாக விவரிக்கும் வசனமாகும். மேலும் நோன்பு காலங்களில் இரவில்கூட மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற பழைய நிலை மாற்றப்பட்டு, இரவு நேரங்களில் இல்லறத்தில் இணைவது ஆகுமாக்கப்பட்ட செய்தியை இவ்வசனம் கூறுகிறது.

எனவே இவ்வசனத்தில் இடம்பெறும் 'லைலத்தஸ் ஸியாமி' என்பதற்கு 'நோன்பு நாட்களில் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' என்று அர்த்தம் வைப்பதில் எந்தப் பிழையை கண்டார்களோ தெரியவில்லை. நோன்பு நோற்றுக் கொண்டு பகல் பொழுதில் மனைவியுடன் இல்லறத்தில் இணையக் கூடாது என்பதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திலும் எந்த கருத்து வேறுபாடுகளுமில்லை. நோன்பு வைத்துக் கொண்டு மனைவியுடன் சேர்வீர்களா? என்று இவர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பியுள்ளது நகைப்புக்குரியதாகும்.

அடுத்து இந்த வசனத்தில் இடம்பெறும் 'லைலத்தஸ் ஸியாமி' என்ற சொற்றொடரில் எண்ணிக்கையோ மற்றும் கிழமையோ இல்லையே, பிறகு இதில் இடம்பெரும் லைலத் என்ற சொல்லுக்கு நாள் என்று எப்படி பொருள் வைக்க முடியும்? என்றுகூட ஒரு வாதத்தையும் எழுப்புகின்றனர். ஒரு முழுமையான நாள் என்பதில் ஒரு பகலும், ஒரு இரவும் உண்டு என்பதை மறந்ததின் விளைவுதான் இக்கேள்வி. 'நோன்பு நாட்களில்' என்ற இந்த சொல்லாடல் அந்நாளுக்குரிய பகல் பொழுதோடு இரவையும் சேர்த்து உள்ளடக்கி விடும். அந்தந்த நாளின் பகல்பொழுதில் நோன்பை நோற்ற நிலையிலும், இரவு நேரத்தில் நோன்பை துறந்த நிலையிலும் நாம் இருப்போம் என்பதை விளங்க வேண்டும்.

'லைலத்' என்ற இந்த சொல்லுக்கு இரவு என்ற பொருளே வராது என்று நாம் மறுத்தால்தான், மாற்றுக்கருத்துடையோர் கஷ்டப்பட்டு அதை நிறுவ முயல வேண்டும். 'லைலத்' என்ற இந்தச் சொல் சில இடங்களில் இரவு என்ற பொருளையும், சில இடங்களில் ஒரு முழுமையான நாளையும் குறிக்கும் என்பதே நமது நிலைபாடு என்று முன்னரே நாம் விரிவாக விளக்கி விட்டோம். இந்நிலையில் நமது நிலைபாட்டையே விளங்காமல் நம்மை விமர்ச்சிப்பதை என்னவென்று சொல்வது?

இன்னும் உண்ணாமல், பருகாமல் நோன்பு நோற்றல் என்பது பகல் நேரத்தில் மட்டும் ஈடுபடும் ஒரு வணக்கம் ஆகும். இதில் 'லைலத்தஸ் ஸியாமி' என்பதற்கு 'நோன்பு இரவுகளில்' என்ற மொழிபெயர்த்தால், நோன்பு என்ற வணக்கம் இரவு நேரத்திலும் உண்டு என்ற சர்ச்சைக்குரிய அர்த்தமும் எழும். எனவே இவ்வசனத்தில் இடம்பெறும் 'லைலத்தஸ் ஸியாமி' என்பதற்கு 'நோன்பு நாட்களில் என்ற பொருள்தான் மிகப் பொறுத்தமாக அமைகிறது.

மேலும் 'லைலத்' என்ற இச்சொல்லுக்கு நீங்கள் கொடுக்கும் பொருளை மற்ற மொழிபெயர்பாளர்கள் கொடுக்கவில்லையே! என்ற ரீதியில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் நாம் எந்த அடிப்படையில் அந்தப்பொருளை சொல்கிறோம்? என்பதை கவனிக்க வேண்டும். குர்ஆனின் கூறப்பட்ட ஒரு சொல்லுக்கு அல்குர்ஆன் மற்றொரு இடத்தில் விளக்கம் தரும். அல்லது நபி (ஸல்) அவர்கள் அது குறித்து விளக்கியிருப்பார்கள். இந்த ரீதியில்தான் நாம் குர்ஆன் சுன்னாவை அனுகிட வேண்டும். வெறுமனே அகராதி பொருளையோ, பிற மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகளையோ மட்டும் ஆதாரமாகக் கொள்வது சரியான தீர்வாக இருக்காது.

