செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:56

1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது

Rate this item
(0 votes)
 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது
குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு!

உலக முடிவு நாள் வரை அனைத்து காலகட்டத்திலும் மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வாழ்வாதரங்களையும் ஏற்படுத்தி, அதை அடைவதற்கான திட்டங்களை அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் கோடிட்டுக் காட்டியுள்ளான் என்பதை உலகில் யாரும் மறுக்க முடியாது.

உலக மக்களுக்கு திருக்குர்ஆன் வழிகாட்டும் என்பதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உலகில் மனித கற்பனைகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மார்க்கங்களையும் மிகைத்து அல்லாஹ்வுடைய தீன் வெற்றிபெற அல்லாஹ்வினால் அருளப்பட்ட இஸ்லாமிய வழி காட்டுதலில், மக்கள் பின்பற்றுவதற்கு குறைகள் அற்ற ஒரு நாட்காட்டியை (Calendar) தர முடியாதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பல்லாண்டு காலமாக நிலவிவருகிறது.

அரபு மொழியில் புலமை பெற்ற மொழி அறிஞர்கள் சொற்பமானவர்களை தவிர குர்ஆன் கூறும் அறிவியல் சம்மந்தப்பட்ட கல்வியை பெற முயற்சி செய்யாமல் இருப்பதும், குர்ஆன் கூறும் அறிவியலை ஆய்வு செய்ய முன்வரும் மக்களில் சொற்பமானவர்களை தவிர அரபி மொழி கல்வியை பெறாதவர்களாகவே உள்ளனர். இதனால் அல்லாஹ் தன் திருமறை குர்ஆனில் கூறும் அறிவியல் சம்மந்தப்பட்ட விசயங்களை சமுதாயத்திற்கு மத்தியில் இஸ்லாமிய அறிஞர்களால் கொண்டு செல்லமுடியாத நிலையை பார்த்து வருகிறோம். ஒரு சில விதிவிலக்குகளை தவிர!

தற்போதைய காலகட்டத்தில் திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நாட்காட்டியை தர முடியுமா? முடியாதா என்ற ஆய்விற்கு வருவோம்.

நாட்காட்டி (Calendar) என்றால் குறைந்தது ஒரு வருடத்திற்கு தேவையான நாட்களையும், கிழமைகளையும் உள்ளடக்கி முக்கியமான விடுமுறை நாட்களையும், அந்த வருடத்தில் வரபோகிற முக்கிய நிகழ்வுகளுக்கான தேதிகளையும் நாட்களையும் அதில் முன் கூட்டியே குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறை குர்அனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு (12) என கூறி ஒரு வருடத்திற்கான அளவு 12 மாதங்களை கொண்டது என்பதை தெளிவு படுத்திவிட்டான். நாட்காட்டிக்கான அடிப்படையை உலகை படைக்கும்போதே அல்லாஹ் உருவாக்கிவிட்டான் என்பதை இவ்வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

அப்படிபட்ட மார்க்கத்தில் இன்று வரை ஏன் குறையற்ற நாட்காட்டி முறை பின்பற்றப்படுவதில்லை என்ற கேள்வி எழும். உலகை படைத்து மனித சமூகத்திற்கு அல்லாஹ் பல நபிமார்களை அனுப்பினான். அனுப்பிய நபிமார்களில் நபி(ஸல்) அவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரு பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டவர்களே!. அதேசமயம் இறுதி நபி(ஸல்) அவர்கள் மட்டும் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு நபியாக ஆக்கப்பட்டார்கள் என்பதில் நம்மில் யாருக்கும் சந்தேகம் வராத விசயம்.

எனவே தான் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு வந்த வஹீயில் முதல் முதலில் இறக்கிய சட்டமே கிப்லா(முன்னோக்கும் திசை) பற்றியது தான். சூரத்துல் பகராவில் 142வது வசனத்திலிருந்து 150 வது வசனம் வரை உள்ள வசனங்களை படிக்கும் போது முன்னோக்கும் திசையின் (கிப்லா) அவசியத்தை நாம் உணர முடியும். நபி(ஸல்)அவர்களை ஒட்டு மொத்த உலகிற்கும் சேர்த்து ஒரு நபியாக அல்லாஹ் அனுப்பியதன் பிறகு தான் இந்த சட்டத்தை கடமையாக்கினான். வேதம் கொடுக்கப்பட்ட அவைருக்கும் அல்லாஹ் கடமையாக்கியது தான் உண்மையான கிப்லா என்பதை, தன் பெற்ற பிள்ளையை போல் அறிவார்கள் என அல்லாஹ் தெளிவாக கூறியதில் இருந்தே இதில் ஒரு உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

