திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020 00:00

ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இல்லை

Rate this item
(3 votes)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.

                                                                        பகுதி : 1/7

முன்னுரை :-

ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற கேள்வி நம் சமூகத்தில் விவாதப்பொருளாக இன்று மாறிவிட்டது. ஒரு நாள் என்பதை ஃபஜ்ரு நேரத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இல்லை என்பதை அல்குர்ஆனின் பல்வேறு வசனங்களும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளும் நமக்குத் தெளிவான சான்றுகளை தருகின்றன.

ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இல்லை

ஆதாரம் : 1

ஒருநாள் என்பதில் பகல் என்ற ஒரு பகுதியும், இரவு என்ற மற்றொரு பகுதியும் உள்ளதை அறிவோம். ஃபஜ்ர் என்னும் அதிகாலை நேரத்தை பகலின் தொடக்கமாகவும், மஃரிபு என்னும் அந்திசாயும் நேரத்தை இரவின் தொடக்கமாகவும் புரிந்து கொள்ளலாம். இந்த பகல், இரவு பற்றி அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

சூரியன் சந்திரனை அடைவதற்கு பொருத்தமானதல்ல. இன்னும் இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் வட்டவரையில் நீந்துகின்றன. அல்குர்ஆன் (36:40)

இரவு, பகலை முந்தாது என்பது குர்ஆனின் கூற்று. அதாவது இரவானது பகலை முந்த முடியாது என்றால், ஒரு நாள் என்பதில் பகல்தான் முந்தியது இரவு பிந்தியது என்று அல்குர்ஆன் தௌ;ளத் தெளிவாக கூறிவிட்டது. பகலின் தொடக்க நேரமான ஃபஜ்ர் என்னும் அதிகாலை நேரத்திலிருந்துதான் ஒருநாள் என்பதை தொடங்க வேண்டும், மாறாக மஃரிபிலிருந்து ஒருநாளை தொடங்க முடியாது என்பதை இதிலிருந்து தெளிவாக அறியலாம். சத்தியத்தை விளங்க முற்படுபவர்களுக்கு இந்த ஒரு குர்ஆன் வசனமே போதுமானதாகும்.

ஆதாரம் : 2

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும்இ பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான். அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது. இன்னும் சூரியனையும்; சந்திரனையும்இ நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு கீழ்படிந்தவையாகப் படைத்தான்இ படைப்பும்இ ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். அல்குர்ஆன் 7:54

'அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது' என்ற வாக்கியத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏற்கனவே பகல் என்ற ஒன்று இருக்கும் நிலையில், பின்னர் அதை இரவைக் கொண்டு அல்லாஹ் மூடுகிறான் என்கிறது. மேலும் பகல் முந்தி செல்கிறது, அந்தப் பகலை இரவு விரைந்து பின் தொடர்கிறது என்கிறது குர்ஆன். இதன்மூலம் ஒருநாள் என்பதில் பகல்தான் முந்தியது, இரவு பிந்தியதுதான் என்று தெளிவாக நிரூபணமாகிறது. எனவே இரவின் தொடக்க நேரமான மஃரிபிலிருந்து ஒருநாளை தொடங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது இவ்வசனத்தின் மூலம் மீண்டும் தெளிவாகிறது.

ஆதாரம் : 3

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக. அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக. பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக. மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக. அல்குர்ஆன் (91:1-4)

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான் அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் யாவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் (39:5)

நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய். நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய். மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய். மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். அல்குர்ஆன் (3:27)

மேற்காணும் மூன்று வசனங்களையும் படித்துப்பாருங்கள். முதல் வசனத்தில் (91:1-4) முதலில் பகல்தான் வெளியாகிறது. பின்னர் வெளியாகிவிட்ட அந்தப் பகலை இரவு மூடிக்கொள்கிறது என்று அல்குர்ஆன் கூறுகிறது. இரண்டாவது வசனத்தில் (39:5) நாம் அறிந்து கொள்வது என்னவெனில் ஏற்கனவே முதலாவதாக பகல் இருக்கிறது. அந்த பகலின் மீது இரவை அல்லாஹ் சுற்றுகிறான். மூன்றாவது (3:27) வசனமானது, ஏற்கனவே முதலில் இருக்கின்ற பகலில் மீது இரவை அல்லாஹ் புகுத்துகிறான் என்று கூறுகிறது.

