Print this page
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்!

Rate this item
(0 votes)

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்!

ஹிஜ்ரி காலண்டரை பொய்ப்படுத்தும் முயற்சி பயனளிக்குமா?

ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டின் இறையருள் சூழ்ந்த இனிய ரமழான் கடந்த 9 ஜூலை 2013 அன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகியது அல்ஹம்துலில்லாஹ். வழக்கம் போலவே இவ்வாண்டும் துல்லியமான பிறைக்கணக்கீட்டின் அடிப்படையில் கடந்த 2013 ஜூலை 9 செவ்வாய்க்கிழமையன்று ஏராளமான மக்கள் ஹிஜ்ரி 1434இன் ரமழானின் முதல்நாளை சரியாகத் துவக்கினார்கள் என்றாலும்பிறையை புறக்கண்களால் பார்த்தும் சர்வதேச அளவில் பிறைத் தகவலைப் பெற்றுமே செயல்படுவோம் என்பவர்களும், சவுதி அரசின் பிறை அறிவிப்பை தங்கள் நிலைப்பாடாகக் கொண்டவர்களும் 2013 ஜூலை 10 ஆம் தேதி புதன் கிழமையன்று தங்களின் ரமழான் முதல்நாளைத் துவங்கினர்.

மேலும் தத்தம்பகுதிபிறை அல்லது தமிழகப்பிறை கருத்தை சரிகாண்பவர்கள் 2013 ஜூலை 10,11-ஆம் தேதிகளில்கூட தமிழகத்தில் பல இடங்களில் பிறையை புறக்கண்களால் பார்க்க முடியாத மேகமூட்டமாக இருந்த சூழ்நிலையில் ஜூலை 11-ஆம் தேதி தங்கள் ரமழானை துவங்கினர்.

இந்நிலையில் பிறை கணக்கீட்டை நாங்கள் நிராகரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே பிறை பிறந்த தகவல் அடிப்படையில்தான் செயல்படுவோம் என்ற விசித்திர பிறைக் கொள்கையுடையவர்கள், கடந்த ஜூலை 8-ஆம் தேதி திங்கள் கிழமை சூரியன் மறைவிற்குப் பிறகு தெஹீட்டி தீவில் ரமழான் தலைப்பிறை பார்க்கப்பட்டதாக தங்கள் இணையதளங்களிலே செய்தியை பரப்பி விட்டனர்.

பார்க்க : http://www.makkahcalendar.org/en/ramadan-2013.php

தெஹீட்டியில் பார்த்த பிறை தலைப்பிறையா என்ற ஆய்வு ஒருபுறமிருக்கட்டும். மக்கள் பேச்சுவழக்கில் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அமாவாசைதினம் என்று புரிந்துள்ள கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாளே கடந்த 2013 ஜூலை 8 திங்கள்கிழமை ஆகும். அன்று தெஹீட்டியில் உண்மையிலேயே பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டதா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியது நம் மீது கடமையாகும்.

2013 ஜூலை 8 திங்கள்கிழமையன்று சூரியன் மறைந்த பின்னர் தெஹீட்டியில் பிறை பார்க்கப்பட்டது என்ற செய்தியை வெளியிட்டவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க முற்பட்டனர் என்பதே உண்மை. அதாவது

முதலாவது : 2013 ஜூலை 8-ஆம் தேதி கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாள் என்பதில் உலக மக்கள் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இதில் அனைவரும் ஒன்றுபடுகிறோம். நபி (ஸல்) அவர்களின் போதனையின்படி கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்பதை நாம் அறிவோம். மேற்படி புறக்கண்களுக்கு பிறை மறைக்கப்படுவது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான பல ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்யும் புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்ற கருத்தை சரிவர உள்வாங்காமல் புரியாமல், திரித்து, புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்லுகிறார்கள் ஆனால் பிறை தெரிகிறதுஎன்று வாதம் வைத்தனர், மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்தனர். இது முதலாவது விஷயமாகும். 

இரண்டாவது : தெஹீட்டியில் ஜூலை 8-ஆம் தேதி சூரியன் மறைந்த பின்னர் பிறை பார்க்கப்பட்டபோது சவுதிஅரேபியா, இந்தியா உட்பட நமது ஆசியக் கண்டத்தின் பல நாடுகள் ஜூலை 9 ஆம்தேதியாக விடிந்து காலை நேரத்தை அடைந்து விட்டதால், ஜூலை 9 அன்று ரமழான் நோன்பை ஆரம்பிக்காமல், அதற்கு அடுத்தநாள் 10-ஆம் தேதி புதன்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொண்டோம் என்று சர்வதேச-சவுதிதேசப்பிறை நிலைப்பாட்டிலுள்ளவர்கள் சமாளிப்பதற்கு ஏதுவாகவும் மேற்படி செய்தியை வெளியிட்டனர். புரியும்படி சொல்வதென்றால், தெஹீட்டியில் 2013 ஜூலை 8 அன்று பிறை பார்க்கப்பட்ட போது பல கிழக்கத்திய நாடுகள் விடிந்து அடுத்தநாளாகி விடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அதற்கு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்ற புதிய கற்பனையான சட்டத்திற்கு இதன்மூலம் அடித்தளம் அமைக்கப்பட்டது. இது இரண்டாவது விஷயமாகும். 

ஒரு வாதத்திற்காக சொல்வதென்றால், பிறையை பார்க்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள். இதோ ஜூலை 8 அன்று மஃரிபில் பிறை தெரிந்ததை இணைதளங்களிலே படம்பிடித்து காட்டியும் விட்டார்கள். எனவே ஹிஜ்ரி கமிட்டியினர் ரமழானைத் துவங்கிய நாளில் மற்றவர்களும் ஜூலை 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றுதான் முதல் நோன்பை துவங்கியிருக்க வேண்டும். இப்படி மாற்றுக் கருத்துடையவர்களின் தவறான பிறைக்கொள்கையை வைத்தே  ஹிஜ்ரி கமிட்டியினர் ரமழானின் முதல் நோன்பை துவங்கியதை நியாயப்படுத்திட இலகுவான செய்தியே இது. என்றாலும், பிறை விஷயத்தில் இத்தகைய தவறான, சுயநலமான வழிகாட்டுதலை ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் ஒருபோதும் மக்களுக்கு அளிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அதனாலேயே ஜூலை 8 தெஹீட்டி பிறைபற்றிய விளக்கங்களை மக்களுக்கு உணர்த்திடவும், சில அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கியும் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.

