Print this page
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:00

ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு அறிவிப்பு

Rate this item
(1 Vote)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு

 ரமழான் மாத நோன்பு அறிவிப்பு

அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 09/06/2013 ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1434-இன் ஷஃபான் மாதம் துவங்கியது. எதிர்வரும் 08-07-2013 திங்கள்கிழமை அன்று ஷஃபான் 30 தினங்களாக பூர்த்தியாகிறது. அன்று பிறையை புறக்கண்களால் காண இயலாத (conjunction) சங்கம தினமாகும்.

ஹிஜ்ரி 1434-இன் ரமழான் மாதம் எதிர்வரும் 09-07-2013 செவ்வாய்கிழமை முதல் துவங்குகிறது. எனவே முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் முதல்நாள் முதல் நோன்பை தவறவிட்டுவிடாமல் 09-07-2013 செவ்வாய்கிழமை அன்று நோன்பு நோற்றவர்களாக  இந்த வருடத்தின் ரமழான் மாதத்தை சரியான தினத்தில் ஒற்றுமையுடன் துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மக்களே! முஸ்லிம்களாகிய நாம் ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களை தீர்மானிப்பதற்கும் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம்  கட்டளையிட்டுள்ளது என்ற தவறான சிந்தனை மக்கள் மனதில் மிகமிக ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது.  இப்பிறை நிலைபாடுகளை மையமாக வைத்து அவரவர்கள் தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்திய காரணத்தால் நம் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழுக்களாக சல்லடைபோல  இன்று பிரிக்கப்பட்டுவிட்டது.

ஸூமூ லி ருஃயத்திஹி என்று பிறை தொடர்பாக வரும் பிரபலமான ஹதீஸை வைத்துக்கொண்டு அதிலுள்ள ருஃயத் என்ற சொல்லிற்கு புறக்கண்ணால் பார்த்தல் என்று பொத்தாம் பொதுவாக மொழிபெயர்த்ததின் விளைவுதான் இது.

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பது நாம் மார்க்கம் கட்டளையிட்டுள்ள முக்கியக் கடமைதான் என்று  இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களும் பிறந்த பிறையை தமது கண்களால் அவசியமாக பார்த்திருப்பார்கள். தமது மனைவிமார்களுக்கும் தோழர்களுக்கும் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள். பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று நிச்சயமாக கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவைகளில் எதையுமே செய்யவில்லை. மாறாக அவர்கள் சந்திரனில் ஏற்படும் அனைத்து படித்தரங்களையும் அவதானித்து மாதத்தை முடிவு செய்து வந்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.

     மேலும் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த நாட்களில் எந்தெந்த நேரங்களில் எந்த திசையில் மாற்றுக்கருத்துடையோர் கூறுவது போல் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்ப்பதற்குத் தேடினார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு சிறு விபரங்கள் கூட ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம்.

ஸூமூ லி ருஃயத்திஹிஎன்ற ஹதீஸில் வரும் ருஃயத் என்ற அரபிச்சொல் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் அறிந்து கொள்வது போன்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும். இன்று சர்வசாதாரணமாக மொழி பெயர்க்கப்படுவதைப் போல ருஃயத் என்ற இந்த அரபிப்பதம் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதை குறிக்காது. திருமறை குர்ஆனில் ரஆ, தரா, ருஃயத் போன்ற மூலச்சொற்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட  இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில வசனங்களுக்குத்தான் புறக்கண்ணால் பார்த்தல் என்ற பொருளைக் குறிப்பதாக அமைந்துள்ளன. அதில் பெரும்பாலான வசனங்கள்  தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்துகொள்வதையே குறிக்கின்றன. (பார்க்க 105:1, 37:102, 2:243,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 14:9,24,28, 19:83, 22:18, 63,65, 24:41,43, 25:45, 26:225). எனவே ருஃயத் என்ற இந்த சொல்லை புறக்கண்ணால் பார்ப்பது என்ற குறுகிய வட்டத்திற்குள் கட்டுப்படுத்திடக் கூடாது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