இவ்வசனங்களை திறந்த மனதோடு ஆய்வு செய்யும்போது ஏற்கனவே பகல் முதலாவதாக இருக்கும் நிலையில், வல்ல அல்லாஹ் இரவைக் கொண்டு அந்தப்பகலை மூடுகிறான். ஏற்கனவே இருக்கக்கூடிய அந்தப்பகலை பின்னர் இரவைக் கொண்டு சுற்றுகிறான். முதலில் இருக்கும் அந்தப்பகலின் மீது இரண்டாவதாக இரவைப் புகுத்துகிறான். ஆக பகல் என்பதுதான் முந்தியுள்ளது, இரவானது அந்தப் பகலுக்கு பின்னர் வருவது என்பது புலனாகிறது. இவை போன்ற கருத்தில் அமைந்த மேலும் இரண்டு வசனங்களை கீழே படியுங்கள்.

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. விடியற்காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது. அல்குர்ஆன் (74:33,34)

முற்பகல் மீது சத்தியமாக. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக. அல்குர்ஆன் (93:1-2)

மேற்காணும் வசனங்கள் மூலம், இரவு என்பது ஒடுங்கிக் கொள்வதுதான், பின்னோக்கி வருவதுதான் என்பதை மேலும் அறியமுடிகிறது. இவ்வாறு அல்குர்ஆனின் 69:7, 39:5, 3:27, 97:1-5, 89:1-5, 74:32-34, 93:1-2, 11:114 போன்ற பல்வேறு வசனங்களை நாம் சிந்தித்து பார்த்தால், பகல்தான் முந்தியது இரவு என்பது அந்தப் பகலை பின்தொடர்;ந்து வருவதுதான் என்பதை அறியலாம்.

ஆதாரம் : 4

ஒருநாள் என்பதை ஃபஜ்ரு நேரத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதை, நாம் அன்றாடம் தொழுகின்ற ஐந்து வேளை பர்ளான தொகைகளை வைத்துகூட புரிந்துகொள்ள இயலும். அதாவது,

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக. நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். அல்குர்ஆன் (11:114)

பகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46

தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் (2:238)

நடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகைதான் என்று பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது. (புஹாரி 4533, முஸ்லிம் 1032, அஹ்மது 19622)

பகல், இரவு உள்ளடக்கிய ஒருநாள் என்பதில் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகள் உள்ளன. அந்த ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளில் அஸ்ருத் தொழுகையானது நடுத்தொழுகை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். அஸ்ருத் தொழுகைதான் நடுத்தொழுகை என்றால், ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை ஃபஜ்ரு, லுஹர், அஸர், மஃரிபு, இஷா என்றுதான் வரிசைப்படுத்திட இயலும்.

ஒருநாளுக்குரிய ஐந்து ஃபர்ளான தொழுகைகளில்; ஃபஜ்ரு தொழுகைதான் முதல் தொழுகை என்றால் நிச்சயமாக மஃரிபு வக்திலிருந்து ஒருநாளை தொடங்கிடவே முடியாது. மாறாக ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாள் தொடங்குகிறது என்பதை தெளிவாக அறியலாம்.

ஆதாரம் : 5

இன்னும் இரவுநேர சுன்னத்தான தொழுகைகளை வைத்தும்கூட ஒருநாளின் தொடக்கம் ஃபஜ்ரு என்பதை விளங்கலாம். அதாவது,

இரவுவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : இப்னு உமர் (ரழி). நூல்: புகாரி : 998

ஒருநாள் என்பதில் பகல்தான் முந்திய முதல் பகுதி என்பதையும், இரவானது பிந்திய இரண்டாவது பகுதி என்பதையும் சற்று முன்னர் அறிந்தோம். வித்ரு தொழுகையை இரவின் கடைசித் தொழுகையாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற நபியின் (ஸல்) கட்டளை மூலம், வித்ரு என்பது ஒரு நாளின் இறுதித் தொழுகை என்பது தெளிவாகிறது. வித்ரு தொழுகைதான் இறுதித் தொழுகை என்றால் நிச்சயமாக ஃபஜ்ரு என்னும் அதிகாலையிலிருந்துதான் ஒரு நாளை தொடங்க முடியும். மஃரிபிலிருந்து ஒரு நாளை தொடங்கிட எந்த வழியும் இல்லை.