இக்கட்டுரை தெஹீட்டியில் சங்கம தினத்தில் பிறை தெரிந்தது சம்பந்தமாக சகோதரர்களில் சிலர் கேள்வி கேட்டுள்ளதால் தெஹீட்டியை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஹிஜ்ரி 1434 துல்கஃதா மாதத்தின் இறுதிநாளான 05-10-2013 அன்று சங்கம தினத்தில் சிலி நாட்டிலும், சவுதி அரேபியாவிலும் பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததாக புதிய செய்தியையும் பரப்புகின்றனர். சங்கம தினத்தில் பிறை புறக்கண்களுக்குத் தெரிந்தது என்ற அனைத்து செய்திகளுக்கும் இந்த பதில்களே போதுமானதாகும்.

இந்த ஆய்வுக்கட்டுரையை கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கமாக காண்போம் பொறுமையாக இறுதிவரை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. தெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும்.

2.புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றால் என்ன?

3.ஒரு நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ளலாமா?

1.தெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும்.

மஃரிபு வேளையில் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளும் பிறை நிலைப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படும் சர்வதேசப்பிறையினர் கடந்த 2013 ஜூலை 10-ஆம் தேதியன்றுதான் ஹிஜ்ரி 1434-இன் ரமழான் முதல் நோன்பைத் துவங்கினார்கள் என்பதை அறிவோம். மேற்படி சர்வதேசப்பிறையினர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இவ்வாறு இணையதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் அடிப்படையில் அவர்கள் ஜூலை 9 அன்றே ரமழானைத் துவங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்களின் நிலைப்பாட்டின்படி அப்பிறைச் செய்தியை கடந்த ஜூலை 9-ஆம் தேதி பஜ்ரு வேளைக்கு முன்னர்வரை பிற நாடுகளிலிருந்து பெறுவதற்கு முயற்சிகளாவது செய்திருக்க வேண்டும். இரண்டையுமே இவர்கள் செய்யவில்லை, ஒரு காலமும் செய்யவும் மாட்டார்கள்.

அவ்வளவு ஏன் தெஹீட்டியில் புவிமையசங்கம தினமான 2013 ஜூலை 8 அன்று மஃரிபு வேளையில் ரமழான் தலைப்பிறையைக் கண்டதாக வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியை சர்வதேச / சவுதிதேசப் பிறையினரில் பலர் மறுக்கிறார்களா? அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதைக்கூட இதுவரை அவர்கள் உலகிற்கு தெரிவிக்கவில்லையே!. இதை மக்களே நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். இதுதான் சர்வதேசப் பிறையினரின் பிறை ஆர்வம் என்பதை தற்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல் வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன் சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடு சரிபார்த்து (!) அதன்பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், E.Gauducheau என்ற போட்டோகிராஃபர் யார் என்று அறியாத நிலையில் அவர் எடுத்ததாக முகநூலில் (Facebook) வெளியான செய்தியை நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்பினர்? என்று கேட்க விரும்புகிறோம்.

இவ்வாறு காஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறை சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுக் கொள்வார்களா? அப்படியனால் இன்டெர்நெட் பிறை, கூகுல் பிறை, SMS பிறை சாட்சிகள்என்னும் நவீன பிறைசாட்சியங்கள் பற்றிய இவர்களின் நிலைப்பாடு என்ன?

பிறை பார்த்த தகவலுக்கு இரண்டு சாட்சிகள் வேண்டும் என்பதுதானே அவர்களின் நிலைப்பாடு. 2013 ஜூலை 8 அன்று திங்கள்கிழமை இவ்வாறு தெஹீட்டியில் பிறைபார்த்ததற்கு எங்கே இரண்டு சாட்சிகள்?. இவ்வாறு பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய விஷயம்தான் இந்த தெஹீட்டி போட்டோ பிறை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இன்னும் போட்டோவிலுள்ள பிறையானது புவிமைய சங்கம தினமான 2013 ஜூலை 8 அன்று மாலை தெஹீட்டியில் எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. இனி தெஹீட்டியில் 2013 ஜூலை 8 அன்று பிறையை புறக்கண்ணால் பார்க்க வாய்ப்புள்ளதா? என்பதையும் தெஹீட்டியின் போட்டோ பிறை பற்றியும் சற்று அலசுவோம்.

Tahiti

 

 
   

அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள  இந்த தெஹீட்டி என்னும் இந்த தீவுப் பகுதி உலக தேதிக் கோட்டிலிருந்து சுமார் 22 மணிநேரங்கள் பின்தங்கிய ஒரு நாடாகும். இன்னும் ஷஃபான் 1434 உடைய கும்மாவுடைய நாளான (conjunction at 07:14:20,  Lat 18.02 N, Long 71.55 E). சங்கமம் நிகழும்போது தெஹீட்டி நேரம் ஜூலை 7-ஆம் நாள் இரவு 21:15 மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது சங்கமம் நிகழும்போது தெஹீட்டி பகுதி ஜூலை 8-வது தினத்திற்குள் நுழையவில்லை என்பதை கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து காணலாம்.

