செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:45

கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.

Rate this item
(0 votes)
 ஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல்
ஆலோசனை கூட்டம் நடத்தும்
 ஜாக்கிற்கு அவசர கடிதம்.

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

அன்பின் JAQH-ன் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

இம்மடல் தங்களை நற்சுகத்தோடும் உயர்ந்த இஸ்லாமிய உணர்வுகளோடும் சந்திக்கட்டுமாக!

 

முக்கியம் எதிர்வரும் 2012 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் தங்கள்  JAQH அமைப்பைச் சார்ந்த தாயிக்களின் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற இருப்பதையும் அதில் பிறை சம்மந்தமாக ஐந்து தலைப்புகளில் கலந்தாலோசனை செய்யவிருப்பதையும் அறிகின்றோம்.

தாங்கள் திட்டமிட்டுள்ள அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் விருப்பு வெறுப்பின்றி, எத்தகைய தனிநபர்களின் ஆளுமைக்கும் உட்படாமல் அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை மட்டும் நாடி, குர்ஆன் சுன்னா அடிப்படையில் பிறை சம்மந்தமான உங்கள் கலந்தாலோசனையின் முடிவு அமைவதற்கு ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.

மேலும் பிறை விஷயத்தில் தாங்களும் தங்களின் அமைப்பினரும் உலகில் எங்கிருந்து பிறைபார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்று அமல் செய்வது என்ற நிலைபாட்டில் தற்போது இருப்பினும், அந்நிலைபாடு மார்க்க அடிப்படையில் சரியானதுதானா என்பதை திறந்த மனதுடன் மீண்டும் மறுஆய்வு செய்திட முடிவு செய்துள்ளதையும் பாராட்டுகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த காலங்களில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்கள் மீது  JAQH அமைப்பைச் சார்ந்த சில தாயிக்கள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை அறியாமலும், குர்ஆன் சுன்னாவை பின்பற்றி பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கின்ற எங்களின் பிறை ஆதாரங்களை பரிசீலனை செய்யாமலும், கண்மூடித்தனமாக எங்கள் மீது வசைமாறிப் பொழிந்தனர். இன்னும் நாங்கள் மீள் ஆய்விற்காகவும், பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து பரிசீலிக்கவும் வேண்டி வெளியிட்ட மனித குலத்தின் காலண்டர் என்ற புத்தகத்தை கீழ்த்தரமான முறையில் விமர்ச்சித்ததோடு மட்டுமின்றி, ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் பிறை புறக்கண்ணால் பார்ப்பதையே மறுக்கின்றோம் என்ற ரீதியில் அவதூறுகளை பரப்பியதையும், பரப்பி வருவதையும் ஒரு கசப்பான அனுபவமாக நினைத்து மறக்க முயற்சிக்கிறோம்.

நீங்கள் தற்போது அறிவித்துள்ளபடி ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களின் பிறை நிலைபாடுகளையும், நாங்கள் கூறும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்  ஆதாரங்களையும் உங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் வைத்து ஆய்வுசெய்து முடிவெடுக்க உள்ளீர்கள் - வாழ்த்துக்கள். அப்படியானால் அந்த மஸூராவில் எங்கள் ஆதாரங்களை முழுமையாகவும், தெள்ளத்தெளிவாகவும்  JAQH-ன் அனைத்து தாயிக்களும் முதலில் அறிந்திருக்க வேண்டும். மேலும் எங்கள் ஆதாரங்களில்  JAQH-ன் தாயிக்கள் எழுப்பும் எத்தகைய சந்தேகங்களுக்கும், எங்களின் நேரடியான பதில்களை அந்த அவையிலேயே நீங்கள் பெற்றிடவும் வேண்டும். அப்போதுதானே எங்கள் பிறை நிலைபாடுபற்றிய உங்கள் ஆய்வின் முடிவு சரியானதாக அமையும். 