ஆதாரம் : 6

இறைத்தூதர் (ஸல்) மேடை மீது இருக்கும்போது, இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்? என ஒருவர் கேட்டார். இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். அதிகாலையை அடைந்து விடுவார் என அஞ்சினால் ஒரு ரக்அத் தொழுங்கள். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும் என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி - 472

ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்று இருக்குமானால் (ஃபஜ்ரை) அதிகாலையை அடைந்து விடுவாரோ என்று அவர் அஞ்சத் தேவையில்லை. அதிகாலையை அடைந்து விடுவார் என அஞ்சினால் என்ற வாசகமே ஃபஜ்ரு வக்து ஆகிவிட்டால் அடுத்த புதியநாள் தொடங்கி விடுகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

ஆதாரம் : 7

ஒருநாள் என்பதை ஃபஜ்ரு நேரத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்களின் பிற வழிகாட்டுதல்களை வைத்தும் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ரமழானின் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸூபுஹூத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள்..(புகாரி : 2033)

நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை ஃபஜ்ரிலிருந்துதான் தொடங்கியுள்ளார்கள் என்பதை மேற்காணும் ஹதீஸிலிருந்து உள்ளங்கை நெல்லிக்கனியாக அறியலாம். ஒருநாளின் ஆரம்பம் மஃரிபு என்று இருக்குமானால், நபி (ஸல்) அவர்கள் மஃரிபு தொழுதுவிட்டு, அந்த மஃரிப் நேரத்திலிருந்து இஃதிகாஃபுக்குள் நுழைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை ஃபஜ்ரிலிருந்து தொடங்கியதே ஒருநாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இல்லை என்பதை தௌ;ளத் தெளிவாக உணர்த்துகிறது.

ஒரு நாளின் தொடக்கம் (ஃபஜ்ரு என்னும்) அதிகாலைதான் என்ற சத்தியத்தை உணர்ந்து கொள்பவர்களுக்கு இதுவரை பார்த்த ஆதாரங்களே போதும் என்றாலும் கூடுதலாக இன்னும் சில ஆதாரங்களையும் தருகிறோம்.

ஆதாரம் : 8

ஹஜ் என்பதே அரஃபாநாள் தான். 'ஜம்வு நாளின்' ஃபஜ்ருக்கு முன் ஒருவர் வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவித்தவர் : அப்துல் ரஹ்மான் பின் யஃமுர் (ரழி)., நூல் : அபூதாவூத் 1951.

மேற்காணும் ஹதீஸிலிருந்தே அரஃபா நாள் என்பது ஃபஜ்ரு நேரத்திலிருந்து தொடங்கி அடுத்த நாள் ஃபஜ்ருக்கு முன்பு வரை உள்ளதை அறியலாம். ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்றால், மஃரிபுக்கு முன்னரே அரஃபாவுக்குள் சென்றுவிட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் அப்படி சொல்லவில்லை. ஃபஜ்ருக்கு முன் ஒருவர் வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபியின் (ஸல்) இந்த கூற்றிலிருந்தே ஃபஜ்ரு என்னும் அதிகாலை நேரம் ஆகிவிட்டால் ஒருநாள் உதயமாகி விடுகிறது என்பதை உணர்த்துகிறது.