 

ஜூலை 8 அன்று திங்கட்கிழமை தெஹீட்டியில் சூரியன் மறைந்த நேரம் 17:37 (மாலை 5:37) ஆகும். அன்று அங்கு சந்திரன் மறைந்த நேரம் 18:19 (மாலை 6:19) ஆகும். சூரியனைவிட சந்திரன் 42 நிமிடங்கள் தாமதமாகவே அஸ்தமனம் ஆனது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் சந்திரனின் மிளிரும் சதவிகிதம் (illumination Ratio) வெறும் 0.5 சதவிகிதமாக இருந்ததையும் நீங்களே காணுங்கள். அதாவது சந்திரனின் அளவு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக அதில் பாதியான அரை சதவிகிதமாக இருந்தது.

 

 

 

இதில் நாம் கேட்பது என்னவென்றால், சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார் 0.5மூ ஒளிமட்டும் பூமிக்கு தெரிய வாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடு சொல்லும் அந்த பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வசாதாரணமாக பார்க்கவியலுமா? இது சாத்தியம்தானா?

சூரியன் மறையும் நேரமான அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச்சிதறல்களுக்கு மத்தியில் வெரும் 0.5மூ கொண்ட அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப்பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அளவுக்குள்ளதை சர்வசாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து அதை தனது கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்களா?

இது சாத்தியப்படும் உண்மைதான் என்றால் கீழ்க்காணும் அட்டவணையை சற்று உற்று நோக்குங்கள்.

சென்னையில் கடந்த 2013 ஜூலை 7 (ஷஃபான் பிறை 29) அன்று பிறை 1.1 சதவிகிதமாகவும் தெஹீட்டியில் பார்த்ததாகச் சொல்லப்படும் பிறையை விட இரண்டு மடங்கு அளவுள்ளதாகவும்

2013 ஜூலை 6 (ஷஃபான் பிறை 28) அன்று பிறை 4.1 சதவிகிதமாக அதாவது தெஹீட்டி பிறையை விட 8 மடங்குகள் அதிகமாகவும்.

2013 ஜூலை 5 (ஷஃபான் பிறை 27) அன்று பிறை 8.6 சதவிகிதமாக அதாவது தெஹீட்டி பிறையை விட 17 மடங்குகள் அதிகமாகவும் இருந்ததே அப்போது தமிழ்நாட்டில் எவராவது இப்பிறைகளை மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்க்க முடிந்ததா?

அது எப்படி? மாதத்தின் தேய்பிறைகள் சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகா தெரியும், சுபுஹூ வேளையில் அல்லவா புறக்கண்களுக்குத் தெரியும் என்று இவர்கள் பதில் அளிப்பார்களேயானால் இதே கேள்வியை வளர்பிறைகளை மையப்படுத்திக் கொண்டு மீண்டும் கேட்கிறோம்.

மேற்காணும் சென்னை பிறை அட்டவணையின் படி 2013 ஜூலை 9 அன்று 1.1 சதவிகிதமாக இருந்த வளர்பிறை சென்னையிலோ தமிழகத்தில் எங்குமோ மக்களுக்கு புறக்கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதில் பிறையின் ஒளிரும் அளவு தெஹீட்டி பிறையின் அளவைவிட இருமடங்கு இருந்த போதிலும், சென்னையில் சூரியனைவிட சந்திரன் மறைவதற்கு தாமதித்த கால அளவும் இவர்கள் சொல்லும் தெஹீட்டியை விட அதிக அளவில் இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அன்று சென்னையில் சூரியன் மாலை மணி 6:40க்கும், சந்திரன் இரவு மணி 7:23 க்கும் அஸ்தமமானது.

ஆக 100 சதவிகித சந்திரனிலிருந்து வெறும் அரை சதவிகிதம் மட்டும், அதுவும் சூரிய ஒளிச்சிதறலின் வெளிச்சத்தில், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தொலை தூரத்தில் இருந்து சர்வசாதாரணமாக ஒருவரின் கண்களுக்கு காட்சியளித்தது என்றால் அவர் சூப்பர்மேனாகத்தான் இருக்க வேண்டும். கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்கிறார்கள். நாமும் கேட்டுக் கொண்டேயிருப்போம் மக்களே.

போட்டோவிலுள்ள பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம்தானா? என்பதை உறுதி செய்வதற்கு குறைந்த பட்சம் போட்டோ எடுத்தவரின் முகவரி அல்லது தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட்டாலாவது அவரிடம் நாம் நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க முடியும். எவரோ பார்த்ததாக, எவரோ செய்தி வெளியிடுகிறார் அதை யார் யாரெல்லாமோ பரப்புகிறார்கள். என்ன கொடுமை இது?

சரி Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத்தயாரா? புறக்கண்களால் பிறையை பார்த்துவிட்டுத்தான் அமல்செய்வோம் என்பவர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.

மக்கள் பேச்சுவழக்கில் பிறைதெரியாத அமாவாசைதினம் என்று புரிந்துள்ள கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினத்தில், விண்ணியல் அறிவியல்படி பிறை தெரியும் வாய்ப்புள்ளதா? என்றோ ஒருவேளை அவ்வாறு பிறை தெரிந்தால் என்னசெய்வது என்பதாகவோ இவர்களுக்கு சந்தேகம் ஏதுமிருந்தால் நம்மிடம் கேட்டு தெரிந்திருக்கலாம். இப்படி அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு போட்டோவை வெளியிட்டு மூக்கறுபட வேண்டியதின் அவசியம்தான் என்ன என்று கேட்கிறோம்?.

முக்கியமாக இன்னொரு விஷயத்தையும் இதில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில் இரு தேதிகளும், இரு கிழமைகளும் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். வல்ல அல்லாஹ் தனது திருமறையில் 17-வது அத்தியாயம் 55-வது வசனத்தில் குறிப்பிடுவதைப் போல ரப்புல் மஷ்ரிகைன் வரப்புல் மஃரிபைன் என்ற அப்பகுதியே சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதி என்பதை அனைவரும் அறிவர்.

புரியும்படி சொன்னால், சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளைப் பிரிக்கும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில், ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அதே சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், அதே பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ், அந்த ஒரேசூரியனை இருநாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.

அவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவேண்டும், ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.

பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையை தொழுது கொண்டிருப்பார்கள்.

இந்த உலகத் தேதிக்கோடுப்பகுதியில் இரு கிழமைகளின் முடிவும், இரு கிழமைகளின் ஆரம்பமும் ஒரே நேரத்தில் நடைபெறும். அதுபோல தினமும் சந்திரனின் மன்ஸில்கள் உலக தேதிக்கோடு பகுதியில் இரு கிழமைகளுக்கு தேதியை அறிவித்துக் கொண்டேயிருக்கும். உலகத்தேதிக்கோட்டுப் பகுதியில் ஒரே சூரியனுக்குக்கீழ் இருவேறு கிழமைக்குரிய நாடுகள் இருந்தாலும் தொழுகையை வைத்து நாட்களை பிரித்தறிந்து புரிந்து கொள்வதைப்போல, அப்பகுதியில் தென்படும் சந்திரனுக்கும் இஸ்லாம் தீர்வைச் சொல்லியிருக்கிறதா என்பதை சிந்திப்பதற்காகவே மேற்கூறிய விஷயங்களை விளக்கியுள்ளோம். 

அந்த உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் பிறைகளின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் /மனாஸிலை)க் கணக்கிடுவது சற்று கடினமான விஷயம் என்றாலும் அல்லாஹ் நமக்கு முன்னோக்கும் திசையாக நிர்ணயித்த கிப்லாவில் பிறையின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் / மனாஸிலை) ஒவ்வொருநாளும் எண்ணிக் கணக்கிடுவதுதான் இலகுவான, சரியான தீர்வாகும். ஒருவகையில் அல்லாஹ் கஃபாவை கிப்லாவாக நிர்ணயித்ததின் மூலம் இந்த உம்மத்திற்கு உலகத் தேதிக்கோட்டுப் பகுதியை அறிந்து கொள்ள வழிவகை செய்துள்ளான் என்றால் அது மிகையில்லை.

பிறைகளைக் கணக்கிடுவதற்கு இப்படி இலகுவான தீர்வுகள் இருக்கையில், இரு கிழமைகளின் முடிவும், இரு கிழமைகளின் ஆரம்பமும் ஒரே நேரத்தில் நடைபெறும் உலகத் தேதிக்கோட்டுப்பகுதியிலுள்ள தீவுகளில் நின்றுதான் நாங்கள் அவற்றை கணக்கிடுவோம் என்றோ, மேற்குக்கரையிலோ, கிழக்குக்கரையிலோ உள்ள கடைக்கோடித் தீவுகளில் என்றாவது தெரியும் அரிதான பிறையைத்தான் நாங்கள் பார்ப்போம் என்றோ அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்று கேட்கிறோம்.

இருப்பினும் அவ்வாறு உலகத்தேதிக்கோட்டுப் பகுதியில் பிறைகளின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் /மனாஸிலை) கவனித்து கணக்கிடும்போது அதில் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் அதற்க தீர்வு என்ன என்பதையும், அவ்வாறு தெரியும் பிறைகளின் மனாஜில்களை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கும் நமது மார்க்கம் வழிகாட்டித்தான் உள்ளது.

அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக முஸ்லிம் கிரந்தத்தில் (1885) பதிவாகியுள்ள ஹதீஸில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை ஏற்படுத்தியுள்ளான், எனவே அதை எந்த கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்த கிழமைக்குரியது என்று நபி (ஸல்) கூறியுள்ளதாக வரும் நபிமொழி இதற்கு தீர்வைச் சொல்லிவிடுகின்றது.

பதன்நக்லா ஹதீஸ் என்ற பிரபலமான மேற்படி நபிமொழியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் ஃபஹூவ லிலைலதின் ராஅய்த்துமூஹூ  فهو لليلة رأيتموه என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதை வைத்து, தெஹீட்டியில் பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப்பிறை, அது எந்தக்கிழமைக்குரிய பிறையோ அது அந்தக்கிழமைக்குரிய பிறைதான் என்றுதான் வாதிடமுடிம். 

 

2.புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றால் என்ன?

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம், நமது பிறை நிலைப்பாட்டிற்கு பல்வேறு குர்ஆன் வசனங்களையும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஆதாரங்களாக மக்கள் மத்தியில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை மனிதர்களுக்குத் தேதியை அறிவிப்பதாக அமைத்துள்ளான். எனவே அதை கவனித்து அறிந்து அதனடிப்படையில் சரியான நாளில் எல்லா மாதங்களையும் துவக்குவதோடு, ரமழானைச் சரியாக துவங்கிஅப்பிறைகளைக் கவனித்து அறிந்து சரியான தினத்தில் பெருநாளையும் கொண்டாட வேண்டும். மேலும் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் புவிமைய சங்கம தினமான கும்மாவுடைய நாள் (Geocentric Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பொதுவாக புறக்கண்களுக்கு பிறை தெரியாத அந்த கும்மாவுடைய நாளையும் ஏற்கனவே சந்திரனில் ஏற்பட்ட படித்தரங்களான தேய்பிறைகளைப் பார்த்த மாதத்தோடு சேர்த்துக் கணக்கிட்டு (அல்லது எண்ணி) மாதத்தை மிகச்சரியாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது ஹிஜ்ரி கமிட்டியின் நிலைப்பாடாகும்.

இந்நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கீழ்க்காணும் இரண்டு நபிமொழிகளை மட்டும் உதாரணத்திற்காக பதிவுசெய்கிறோம்.

1.       عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا له ثلاثين يوما . مصنف عبد الرزاق - (4 / 156)   7306 (

2.       عن ابن عمر ،أن رسول الله صلى الله عليه وسلم قال :  إن الله جعل الأهلة مواقيت ، فإذا رأيتموه فصوموا ، وإذا رأيتموه فأفطروا ، فإن غم عليكم فاقدروا له ، واعلموا أن الشهر لا يزيد على ثلاثين " *. (  صحيح ابن خزيمة  - كتاب الصيام   جماع أبواب الأهلة ووقت ابتداء صوم شهر رمضان -  باب ذكر البيان أن الله جل وعلا جعل الأهلة مواقيت للناس   حديث : ‏1789(

அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போதுமுப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.”  அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்

'அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789.

ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். இதுவே அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் ஆகும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் மாதம் 29 நாட்களாக இருந்தால் அதன் காட்சியானது 28 நாட்களுக்கும், மாதம் 30 நாட்களாக இருக்கும் போது 29 நாட்களுக்கும் காட்சிதரும்.

மாதத்தின் இறுதிநாளான அந்த ஒருநாள் மட்டும் சந்திரனின் காட்சியை நாம் காண முடியாது போகும். ஏனெனில் சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டிலோ அல்லது ஒரே நேர்கோட்டிலோ வரும்போது சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் என்ற ஒரு நிலை மாதந்தோறும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த நிலையைத்தான் நபி(ஸல்) அவர்கள் கும்ம என்னும் மறைக்கப்படும் நிலை என நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

ஃபஇன் கும்ம அலைக்கும் என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போதுஎன்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்த சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும். கும்ம என்ற இந்த சொல்லைப்போலவே மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பொருளில் அமைந்த கும்மிய, உஃமிய, கபி(F)ய, க(G)ம்மிய, ஹஃபிய கும்ம அல்லது குபிய போன்ற பதங்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

நாம்  பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து, கவனித்து வரும் வேளையில் ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் அல்குர்ஆனின் 36:39 இறைவசனம் கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை என்ற உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால், 28-ஆம் நாள் அன்று உர்ஜூஃனில் கதீம் காட்சியளிக்கும்;.

உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினமாகும். புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாகப் புறக்கண்களால் பார்க்க முடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(கு)ய, க(பு)ம்மிய, ஹஃபிய கும்ம உடைய அல்லது குபிய உடைய நாள் என்கிறோம். அந்த கும்மாவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு பின்னால் சந்திரன் கிழக்கு திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும்.

அது ரமழான் முதல் தினமாக இருப்பின் அந்தப்பிறையானது அந்த ரமழான் முதல்நாளின் நோன்பு நோற்றிருக்க வேண்டிய பகல்பொழுதுகள் முடிவுற்ற பின், ஏறக்குறைய முதல்தினத்தின் பாதிநாளைக் கடந்த பின்னர், அந்த ரமழான் முதல்நாளுக்குறிய இரவின் துவக்கமான மஃரிபு வேளையில் தெரியும். அந்தப்பிறை அந்த முதல் நாளுடைய சந்திரனின் மறையும் படித்தரமேயாகும். இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ்  - மக்களுக்குத் தேதிகளைக் காட்டும் (Calendar For Mankind) என்று நமக்கு வலியுறுத்தியதுமாகும்.

இந்நிலையில் மேற்படி புவிமைய சங்கம (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கில், அல்லது அமெரிக்காவுக்கு மேற்கில் சிலமாதங்களில் தெரிகின்றதே, இதன்மூலம் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறை புறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா என்று வாதம் வைக்கின்றனர். மாற்றுக்கருத்துடையோரின் இந்த விமர்சனத்தின் உண்மை நிலையை தயவுகூர்ந்து உன்னிப்பாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம். அவர்களின் விமர்சனம் நியாயமற்றது என்பதற்கு கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடமே கேட்டு, அதற்கு அவர்கள் அளிக்கும் விடையிலிருந்தே தெளிவாக புரிந்துவிடும். 

 1. மேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலகநாடுகளிலும் ஒவ்வொருமாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா என்று கேட்கிறோம். இக்கேள்விக்கு அப்படி தெரிவதில்லை என்றே மாற்றுக்கருத்துடையோர் விடை பகர்கிறார்கள். 
 2. மேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் தெரிகிறதா? என்றும் கேட்கிறோம். இந்த கேள்விக்கும் அப்படி இல்லைதான் ஆனாலும் அரிதாக சில மாதங்களில் தெரியும் வாய்ப்பு உள்ளதே என்று பதிலளிக்கின்றனர். 
 3. மேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் சரி ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியில் அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்பு உள்ளது என்று கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா? அந்த அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, CCD image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா என்றும் கேளுங்கள்.
 4. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன? என்றும் கேளுங்கள். நாம் கேட்டவரையில் இக்கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோரிடமிருந்து மௌனம்தான் பதிலாக வந்துள்ளது.
 5. ஃபஇன் கும்ம அலைக்கும், அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? இக்கேள்விகளுக்கு வளைக்காமல் திரிக்காமல் அவர்கள் நேரடியாகப் பதில் தரவேண்டும். இல்லை என்ற பதிலைத்தவிர அவர்களிடம் வேறொன்றும் இல்லை என்பதும் நமக்குத் தெரியும்.
 6. அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ இவர்கள் வாதம்புரியும் அந்தப் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா? என்பதற்கும் தெளிவான சான்றுகளோடு விடையளிக்க வேண்டும். விடையளிப்பார்களா?

தெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும் என்ற மேற்கண்ட தலைப்பில் படித்த விஷயங்களையும் மனதில் நிறுத்தி, புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறைபுறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா என்று வாதம் வைத்தவர்களின் உண்மைநிலை மேற்கண்ட கேள்விகளுக்கான அவர்களின் பதில்களின் வாயிலாகவே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இன்னும் கடந்த 05-10-2013 சனிக்கிழமை அன்று ஹிஜ்ரி 1434 துல்கஃதா மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கமம் நாளில் சவுதியில் பிறையை புறக்கண்களால் பார்த்தாகவும் எனவே 06-10-2013 அன்று துல்ஹிஜ்ஜா முதல் தினம் என்றும் சவுதி அரசாங்கம் வெளியிட்ட செய்தியை ஒரு தகவலுக்காக இங்கு நினைவு படுத்துகிறோம். துல்லியமான சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் 06-10-2013 அன்றுதான் 1434-இன் துல்ஹிஜ்ஜா முதல் தினம் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பிரகடனத்தை சவுதியில் பிறையை புறக்கண்களால் பார்த்தோம் என்ற பொய்ச்செய்தியை மையப்படுத்தி அறிவித்து விட்டார்கள் என்பதே உண்மை. 