மேலும் உங்கள் பிறை ஆலோசனையின் முக்கிய கருப்பொருளாக ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைபாட்டை விமர்ச்சிக்க இருக்கையில்,  JAQH-ல் உறுப்பினராக இல்லாத எத்தனையோ தாயிகளை அழைத்து அழைப்பு விடுத்துள்ள நீங்கள், எங்களையும் அக்கூட்டத்திற்கு அழைத்து அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா? அல்லது குறைந்த பட்சம் முற்கூட்டியே எங்களை அணுகி எங்களின் பிறைநிலைபாடுகளையும், நாங்கள் தவறாக விளங்கியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் குர்ஆன் சுன்னாவுக்கான எங்களின் எழுத்துப்பூர்வ ஆதாரங்களையாவது எங்களிடம் நீங்கள் கேட்டுப் பெற்றிருக்கலாமே. இதில் எதையாவது இதுநாள்வரை நீங்கள் செய்தீர்களா? இல்லையே!

தங்களின்  JAQH அமைப்பைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள், பிறை விஷயத்தில்  உங்கள் இயக்கத்தின்  தவறான முடிவை அறிந்து, சத்தியத்தை விளங்கி ஹிஜ்ரிகமிட்டியின் பிறை நிலைபாட்டை சரிகண்டு இன்று பின்பற்றவும் துவங்கிவிட்டதால் அவர்களை எப்படியாவது JAQH அமைப்பிலிருந்து தூக்கி எறிந்துவிடவேண்டும் என்பதற்காக, மேற்படி சகோதரர்கள் JAQH-ன் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று செயற்குழுவில் தீர்மானம் செய்து, அல்-ஜன்னத் இதழ்மூலம் எச்சரிக்கையும் விடுத்து, உங்கள் இயக்கமும் மத்ஹபு அடிப்படைக்கு செல்லப் போகின்றது என்பதை சுட்டிக் காட்டியுள்ளீர்கள் மேலும்.

அதாவது நீங்கள் ஒன்றை ஹலால் என்றால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிந்திக்காமல் ஹலால் என்று கூறி பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒன்றை ஹராம் என்றால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிந்திக்காமல், ஹராம் என்று கூறி ஒதுங்க வேண்டும் என்ற இந்த அடிப்படைதான் மதஹபுகளின் முக்கியமானஅடிப்படையாக உள்ளது. JAQH-ல் உள்ளவர்கள் பிறை விஷயத்தில் சிந்தனையுடன் செயல்படக்கூடாது என்பதை தெளிவாக அல்ஜன்னத் மூலம் வெளியிட்டு, யாராவது அவ்வாறு செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளதே, நீங்களும் மதஹபு அடைப்படையில் செயல்பட ஆரம்பித்து விட்டீர்கள் என்பதற்கான வலுவான மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

உங்கள் JAQH இயக்கத்தை பின்பற்றுபவர்களை மதஹபு சிந்தனைக்கு கொண்டுசெல்வதைவிட, ஹிஜ்ரிகமிட்டியினராகிய எங்களை பிறைசம்மந்தமான பகிரங்க விவாதத்திற்கோ, அல்லது உங்களோடு நட்புறவோடு கலந்துறையாடுவதற்கோ அழைப்பு விடுத்திருந்தால், பிறை விஷயத்தை ஆய்வுசெய்வதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும், உளத்தூய்மையையும், உங்கள் நிலைபாட்டில் உங்களுக்குள்ள உறுதியையும் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை கொள்கையை சரியென்று ஏற்றுக்கொண்ட JAQH-ஐ சேர்ந்த அத்தகைய சகோதரர்கள்கூட விளங்கியிருப்பார்கள், அதுதான் சாலப் பொறுத்தமான செயலாகவும் இருந்திருக்கும். இதையும் நீங்கள் செய்யத்தயாரில்லை என்பதைத்தான் உங்களின் அல்ஜன்னத் மாதஇதழின் உறுப்பினர் நீக்க அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இதைவிடுத்து எங்கள் நிலைபாடு என்று நீங்கள் எதையெல்லாம் புரிந்து வைத்துள்ளீர்களோ, அவைகளை நாங்கள் இல்லாத அவையில் எங்கள் கருத்தாக எடுத்துவைத்து விவாதிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? ஹிஜ்ரிகமிட்டியினர் சொல்வதில் இது சரியல்ல அது சரியல்ல, இவர்கள் இப்படி சொல்வது தவறு என்று அதற்கான மேலதிக விளக்கங்கள் பெறுவதற்கு அக்டோபர் 13, 14 தேதி நீங்கள் ஏற்பாடு செய்துள்ள அந்த மஸூராவில் நாங்கள் இல்லாத  நிலையில் உங்களுக்குள் நீங்களே விவாதிக்க இருப்பதால் நீங்கள் அடையவிருக்கும் பயன்தான் என்ன