உலக மக்கள் அனைவருக்கும் கிப்லாவை முன்னோக்கும் இந்த சமுதாயம் தான் (மக்கா வில் உள்ள கஃபத்துல்லா) நடுநிலை சமுதாயமாக திகழ வேண்டும் என்பதும் அந்த வசனத்தை படிக்கும் போது புரியமுடிகிறது. நாட்காட்டியின் தேவைக்கு அத்தியாவசியமானது கிப்லா(முன்னோக்கும் திசை) பற்றிய சட்டம் தான். கிப்லா இருந்தால் தான் அல்லாஹ் தன் திருமறையில் 55:17 கூறுகின்ற இரண்டு கிழக்கு திசைகளும், இரண்டு மேற்கு திசைகளும் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கும் ஒரு இடம் உலகில் இருக்க வேண்டும் என்றால் முதலில் கிப்லா(முன்னோக்கும் திசை) அதற்கு அவசியமான ஒன்று. கிப்லா ஏது என்பதை அல்லாஹ் அறிவிக்காவிட்டால் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு என்ற வசனம் பொருளற்றதாக ஆகிவிடும். ஏன் என்றால் உலகை படைக்கும் போதே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு என்பதை முடிவு செய்தது போல், எந்த எந்த மாதம் 29 நாட்கள், எந்த எந்த மாதம் 30 நாட்கள் என்பதை முடிவு செய்து விட்டான் என்பதும் 9:36 வசனத்தில் இருந்து தெளிவாகிறது. அதில் நான்கு புனிதமான மாதங்கள் என்பதையும், அல்லாஹ் உலகை படைக்கும் போதே படைத்துவிட்டான் என்பதும் அந்த வசனத்தில் தெளிவாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் 9:37 இல் அதை முன்னும் பின்னும் மாற்றுவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகப்படுத்துதே என்ற எச்சரிக்கைiயும் கொடுத்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இதற்கு பின் அல்லாஹ்வுடைய சட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி ரஸூல். மேலும் மார்க்கம் முழுமையடைந்து விட்டது என்பதற்கு அத்தாட்சியாகவும் இந்த கிப்லா சம்மந்தப்பட்ட வசனங்கள் உள்ளது.

ஒரு நாட்காட்டிக்கு தேவையான அனைத்து விதிகளும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டிருந்தாலும், சூரியன் சந்திரன் சம்மந்தப்பட்ட கணக்கை (55:5) அப்போதுள்ள சமுதாயம் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மாதம் என்பது 29 எனவும், சில சமயங்களில் 30 ஆகவும் உள்ளது. அதைபற்றிய கணக்கு நம்மிடம் இல்லாததால் அதை எழுதி வைக்கவில்லை. ஏன் என்றால் இன்று நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என கூறினார்கள்.

மக்களிடையே உள்ள முக்கியமான குழப்பத்திற்கு தீர்வை தேடி நாம் அல்லாஹ்வின் வேதமும், தூதரின் பொன்மொழிகளையும் நாம் பின்பற்றி மட்டும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் நாம் எந்த மனிதர்களின் கூற்றையும் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்களின் நிலைபாடு. அப்படி இருக்க, இன்றோ குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகிறேன் என கூறுபவர்களில் அநேக மக்கள் தங்கள் தலைவர்களின் கூற்றை மார்க்க சட்டங்களில் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழியில் மக்களை வழிநடத்துவது தான் தலைவர்களுக்கு கடமையே தவிர, அவர்கள் கூறுவதை மக்கள் அப்படியே நம்பி செயல்பட வேண்டும் என நினைத்தால் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் வழியில் நடப்பவர்களாக இல்லை என்பதை நாம் முடிவு செய்து நாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ முயற்சிக்கவேண்டும். மேலும் அத்தலைவர்களுக்கு ஏதேனும் விபரங்கள் தெரியாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட விசயத்தில் அறிவை பெற்றவர்களிடம் அவர்கள் கேட்டு தெரிவது தலைவர்களுக்கும் கடமையாகும். கேட்டு தெரிந்து கொள்வது பொதுமக்களுக்கு மட்டும் உள்ள விதியாக தலைவர்கள் நினைப்பதும் தவறாகும்.