ஆதாரம் : 9

பெண்கள் குறித்து இறைத்தூதர் (ஸல்) குறிப்பிடுகையில், உங்களில் ஒருவர் திட்டமிட்டு தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்கிறார். பின்னர் அந்நாளின் இறுதியில் அவளுடன் அவர் இல்லறத்தில் ஈடுபட நேரலாம். அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரழி), நூல் : புகாரீ :4942

மேற்காணும் ஹதீஸில் அந்நாளின் இறுதியில் என்ற சொல் இரவைத்தான் குறிக்கிறது. பொதுவாக இரவில்தான் இல்லறம் நடைபெறும். ஒரு நாளின் இறுதி நேரம் இரவு எனில் அதிகாலைதான் அந்த நாளின் முதல் நேரமாகும்.

ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்றால், ஒரு மஃரிபிலிருந்து அடுத்துவரும் மஃரிபு தொழுகை வரை அந்த நாள் இருக்கும். மஃரிபுக்கு முன் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் அந்தி மாலை நேரமானது ஒரு நாளின் இறுதி நேரம் என ஆகும். தற்போது ஹதீஸில் இடம்பெறும் 'அந்நாளின் இறுதியில் அவளுடன் அவர் இல்லறத்தில் ஈடுபட நேரலாம்' என்ற வாக்கியத்தை மீண்டும் படியுங்கள். மஃரிபு தொழுகைக்கு முன்னர் அந்திமாலை நேரத்தில் யாரும் மனைவியுடன் இல்லறத்தில் இணைவார்களா? சிந்திப்பீர்.

ஆதாரம் : 10

காலையை பிளப்பவன். இன்னும் அவன் அமைதி பெறுவதற்காக இரவை ஏற்படுத்தினான் இன்னும் கணக்கிடும்படியே சூரியனையும், சந்திரனையும் ஏற்படுத்தினான். அது அறிந்தோனுமாகிய வல்லமை மிக்கவனின் விதியாகும். அல்குர்ஆன் (6:96)

மேற்கண்ட வசனத்தின் படி முதலில் காலையானது பிளக்கப்படுகிறது. அமைதி பெறுவதற்காக இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. இரவு என்பதே நாம் அமைதி பெற்று ஓய்வு எடுப்பதற்காகத்தான். அல்லாஹ்வின் அருட்கொடையை நாம் தேடுவதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக ஆக்கியதாக அல்குர்ஆன் (17:12) வசனத்தில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

எனவே காலை விடிந்தவுடன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடி உழைக்க வேண்டும். உழைப்புக்குப் பின்னர்தான் ஓய்வு எடுக்க வேண்டும். முதலில் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு யாரும் உழைக்க செல்ல மாட்டோம். மஃரிபு எனும் இரவிலிருந்து ஒரு நாளை தொடங்கினால் முதலில் ஓய்வைத்தான் எடுக்க வேண்டியது வரும். எனவே இவைபோன்ற குர்ஆன் வசனங்களை வைத்தும் ஒருநாள் என்பதை ஃபஜ்ரிலிருந்து தொடங்க வேண்டும் என்றே புரிய முடிகிறது.

ஆதாரம் : 11

விடியற் காலையின் மீது சத்தியமாக. பத்து இரவுகளின் மீது சத்தியமாக. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? அல்குர்ஆன் (89:1-5)

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (கத்ருடைய) நாளில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?. கண்ணியமிக்க (அந்த) நாள் ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். அல்குர்ஆன் (97:1-5)

ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களில் இருக்கும் லைலத்துல் கத்ருடைய மகத்துவத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மேற்காணும் குர்ஆன் வசனங்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். முதலாவது வசனத்தில் விடியற் காலையின் மீது சத்தியமாக. பத்து இரவுகளின் மீது சத்தியமாக என்று வல்ல அல்லாஹ் சத்தியம் செய்கிறான். பின்னர் இரண்;டாவது வசனத்தில் அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் என்று லைலத்துல் கத்ரு எப்போது முடியும் என்பதையும் கூறுகிறான்.