ஹிஜ்ரி கமிட்டியினரின் நிலைபாட்டையோ, அல்லது எங்கள் கூட்டமைப்பையோ இழுக்காமல் நீங்கள்  JAQH ஆலோசனைக் கூட்டம் என்று பொதுவான அழைப்பு விடுத்திருந்தால், உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும் அவசியம் எங்களுக்கு ஏற்பட்டிருக்காது. மாறாக உங்கள் அழைப்பிதழில் எங்கள் அமைப்பின் பெயரையும், எங்கள் பிறை நிலைபாட்டையும் ஒரு விவாதப்பொருளாக நீங்கள் இடம்பெறச்செய்துள்ள காரணத்தினாலேயே அதன் சாதக பாதக நிலையை விளக்கி இக்கடிதத்தை விறுப்பு வெறுப்பின்றி மிகக்கண்ணியமான முறையில் எழுதியுள்ளோம்.

இக்கடிதத்தின் மூலம் உங்களை பழிவாங்கும் எண்ணமோ, உங்களை விமர்ச்சிக்கும் நோக்கமோ எங்களிடம் நிச்சயமாக இல்லை, அப்படி என்றும் இருந்ததுமில்லை. அதைவிட்டும் வல்ல அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக. இது உங்கள் சிந்தனையை தூண்டிவிடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதமாகும்.

சர்வதேசப்பிறைக்கு நீங்கள் எடுத்துவைக்கும் ஆதாரங்களின் நிலைகள் பற்றி விவாதிப்பதற்கும், சர்வதேசப்பிறை குஃபுரு என்ற இறைநிராகரிப்பின் பக்கம் எவ்வாறு மக்களை இழுத்துச்செல்கின்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கும், சர்வதேச பிறைக்கொள்கை தவறு என்று ஆய்வு செய்து அறிந்து யார் வீரியத்துடனும், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கையுடனும் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அவர்களால்தானே முடியும். சர்வதேச பிறை கொள்கை  சரியென்று சரிகண்டுள்ள உங்களால், சர்வதேச சவுதிதேசபிறையின் தவறுகளை எப்படி சுட்டிக்காட்டிட முடியும் என்றுதான் உங்களைப்பார்த்து இக்கடிதம் மூலம் நாங்கள் கேட்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் வெறும் இரண்டு நாட்கள் அவகாசத்தில் பல தலைப்புகளில் மஸூரா செய்யவிருக்கும் நீங்கள் பிறை விஷயத்திற்காக அதில் எத்தனை மணி நேரங்களை ஒதுக்கிவிட முடியும்? அக்குறுகிய கால அவகாசத்தில் நீங்கள் என்ன சிறப்பான தீர்வுகளை ஆய்வுசெய்து முடிவு கண்டுவிட முடியும்?

அல்லாஹ்விற்காக எங்கள் சொந்தப் பணிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எங்களின் பிறை நிலைபாடே குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியானது என்பதற்கு ஆதாரங்களை அள்ளித்தந்து அதில் ஒரு முடிவை எட்டும்வரை பல நாட்கணக்கில் உங்களோடு நட்புறவோடு கலந்துரையாட ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் தயாராக இருக்கையில் (இதை உங்களில் சிலர் தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ள நிலையில்) எங்களை புறந்தள்ளி எங்கள் பிறை கொள்கையைப்பற்றி உங்கள் JAQH முத்திரை பெற்ற தாயிகளுடன் மட்டும் கலந்துரையாடுவது ஏனோ?