முதலில் நாம் கூறிய படி கிப்லா (முன்னோக்கும் திசை) என்பது இருந்தால் தான் இரண்டு கிழக்கு திசைகளும், இரண்டு மேற்கு திசைகளும் எங்கிருக்கிறது என்பதை நாம் அறிய வாய்ப்பு ஏற்படும். அதை வைத்து தான் உலகில் நாட்களையும் அதற்கான தேதிகளையும் முடிவு செய்ய முடியும். இதன் மூலம் உலகில் கணக்கின் அடிப்படையில் மாதங்களை தீர்மானிப்பதற்கு நாம் தற்போது தொழுகை நேரங்களுக்கு எந்த நாட்களின் கணக்கை மக்கள் எடுத்து செயல்படுத்துகிறார்களோ அதே கணக்கை தான் தேதிகளை முடிவு செய்யவும் நாம் எடுத்துள்ளோம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கணக்கின் அடிப்படையில் தான் சந்திரனுக்கு படித்தரங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். தொழுகை நேரங்களை கணக்கிட ஒவ்வொரு நாளிலும் அந்த ஊர்களுக்கு வரும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள நேரங்களை கணக்கிட்டு முடிவு செய்கிறோம். பார்க்க அல்குர்ஆன்: 70:40. அதே நேரத்தில் மாதத்தை முடிவு செய்ய அல்குர்ஆன் 55:17 உள்ள வசனத்தின் அடிப்படையில் முடிவு செய்கிறோம். ஏன் என்றால் உலகில் ஒரு புதிய நாள் (உதாரணமாக 1429 ன் ஷஃபான் மாதத்தின் 29 வது நாள் சனிக்கிழமை) துவங்கும் போது பழைய நாள் ஒன்றும் அதே நேரத்தில் துவங்கும் (உதாரணம் 1429 ன் ஷஃபான் மாதத்தின் 28 வது நாள் வெள்ளிக்கிழமை) என்பதை நாம் புரிய வேண்டும். அல்லாஹ் உலகை படைக்கும் போதே இப்படி ஜோடியாக நாட்களையும் படைத்ததால் தான் அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ள 55:17 உள்ள இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் அவனே ரப்பு என்ற வசனம் அறிவியல் பூர்வமான உண்மையை திருக்குர்ஆன் 1429 வருடங்களுக்கு முன்பே மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்பதை உலகிற்கு நாம் உணர்த்த முடியும்.

இந்த இரண்டு நாட்களும் துவங்குவது ஒரே பகுதியில் தான் ஆனால் இங்கு எப்படி இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு வரும் என்பதை பார்ப்போம். ஷஃபான் 28 ல் உள்ளவர்களுக்கும் காலை சூரியன் உதிக்கும், ஷஃபான் 29 ல் உள்ளவர்களுக்கும் காலை சூரியன் உதிக்கும். ஷஃபான் 28 ல் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமையிலும், ஷஃபான் 29 ல் உள்ளவர்கள் சனிக்கிழமையிலும் இருப்பார்கள். இதை ஆய்வு செய்தால் பிறை விசயத்தில் உள்ள குழப்பம் தீர்ந்துவிடும். 55:17 வசனம் குறிக்கும் இடத்தை தற்போது உலகில் அறிவியல் ஆய்வாளர்கள் உலக தேதிக்கோடு என குறிப்பிடுகிறார்கள்.