மக்களே!, பேச்சுவழக்கில் அமாவாசை தினம் என்று மக்கள் தெரிந்துள்ள இந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறை புறக்கண்களுக்குப் பொதுவாக மறைக்கப்படும், புறக்கண்களுக்குத் தெரியாது என்று நாங்களாகவா சுயமாக சொல்கிறோம்? நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களை முன்வைத்தும், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆதாரமாகக் கொண்டும், நாம் பிறைகளை தொடர்ந்து அவதானித்து இவ்விஷயத்தை உறுதிசெய்ததின் அடிப்படையிலும்தான் இவ்வாறு கூறுகிறோம். பொதுவாக அமாவாசை தினத்தில் இப்பூமிக்கு பிறை தெரிவதில்லை என்ற பொதுவான உண்மைக்கு இனியும் நாம் விளக்கங்கள் அளிக்கத்தான் வேண்டுமா?  

புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறைபுறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா என்று மேற்படி நபர்கள் இனியும் விமர்சனம் செய்தால் அவர்கள் ஹிஜ்ரி கமிட்டியினரை பொய்ப்படுத்திடவில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களைத்தான் பொய்ப்படுத்திட முயல்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.

 

3. ஒரு நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ளலாமா?

2013 ஜூலை 8-ஆம் தேதி தெஹீட்டியில் பிறை பார்க்கப்பட்டதின் காரணமாக ஜூலை 9 அன்று காலையாக விடிந்துவிட்ட கிழக்கத்திய நாடுகளுக்கு இவர்கள் கூறும் தீர்வு என்ன தெரியுமா? அந்த நாளை விட்டுவிட்டு பேசாமல் அடுத்தநாளிலிருந்து நோன்பை ஆரம்பியுங்கள் என்பதே -  என்ன வேடிக்கை இது. விடிந்த அந்த நாளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று துணிந்து கூறி மார்க்க அடிப்படை அறிவும், அறிவியல் ஆய்வும் அவர்களுக்கு இல்லை என்பதையும், அபாயகரமான ஒரு இறைநிராகரிப்பை (குஃப்ரை)த்தான் இந்த முஸ்லிம் உம்மத்திற்கு அவர்கள் தீர்வாகத் துணிந்து சொல்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:-

மாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர், அவர்கள் அதை  ஒரு வருடத்தில் அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கின்றனர் அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையை சரிசெய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதைத் தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப்பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9:37)

அல்லாஹ் நமக்கு அருளிய சந்திர நாட்காட்டியை, குர்அன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு, நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தில் இருந்து எண்ணிக் கணக்கிட்டு வரும் நம்மை விமர்சிக்கும் முகமாக அவர்கள் கூறும் தீர்வு மனித சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் சேர்க்கிறது என்பதை மேற்கண்ட வசனத்தை அறிந்து சிந்தித்துப் பார்த்தீர்களா மக்களே!.

தலைப்பிறை என்று அவர்கள் புரிந்து வைத்துள்ள முதல்நாளின் மறையும் பிறை புறக்கண்களுக்குத் தெரியும் முன்பாகவே கிழக்கத்திய நாடுகள் விடிந்துவிட்டால், விடிந்த அந்த நாளை கணக்கிடாமலும், கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் அவ்வாறு வேண்டுமென்றே விட்டுவிட்ட அந்த நாளை அவர்கள் எந்த மாதத்தில் கொண்டு சேர்ப்பது? ஷஃபானிலா? ரமழானிலா? அல்லது ஷவ்வாலிலா? அவ்வாறு சேர்ப்பதாக இருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளைக் குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது? பிறந்த பிறையை மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு முதலில் மார்க்க ஆதாரம்தான் என்ன?

அமெரிக்கா போன்ற மேற்கத்திய தூரநாடுகளில் பிறை தென்படும் முன்னரே காலைப் பொழுதை அடையும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஒருசில கிழக்கத்திய நாடுகளை தவிர்த்து, பிறைபார்க்கப்பட்ட பிறகு காலைப் பொழுதை அடையும் ஏனைய நாடுகளிலுள்ள கோடானு கோடி முஸ்லிம்களுக்கு அந்த அறிவுஜீவிகள் கூறும் தீர்வுதான் என்ன? அவர்களும் அந்தநாளை கண்டு கொள்ளாமல், கணக்கிடாமல் மாய நாளாக விட்டுவிட வேண்டுமா? அல்லது புதிய மாதத்தை அந்த காலை பொழுதிலேயே துவங்கிவிட வேண்டுமா? தெளிவான விளக்கம் தரவேண்டும்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ரமழான் மாதத்தை அளவுகோளாக வைத்து கேட்கிறோம். அதாவது அமெரிக்கப் பகுதியில் இவர்களின் நம்பிக்கைபடி ஒரு வெள்ளிக்கிழமையில் பிறை மஃரிபுவேளையில் அது மறையும் வேளையில் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். இவர்களின் நிலைப்பாட்டின் படி அது ரமழான் தலைப்பிறை என்றே ஒரு வாதத்திற்காகக் கொள்வோம். அவ்வாறு வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகள் விடிந்து சனிக்கிழமையின் காலை வேளையில் இருக்கும். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன? அவர்கள் நோன்பை (சர்வதேச) அமெரிக்க முஸ்லிம்களைப் போல எவ்வாறு சனிக்கிழமை அன்று முதல்நோன்பை துவங்க இயலும்?