மேலும், பார்வை என்றாலே சிந்தனையுடன், அறிவுடனும் பார்ப்பது என்பதே உண்மையான அர்த்தமாகும். நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தை பார்த்துக்கொள் என்று கூறினாலேயே அதில் அறிவார்ந்து பார்ப்பதைத்தான் அது குறிக்கும்.  பாதையில் முள் கிடக்கிறது பார்த்து வாருங்கள் என ஒருவரிடம் கூறினால், அவர் அதை பார்த்து கொண்டே அதன் மேல் காலால் மிதித்து வந்தால், அவரை நாம் புத்தி பேதலித்தவர் என்றுதான் கூறுவோம். புத்தி சுவாதீனம்  இல்லாதவர்களின் பார்வைதான் சிந்திக்காத வெறும் பார்வையாக மட்டும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். எனவே சந்திரனின் படித்தரங்களை பார்ப்பது என்பது அதன் கோணவிகிதம், அது காட்டும் தேதி, அது அமைந்திருக்கும்  இடம் ஆகியவற்றை நாம் ஆய்ந்து அறிந்து சிந்தனையுடன் பார்ப்பதே ஆகும். அப்படிப்பட்ட பார்வையைத்தான் இஸ்லாம்  இந்த பிறைவிஷயத்தில் ருஃயத் என்று கூறுகின்றது. ருஃயத் என்றால் புறக்கண்ணால் மட்டும் பார்த்தல் என்ற பொருள் மிகவும் பிழையானது என்பதற்கு அல்குர்ஆனின் அடுக்கடுக்கான சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ருஃயத் என்றால் வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்காது என்பதற்கு மேலும் உதாரணமாக, நபியே! யானைப்படைக் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) என்று கஃபாவை அழிக்க வந்த அப்ரஹா என்பவனின் வரலாற்றை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகிறான். அது போல ஆது கூட்டத்தைப் பற்றிக் கூறும்போது, உம்முடைய  இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்றும் கேட்கிறான்.

அலம்தர என்று துவங்கும் இவ்விரு வசனங்களிலும் வல்ல இறைவன் தரா என்ற சொல்லை பயன்படுத்துகிறான். இச்சொல்லிற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி வல்ல அல்லாஹ் தனது தூதருக்கு தகவல் அளிக்கிறான் என்றே நாம் பொருள் கொள்கிறோம். இதைவிடுத்து நீர் பார்க்கவில்லையா என்ற சொல்லை வைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்கள்  இவ்வுலகில் பிறப்பதற்கு பலஆண்டு காலங்கள் முன்னரே ஏற்பட்ட அச்சம்பவங்களை தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று பொருள் கொள்வது அறிவுடைமையாகாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே ருஃயத் என்பதற்கு பார்வையைக் கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற பரந்த அர்த்தங்கள் ருஃயத் என்ற சொல்லிற்கு உள்ளன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். 

அடுத்ததாக மேற்காணும் ரிவாயத்தில் ஃபஇன் கும்ம அலைக்கும் என்ற சொற்களில் கும்ம என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்று தவறாக மொழிபெயர்க்கிறார்கள். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு மார்க்க அறிவில் அபிவிருத்தி செய்வானாக, பிறை விஷயத்தில் தெளிவை அளிப்பானாக என்று பிராத்திக்கிறோம்.

மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் மாற்றுக்கருத்துடையோர் பதில்சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப்பார்ப்போம் என்று பதில் சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இன்னும் மேகமூட்டம் மட்டும்தான் ஒருவர் பிறைபார்ப்பதை மறைக்குமா? கடும் சூறைக்காற்றால் ஏற்படும் மாசுகள், புளுதிப் புயல் போன்றவற்றால் ஏற்படும் தூசிதுகள்கள், புகை மூட்டம், பனிப்பொழிவுகள், அதிகமான வெளிச்சம், பார்வைக் கோளாறு போன்ற காரணங்களாலும் பிறை நம் புறக்கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படும் வாய்ப்புள்ளதே அப்போது என்ன செய்வது? அவர்கள் கருத்துப்படி ஃபஇன் கும்ம அலைக்கும் - என்பதற்கு மேகமூட்டமாக இருந்தால் மட்டும்தானே மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யமுடியும்?.

ஃபஇன் கும்ம அலைக்கும் என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போது என்பதாகும். அதாவது ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் (Conjunction தினத்தில்) பிறை புறக்கண்களுக்கு நிச்சயமாக மறைக்கப்படுமே அப்போது என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் பல அறிவிப்புகளில் கும்ம என்ற சொல்லிற்கு பதிலாக கும்மிய, உஃமிய, கபிய்ய, கம்மிய, ஹஃபிய்ய போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹஃபிய என்ற சொல்லுக்கு மறைத்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதுபோன்ற மற்ற ரிவாயத்துகளின் விளக்கத்தையும், பிறை சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்படும் பலஹீனமான பல செய்திகளின் விளக்கத்தையும் பிரசுரத்தின் நீளம் கருதி இங்கு தவிர்க்கிறோம்.

நாம் கேட்பது என்னவென்றால் பிறை விஷயமாக வரும் மேற்காணும் ரிவாயத்துகளில் மறைக்கப்படும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பல பதங்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ள நிலையில் பிறைபற்றி பேசும் அறிஞர்கள் மேற்காணும் ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் இன்னும் எத்திவைக்காதது ஏன்? என்று கேட்கிறோம். ஃபஇன் கும்ம அலைக்கும் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு இல்லாத மேகமூட்டத்தை முன்னிலைப்படுத்தும் நமதூர் ஆலிம்கள் மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பதங்கள் குறித்து ஏன் இன்னும் ஆய்வுசெய்ய முன்வரவில்லை?