இதில் எந்த நாளில் பிறை பிறக்கிறதோ அதற்கு அடுத்த நாள் புதிய நாள். உதாரணமாக சனிக்கிழமை பிறை பிறந்தால் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் ஆகும். உதாரணமாக சனிக்கிழமை என்பது ஷஃபான் 29 நாளாக இருக்கும் போது பிறை பிறந்தால் அதே சமயம் ஷஃபான் 28 வது நாள் வெள்ளிக்கிழமையில் உள்ளவர்களை அது பாதிக்காது. அவர்கள் ஷஃபான் 29 சனிக்கிழமையை முடித்து விட்டுதான் ஞாயிற்றுக் கிழமைக்குள் வருவார்கள். வெள்ளிக்கிழமையில் உள்ளவர்கள் சனிக்கிழமை 29 நாளை முடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமையில் நுழையும் போது தான் அவர்களுக்கு அவர்களுக்கு 1429 ரமளான் மாதம் ஆரம்பிக்கும். வெள்ளிக்கிழமை 28 ல் இருந்தவர்கள் 29வது நாளை ஆரம்பிக்கும் நேரத்தில் சனிக்கிழமை 29 வது நாளில் இருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையுடைய நாளை துவங்குவார்கள் இவ்வாறாகத்தான் நாள்கள் உலகம் படைக்கப்பட்ட தினத்திலிருந்து நாட்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலக தேதிக்கோடு என்பது கிறிஸ்தவர்களும் யூதர்களும் கண்டுபிடித்தது அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் கிடையாது என யாரும் கூறினால் தற்போது தொழுகை நேரத்திற்கு இதே உலக தேதி கோடு கணக்கின் அடிப்படையில்தான் நாம் கிழமைகளை முடிவு செய்து தொழுகைகளை தொழுது வருகிறோம். ஓரு உண்மையை கண்டுபிடித்து யார் சொன்னாலும் அது குர்அன் ஹதீஸுக்கு மாற்றமாக இல்லை என்றால் நாம் பின்பற்றிதான் ஆகவேண்டும் என்பது சட்டமாகும். ஷைத்தான் உண்மையை கூறினாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே இந்த உலக தேதி கோடு தேவையில்லை அது இல்லாமல் நாம் வாழ முடியும் என்பவர்களின் வாதங்கள் எல்லாம் வெறும் யூகங்களாகத்தான் இருக்கமுடியும். ஏன் என்றால் அவர்களை அறியாமலேயே தொழுகை நேரக்கணக்கை இந்த உலக தேதிக்கோடு அடிப்படையில் செய்து வருகிறார்கள்.

இந்த அடிப்படையில் தற்போது நாம் 1429 வது வருடத்தைய ரமளான் மாதம் எப்போது துவங்குகிறது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். 1429 ஷஃபான்; 28 வெள்ளிக்கிமை. இன்றைய தினம் பஜ்ர் தொழுகைக்கு பின் கிழக்கே இன்றைய தினத்திற்கான பிறையை நாம் கண்ணாலும் காண முடிந்தது. மேலும் சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின் இந்த பிறையை காண முடியாது. ஏன் என்றால் சனிக்கிழமை சூரியனும் சந்திரனும் மிக குறுகிய நேர வித்தியாசத்தில் ஒன்றாக உதிக்கும். ஏன் அப்படி உதிக்கிறது என்பதை புரிய வேண்டுமானால் சந்திர மாதத்தை நாம் கணக்கிட சூரியன் சந்திரம் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வை வைத்தே கணக்கிட முடியும். வேறு எந்த முறையில் கணக்கிட்டாலும் அது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாக ஆகிவிடும். நமக்கு மாதம் 29 நாட்களோ 30 நாட்களோ வருவது இந்த அடிப்படையில் உள்ள கணக்கில் மட்டும் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆகவே இந்த மூன்றும் நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வை பூமியில் இருந்து கவனிப்பவர்களுக்கு சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதிப்பதை வைத்து தான் புரியமுடியும். இரண்டும் ஒன்றாக அல்லது சிறு வித்தியாசத்தில் உதிப்பது என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் கடைசியிலும் நடைபெற்றே ஆக வேண்டிய விஷயமாகும் என்பதை மறக்க வேண்டாம். இந்த நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், நாம் வாழும் காலத்திற்கு சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னுள்ள மக்களுக்கும் கணக்கின் மூலம் அறிய முடியாமல் இருந்தது. தற்போது தான் இக்கணக்கு கண்டுபிடிக்கப்பட்டது. அன்று இந்த கணக்கு இல்லாததால் என்றைய தினம் இரண்டும் ஒன்றாக உதிக்கிறதோ அன்றைய தினம் மஃரிபிற்கு பின் உலகில் எப்பகுதியிலாவது சூரியன் மறைந்த பின் சந்திரன் சிறிது நேரமாவது வானத்தில் இருந்து மறையும். இதை நாம் கண்ணால் சில நேரங்களில் பார்க்கவும் முடியும் சில நேரங்களில் பார்க்க முடியாமலும் போகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் 29 வது நாளில் மஃரிபிற்கு பின் கண்ணால் பார்க்கப்பட்ட பிறையை இன்று பார்க்க முடியாது. அந்த அளவிற்கு வான மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மஃரிபிற்கு பின் பிறையை மாதத்தின் 29 வது நாளில் கண்டு விட்டால் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வந்து சந்திரன் அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை ஆரம்பித்ததுவிட்டது என்பதை அன்று புரிந்து கொண்டார்கள். எனவே தான் ஹதீஸ்களில் சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்கள் வாழும்போதே இன்றையதினம் 29வது நாளிலேயே மாதம் முடிந்துவிடும் என்ற கருத்துவேறுபாடுகளுடன் காணப்பட்டதை ஹதீஸ்களில் காண முடிகிறது.