அல்லது மேற்படி நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு கிழமைகளில் வருவது மாற்றுக் கருத்துடையோரின் விதிகளின் படியும், சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படியும் சரியானதுதானா?

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பிறை தென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்தநாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள் கழித்து அந்நாடுகளிலுள்ளோர் பிடிக்க வியலாது போன அந்த முதல்நோன்பை களாச் செய்யவேண்டுமா? அப்படி களாச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரம் தர இயலுமா?

அப்படி களாச் செய்ய வேண்டும் என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்கு ரமழான் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு 29 நாட்களாகவும், அல்லது ஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்துவிட்டால் பிறிதொரு சாராருக்கு 28 நாட்களாகவும் வருகிறதே இதுதான் சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத்தீர்வா? இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறை படுத்தமுடியாமல் ஏற்பட்ட தோல்வியாகத் தெரியவில்லையா? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

உலகத் தேதிக் கோட்டிற்கு மேற்கே அதிகபட்சமாக 8 மணிநேர அளவுள்ள பகுதியில் வாழும் மக்களை மட்டும் மாதத்தில் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ளுங்கள் என்றும், மீதம் உள்ள 16 மணிநேர அளவுள்ள பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அவ்வாறு ஒரு நாளை கூட்டக்கூடாது என்றும் சொல்வதற்கும் குர்ஆன் சுன்னாவில் எங்கே ஆதாரம் உள்ளது? ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டு மக்களுக்கு இரண்டு வௌ;வேறு கிழமைகளைக் கூறுவது சரிதானாஅல்லது மாதத்தின் முதல்நாள் என்பதும் இருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில் வரலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அவர்களால் நிரூபிக்க முடியுமா?

ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை என்ற முதல்நாளின் மறையும் பிறை புறக்கண்களுக்குத் தென்படுகின்றபோதும் உலகத்தேதிக் கோட்டிற்கு அருகில் மேற்குப் பகுதியில் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளோர் இவ்வாறு அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனரா? அல்லது ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை மேற்கத்திய நாடுகளில்தான் தெரிகிறதா?

இவ்வாறு ஏன் கேள்வி எழுப்புகிறோம் எனில் அரிதான விஷயங்களை பொதுவான மார்க்க சட்ட விதிக்குள் கொண்டுவர இயலாது என்ற அடிப்படையை விளங்காதவர்கள் நம்மை பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக மக்களை குஃப்ரின் பக்கம் இழுத்துச் செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாதத்திற்கும்  இவர்களின் விதிமுறை  பொருந்துமா? என்று கேட்கிறோம். அப்படி இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

உலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொரு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் அமைக்கலாம் என்ற அடிப்படையில், புதிய நாட்காட்டியை அமைத்து அமல் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மேற்படி நபர்கள் வந்துவிட்டார்களா? அல்லது 30-வது நாள் மஃரிபு நேரத்தில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அமல் செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து தற்போது சந்திர நாட்காட்டியின் கணக்கை ஏற்று செயல்படுவதற்காக இது போன்ற சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் தற்போது கூறிவருகின்றார்களோ என்னவோ?

இன்னும் துருவப் பிரதேசங்களான ஆர்டிக் பகுதிகளில் 6 மாதங்கள் வரை இருள்சூழாது பகல் நிலைத்திருக்கும். சில மாதங்களுக்கு சூரிய உதயம் நடைபெறாமலும் இருக்கும். சில நாட்களில் சந்திரனை பார்க்க முடியாத நிலையும் ஏற்படும். இந்நிலையில் அங்கே வாழுகின்ற முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை சூரிய சந்திரனின் உதித்தல், மறைதல், விடியல், அஸ்தமனம், என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கணக்கிட்டே அமல்செய்ய வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதல் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதாவது தஜ்ஜால் வரும் இறுதிக்காலத்தில் ஒருநாள் என்பது ஒரு வருடத்தைப்  போல இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் தெரிவித்த போது, அந்த நாளில் நாங்கள் எவ்வாறு எங்கள் அமல்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஸஹாபாக்கள் வினவியதையும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஒருநாள் ஒரு வருடம் போல் இருக்கும் அச்சமயத்தில் அந்த ஒரு வருடத்திற்குள் வரும் பன்னிரெண்டு சந்திர மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவக்க வேண்டும் என்பதையும், அந்த ஒரு வருடத்திற்குள் வரும் ரமழான், ஹஜ் போன்ற மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவங்கி வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவே முடியாது.

இன்னும் உலக தேதிக்கோட்டிற்கு அருகே அதன் மேற்குப்பகுதியில் வசிக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய  நாடுகளிலுள்ளோர், அமெரிக்கா போன்ற மேற்கத்திய தூரநாடுகளில் பிறைதென்படும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விட்டால் அவர்களுக்கு தீர்வு ஹிஜ்ரி நாட்காட்டியை அவர்கள் பின்பற்றுவதுதான் என்பதும், முதல்நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்காக இவ்வாறு காத்திருந்தால் இதுபோன்ற அவலங்களை அம்மக்கள் நிச்சயமாக சந்திக்கும் நிலையே ஏற்படும் என்பதும் இதன்மூலம் தெரியவில்லையா?

ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் கூட்டி குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்பட முடியாது என்பதை உறுதி செய்யும் முகமாக வல்ல அல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களை கொண்டதாகவும் இருக்கும் என்பதை கூறியதோடு, அது கிருஸ்துவ நாட்காட்டியில் தற்போது மாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் வைத்துள்ளது போல் உங்கள் இஷ்டப்படி மாற்றினால் அது இறைநிராகரிப்பு என்றும் எச்சரித்துவிட்டு, சந்திரனின் படித்தரங்களை அல்லாஹ் உங்களுக்கு தேதிகளாக ஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன் 2:189 வசனம் மூலம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். இதன்மூலம் 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மனிதன் சுயமாக முடிவு செய்துகொண்டு செயல்படக்கூடாது என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இதன் அடிப்படையில், குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதலில், துல்லிய விஞ்ஞான கணக்கின் மூலம் வடிவமைக்கப்பட்டதே ஹிஜ்ரி நாட்காட்டி என்பதை அறியத்தருகிறோம்.