ஒரு நாளின் தொடக்கம் மஃரிபுதான் என்றிருந்தால் மகத்துவமிக்க நாளானது, மஃரிபில் தொடங்கி மஃரிபில் முடிய வேண்டும். 'மஃரிபு உதயமாகும் வரை இருக்கும்' என்றே அல்குர்ஆன் கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூறாமல், 'விடியற்காலை (ஃபஜ்ர்;) உதயமாகும் வரை இருக்கும்' என்றே குர்ஆன் கூறுகிறது. இவ்வசனங்கள் மூலம் ஒருநாள் என்பது ஃபஜ்ரிலிருந்து தொடங்கி ஃபஜ்ரில் முடிவடைவதை அறியமுடிகிறது. நபி (ஸல்) அவர்களும் லைலத்துல் கத்ருடைய நன்மைகளை அடைய வேண்டி தங்கள் இஃதிகாஃபை ஃபஜ்ரிலிருந்துதான் தொடங்கினார்கள் என்பதை மீண்டும் இங்கு நினைவூட்டுகிறோம்.

ஆதாரம் : 12

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் பூமியில் விழுந்து கிடப்பதை அக்காலை நீர் இருந்திருந்தால் பார்ப்பீர். அல்குர்ஆன் (69:7)

குர்ஆன் சுன்னாவை நாம் ஆய்வு செய்து பார்க்கையில் அக்கிரமம் புரிந்த சமுதாயங்களை பெரும்பாலும் அதிகாலை நேரத்தில்தான் அல்லாஹ் அழித்திருக்கிறான். மேற்படி வசனம் அக்கிரமம் புரிந்த ஆது சமூகம் அழிக்கப்பட்டதைப் பற்றி கூறுகிறது. 7 இரவுகளும், 8 பகல்களும் தொடர்ச்சியாக காற்றை வீசச் செய்து அல்லாஹ் அழித்துள்ளான். இதிலிருந்து 8-நாட்கள் காற்று வீசியதை அறியமுடிகிறது. எட்டாவது நாள் பகலோடு அந்த சமூகத்தினர் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் பூமியில் விழுந்து முற்றிலுமாக இறந்துவிட்டனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒருநாள் என்பதை மஃரிபிலிருந்து தொடங்கினால் 7 இரவுகள், 8 பகல்கள் தொடர்ச்சியாக காற்றுவீசியதை எண்ணிட முடியாமல் போகும். ஒருநாள் என்பது ஃபஜ்ரிலிருந்து தொடங்கி கணக்கிட்டால்தான் 7 இரவுகளும், 8 பகல்களும் என எந்த ஒரு பகலும் இரவு விடுபடாமல் தொடர்ச்சியாக காற்றுவீசியதை எண்ணி கணக்கிட முடியும்.

ஒருநாள் என்பதை ஃபஜ்ரிலிருந்து தொடங்கினால் 8 பகல்கள், 7 இரவுகள் தொடர்ச்சியாக காற்றுவீசியது சரியாக வருவதை காணுங்கள்.

காற்றுவீசியநாள் -1நாள் -2நாள் -3நாள் -4நாள் -5நாள் -6நாள் -7நாள் -8
பகல் (ஃபஜ்ர்) ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
இரவு(மஃரிபு) ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் -

ஒருநாள் என்பதை மஃரிபிலிருந்து தொடங்கினால், காற்றுவீசியது 7 இரவுகள், 8 பகல்கள் தொடர்ச்சியாக வராமல் ஒரு இரவு விடுபட்டு போவதைக் காணுங்கள்.

காற்றுவீசியநாள் -1நாள் -2நாள் -3நாள் -4நாள் -5நாள் -6நாள் -7நாள் -8
இரவு(மஃரிபு) ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் காற்று வீசவில்லை
பகல் (ஃபஜ்ர்) ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

எனவே இவை போன்ற பல்வேறு குர்ஆன் வசனங்களும், ஸஹீஹான ஹதீஸ்களும் ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான் என்பதை பறைசாற்றுகின்றன.

இன்ஷா அல்லாஹ், ஹிஜ்ரி கமிட்டி வெளியிட இருக்கும் ஒரு நாளின் தொடக்கம் எது? ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் அமைந்த முழுமையான ஆய்வு புத்தகத்தில் கூடுதலான ஆதாரங்கள், அதிகப்படியான விபரங்கள் மற்றும் விமர்சன விளக்கங்களைக் காணலாம்.

Read 966 times Last modified on செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020 04:31