அல்லாஹ் 2:189, 10:5, 55:5, 17:12 போன்ற பல வசனங்களின் மூலம் வருடங்களை கணக்கிட முடியும் என்பதை பார்க்க முடிகிறது. வருடங்களை கணக்கிட முடியாத காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மக்களுக்கு அதை அறிந்து கொள்வதற்காக ஒரு முறையை சொல்லி கொடுத்த நபி(ஸல்) அவர்கள் அதில் அறியமுடியாத ஒரு நிலை உங்களுக்கு ஏற்ப்பட்டால் சந்தேகத்தை உறுதிபடுத்துவதற்காக ஒரு நாளை கூட்டி கொள்ளுங்கள் என கூறினார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நாம் மூன்று ரகஅத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகத்திற்காக ஒரு ரக்அத்தை கூட்டுவது போல இங்கேயும் கூட்ட சொன்னார்கள். ஒரு விசயத்தை அறியும் வரை அதை எப்படி செய்யவேண்டும் என நபி (ஸல்) காட்டிதந்த முறைகளை கணக்கு நீரூபிக்கப்பட்ட காலத்திலும் அதையே செய்வேன் என்று கூறுவது நபி வழியா? என்பதை சிந்திக்கவும்.

நாம் செய்துள்ள ஆய்வின் அடிப்படையில் தெரிவது என்னவென்றால் உலகை படைக்கும் போது எந்த மாதம் எத்தனை நாள் என்பதை அல்லாஹ் முடிவு செய்து வைத்திருப்பதற்கு ஏற்ப நாமும் நமது மாதத்தை ஆரம்பிக்கவோ முடிக்கவோ வேண்டும் என்பது தான் கடமையான விசயம். இந்த கடமையை சரியாக செய்வதற்காகத்தான் பிறை பார்க்க, பார்த்த தகவலை ஏற்க, மற்றும் கணக்கிடவோ அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை நாம் தெளிவாக உணர முடிகிறது.

எனவே ஒருவர் பிறையை கண்ணால் பார்க்கும் வரை மாதம் ஆரம்பிக்காது என்று கூறுவது சரியா? முப்பது நாட்கள் உடைய மாதங்களை நாம் கண்ணால் பார்க்கமலேயே தொடங்குவது இல்லையா? நாம் தற்போது கணக்கின் அடிப்படையில் எந்த மாதம் 29 நாட்கள், எந்த மாதம் 30 நாட்கள் என கூறகிறோமோ அந்த மாதங்களின் வரும் மன்ஸில்களை வைத்து நாம் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்த மாதம் சரியா? தவறா? என அறிய முடியாதா? அதற்கு அல்லாஹ் வாய்ப்பை ஏற்படுத்தவில்லையா? பல காரணங்களால் கண்ணுக்கு தெரியாமல் போகும் பிறையை மனித கண்ணால் பார்த்தால் தான் மாதம் ஆரம்பிக்கும் என்று கூறினால் நாம் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது மலக்காகிய ஜிப்ரீல் அலை அவர்கள் வந்து மாதம் முடிந்துவிட்டது என்ற செய்தியை கூறியதை நபி(ஸல்)அவர்கள் ஏற்று மாதத்தை முடிக்கிறார்கள். இதிலிருந்து நமக்கு விளங்குவது கண்ணால் பிறையை பார்ப்பது என்பது கடமையல்ல. மாதத்தை சரியாக முடிப்பதும் ஆரம்பிப்பதும் தான் கடமை என்பதை புரிய முடியும்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மாதங்களில் அதிக நன்மைகளை அல்லாஹ் பொதிந்து வைத்திருக்கும் மாதமான ரமளான் மாதம் மாறிவிடக் கூடாது என்பதற்காக ஷஃபான் மாதத்தை மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்து கவனித்து வருவார்கள் என்பது தெளிவாகிறது. மேலும் முக்கியமான பல சஹாபாக்கள் ஷஃபான் மாதம் 29 நாளில் வானம் மேக மூட்டமாக இருந்தால் அடுத்த நாள் ரமளான் முதல் நாள் என முடிவு செய்து நோன்பு வைத்ததையும் ஹதீஸ்களில் இருந்து புரிய முடிகிறது. எனவே மாதம் சரியாக ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் நபி(ஸல்) அவர்கள் கூறிய பிறையை அறிந்து நோன்பு வையுங்கள், பிறையை அறிந்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸிற்கு விளக்கமாகும். ரமளானை சரியாக கணக்கிடாவிட்டால் அம்மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில் நோன்பு வைப்பது ஹராம் என்ற சட்டத்தை அமல்படுத்துவது ஒவ்வொரு வருடமும் குழப்பமாகத்தான் இருக்கும் என்பதற்கு தற்போது கண்ணால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிப்போம் என்று கூறுபவர்கள் நிலைபாடு சான்றாகும்.