எனவே புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்லுகிறார்கள் ஆனால் பிறை தெரிகிறதுஎன்று பொத்தாம் பொதுவாக வாதம் வைப்பதும், மேற்கத்திய தூரநாடுகளில் பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மஃரிபு நேரத்தில் மேற்குதிசையில் பார்க்கும் போது பல கிழக்கத்திய நாடுகள் விடிந்து அடுத்தநாளாகி விடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று வாதிப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும். நமது தீனுல் இஸ்லாம் என்னும் உயரிய மார்க்கத்திற்கு முரணானதுமாகும்.

இன்னும்

இதுவரை நாம் படித்து விளங்கியதை சுருக்கமாகச் சொல்வதன்றால்....

 1. புறக்கண்களால் பார்க்கப்பட்டதாக வெளியான தஹிட்டி பிறையும், முகவரியற்ற போட்டோ பிறை பித்தலாட்டமே. இஸ்லாம் கூறும் இருசாட்சிகள், மார்க்கத்தின் பொதுச் சட்டவிதிகள், இன்றைய துல்லியமான அறிவியல் ஆய்வு, இவற்றின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட வேண்டிய புரளியே.
 2. இஸ்லாமிய நாட்களுக்கு அடிப்படை பிறைகளின் படித்தரங்களே! அந்த தேதிகளின் கணக்கை நிர்ணயிப்பதும் பிறைகளின் படித்தரங்களே!. நாட்களைப் படைத்த நாயனே அந்தந்த நாளுக்கு பிறைகளின் படித்தரத்தை அத்தாட்சியாக்கி நிர்ணயித்தும் விட்டான் - இப்பிரபஞ்சத்தை படைத்தபோதே. இந்நிலையில், பிறைக்காட்சியை யார் பார்த்தார்? எப்போது பார்த்தார்? எங்கு பார்த்தார்? என விவாதித்து நாட்களை சுயநிர்ணயம் செய்யும் அதிகாரம் எவருக்குமில்லை.
 3. உதயம் என்பது எழுச்சியாகும், மறைதல் என்பது வீழ்ச்சியாகும். பிறையின் வீழ்ச்சியே (மறைதல்) ஒரு நாளின் எழுச்சி (துவக்கம்) என்றால், அது சுயசிந்தனையின் வீழ்ச்சியன்றி வேறென்ன?. முதல்நாளின் மறையும் பிறை மஃரிபு வேளையில் மேற்கில் மறைவதைக் கண்டுவிட்டு, நாளின் துவக்கம் மஃரிபுதான் என்பது அறிவுடமையாகுமா?. ஃபஜ்ர்தான் ஒருநாளின் ஆரம்பம் என இறைவேத வரிகளும், இறைத்தூதர் (ஸல்) மொழிகளும் சான்றுபல பகர, அந்திசாயும் மஃரிபு வேளையை ஒரு நாளின் ஆரம்பம் என்பதேன்?. அந்திசாயும் மஃரிபுதான் ஒருநாளின் ஆரம்பம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை மக்களே!.
 4. அமாவாசை நாளில் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே, அல்லது அமெரிக்காவுக்கு மேற்கே பிறை தெரிகிறது என்ற யூகச்செய்திகள் அடிப்படையற்றதே! இறை கட்டளைக்கு மாறாக மனிதன் செயல்படக்கூடும், ஆனால் கிரகங்கள் (Planets) அப்படியல்லவே!. இறைகட்டளைப்படி கிரகங்கள் தங்கள் சுழற்சிப் பாதையை மீறுவதேயில்லை என்பதே நிரூபிக்கப்பட்ட அறிவியல் அற்புதமாகும்.
 5. அமாவாசை என்றாலே இருட்டு என்பார் பாரமரர். பேச்சுவழக்கில் அமாவாசை என்ற புவிமையசங்கம தினத்தில் (Geocentric Conjunction Day), பிறையைப் புறக்கண்ணால் பொதுவாக பார்க்க முடியும் என்று கூறித்திரிவதும், நம்பி பரப்புவதும் நகைப்புக்குரியதாகும். பிறையின் காட்சி இவ்வுலகிற்கு மறைக்கப்படுகிற, மறைந்து இருக்கிற, மங்குகிற, புலப்படாத தினம் என்று மாநபியின் (ஸல்) கூற்று நிச்சயமாக பொய்ப்பதில்லை.
 6. இறைவேத வரிகளும், இறைத்தூதர் (ஸல்) மொழிகளும் ஹிஜ்ரி நாட்காட்டியின் அடிப்படையாயிருக்க, குழப்பமான கூற்றுக்களும், உதவாத வாதங்களும், கற்பனை யூகங்களும் அதற்கெதிரான ஆதாரமாகுமா? உலக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை இந்த ஹிஜ்ரி நாட்காட்டியில் இருப்பதாலேயே சபதமெடுத்த ஷைத்தான் இடைமறிக்கிறான், ஹிஜ்ரி நாட்காட்டிக்கு பல இடர்கள் புரிகிறான். நாம்தான் விழிப்படைந்து வெற்றிபெறனும் மக்களே!
 7. மாமறையின் வாக்கும், மாநபியின் (ஸல்) வார்த்தையும் மேலோங்கப் பாடுபடுகிறது ஹிஜ்ரி கமிட்டி. பொய்ப்பிக்க முயல்வோர் வெற்றி பெறத்தான் முடியுமோ? சத்தியமே வெல்லும், அசத்தியம் வீழும். சத்தியம் வென்றே தீரும்.

                                                அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

Read 1576 times Last modified on சனிக்கிழமை, 20 ஜூன் 2015 10:24