எங்கள் பிறைநிலைபாட்டை விளக்கி பல பிரசுரங்களும், பிரச்சாரங்களும் பதிவுளாக கிடைக்கும் போது எங்களை ஏன் அழைக்கவேண்டும் என்றுகூட நீங்கள் கருதியிருக்கலாம். பிரசுரங்களிலும், பிரச்சாரத்திலும் விரிவான ஆய்வறிக்கையை யாரும் அளிக்கமாட்டார்கள். மாறாக ஆய்வு, கருத்துப்பரிமாற்றம் அல்லது விவாதம் எனும்போதுதான் ஒரு தலைப்பைப் பற்றி விரிவாக அலசி குர்ஆன் சுன்னா வழியில் மிகத்தெளிவாக பதிவுசெய்யமுடியும்.

உதாரணமாக ருஃயத் என்பதற்கு நீங்கள் அளிக்கும் அரபி இலக்கண விதிகள், மற்றும் விளக்கங்கள் என்று ஆரம்பித்து பிறைபார்த்த தகவலுக்கு பெரிய ஆதாரமாக பிரச்சாரம் செய்யப்படும் வாகனக்கூட்டம், குரைபு ஹதீஸ்கள் வரை ஆய்விற்கு உட்படுத்துகிறோம் என்றால் அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை முதல், ஹதீஸின் செய்தி மற்றும் தரம் உட்பட, அந்த ஹதீஸின் உண்மை நிலை வரை நேரம் செலவிட்டு ஆய்வு செய்து ஒரு இறுதி முடிவு எட்டப்படும். பிறகு அந்த முடிவின் சுறுக்கத்தையே பிரச்சாரமாக மக்கள் மத்தியில் வைப்போம், இதுதானே இயற்கை. எனவே எங்கள் பிரசரங்கள், பிரச்சார சீடிக்களை மட்டும் வைத்துக்கொண்டு எங்களின் நிலைபாட்டை உங்களால் எடைபோட்டுவிட முடியாது என்கிறோம்.

மேலும் எங்கள் நிலைபாட்டில் நீங்கள் கேள்விகேட்டு அதற்கு நாங்கள் தகுந்த விடையளிக்காத பட்சத்தில் எங்கள் நிலைபாட்டின் உண்மைநிலையை வீடியோ பதிவின் மூலம் மக்களுக்கு எடுத்து காண்பித்துவிட்டால் எவ்வளவு பயனுள்ள பிரச்சாரமாக உங்களுக்கு அது அமையும் என்பதையும் நீங்கள் இந்நேரத்தில் கவனத்தில் கொள்ளுங்கள். அது எங்கே நடக்கப்போகிறது?

எங்களை அழைக்கும் பட்சத்தில் எங்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை முற்கூட்டியே நீங்கள் அறிந்துள்ளதாலேயே எங்களை விமர்ச்சிக்கும் நீங்கள் எங்களை எதிர்கொள்ள தொடர்ந்து தயக்கம் காட்டுகிறீர்கள் என்பது மிகஉறுதியாகவும் வெட்ட வெளிச்சமாகவும் தெரிகிறதே. எனவே தான் மக்களை மிரட்டும் தொனியில் அல்ஜன்னத்தில் உறுப்பினர் நீக்கம் குறித்து எழுதியுள்ளீர்கள்.

மேலும் பிறைவிஷயத்தில் நீங்கள் தெரியவேண்டிய விஷயங்கள் அனேகம் உள்ளன என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இது உங்கள் பிரச்சார சிடிகளையோ, ஃபத்வாக்களை பார்த்தோ நாங்கள் கூறவில்லை. உங்களோடு எங்களுக்கு உள்ள பல வருடகால தொடர்புகளின் மூலம் நாங்கள் அறிந்த பேருண்மையாகும்.

உதாரணமாக ருஃயத் என்ற அரபிச்சொல் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும். இன்று சர்வசாதாரணமாக மொழிபெயர்க்கப்படுவதைப் போல ருஃயத் என்ற இந்த அரபிப் பதம் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதை குறிக்காது என்பதை இன்னும் உங்களால் புரிய முடியவில்லை.