ஒரு விஷயத்தை ஆய்வு செய்து மக்களிடம் ஒரு கருத்தை சொல்வதாக இருப்பின் ஆய்வாளருக்கு அத்துறை சார்ந்த முழுமையான அறிவு முதலில் வேண்டும். அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவோடு கூடிய ஆய்வுகள்தான் சரியான ஆய்வாகவும், பலன்தரக் கூடியதாகவும் அமையும். இதற்கு சிறந்த உதாரணமாக சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தை இங்கு நினைவு கூறுவது மிகப் பொறுத்தமாக இருக்கும்.

டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore) அவர்கள் கருவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவரும், உலகப் பிரசித்திபெற்ற கருவியல் அறிஞரும் ஆவார். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறுயியல் மற்றும் கருவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது மாணவர்களில் சிலர் கருவியல் பற்றியும், மனிதனின் படைப்பு பற்றியும் அல்குர்ஆனின் வசனங்களை ஆய்வுக்காக அவரிடம் அளித்தனர். அவை பற்றிய தெளிவை தெரிவிக்குமாறும் வேண்டினர். அவ்வசனங்களில் கீழ்க்காணும் வசனமும் ஒன்றாகும்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 96:1-2

He has created man from a clot. (96:2 Tafsir Ibn Kathir Translation)

Created man, out of a (mere) clot of congealed blood (96:2 Yousuf Ali Translation)

மேற்படி வசனத்தில் இடம்பெறும் 'அலக்' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே ரத்தக்கட்டி ((Clot / Clot of Congealed Blood) என்று பல குர்ஆன் விரிவுரையாளர்கள் மொழி பெயர்த்திருந்தனர். ஆனால் மனிதப் படைப்பு பற்றி குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்களை தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட டாக்டர் கீத்மூர் அவர்கள் 'அலக', 'நுத்ஃபா' போன்ற சொற்கள் மிக ஆழமான பொருளைத் தருவன என்றும் அது 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த' (clings, a leech-like substance) கருவின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் மிக ஆழமான சொல் என்றும் குறிப்பிட்டார். இச்சொற்றொடரை மிக ரத்தின சுறுக்கமாக திருமறைக் குர்ஆன் சொல்லியிருப்பது கண்டு வியப்புற்றார். மனிதன் படைக்கப்பட்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கும் அல்குர்ஆனின் வசனங்கள் (96:1-2, 86:5-7, 22:5, 23:12-13, 16:4, 18:37, 35:11, 36:77, 40:67, 53:46, 75:37, 76:2, 80:19, 32:8, 86:5-7) 21-ஆம் நூற்றாண்டின் நவீன கருவியல் கோட்பாட்டை நிரூபிக்கின்றது என்றும், அவ்வசனங்கள் எவ்வித முரண்பாடுகளுமின்றி மிகத்துல்லியமாக உள்ளன என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தினார்.

இதில் நாம் குறிப்பிடுவது என்னவெனில், 'அலக' என்ற அரபுச் சொல்லுக்கு வெறுமனே 'ரத்தக்கட்டி' என்று முற்கால அரபுமொழி அறிஞர்கள் மொழிபெயர்த்தனர். அன்றைய காலத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஒப்ப 'அலக' என்றால் 'ரத்தக்கட்டி' என்று அன்றைய அறிஞர்கள் மேலோட்டமாகப் புரிந்தனர். கருவியல்துறையில் முழுமையான, ஆழமான ஞானமில்லாத காலத்தில் அவ்வாறுதான் மொழிபெயர்க்க முடியும்.

டாக்டர் கீத்மூர் அவர்களும், அவரது தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவும் கருவியல் சம்பந்தமான பல்வேறு குர்ஆன் வசனங்களையும் கற்று, அரபுமொழியில் அமைந்த அச்சொற்றொடர்களின் கருத்தை கவனமாக ஆய்வு செய்து, கருவின் வளர்ச்சியை படம் பிடித்தும் காட்டினர். பின்னர் அலக என்பதற்கு 'அட்டைப்பூச்சிபோல ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்த ஒரு பொருள்' என்பதுதான் முழுமையான பொருள் என்பதைப் புரிந்து கொண்டு தற்போதைய திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின் மொழிபெயர்ப்புகளில் இந்த அர்த்தத்தையே கையாளுகின்றனர்.

உதாரணமாக : Created man from a clinging substance. (96:2 Sahih International Translation)

இதுபோன்ற ஒரு நிலையில்தான் 'லைலத்' என்றால் 'இரவு' எனும் தவறான மொழிபெயர்ப்பு புழக்கத்தில் உள்ளது. இம்மொழிபெயர்ப்பு திருத்தி அமைக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை இன்ஷா அல்லாஹ். எனவே இதுவரை நாம் எழுதியுள்ள ஆதாரப்பூர்வமான விஷயங்களையும் திறந்த மனதுடன் மனதில் நிறுத்திட வேண்டுகிறோம்.

Read 638 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020 04:38