இன்னும் பிறை சம்பந்தமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரிவாயத்துகளிலும் வலியுறுத்தி கூறி இருக்கையில், நபி (ஸல்) அவர்கள் ஏதோ பிறையின் படித்தரங்களை கணக்கிடுவதை ஹராம் என்று தடுத்ததைப் போன்ற ஒரு தவறான மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஏன்? இதனால் அவர்கள் அடையும் இலாபம்தான் என்ன? என்பதை மிகமிக கண்ணியத்தோடு கேட்கிறோம்.

அல்லாஹ் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மனிதர்களுக்கு காலங்காட்டியாக அமைத்துள்ளான்.  எனவே அதை அவதானித்து அறிந்து அதனடிப்படையில் சரியான நாளில் எல்லா மாதங்களையும் துவக்குவதோடு, ரமழானையும் சரியாக துவங்கி,  அப்பிறைகளை அவதானித்து அறிந்து சரியான தினத்தில் பெருநாளையும் கொண்டாட வேண்டும். மேலும் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் சங்கம தினமான கும்மாவுடைய நாள் (Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் புறக்கண்களுக்கு பிறை தெரியாத அந்த கும்மாவுடைய நாளையும் ஏற்கனவே சந்திரனின் ஏற்பட்ட படித்தரங்களான தேய்பிறைகளை பார்த்த மாதத்தோடு சேர்த்து கணக்கிட்டு (அல்லது எண்ணி) மாதத்தை மிகச்சரியாக பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் பிறை சம்பந்தமாக வரும் நபிமொழிகள்  உணர்த்தும் பாடமாகும். மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாகும். பிறந்த பிறையை அறியாமல் நோன்பு நோற்காதீர்கள், பிறந்த பிறையை அறிந்திடாமல் பெருநாளை கொண்டாடாதீர்கள். உங்களுக்கு அது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் பிறை பிறப்பதை அறியாமல் மேற்குத்திசையில் மஃரிபு வேளையில் அது மறைவதை புறக்கண்களால் பார்த்துவிட்டு இரண்டாவது நாளை முதல்நாளாகக் கொள்ளும் இந்த பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும். யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்தபின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். இஸ்லாத்தின் பரம விரோதிகளான யூதர்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யத் துணிந்த குழப்பங்களை நாம் விளக்கித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்கவேண்டும். அந்த யூதர்களைப் போல இன்றைய முஸ்லிம்களும் ஒருநாள் என்பது மஃரிபிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று தவறாக விளங்கி அதையே சரிஎன்று நம்பியுள்ளதை பார்க்கிறோம். மறுமைநாள் நெருங்கும் வேளையில் முஸ்லிம்கள் யூத கிருஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு-ஜான் முழத்திற்கு-முழம் பின்பற்றத் துவங்குவார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் இத்தருணத்தில் மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் மேற்கண்ட எச்சரிக்கையை உணராத ஷியாக்கள்தாம் யூதர்களின் சூழ்ச்சியில் விழ்ந்தனர். இஸ்லாமிய மார்க்கத்தில் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கினர். அத்தகைய குழப்பங்களில் ஒன்றுதான் பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்தபிறகே முதல்நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதும், பிறந்த பிறையை புறக்கண்களால் பார்த்தபிறகே பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பன போன்ற  பித்அத்துகளுமாகும். ஃபத்ஹூல்பாரியில் இடம்பெறும் நீளமான அந்த வரலாற்றுச் சுவடின் கருத்துக்களையும்,  ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பது நிபந்தனையோ, பர்ளான கடமையோ, மார்க்க சட்டமோ இல்லை என்பதையும், விளக்கமாக அறிந்து கொள்ள பிறையும் புறக்கண்ணும் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுப் புத்தகத்தை www.mooncalendar.in என்ற இணைய முகவரியில் படிக்கலாம். 

இன்னும் சூரியனை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்கள், சஹர் முடிவு நேரம் போன்றவற்றை அறிந்து கொள்ள எவரும் சூரியனை புறக்கண்ணால் பார்த்து அறிந்துகொள்வதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறோம். வல்ல அல்லாஹ் சூரியனைப்போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாக சொல்கிறான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

எனவே பிறை குழப்பத்திற்கு மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை துல்லியமாக கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றுவதுதான் என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறோம். ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்கிறோம்.

முஸ்லிம்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி (09-07-2013) செவ்வாய்கிழமை அன்று ரமழான் முதல்நாள் முதல் நோன்பை தவறவிட்டுவிடாமல் நோன்பு நோற்று வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

Hijri Committee

ஹிஜ்ரி கமிட்டி

160/101, வடக்கு மெயின் ரோடு ஏர்வாடி– 627103. தமிழ்நாடு

Websites: www.mooncalendar.in, www.hijricalendar.com, www.hijracalendar.in.

Mobile: 99626 22000, 99626 33000, 99626 44000, 99626 77000, 99626 33844, 95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333, 94432 55643, 99524 14885.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Read 2473 times