திருமறைக் குர்ஆனில் ரஆ, தரா, ருஃயத் போன்ற மூலச்சொற்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில வசனங்களுக்குத்தான் புறக்கண்ணால் பார்த்தல் என்ற பொருளைக் குறிப்பதாக அமைந்துள்ளன. அதில் பெரும்பாலான வசனங்கள் தகவலால், அறிவால், ஆய்வால் அறிந்துகொள்வதையே குறிக்கின்றது என்பதை இன்னுமா நீங்கள் ஆய்வு செய்யவில்லை?

இந்நிலையில் ஸூமு லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி  மூலம் பிறையை 29 நாளின் மாலை, 30 வது நாள் மஃரிபில் புறக்கண்களால் பார்த்து நீங்கள் நோன்பு பிடியுங்கள், மூலம் பிறையை 29 நாளின் மாலை, 30 வது நாள் மஃரிபில் பிறையை புறக்கண்களால் பார்த்தே நோன்பை விடுங்கள் என்று நபி (ஸல்) சொன்னதாக மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே பரப்புவது எந்தவிதத்தில் நியாயம்? இது மாபெரும் குற்றமில்லையா?

நபி (ஸல்) அவர்களைப் பொருத்தவரை ஜவாமிவுல் கலாம் - அதாவது இரத்தினச் சுறுக்கமான வார்த்தைகளைக் கொண்டு மிகப்பெரும் பொருளை தெரிவிக்கும் ஆற்றலை தனது தூதருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். இதற்கு சிறந்ததோர் உதாரணமாக இந்த ஹதீஸைக் கொள்ளலாம். அதாவது அஹில்லா, மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்ம அலைக்கும் போன்ற அத்தகைய இரத்தின சுறுக்கமான வார்த்தைகளை உள்ளடக்கியே நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன் மொழி அமைந்துள்ளது. எனவே முதலில் அச்சொற்களுக்கான விளக்கங்கனை அறியமுற்படுங்கள் பின்னர் ஹதீஸ் விளக்கத்திற்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் லா தஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ என்ற ஹதீஸின் மூலம் பிறையை 29 நாளின் மாலை, 30 வது நாள் மஃரிபில் புறக்கண்ணால் பார்ப்பது என்பதே நிபந்தனை (கண்டிஷன் - ஷரத்து) என்று  JAQH தாயிக்களில் சிலர் கூறுவது தவறான ஆய்வாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அந்த உம்மத்திற்கு தொழுகை நேரங்களை சூரியனை புறக்கண்களால் பார்த்து, ஒரு குச்சியை நிலத்தில் நட்டு அதன் நிழல்விழும் அளவை வைத்து முடிவுசெய்யும் ஒருவழியே இருந்ததைப் போல, பிறையை அறிந்து கொள்ளவும் அன்றிருந்த ஒரேவழி பிறையை மாதத்தின் கடைசி நாள் தவிர மற்ற நாட்களில் புறக்கண்களால் பார்ப்பது என்ற ஒருநிலை மட்டுமே இருந்தது. அன்றைய மக்கள் பிறைகளை எவ்வாறு பார்த்தார்கள் என்பதைப்பற்றியே அல்லாஹ் தன்னுடைய அல்குர்ஆனில் 2:189 ல் தெளிவாக அறியத்தருகின்றான். மேலும் பிறையை புறக்கண்களால் 29வது நாள் மாலை, 30 வது நாள் மஃரிபில் பார்க்க சொல்வது, மற்றும் மஃரிப் தொழுகையை விட்டு விட்டு பிறையை தேடுவது என்பது ரமழான் மாதத்தின் அசலான கடமைகளுள் உட்பட்டதல்ல. பிறையை பார்க்கவே முடியாத கடைசி நாளில் புறக்கண்களால் பார்ப்பது கடமை என்று நம்புவது மார்க்கத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட மனோஇச்சையை பின்பற்றுவதாகும்.