1429 ரஜபு மாதம் 29 நாட்களில் முடிவடைந்தற்கான ஆதாரம் அன்றைய தினம் (வெள்ளிகிழமை) ஏற்பட்ட சூரிய கிரகணமும் ஒரு ஆதாரமாகும். சூரிய கிரகணம் என்பது எந்த நாளில் சந்திரன் தன்னுடைய பழைய மாதத்தின் சுற்றை முடித்து புதிய மாதத்திற்கான சுற்றை ஆரம்பிக்கிறதோ அன்று தான் நடைபெறும். எனவே 1429 ன் ரஜப் மாதம் 29 நாட்களில் 1.8.2008 வெள்ளிக்கிழமை அன்று முடிந்து விட்டதை யாரும் மறுக்க முடியாது. எனவே 1429 ஷஃபான் மாதம் முதல் நாள் சனிக்கிழமை 2.8.2008 ஆரம்பித்தது. ஷஃபான் மாதத்தின் 29 நாள் சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை அன்று சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வந்து மாதம் முடிவடைகிறது. சனிக்கிழமை அன்று நேர்கோட்டிற்கு வந்ததற்கு அறிகுறி அன்றைய தினம் சூரியனும் சந்திரனும் ஒரு நிமிடங்கள் வித்தியாசத்தில் உதிக்கிறது. வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பார்த்த பிறையை சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின் பார்க்க முடியாததும் ஷஃபான் மாதம் முடிவடைந்து விட்டதற்கு ஆதாரமாகும். இதை கணக்கின் மூலமும் ஏற்கனவே கணக்கிடப்பட்டு நிரூப்பிக்கபட்டடும் உள்ளது.

எனவே உலக மக்கள் அனைவரும் 1429 ரமளான் மாதத்தை ஞாயிற்றுக்கிழமை (31.08.08) அன்று ஆரம்பிப்பதே சரியானதாகும். பிறையை கண்ணால் பார்த்து ஆரம்பிப்பவர்கள் ஒரு நாளோ இரு நாளோ கழித்து ஆரம்பிப்பார்கள். அவர்கள் முழு நிலவு தினமான பவுர்ணமி நாளை 12 வது நாளிளோ அல்லது 13 வது நாளிலோ அடைவார்கள். பவுர்ணமி என்பது மாதத்தின் 14,15,16 ஆகிய நாட்களில் தான் நடைபெறும். எனவே 1429 ரமளான் மாதத்தை திங்கள்கிழமை ஆரம்பிப்பவர்களும், செவ்வாய் கிழமை ஆரம்பிப்பவர்களும் தவறாகவே ஆரம்பித்தார்கள் என்பது பவுர்ணமி அன்று நிரூபணமாகும். பவுர்ணமி தினம் என்பது மாதத்துடைய நடுப்பகுதியாகும். அன்றைய தினம் தான் சந்திரகிரகணம் ஏற்படும்.

ஆகவே நாட்களை தெளிவாக கணக்கிட முடிகின்ற இன்றைய காலகட்டத்தில் நீங்கள் இதைபற்றி சிந்திக்காமல் இருந்து, உங்கள் தலைவர்களின் வழிகாட்டுதலை கண்மூடி பின்பற்றினால் மறுமையில் நாமும் எந்த தலைவர்கள் தவறாக வழிகாட்டினார்களோ அவர்களும் நஷ்டமடைந்தவர்களாக நிற்போம்.

எனவே நாம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி 1429 ரமளான் மாதத்தை ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) நோன்பு நோற்றவர்களாக ஆரம்பித்து மறுமையில் வெற்றி பெறுவோம். இன்ஷாஅல்லாஹ்.

இவண்

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103.   தமிழ்நாடு

Websites: - www.lunarcalendar.in,  www.hijricalendar.com,  www.hijracalendar.in, www.mooncalendar.in.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  Mobile:-  99626 22000, 99626 33000,  99626 44000,  99624 77000, 99626 33844,   95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333,  94432 55643,   99524 14885.

Read 2045 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:08