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறையை பார்ப்பதுதான் முக்கியக் கடமை என்று இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களும் பிறையை தமது கண்களால், நீங்கள் கூறுவது போல் 29வது மாலை 30 வது நாள் மஃரிபில் அவசியமாக பார்த்திருப்பார்கள். தமது மனைவிமார்களுக்கும், தோழர்களுக்கும் பிறையை புறக்கண்களால் அன்றையதினம் பார்க்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள். பிறையை புறக்கண்களால் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீது கட்டாயக் கடமையாகும் என்று நிச்சயமாக கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவைகளில் எதையுமே ஏன் செய்யவில்லை என்ற சிந்தனைகூட இதுவரை உங்களின் கவனத்திற்கு எட்டவில்லையே ஏன்?

அரபி மொழியின் அகராதிப்படியும் அதன் இலக்கணத்தின் படியும் ரஆ, ரஅய்தும், ருஃயத், தரவ்ன போன்ற சொற்கள் எந்த இடத்தில் வந்தாலும் கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் என்றும், கருவியின் துணைகொண்டு பார்த்தாலும் கண்ணால்தான் பார்க்கிறோம் என்றும்  JAQH தாயிக்களில் சிலர் கூறிவருவது பிறைவிஷயத்தில் அவர்களின் அறிவின்மையையே வெளிப்படுத்துகிறது. அவ்வாறு பொதுமேடையில் கர்ஜிக்கும் உங்கள் இயக்கத்தின் மௌலவிகள் இதை ஒரு சவாலாக ஏற்று அவர்களின் கூற்று சரிதான் என்று நிரூபிக்க முயலட்டும்.

இன்னும் அரபி இலக்கண விதிகளின்படி ஒரேயொரு செயல்பாட்டு வினையைப் பார்த்தல் என்றால் புறக்கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் என்றும் ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினையை பார்த்ததாக சொன்னால்தான் பார்த்தல் என்ற விதியோடு பிற அர்த்தங்கள் வரும் என்று  JAQH தாயிக்களில் சிலர் புதிதாக கண்டுபிடித்துள்ள விதி  இலக்கணத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட, வடிகட்டிய பொய்ச் செய்தியாகும்.

மேலும் யவ்முஷ்ஷக் சந்தேகமான நாளில் நோன்பு வைக்கக்கூடாது என்பது நபிகளாரின் கட்டளை. காலண்டரை பின்பற்றினால் யவ்முஷ்ஷக் என்ற நாளே இல்லாமல் போகும் என்ற JAQH தாயிக்கள் சிலரின் தேவையில்லாத அவசியமற்ற அச்சமானது மார்க்கம் வலியுறுத்தாத பேணுதலாகும்.

இவ்வாறு பட்டியல் போட்டு உங்களின் தவறான நிலைபாடுகளை எழுதிக்கொண்டே இருக்க முடியும். ஏடு தாங்காது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டு எங்களின் சரியான நிலைபாட்டை நீங்கள் அறியும் விருப்பமிருந்தால் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு உங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.

இறுதியாக ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களைப் பொறுத்தவரையில் மார்க்கத்திற்கே முதலிடம் கொடுப்போம். குர்ஆனும், சுன்னாவுமே எங்கள் மார்க்கம். அமீரைப் பின்பற்றுதல், அவர் சொல்லும் அனைத்திற்கும் வாய்பொத்தி தலையாட்டி கட்டுப்படுதல் என்ற நிலை எங்களுக்கில்லை. இயக்க முக்கியத்துவம் என்ற இயக்க வெறியோ, மதஹபு வெறியோ, இறுமாப்புகளோ கிஞ்சித்தும் எங்களுக்கு இல்லை. சத்தியம் இதுதான் என்பது எங்களுக்கு அறிந்துவிட்ட நிலையில் அதை மிக உறுதியாடு பிறருக்கு எத்தி வைப்பது எங்கள் கடமையாகிவிட்டடது என்பதை தெளிவாக உணர்ந்தே எங்கள் சக்திக்குட்பட்டு செயல்பட்டு வருகின்றோம் - அல்ஹம்துலில்லாஹ்.

எங்கள் கடமை இறைவனின் தூதுச்செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.(13:11)

எனவே சத்தியத்தை அறிந்து செயலாற்றி வல்ல அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

25 துல் கஃஅதா 1433 வியாழக்கிழமை

 

 

 

 

Read 2827 times